(கட்டுரை) நவீனக்கவிதைகளும் மொழித்தூய்மையும் – 2

0
754

அ.பிரபா தேவி

தமிழ்ச்சொல் என்றே நினைத்து நம்மில் பலரும் பயன்படுத்துகின்ற ஒரு சொல் அதிசயம். அதிசயம் என்ற சொல்லுக்கு வியப்பு புதுமை என்று பொருள். வடசொல்லில் அதிசயம் என்பது பெயர்ச்சொல். அதைப் பெயர்ச்சொல்லாகவே பயன்படுத்தினால் பிழையில்லை. ஆனால் சிலர் அதையே வினைச்சொல்லாக்கி அதிசயித்தாள் / அதிசயித்தான் / அதிசயித்தல் என்று எழுதுகின்றனர். அது முற்றிலும் பிழையான ஒன்று. அறியாமையால் சிலர் எழுதினாலும் அவர்கட்கு நாம் எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கலாம். அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம் என்று அதனைப் பெயர்ச்சொல்லாகவே பயன்படுத்தும்போதுதான் அதிசயத்துக்கும் ஒரு மகிழ்வு கிடைக்கும். அதைவிடுத்து அதையே வினைச்சொல்லாக்கி எழுதினால் அதிசயத்துக்குக் கடுப்புதான் வரும். அதிசயித்தான் என்பதை அதிசயம் கொண்டான், அதிசயப்பட்டான், அதிசயமுற்றான் என்றெல்லாம் எழுதலாம். அத்தனை முயற்சி எடுத்து எழுதவேண்டுமா என்று பார்த்தால் மிக எளிதாக வியந்தான் என்று தமிழில் அருமையாக எழுதிவிடலாம்.

அதேபோன்று பிழையாக எழுதப்படும் சொற்கள் ஆசிர்வாதமும் ஆட்சேபமும். அதிலும் ஆசிர்வாதத்தினை ஆசீர்வாதம் என்று எழுதுவோரும் உண்டு. ஆசி என்பதிலிருந்து வருவதுதான் ஆசிர்வாதம் எனும்போது ஆசீர் என்று சீ போட்டு எவ்வாறு எழுத முடியும்? ஆசி என்பதும் பெயர்ச்சொல்லே. அதை ஆசி வழங்குதல் ஆசி கொடுத்தல் என்றுதான் எழுத வேண்டும். ஆனால் தமிழில் பாருங்கள் வாழ்த்து என்பது வினைச்சொல்லாகவும் வரும் தொழிற்பெயராகவும் வரும். வாழ்த்துவது வாழ்த்து. வாழ்த்துதல் வாழ்த்துங்கள் வாழ்த்தினான் என்றெல்லாம் அழகுத்தமிழில் எழுதலாமே.

ஆட்சேபம் என்பதும் பெயர்ச்சொல்தான். அதற்குத் தமிழில் எதிர்ப்பு மறுப்பு தடை என்றெல்லாம் பொருள் உண்டு. இங்கேயும் நாம் ஆட்சேபித்தான் ஆட்சேபித்தல் என்றெல்லாம் வினைச்சொல்லாக மாற்றி எழுதக்கூடாது. ஆட்சேபம் தெரிவித்தல் ஆட்சேபம் தெரிவித்தான் என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நம் தமிழில் எத்துணை எளிதாக எழுதலாம் தெரியுமா? எதிர்த்தான் மறுத்தான் தடுத்தான் என்று ஒரே சொல்லில் எழுதிவிடலாம்.

மன்னிப்பு என்ற சொல்லை அறியாதோர் எவரேனும் இருக்க முடியுமா? அது வடசொல் என்று நாம் எண்ணியிருப்போம். அது ஓர் உருதுமொழிச்சொல். அதுவும் பெயர்ச்சொல்தான். அதையும் நாம் நமக்கேற்றவாறு மன்னித்தான் மன்னித்தாள் என்றெல்லாம் வளைத்து “ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல், உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா ” என்று மெட்டுகட்டிப் பாட்டுகள் பலவும் எழுதிவிட்டோம். மன்னிப்பு கொடு மன்னிப்பு தா மன்னிப்பு கோரினேன் என்று சொல்லலாம். அதற்கு ஈடாக நம் தமிழில் பொறுப்பு / பொறுத்தல் என்ற சொல் இருக்கிறது. பொறுத்தருள்க என்று தாய்த்தமிழில் மனம் வருந்திக் கேட்கும்போது எத்துணைக் கடினமான உள்ளமும் கனிந்துவிடாதா !

சிநேகம் என்ற சொல்லும் வடமொழியில் உள்ள பெயர்ச்சொல்லே. அதிலும்  சிநேகம் என்றெழுதுவதே சரி. சினேகம் என்றெழுதக்கூடாது. அச்சொல்லையும் நாம் சிநேகித்தல் சிநேகித்தான் என்றெல்லாம் எழுதுகிறோம்.  சிநேகம் என்றால் தமிழில் நட்பு கேண்மை என்று பொருள். சிநேகம் கொண்டான் சிநேகம் உற்றான் சிநேகம் பாராட்டினான் என்றுதான் எழுதவேண்டும். அவ்வாறு எழுத வரவில்லையெனில் சிநேகத்தைத் தூக்கிவிட்டு நட்பு கொண்டான் நட்புற்றான் நட்பு செய்தான் என்று செம்மையாய் எழுதிவிடலாம். நீங்களே சொல்லுங்கள் நண்பேன்டா என்பதற்குப்பதில் சிநேகன்டா என்று சொன்னால் நன்றாகவே இருக்கிறது?

நம்மிடமே கடலளவு சொற்கள் இருக்கையில் நாம் ஏன் கடன் வாங்க வேண்டும்? மொழிப்பற்று என்பது எல்லோரையும்விட ஓர் எழுத்தாளனுக்கு முதன்மையாக இருக்கவேண்டும். மொழிப்பற்று என்பதன் அடிப்படையே மொழித்தூய்மைதான் என்பதை மறுக்கவியலுமா? முதலில் நாம் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியே எழுதப்பழக வேண்டும். மிகவும் அரிதாக வடசொற்களைப் பயன்படுத்தலாம். பெரிதினும் பெரிது கேள் என்றவாறு எண்ணற்ற சொற்களை நம் தமிழ்மொழியிடம் கேட்கலாம். அரிதினும் அரிதாகவே பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்தலாம்.