
சுவர்ணலட்சுமி ஜெயராமன்
காற்றலையில் (சிறுகதைத் தொகுப்பு) | தமிழ்ச்செல்வி ராஜராஜன்
தமிழ்ச்செல்வி ராஜராஜன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு நூல். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 சிறுகதைகளின் வாயிலாக சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
இதில் முதல் கதை “பெண்ணானவள்”. சிங்கப்பூரில் 18 வயதான ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டரை ஆண்டு தேசிய சேவையில் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு அது கட்டாயம் இல்லை என்ற போதிலும் விருப்பப்பட்டவர்கள் தேசிய சேவையில் சேரலாம். இந்த கதையில் வரும் அபிநயா, ராணுவ பயிற்சி பெற விரும்புகிறாள். தாய் மறுப்பு தெரிவிப்பதும் தந்தை அறிவுரை கூறுவதும் என குடும்பத்தில் ஏற்படும் வாக்குவாதங்கள் சிறப்பாக இங்கே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
“மெருன் கலர் கட்டடம் “என்னும் கதை மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை பற்றியது. அவர் ஏன் மெதுவோட்டம் ஓடிக் கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் உதவி கேட்கிறார் என்ற கேள்விக்கான பதில் தொடர்ந்து கதையை வாசிக்கும்போது கிடைக்கும். முதியவர் தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது இளைஞனுக்கு தன் பெற்றோரின் நினைவு வருகிறது. இறுதியில் முதியவர் சரியான முகவரியை கூறினாரா என்பதை வாசகர்கள் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
“சன்னல்” கதை கொரோனா காலத்தில் தங்குமிடத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த வெளிநாட்டு ஊழியர்களின் மனநிலையை பற்றி பேசுகிறது. மளிகைக் கடை வைத்திருந்த தந்தை இராமையாவிற்கும் அவரது காலத்திற்குப் பின் அந்தப் பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய அவரது மகன் நாதனுக்கும் உள்ள தலைமுறை இடைவெளியை பற்றி “மனிதன் என்பவன்” என்ற கதையின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். “ நான் ஒரு தடவை முடிவு செஞ்சுட்டா” என்ற கதை சிங்கப்பூர் தமிழ் குடும்பங்களில் நடக்கும் ஒரு இயல்பான கதை. இது நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை பற்றி பேசுகிறது.
“வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்“ என்ற கதையில் ஆண் பெண் சமத்துவத்தை பற்றி பேசி இருக்கிறார் ஆசிரியர். வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்தல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். “காற்றலையில்” என்னும் கதை இங்கு வாழும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. இக்கதையில் வரும் செந்தில் திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியை விட்டுவிட்டு சிங்கப்பூர் திரும்புகிறார் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் அவருடன் பேச முடியாமல் பார்க்க முடியாமல் இருக்கும் அவரது தவிப்பை புலப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். “இப்போலிருந்து” என்னும் கதையில் தொடக்கப்பள்ளி இறுதி தேர்வு எழுதும் மாணவர்களின் என்ன ஓட்டங்களும், மனக்குமுறல்களும் பெற்றோரின் தவிப்பும் அழகாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு கதையுமே படிக்கும் போது காட்சிகள் நம் கண்முன்னே விரியும்படி எழுதப்பட்டிருக்கிறது. சரளமான தமிழ் தமிழில் கதைகள் எழுதப்பட்டு இருப்பதால் வாசகர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. அனைத்து கதைகளிலுமே மனித உணர்வுகளையும், எதார்த்தங்களையும், வாழ்க்கையின் கருவூலங்களையும் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். வாசித்துப் பார்த்து மகிழுங்கள்.
Swarna2k7@yahoo.co.in


