(கட்டுரை) உலகமெங்கும் ஒலிக்கும் ஒலி 96.8

மணிமாலா மதியழகன்

மனத்திற்கு இனிய ஒலி, எங்கும் பயணிக்கும் ஒலி, குடும்பத்தின் அங்கத்தினர்போலாகிவிட்ட ஒலியெனப் பல்வேறு சிறப்புகளுடன், சிங்கப்பூரில் பேசும் பொற்சித்திரமாய் வலம் வருகிறது ‘ஒலி 96.8’. விஞ்ஞான வளர்ச்சியின் உன்னதக் கண்டுபிடிப்பான வானொலி இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி குக்லீல்மோ மார்க்கோனி என்பவரால் 1890களில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு ஊடகமாகும். அன்று, பொழுதுபோக்கு அம்சங்களுடன் செய்திகளும் தகவல்களும் மக்களைச் சென்றடைய வானொலி மட்டுமே கைகொடுத்தது. ஒரு சாதனத்திலிருந்து வருகிற ஒலியினால், ‘சிறிய பெட்டிக்குள் இவ்வளவு பேர் எப்படிப் போனார்கள்?’ என்ற ஐயம் அக்காலச் சிறுவர்களுக்கு ஏற்பட்டது. தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி இன்று பல்வேறு ஊடகங்களாகப் பரிணமித்துள்ளது. இதன் காரணமாகப் பல நாடுகளில் வானொலிச் சேவை முன்புபோலக் கண்டுகொள்ளப்படாமல் போனாலும் சிங்கப்பூரில் அத்தகைய நிலை ஏற்படவில்லை. இங்குக கலாசார, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில், ‘மீடியாகார்ப்’ நிறுவனத்தின் ஓர் அங்கமான வானொலியின் சேவை முக்கியப்பங்கு வகிக்கிறது.

‘பிரிட்டானிய மலாயா’ ஒலிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் 1925இல் தொடங்கப்பட்ட வானொலி ஒலிபரப்பு, ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்து ஜூன் 1, 1936இலிருந்து இந்திய மொழிகளில் நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. தொடக்க காலத்தில் 4 மணி நேரம் மட்டுமே நிகழ்ச்சிகள் படைத்தது. ‘ரேடியோ சிங்கப்பூர்’,  ‘ஒலிவழி 4’, ‘ஒலிக்களஞ்சியம்’ எனப் பல பெயர் மாற்றங்கண்ட வானொலி 1997இல், ‘ஒலி 96.8’ என்ற பெயர்பெற்றது. ஆகஸ்ட் 8, 2001இலிருந்து தனது இடைவிடா சேவையைத் தொடங்கிய ஒலி, இந்தியச் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என இனிமையாய் ஒலிக்கிறது.

நேயர்களுக்கு அலுப்புத்தட்டா வண்ணம் உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், சுவாரசியமான தகவல்கள், போன்றவற்றை அறிவிப்பாளர்கள் வழங்குகின்றனர். ஒலி 96.8, முக்கியத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களையும் சாமானிய மக்களுள் ஒருவராகயிருந்து சாதித்தவர்களையும் உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. மேலும், ஒலி நேயர்கள் தங்கள் மனத்தில் உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்ள நல்வாய்ப்பையும் நல்குகிறது. அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றோரது கூட்டுமுயற்சியே மக்களின் மனத்தில் சிங்கப்பூரின் வானொலிச் சேவை இடம்பிடிக்க காரணமாகிறது.

காலை 6 மணிக்குத் தேசியகீதத்துடன் தொடங்குகிறது ‘வணக்கம் சிங்கை’ நிகழ்ச்சி. 10 மணிவரை இடம்பெறும் இந்நிகழ்ச்சியை அறிவிப்பாளர்கள், முகமது ரஃபியும் ஹலீமா அஸ்மானும் படைக்கின்றனர். நேயர்களுக்கு விருப்பமான ஊக்கமூட்டும் சொற்றொடர்கள் பகிரப்படுகின்றன. வாழ்க்கையின் விழுமியங்களை சிறந்த முறையில் எடுத்துரைக்கும் வள்ளுவர் வாக்கை, ஒரு சிறுகதையின் வழி குறளின் பொருளை மாணவர் எடுத்துரைப்பதைக் கேட்பதற்கு இனிமையாகவுள்ளது. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை இடம்பெறும் ‘ஆனந்தம் ஆரம்பம்’ நிகழ்ச்சியை அறிவிப்பாளர்கள், விமலாவும் நித்யாவும் படைக்கின்றனர். நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்றார்போல படைப்பாளர்கள் இருவரும் கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்கின்றனர். பிற்பகல் நான்கு மணிக்குத் தொடங்கும் ‘டீக்கடை’ நிகழ்ச்சியை ரவியும் சஜினியும் படைக்கின்றனர். ‘சூடான டீ, நிறைய லூட்டி’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இரவு எட்டு மணிவரை துடிப்புடன் இவ்வங்கம் படைக்கப்படுகிறது. நாளெல்லாம் உழைத்து ஓய்வை நாடுபவர்களுக்கும் இரவு வேலை செய்பவர்களுக்குத் துணையாகவும் அமைகிறது 9 மணியிலிருந்து நள்ளிரவு 12  மணிவரை அறிவிப்பாளர் அப்துல் காதர் படைக்கும் ‘இரவினில் ஆட்டம்’ நிகழ்ச்சி. இடைப்பட்ட நேரங்களிலும் வாரயிறுதி நாட்களிலும் பகுதிநேர ஒலி படைப்பாளர்கள் நிகழ்ச்சியைச் சிறப்புடன் தொகுத்து வழங்குகின்றனர்.

‘எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக் கண்டான் திறன்பேசியைப் படைத்தான்?’

என்று பாடுமளவிற்குத் திறன்பேசியின் தாக்கம் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. வீட்டில் உள்ளவர்கள்கூட ஒருவரோடு ஒருவர் பேசுவது அரிதாகிவிட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளில் வானொலி குடும்பத்தின் ஓர் அங்கம்போல ஆகிவிட்டது. சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக்கொள்வதில் வல்லமைபெற்ற சிங்கப்பூர், திறன்பேசியின் வழி ஒலியைக் கேட்க வழி செய்துள்ளது. MeListen வழியாக உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ஒலியைக் கேட்க முடியும். மேலும், ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ ‘டிக்டாக்’ போன்ற பிரபல சமூக ஊடகங்களின் வழியே நிகழ்ச்சிகளும் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. வானொலியில் படைக்கும் சில நிகழ்ச்சிகளில், பிற நாடுகளில் வசிப்பவர்களும் அழைத்துப் பேசுகின்றனர். சிங்கப்பூரைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கும் குடிமக்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும் தமிழை நேசிக்கும் அனைவருக்கும் ஒலி தன் சேவையைத் திறம்பட வழங்கி வருகிறது.

ஒலியில் ஒரு பாடலை ஒலிபரப்பும்போது, அப்பாடல் இடம்பெற்ற திரைப்படம், இயற்றியவர், பாடகர், இசையமைப்பாளர் என அதில் சம்பந்தப்பட்டவர்களைக் குறிப்பிடுகின்றனர். சில வேளைகளில் அப்பாடல் எழுதப்பெற்ற சூழலையும் சொல்கின்றனர். இதுபோன்ற தகவல்களுடன் பாடலைக் கேட்கும்போது அப்பாடல் மனத்திற்கு மேலும் நெருக்கமாகிறது. முப்பொழுதும் இயங்கும் பணியிடங்கள் சிங்கையில் பல உண்டு. அங்கு இயங்குகிறவர்களுக்கு முழு நேர வானொலிச் சேவை உற்ற நண்பனாகத் திகழ்கிறது என்று சொன்னால் மிகையாகாது. நேரத்திற்குத் தகுந்த பாடல்களை ஒலிபரப்புவதில் பேர்போனது நமது ‘ஒலி 96.8’. தத்துவப் பாடல், காதல் பாடல், சோகப் பாடல் எனப் பல்வேறு பாடல்களைக் கேட்டு இன்புறலாம் என்றாலும் ஒலி என்றாலே பாடல்கள்தான் நிறைய ஒலிப்பதாகத் தோன்றுகிறது.

மனிதர்களைப் பண்படுத்த இலக்கியங்கள் கைக்கொடுக்கின்றன. கதை கேட்பது பொதுவாக பெரும்பாலானோருக்கு விருப்பமான ஒன்று எனச் சொல்லலாம். ஒரு கதை, கேட்பவரது மனக்கண்ணில் காட்சியாக மாற்றம் காண்பது ஓர் இனிய அனுபவமாகும். வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்படுகிற பாடல்களைக் குறைத்து, கதைகளை ஒலிபரப்பலாம். படித்த, பிடித்த சிறுகதைகளை நேயர்களை வாசித்து அனுப்பச் சொன்னாலும் செய்வதற்கு நிறைய பேர் தயாராகவுள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிப்பாளர் சுப்பு, நூல் அறிமுகம் எனப் படைத்த அங்கம் பயன்மிக்கதாய் இருந்தது. இவ்வங்கம் தொடர்ந்து படைக்கப்பட்டால் நமது நூலகங்களில் உள்ள நல்ல நூல்கள் வாசகர்களைச் சென்றடைய ஏதுவாகயிருக்கும்.

“வேல வேல வேல வேல… மேல மேல வேல…” அவ்வை சண்முகி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைப்போல அவரவரது வேலையை நாடி எங்கும் வேகம் எதிலும் வேகமென்று ஓடுவது சிங்கப்பூரில் வழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்டச் சூழலில் போக்குவரத்துச் செய்திகள் மிகவும் இன்றியமையாததாகும். பயணத்தை இனிமையாக்க வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்படும் போக்குவரத்துச் செய்திகள் உதவிபுரிகின்றன. குறிப்பாக, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையேயான போக்குவரத்துச் சேவையை வேலைக்குப் போகிறவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பிற அலுவல்களுக்காகச் செல்கிறவர்கள் என நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு ஒலியில் தெரிவிக்கப்படுகிற போக்குவரத்துச் செய்திகள் பொதுமக்களுக்கும் வாகனமோட்டிகளுக்கும் பேருதவி புரிகின்றன.

ஒலியில் நாடகங்கள்

இலக்கியத்தில் நாடகத்திற்கு என்று ஒரு தனியிடம் உண்டு. தொலைக்காட்சி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் காதுகளின் வழி கேட்பவையே மனத்திரையில் காட்சிகளாய், அவரவர் கற்பனைக்கேற்ப கதைக்களங்களும் கதாபாத்திரங்களுமாய் உருமாறின. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபிறகு நாட்டை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்த ஆட்சியாளர்கள் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்தனர். கம்பத்தில் வாழ்ந்தவர்களை அடுக்கு மாடி வீடுகளுக்கு மாற்றுதல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், சுகாதாரம் காப்பது, தேசிய சேவைக்கு இளையர்களை ஈடுபடுத்துதல் போன்ற முக்கியப் பணிகளை மக்களிடம் எடுத்துச்செல்ல வானொலி உதவியது. ‘சிங்கப்பூரர்’ என்ற எண்ணத்தை மக்களுக்குள் விதைக்க வானொலி நாடகங்கள் வழிவகுத்தன. இதில் நமது முன்னோடி எழுத்தாளர் திரு.பி.கிருஷ்ணன் அவர்களது பங்கு அளப்பரியது. அவரது நாடகங்கள் மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.

ஒலியில் இப்போது, பொது விடுமுறை நாட்களில் மட்டுமே நாடகங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. விழாக்காலங்களில் மக்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்க, பெரும்பாலும் நகைச்சுவை நாடகங்களே படைக்கப்படுகின்றன.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை படிக்கும் துறை வேறாக இருப்பினும், நம் மொழிமீதுள்ள பிடிமானத்தினால் நிறைய மாணவர்கள் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கேட்பதைச் செய்து கொடுக்கத் தயாராய் உள்ளது. ஒரு குழுவாகச் சேர்ந்து வானொலி நாடகம் படைக்கும் போட்டியை நடத்தலாம். இதன்வழி, இளையர்களையும் வானொலிச் சேவை சென்று சேர்வதுடன் இளைய படைப்பாளர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

உற்ற நண்பனாய் ஒலி

சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இருந்த வானொலி, சமூக ஊடகங்கள் புற்றீசல்போலப் பெருகியுள்ள இக்கட்டத்திலும் நிலைத்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். கடல் தாண்டி வரும் வலசைப் பறவைகளைப்போலச் சொந்த நாட்டையும் குடும்பத்தையும் பிரிந்து சிங்கப்பூருக்கு வந்துள்ள ஏராளமானோருக்கு பிரிவின் வலியைக் குறைக்க வானொலி கைகொடுக்கிறது. சற்றும் தயக்கமின்றி சரளமாகப் பேசும் அறிவிப்பாளர்கள் உறவினர்போன்ற தாக்கத்தை நேயர்களிடம் ஏற்படுத்திவிடுகின்றனர். நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் நேயர்கள் வானொலிப் படைப்பாளர்களை அக்கா, அண்ணன் என்று உரிமையோடு அழைப்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உள்ளூர் எழுத்தாளர் திருமதி.தமிழ்ச்செல்வி இராஜராஜன் ‘காற்றலையில்’ என்ற சிறுகதையில், பிரிவுத்துயரில் இன்னலுறும் ஒருவருக்கு ஒலி மருந்தாய் அமைவதைச் சிறப்பாகக் காட்டியுள்ளார்.

சமுதாய நலனில் ஒலி

பொழுதுபோக்கு மட்டுமன்றி சமூக பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ஒலி 96.8 உதவுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளில் ஏற்படும் இடர்களுக்குக்கூட ஆதரவளித்து சமூக மாற்றத்திற்குப் பங்களிக்கிறது. நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்கு $250,000 திரட்டியதற்காக ஒலிக்கு அறப்பணி விருது வழங்கப்பட்டது. 2001இல் குஜராத்தில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக, மூன்றே வாரங்களில் $2.6 மில்லியன் வெள்ளியைத் திரட்டிச் சாதனைபுரிந்தது. 2004 இல் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி பேரிடருக்காக, ஒலியும் வசந்தம் ஒளிவழியும் இணைந்து  சில இந்திய அமைப்புக்களின் ஆதரவோடு கேம்பல் லேனில் நிதித் திரட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. சாதனை அளவாக நான்கே நாட்களில் $426 000  திரட்டப்பட்டது. முதன் முறையாக ஒலியில் 2003ஆம் ஆண்டில் இரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி ஆண்டுக்கொருமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒலியில் மாணவர்கள்

மாணவர்களுக்கு மொழியின்மீதுள்ள ஈடுபாட்டை வளர்க்கும் பொருட்டு ஒலியில் அவ்வப்போது பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. பெற்றோரும் பிள்ளைகளும் தமிழ்மொழியை இயல்பாகப் பயன்படுத்தக்கூடிய எளிய உத்திமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன. இதன் காரணமாக மாணவர்கள் தமிழில் சரளமாகப் பேசுவதுடன் வாய்மொழித் தேர்விலும் சிறப்பாக வெற்றிபெறுகின்றனர்.

ஒலியில் முன்பு, பாமா பாலகிருஷ்ணன் சிறுவர் நிகழ்ச்சியை மிகவும் சிறப்புடன்  படைத்ததை மறக்கவியலாது. இப்போது, சிறுவர்களுக்காக சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரம் நிகழ்ச்சி படைக்கப்படுகிறது. சிறாரை ஈர்க்கப் பல வழிகளில் முயன்றாலும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இக்குறையைக் களையும்பொருட்டு நாள்தோறும் மாலையில் ஒரு மணி நேரத்தை சிறார்களுக்காக ஒதுக்கலாம். அந்நேரத்தில் ஒலிபரப்பப்படும் பாடல்கள்கூடச் சிறுவர் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும். 70களில் ஒலியில் சிறுவர்களை ஈர்ப்பதற்காக, சில கேள்விகளைக் கேட்பர். அஞ்சல் அட்டையில் பதில்களை எழுதி அனுப்புகிறவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைப்போல இப்போது, சிறுவர்களுக்கு ஏற்றவாறு புதிர்க் கேள்விகளைக் கேட்டு, வெற்றிபெறுபவர்களுக்குச் சின்னச்சின்ன பரிசுகள் வழங்கலாம். தமிழர்களின் இதயத்துடிப்பாகவும் தமிழ்மொழியின் செழுமையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலும் ‘ஒலி 96.8’ ஓயாது ஒலிபரப்பை வழங்கி மக்களை உற்சாகத்தில் வைத்துள்ளது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் இன்று பல்வேறு ஊடகங்கள் பெருகியுள்ளபோதிலும் தனது தனித்துவமான படைப்பாற்றலால் தன்னிகரற்று விளங்குகிறது. வருங்காலத் தலைமுறையினரும் ஒலியைக் கேட்டு அனுபவிக்கும் வண்ணம் செய்வதுடன் இலக்கியத்திற்கும் இடம் கொடுத்தால் இதன் புகழ் இன்னும் பெருகும் என்பது திண்ணம்.