(கட்டுரை) ஆதி குடி அடைகாத்த பண்பாட்டுச் சின்னம் – செண்பக விநாயகர்

முனைவர் விஸ்வலிங்கம் தேன்மொழி

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’  என்கிறது முதுமொழி ஒன்று. உண்மையில் அறிவு வளர்ந்து மிகுந்திருக்கும் மின்னியல் நூற்றாண்டில் கோயில் அவசியம்தானா? அல்லது இம்மூதுரை காலாவதியாகிப்போன ஒன்றா? என்பது ஆராய்ச்சிக்குரிய விடயமாகும். ‘கோ’ என்ற ஓரெழுத்து மொழிக்கு இரு பொருள் உண்டு. ஒன்று இச்சொல் இறைவனைக் குறிக்கும். மற்றொன்று அரசனைக் குறிக்கும். இறைவன் அல்லது அரசன் குடி கொண்டிருக்கும் இடத்திற்கு கோயில் என்று பெயர்.

ஆனால் ஏன் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது? கோயிலுக்கும் நம்மைப் போன்ற எளிய  மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இது பகுத்தறிவின்படி ஒப்புக்கொள்ளக்கூடியதா? என்ற வினாக்களுக்கு ஏற்ற விடையை நாம் உணர்ந்து கொள்ள சிங்கப்பூரில் ஆதியில் குடிகொண்ட விநாயகரைப் பற்றிப் பார்க்கலாம்.

கோயிலில் உள்ள மூட நம்பிக்கைகளை வெறுத்துச் சித்தர்கள் பலர் பாடல் இயற்றியுள்ளனர். அதைத்தாண்டி ஓர் ஒருமுகத்தன்மையை, ஓர்மையை மக்களிடம் வளர்க்கும் இடமாகக் கோயில் விளங்கி வந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்களை ஒருங்கிணைக்கும் இடமாகத் திருத்தலங்களும் திருவிழாக்களும் இருந்து வந்துள்ளன. இவை கலைகளைப் போற்றும் இடமாகவும் திகழ்ந்து வந்துள்ளன. கோயிலை அடியொற்றியே, அந்த தார்ப்பரியத்தை முன்வைத்தே முதிர்ந்த அனுபவங்களும் பழக்கவழக்கங்களும் பண்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன.

உதாரணமாக, அன்னதானம் என்ற சொல் ஏழ்மையைத் தாங்கும் பெருந்தன்மையைக் குறிப்பதாயினும் முற்றிலும் வழிபாட்டுத் தலத்தைச் சார்ந்தே உருவாக்கப்பட்டு, பேணப்பட்டு வந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. தன்னுடைய உணவுக்காக வேட்டையாடிக்கொண்டிருந்த மனிதனை இந்தக் கடவுள் நம்பிக்கையும் அதனை ஒட்டி உருவாக்கப்பட்ட கோயில் என்ற அமைப்பும் மிகுதியும் ஆளுகை செய்துள்ளது மட்டுமல்ல ஒருகாலத்தில் பண்படுத்தும் வேலையையும் செய்திருக்கவேண்டும். மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலம் வரை இருட்டில் வாழ்ந்தவனுக்கு ஊன்றுகோலாக இந்தக் கடவுள் நம்பிக்கைதான் உதவி வந்துள்ளது. பொழுதுசாய்ந்தால் வீடு பெருக்கவேண்டாம். ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள். மின்சாரம் இல்லாத காலத்தில் போதிய வெளிச்சம் இல்லாதபோது, வீட்டைப் பெருக்கினால், அளவில் சிறிய விலையுயர்ந்த பொருட்களை வெளியில் பெருக்கித் தள்ளிவிட வாய்ப்பு உண்டு. இது போன்ற நம்பிக்கைகள் வாழ்க்கையை நெறிப்படுத்தி வளர்த்துச் சென்றன.

காலம் மாறிய பின்பு இவை வேண்டாதனவாக மாறிவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கோயில் இல்லாத ஊரில் குடியிருந்தால் – பிறர் பொருளைத் திருடினால் சாமி கண்ணைக் குத்தும் என்பதை நம்பாதவனால் பேரிடர் வரும்; ஒரு கதவைச் சாத்தினால் இறைவன் மறுகதவைத் திறப்பான் என்ற நம்பிக்கையற்றவன் கைவிடப்பட்டவனாய் முடங்கிக் கிடப்பான்; திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற சொற்களைக் கேட்டறியாத தன்முனைப்பற்றவன் வாழ்வின் முனைகளில் துவண்டவனாய் இருப்பான். இத்தகையோர் வாழ்ந்திருக்கும் ஊரில் குடியிருப்பவன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஆகையால்தான் கோயில் இல்லாத ஊர் பண்பாட்டில் சிறந்திருக்க வாய்ப்பில்லை என்று உணர்த்துகிறது இம்முதுமொழி.

அப்படியென்றால் சிங்கப்பூரில் கோயில்களின் தோற்றம் எப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டதாக அக்காலத்தில் இருந்திருக்கிறது என்பதைத்தான் நாம் இங்கு கவனிக்கப்போகிறோம். சிங்கப்பூரில் மிகவும் பழைமையான கோயில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்தான். இது 1827இல் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் முதன்முதலில் சிங்கப்பூருக்கு வருகை தந்தவர் விநாயகர் ஆவார். சிங்கப்பூரிலுள்ள காத்தோங் என்னும் இடத்திலுள்ள ஒரு நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது விநாயகரின் சிலை. இது 1800ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது, அங்கிருந்த செண்பக மரத்தின் அடியில் வைத்து அந்த விநாயகரை மக்கள் வணங்கி வந்தனர். இதனால் அந்த விநாயகருக்கு செண்பக விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு திருத்தலம் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட விநாயகருக்கு எந்த கோயிலும் அந்த நாட்களில் கட்டப்படவில்லை. 1875லிருந்து காத்தோங் பகுதியில் இலங்கையிலிருந்து வந்த மக்கள் அதிகம் வசித்தனர். அவர்களுள் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தியாகராஜ எதிர்நாயகம் பிள்ளை என்பவராவார். அவருடன் இணைந்து அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் செண்பக மரத்தில் இருந்த பிள்ளையாருக்கு வழிபாடுகளும் பூஜைகளும் செய்து வந்தனர்.

ஆரம்ப காலத்தில் வெட்ட வெளியில் அமைந்திருந்த பிள்ளையாருக்கு கூரை வேயப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்பட்டது. தங்களது பூர்வீகத்தை விட்டு சிங்கப்பூருக்கு வந்திருந்த இலங்கை வாழ் மக்களை ஒருங்கிணைக்கும் தலமாக விநாயகர் வழிபாடு விளங்கியது என்றால் அது மிகையாகாது. சொந்த மண்ணை விட்டுக் குடியேறிய தமிழர்களின் வாழ்வியலில் கடவுளும் கோயிலும் ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கின. அவ்வகையில் சிலோன் அதாவது இலங்கை மக்கள் பெரும்பான்மையும் வாழ்ந்த அந்தப் பகுதியில் தமிழர்களுக்கேயுரிய பண்பாடாக மாறிவிட்ட கடவுள் நம்பிக்கையை விநாயகர்தான் முன்னெடுத்துச் சென்றார். அப்படி விநாயகரை வழிபடுவதற்காக வரும் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக, அந்த எளிய ஆலயத்தின் அருகில் சிலோன் ரோடு என்று எழுதி வைத்தனர். காலப்போக்கில் அந்தக் காரணப் பெயரே இடப்பெயராக அமைந்துவிட்டது.

பசுவைத் தெய்வமாகப் போற்றுவது இந்தியப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி ஆகும். இதற்கு ஆதி கால மக்களின் பொருளாதாரமும் வாழ்வியல் ஆதாரமும் ஆநிரையை ஆதாரமாகக் கொண்டு அமைந்திருப்பதை அக்கால மக்களின் வாழ்க்கைமுறை சுட்டுகின்றது. இந்த வழக்கம் 1900ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் நீடித்து இருந்திருப்பதை அறிய முடிகின்றது. அக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த மக்களிடம் பசு வளர்ப்பு இருந்து வந்துள்ளது. அவர்கள் தங்களுடைய ஆநிரையில் கறந்த பாலை விநாயகருக்குக் கொடையாக ஈந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கென ஒரு சங்கம் 1909ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வந்த தமிழர் ஒருவரால் செண்பக விநாயகர் குடிகொண்டிருந்த இடம் வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இடம் இலங்கைத் தமிழர் சங்க அமைப்பிலிருந்த அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்பட்டது.

சாதாரணக் கூரையின் அடியில் அமர்ந்திருந்த விநாயருக்கு செங்கல்லால் கோயில் எழுப்பிய பெருமையை அடைந்தவர் திரு.சோமநாதர் முத்துக்குமாரு பிள்ளை என்பவராவார். செங்கல் கோயிலின் முதல் குடமுழுக்கு 1930ஆம் ஆண்டு சனவரி 3ஆம் நாள் அங்குக் குடியிருந்த தமிழர்களின் அமோக வரவேற்பிற்கிடையே சிறப்பாக நடைபெற்றது. இத்தகைய கோயில்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கப்பூரில் வேரூன்ற ஆரம்பித்ததன் ஆரம்ப காலச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. அக்கால மக்களிடையே முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் தங்கள் சொந்த மக்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்திலும் கவனம் செலுத்தியதை அறிய முடிகின்றது.

இவ்விநாயகர் ஆலய வரலாற்றுப் பதிவில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் வெறும் மக்கள் ஒன்று கூடும் இடமாக மட்டும் இல்லையென்பதாகும். விநாயகர் ஆலயத்தில் நூல் நிலையம் இயங்கியது. சமய வகுப்புகள் நடத்தப்பட்டன. 1940இல் செண்பக விநாயகர் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் தொடங்கப்பட்ட வகுப்புகள் நல்ல முறையில் இயங்கி வந்தன. கல்வி, ஒருங்கிணைவு, புலம்பெயர் மக்களின் ஆதாரத் தலம், பண்பாட்டுப் பெட்டகம் எனப் பல்முனை நோக்கில் இத்திருத்தலம் சமூகத்தில் செயலாற்றி வந்திருப்பதை செண்பக விநாயகர் கோயிலின் வரலாறு காட்டுகின்றது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியரின் குண்டு வீச்சில் 1942ஆம் ஆண்டு சனவரி 22ஆம் நாள் விநாயகரின் திருத்தலம் மிகுந்த சேதமுற்றது. ஆனால், விநாயகர் வீற்றிருந்த மூலஸ்தானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், பதின்மூன்று வருடங்கள் கழித்து, விநாயகர் மீண்டும் மக்களிடம் செல்வாக்குப் பெற்று இரண்டாம் குடமுழுக்கிற்குத் தயாரானார்.

1961, 1983, 1989 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மறுஉருவாக்கம் பெற்ற விநாயகர் மூன்று மாடிகளுடன் பல்நோக்கு மண்டபம், திருமண மண்டபம், புதிய ஏழு வகுப்பறைகள், நூலகம் என பல்வேறு இனமக்களின் நன்கொடைகளின் மூலம் புத்தாக்கம் பெற்றுள்ளது. 72 அடி உயரமும் 5 நிலைகளும் கொண்ட கோபுரம், கம்பீரத் தோற்றத்தை விநாயகர் கோயிலுக்குத் தருகின்றது. சிங்கப்பூரில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் உயரும்போது அவர்கள் சார்ந்து வாழும் பண்பாட்டு விழுமியங்களும் சமூகத்தில் செல்வாக்குப் பெறுவதைக் காண முடிகின்றது.

மூலவராக விநாயகர் வீற்றிருக்கின்றார். வலது பக்கம் அருவுருத் திருமேனியாகச் சிவலிங்கமும் இடது பக்கம் மனோன்மணி அம்மையும் இருக்கிறார்கள். கோபுரத்தில் சுதையிலான விஷ்ணு, சிவன் உள்ளிட்ட 159 சிலைகள் இடம்பெற்றுள்ளன.

செண்பக விநாயகர் ஆலயமாகையால் வாயிலில் செண்பக ம(ண)ரத்துடன் நம்மை வரவேற்கிறார் விநாயகர். அமைதியான, தூய்மையான ஆலய பராமரிப்புடன் வீற்றிருக்கும் விநாயகர் ஆலயம், அதைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் நெறிமுறையை; ஒரு சாமான்யனின் வாழ்க்கையை மெல்லிதாக ஆனால் அழுத்தமாக ஆக்ரமித்து செம்மைப்படுத்தும் ஆற்றலை விளக்குவதாய் அமைந்திருக்கிறது. பொங்கல், விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், திருவிளக்கு பூஜை, உள்ளிட்ட பல வழிபாடுகள் சாமான்ய மக்களை ஒருங்கிணைக்கும் உந்துசக்தியாக விளங்குவதோடு நம்பிக்கைத் தளமாகவும் தன்னை விரிவுபடுத்துகின்றது என்பதை மறுக்கவியலாது.

நேரமிருந்தால் நீங்களும் ஒருமுறை சிலோன் சாலையில் இருக்கும் செண்பக விநாயகர் ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.