(நேர்காணல்) துளித் துளியாய் மகிழ்ச்சி

எழுத்தாளர், கவிஞர் திருமதி.சித்ரா ரமேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

“ஒரு துளி சந்தோஷம்” என்ற தலைப்பு, தொகுப்பை எப்படிப் பிரதிபலிக்கிறது? இந்தப் பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலைதான். அது தொடர்ந்து இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. எல்லா உணர்ச்சிகளும் அப்படித்தான். தொடர்ச்சியாக  மன வருத்தத்திலோ அதீத மகிழ்ச்சியிலோ  நிறைவின்மையிலோ இருந்தால் மனநோயாளி ஆகி விடுவோம். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அதுவல்ல வாழ்க்கை.

மனநிறைவான வாழ்க்கை  வாழ வேண்டும். மனநிறைவு என்பது வசதியான வாழ்க்கையில், நம்முடைய வெற்றிகளில், நமக்குக் கிடைக்கும் சமூக மரியாதைகளில், பிறர் நம் மீது காட்டும் அன்பில் என்று இப்படி வெளிப்படையான பொருண்மைகளில் அமைவது இல்லை.என்னுடைய “ஒரு துளி சந்தோஷம்” என்ற சிறுகதை இந்தக் கருத்திலேயே அமைந்துள்ளது. கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை அது. நடுத்தர வர்க்கத்துப் பெண் வாழ்க்கையில் சலித்துப் போய் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒரு நாள் தொலைக்காட்சியில் பிரபல நடிகர் ஒருவர் தன் முதல் காதலைப் பற்றிச் சொல்லும் போது தன்னை இன்னும் மறக்காமல் பழைய காதலியாக நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்ததும் அந்த கணத்தில்  சந்தோஷம் அடைகிறாள். அதனால் அதையே தலைப்பாக வைத்தேன்.

‘நவீன சுயம்வரம்’ குறுநாவல் கதையின் உந்துசக்தி என்ன?

எங்கள் வாழ்க்கைதான் உந்து சக்தி! உரிய வயதில் தங்கள் துணையைத் தேடிக் கொள்வது எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் அடிப்படைத் தேவை. மனிதர்களுக்கு மட்டும் அந்தத் தேடல் காதலாக இலக்கியத்திலும் காமமாக அன்றாட வாழ்க்கையிலும், இணையுடன் வாழும்  நிர்ப்பந்தங்களாக சமூக அமைப்பிலும் இருந்து வருகிறது.

என் மகன் தனக்குப் பிடித்த பெண்ணைத் தேடிக்கொண்டான். ஆனால் என் மகளுக்கு அப்படி அமையவில்லை. காதலும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே! அதனால் அவளுக்குப் பிடித்தவனைத் தேடும் ஒரு சூழல் அசந்தர்ப்பமாக எனக்கும் என் இணையருக்கும் ஏற்பட்டது. முறைப்படி பெண் பார்த்து சம்பிரதாயமாகத் திருமணம் செய்து கொள்ள என் மகள் விரும்பவில்லை. பேசிப் பழகி மனம் ஒத்தப்போன பிறகுதான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தாள். இது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணத்தை காதல் திருமணமாக மாற்றும் முயற்சிதான். ஆனால் இந்த முயற்சி ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி அனைத்துத் தடைகளுக்குப் பிறகு இளவரசனைத் தேடும் வேட்டை என்று புரிந்தது. மூன்று வருடக் காத்திருப்புக்குப் பிறகு  என் மகள் மனக்கோட்டையில் குடி கொண்ட என் மருமகன் கிடைத்தான்!!  தங்க ஊசியை வைக்கோல் போரில் தேடிக் கண்டு பிடித்த ஆனந்தம் எங்களுக்கு!!

எனக்கு ஒரு காதல் கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக  ஒரு ஆசை. அந்த ஆசையையும்  இந்தக் குறுநாவலை எழுதி  நிறைவேற்றிக் கொண்டேன்.

இதை ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி என் அண்ணிக்கும் என் மருமகளுக்கும் அனுப்புவேன். இருவரும் படித்து விட்டு அடுத்த அத்தியாயம் எங்கே என்று கேட்டபோது கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது என்று புரிந்தது. இந்தக் கதையை எழுதி முடித்த பிறகுதான் என் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. என்னைப் பற்றி என்ன கதை எழுதியிருக்கிறாய்? என்ற அவள் கேட்டபோது நான் அது உன் கதை மட்டுமில்லை. அதில் என் கதை உன்னைப் போன்ற பல பெண்களின் கதையும் இருக்கிறது என்று புன்னகையுடன் சொன்னேன்.  அதைப் புன்னகையுடன் சொன்னேன் என்று சொன்னதால் நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன் என்று சொல்லவில்லை. தீவிர மன அழுத்தத்தில் இருந்தேன். என்னுடைய மனநிலை மாறுபாடுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்ட என் துணைவர் மற்றும் சில நண்பர்களுக்கு நன்றி. போன மாதம் கூட இந்த நாவலைப் படித்துவிட்டு மனதிற்கு நெருக்கமாக இருந்தது என்று எனக்கு செய்தி அனுப்பியிருந்தார் ஒரு வாசகி. இதைப் போன்ற எதிர்பாராதவர்களிடமிருந்து என் கதைகளைப் படித்துவிட்டு இப்படி ஏதாவது ஆக்கபூர்வமாக ஒரு பாராட்டு வருவதும் ஒரு மகிழ்ச்சிதானே!

இந்தத் தொகுப்பில் எழுதப்பட்டுள்ள சிங்கப்பூர் வாழ்வு, தமிழ்ப்பெண்களின் மனநிலை, பாரம்பரிய எதிர்பார்ப்பு ஆகியவை கதை எழுதும்போது உருவானதா அல்லது திட்டமிடல் இருந்ததா?

சிங்கப்பூர் வாழ்வு, இந்திய வாழ்வு, ஆசிய வாழ்வு, மேலைநாட்டு வாழ்க்கை என்று  எந்த நிலப்பகுதியில் வாழ்ந்தாலும் மனித வாழ்க்கையின்  அடிப்படை ஒன்றுதான்! தமிழ்ப்பெண்களுக்கும் இந்தியப்பெண்களுக்கும் சிங்கப்பூர் வாழ்க்கை நவீன வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது. ஆனால் வீட்டுக்குள் ஒரு சம்பிரதாயமான இந்திய வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். இரு வேறு உலகங்களில் இரு மனநிலையில் வாழ்கிறார்கள். திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குடும்ப வாழ்க்கை இவற்றில் பெரிதாக நம்பிக்கை கொள்ளாமல் வாழும் ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. கதை எழுதத் தொடங்கும்போது கதைக்கான கரு மட்டும்தான் என் மனதில் உருவாகும். அதற்கான சம்பவங்களை திட்டமிடுவதில்லை. அது இயல்பாக நிகழ்ந்து விடுகிறது

நம் வாழ்க்கையில் நினைவுகள் / நிகழ்வுகள் கதைகளாக மாறும் அந்த மாயப்பொழுது எப்படித் தோன்றுகிறது?

அது ஓர் ஆச்சரியம்தான்! வாழ்க்கை நினைவுகளால் சூழப்பட்டுள்ளது. அதில் ஒரு சம்பவத்தை  கதையாக மாற்ற ஒரு பொறி தோன்றும்.  அது எப்போது நிகழும், பிறகு எப்போது கதையாக மாறும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த மாயம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு எழுதுவது சிலருக்குக் கை வருகிறது. கட்டுரைகள் எழுதும் போது அதற்கானத் தகவல்களைத் தேடி எழுதுவேன். ஆனால் கதைகள் எப்போதும் இயல்பாக நிகழும்.

நெருக்கமாகப் பழகியவர்களைக் கதைக்குள் கொண்டுவருகையில் எழுத்துச் சுதந்திரத்தில் சிக்கல்களைக் கொடுத்ததா?

நெருக்கமாகப் பழகியவர்களைச் கதைக்குள் கொண்டுவருவதில் எந்த சிக்கலும் நிகழ்ந்ததில்லை.  அவர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுவதுபோல அவர்களுக்குத் தோன்றாதது வகையில் கதைக்குள் அந்த கதாபாத்திரம் இருக்கும். கதை என் கற்பனை. அந்த கற்பனை உலகத்தில் வரும் மனிதர்கள் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள். ஆனால் சில எழுத்தாளர்கள் மனதில் ஒருவரை நினைத்துக்கொண்டு அவர்களை விஷமத்தனத்துடன் தங்கள் இஷ்டம்போல் சற்று எதிர்மறையாக எழுதுவார்கள். அந்த விஷயம் அதற்குத் தொடர்புடையவர்களுக்குப் புரிந்து விட்டால் சிக்கல்தான். ஆனால் ஒரு எழுத்தாளரின் கற்பனைக்கு யாரும் எந்த எல்லைக்கோடும் போட முடியாது.

சிங்கப்பூரில் வாழும் தமிழராய் நினைத்ததை எழுதுவது எளிதா? ஏதேனும் தடைகள் இருந்தனவா?

சிங்கப்பூரில் மட்டுமில்லை; எந்த ஊரில் எழுதினாலும் நினைத்ததை எல்லாம் எழுத முடியாது. இது எழுத்தாளராக நாமே நமக்கு அமைத்துக்கொள்ளும் விழுமியம். சிங்கப்பூர் சூழலில் சிங்கப்பூர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை எழுதவேண்டும் என்று முனையும்போது கொஞ்சம் யோசிக்கவேண்டியிருக்கிறது. நகைச்சுவையாகச் சொன்னால் இயோ சூ காங்கிலிருந்து ஜூரோங் கிளம்பினான் என்று எழுதிவிட்டால் சிங்கப்பூர் கதையாகிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் இடங்களைக் குறிப்பிடுவதால் மட்டும் அவை சிங்கப்பூர்ச்சூழலை பிரதிபலிக்கும் கதைகள் ஆகி விடாது.

இருநூறு வருடங்களாக தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலப்பகுதி இது. தமிழ் நாட்டிலிருந்து மனிதர்கள் மட்டும் புலம் பெயர்ந்து வரவில்லை. கூடவே அவர்கள் வாழ்க்கைமுறை, உணவு, தெய்வங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், அரசியல், திரைப்படங்கள், இசை, இலக்கியம், பாடல்கள் என்று அனைத்தும் சிங்கப்பூருக்கு வந்துவிட்டன. அதுவும் கடந்த  முப்பதாண்டுகளாக தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி விட்ட நிலையில்  விடியற்காலையில் மதுரையில் பூத்த மல்லிகைப்பூவும் சுட்ட இட்டலியும் மாலையில் நமக்குத் தேக்காவில் கிடைக்கின்றன. கதைகளும் புலம் பெயர்ந்து காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக் கொண்டிருக்கின்றன.

இவற்றை எழுதுவதில் எந்த தடைகளும் இல்லை. ஆனால் தடைகளை நாமே போட்டுக் கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட  சமூகத்தில் இளம் வயதில் திருமணம் செய்துவைப்பதைப் பற்றி ஒரு கதையில் எழுதியிருப்பேன். இதையெல்லாம்  எழுதக்கூடாது என்று ஒருவர் என்னிடம் சொன்னார்.

சிங்கப்பூரில் பெருந்தாக்கம் ஏற்படுத்திய தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா?

தாக்கம் அதுவும் பெருந்தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர்கள் என்று யாரும் இல்லை.  பிடித்த எழுத்தாளர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும்போது எல்லா எழுத்தாளர்களுக்கும் சில கதைகள் சிறப்பாக அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் பல எழுத்தாளர்களின் பல கதைகள் பிடித்திருக்கின்றன.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகமும் வாசகர்களும் உங்கள் எழுத்தினை / படைப்புகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

உங்கள் கதையைப் படித்தேன் என்று சிலர் சொல்கிறார்கள். பிடித்தவற்றைப் பகிர்கிறார்கள். நூலகத்திலிருந்து எடுத்து படித்தேன்; எனக்குப்  பிடித்தக் கதைகளாக இருக்கின்றன என்று சொல்கிறார்கள். சிங்கப்பூர்த் தமிழ்ச்சமூகமும் வாசகர்களும் எப்படி என் படைப்புகளை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்ற சிக்கலானக் கேள்விக்கு பதில் தெரியவில்லை. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் இருக்கிறேன். பத்து புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் சந்தைப்படுத்தத் தெரியவில்லை. அதற்கான முயற்சி எதையும் செய்யவில்லை.

ஒரு பெண் எழுத்தாளராகக் காதல், உடல், மன உறவுகள் பற்றி எழுதும்போது சமூக விமர்சனம் எப்படி உங்களைப் பாதிக்கிறது?

என் கதைக்கும் அதற்கான களத்திற்கும் எப்படிப்பட்ட எழுத்து தேவைப்படுகிறதோ அதை எழுதுவதில் எனக்கு எந்த மனத்தடையும் இருந்ததில்லை. பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் நீங்கள் எனக்குக் கொடுப்பது. எழுத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். ஆண் பெண் உறவுகளைப் பற்றி எழுதும்போது விமர்சனங்கள்  இருக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை.  ஆனால் அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். மிகக் கடுமையாக விமர்சனம் செய்தால் சற்று நெருடலாக இருக்கும். அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

உங்கள் கதைகள் திரைத்திறனுக்கு ஏற்றவை என்று தோன்றுகிறது – வெள்ளித்திரை / சின்னதிரை தயாரிப்பாளர்கள் யாரேனும் தொடர்பு கொண்டார்களா?

30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இரண்டு சிறுகதைகள் சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் நாடகமாக வந்தது. நன்றாக இருந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அதற்கான முயற்சியில் நான் இறங்கவில்லை. யாராவது என் கதைகளைப் படித்துவிட்டுக் கேட்டால் தருவேன்.  அவை சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கும் எழுதப்பட்டவை அல்ல. திரைப்படத்திற்கென தனி மொழியும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் நவீன சுயம்வரம் கதையை தொடராக எடுக்கலாம். இன்னும் சிலபல அத்தியாயங்களை சேர்த்து எடுக்கலாம்.  கேள்விகளைக் கேட்ட நண்பர் பாண்டித்துரைக்கு என் நன்றி.