நீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்! பயணக்கட்டுரை

அனைத்து நெருக்கடியான நாட்களுக்கும் மத்தியில் நான் சிங்கப்பூர் கிளம்பினேன். பயணத்திற்குக் கிளம்புகையில் வழக்கமாய் இருக்கும் சுவாரசியம் மங்கிப்போயிருந்தது. ஷாநவாஸ், பிச்சினிக்காடு இளங்கோ, கனகலதா, பாரதி மூர்த்தியப்பன் ஆகியோரை முன்னமே நன்கே அறிந்திருந்தேன். சென்று இறங்கியதும், நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சிலின் சார்பாக, வைஷ்ணவி என்னை அழைக்க வந்திருந்தார். ஃபுல்லர்ட்டன் நட்சத்திர ஹோட்டலில் சேர்த்தார்கள். விமான நிலையத்தில் இமிக்ரேஷன் ஆஃபீசர் ஏற்கெனவே ஆச்சரியத்துடன் கேட்டிருந்தார். ‘ஃபுல்லர்ட்டன் ஹோட்டலிலா தங்கப்போகிறீர்கள்? எதற்கு வந்திருக்கிறீர்கள்?’. அந்த அளவிற்குச் சிறப்பான நட்சத்திர ஹோட்டல் தான் அது. ஆனால், மனம் அந்த ஹோட்டலிலோ, அதன் அறைகளிலோ தங்கவில்லை. அந்த ஹோட்டலைச் சுற்றியுள்ள எல்லா திசைகளிலும் நீளும் சாலைகளில் அன்று இரவு முதலே நடக்கத் தொடங்கினேன். ஒருவகையில், அந்த நடை, என்னிலிருந்து வெளியேறி, என்னை நோக்கி நடக்கும் நடைதான். அவ்வளவு நீள நடை, நடு நிசி வரை நடை. இன்னொரு வானத்தின் கீழ், இன்னொரு காலச்சூழலில் நடப்பது என்பது முற்றிலும் தன்னைத் தானே அறிந்து கொள்வது போன்று. முதல் நாளே நான் அறைக்குத் திரும்புகையில் மணி இரண்டு. சிங்கப்பூர் ஆற்றை ஒட்டி நடப்பது, சிங்கப்பூரில் எனக்குப் பிடித்தமான ஒன்றாகியிருந்தது.

மற்ற நாடுகளுக்குச் செல்வது போல், நீண்ட பயணத்தை நான் திட்டமிட்டிருக்கவில்லை. சென்னையின் வேலைகள், மூளையின் பின்னால் ஆணிகள் போல அறையப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சென்னையின் அன்றாடத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவும், அந்த நிலம் பருவத்துடன் என்னைப்பிணைத்துக்கொள்ளவும் முதல் நாள் இரவின் நீண்ட நடை உதவியது. முதல் நாள், நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சிலின், ‘அறம்’ பற்றிய தனி உரையாடலிலும், அன்று மாலையே பாலியல் மற்றும் பால்விழைவு குறித்து ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு எழுத்தாளர்களுடனான விவாத உரையாடலிலும் கலந்து கொண்டேன். நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், முனைவர் வாசுகி கைலாசம் உரையாடலை முறைப்படுத்தினார். தனி உரையாடலில், வழக்கம்போல இலக்கியம், கவிதை குறித்த கேள்விகளாய் இல்லாமல் அரசியல் குறித்த கேள்விகளே என்னிடம் முன்வைக்கப்பட்டன. சிங்கப்பூர் வாசிகளுக்கு என் எழுத்தும், நூல்களும் அறிமுகம் ஆகாமல் இருந்ததும் காரணமாய் இருக்கலாம். என்றாலும், நீண்ட காலத்திற்குப்பின் என்னளவில் அது ஒரு நல்ல உரையாடல் என்று சொல்வேன். ஆனால், உரையாடலில், சிங்கப்பூர் அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று நான் வியந்து குறிப்பிட்டது, விவாதத்தைச் சூடாக்கியது. உண்மையில், இந்த இடத்தில், இதை விரிவாக எழுதியாகவேண்டும். தமிழகமே தமிழ்மொழியின் மைய நிலமாகப் பார்க்கப்படும் சூழலில், வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மொழி வழியாக அளிக்கும் பங்களிப்பு எல்லாம், தமிழக இலக்கியத்தை, அரசியலை மையமாக வைத்தே பார்க்கப்படுவதில் நான் மாறுபடுகிறேன். வாழும் நிலமும், பங்குகொள்ளும் சமூக அரசியலும் மாறிவிடும் பட்சத்தில் இலக்கியத்தின் பதாகைகள் அங்கே வேறுமட்டத்தில் பட்டொளி வீசி பறக்கவேண்டும் என்பது அவா. அதிலும் தமிழர்களின் சூழல் முன்பு போல் இல்லை. பன்னாடுகளுக்கும் தங்கள் தனித்திறன் வழியாக தத்தம் வாழ்க்கையை விரித்துக் கொண்ட பின், தமிழ் மொழியின் இலக்கிய நுண்மாண் நுழைபுலம் அறிந்த முறையுடன், வெவ்வேறு திக்குகளில் அதன் இலக்கிய வெளியை விரிப்பது அவசியம்.

மாலை உரையாடல் எனக்குச் சுவாரசியத்தைத் தரவில்லை. ஆனால், பொதுவாக ‘பாலியல் மற்றும் விழைவு’ குறித்த ஆண் எழுத்தாளர்களின் பார்வைகள் எனக்கு சுவாரசியத்தைத் தந்ததில்லை. அவற்றில், பாலியல் வறட்சியும், உடலின் இயங்கியல் அறியாத தன்மையும், வேடிக்கையும் அபத்தமானவையாக இருக்கும். உடல் பற்றியும் அதன் விழுமியங்கள் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் முழுமையாக, நேர்மையாக உரையாடக்கூடிய ஆண் படைப்பாளியை இன்று வரை நான் கண்டதில்லை. முதல் உரையாடலிலேயே கனகலதாவும், வாசுகி கைலாசமும், பிச்சினிக்காடு இளங்கோவும் வந்து ஒட்டிக்கொண்டனர். சிங்கப்பூர் சூழலில் இருப்பதே மறந்து போனது.

எந்த நாட்டிற்குச் சென்றாலும், சில விடயங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உள்நாட்டு உணவுகளையே தேடி உண்பது, அங்கு இருக்கும் அருங்காட்சியகங்களுக்குச் செல்வது, நூலகங்களுக்குச் செல்வது, கடல் ஒட்டிய நாடென்றால் அவசியம் கடற்கரையில் கால் நனைத்துக் கடலுடன் உரையாடிவருவது, இவையெல்லாம் வெளிநாடுகளுக்குத் தனியே மேற்கொள்ளும் பயணங்களை நிறைக்கவல்லவை. கூகுளில் ஆராய்ந்தால், ஃபுல்லர்ட்டன் ஹோட்டலை ஒட்டியே பெரும்பாலான அருங்காட்சியகங்கள் சூழ்ந்திருந்தன. நான் மிகவும் காண விரும்பிய ஏஷியன் சிவிலைசேஷன்ஸ் மியூசியத்தைக் கடந்து தான் நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சிலில் எழுத்தாளர் திருவிழா நிகழ்வுகளுக்குச் செல்லவேண்டும். ஆகவே, முதல் தினமே அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றேன். மூன்று மணி நேரத்திற்கு மேல் அங்கே இருந்தேன். கண்டதில் முக்கியமானது, Tang Shipwreck என்ற பகுதி. ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் சைனாவிலிருந்து சிங்கப்பூர் கடற்கரை வழியாகப் பயணிக்கையில் மூழ்கிய கப்பலை, ஒரு மீனவர் 1998 மீன்பிடிப்பின் போது கண்டறிய அது அகழ்ந்தெடுக்கப்பட்டு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் கலைப்படைப்புகள். 60,000 – க்கும் மேற்பட்ட பீங்கான் பொருள்கள். ஒவ்வொரு முறை நினைத்துப்பார்க்கும்போதும், ஓர் அதிசய நிகழ்வு போல் இருக்கிறது.

எல்லோரும் சொல்லி வியப்பது போல், சிங்கப்பூரின் நவீனத் தோற்றத்தில் எனக்கு வியப்பு ஏற்படவில்லை. அந்த நாடு வளர்வதற்கு, அல்லது தன் வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்காக, மக்கள் மீது கடுமையான அழுத்தத்தையும் ஓட்டத்தையும் திணிப்பதை உணரமுடிந்தது. எல்லோரும் அவரவர் வேலையை நோக்கி தொடர்ந்து விரைந்து கொண்டே இருந்தனர். எல்லோரும் இயந்திரமயமான வாழ்விற்குத் தள்ளப்பட்டிருப்பதை உணரமுடிந்தது. என்றாலும், கவிதா கரும்பாயிரமும் கனகலதாவும் என்னுடன் தங்கள் நேரத்தை உரையாடலைக் கழிப்பதில் பெரும் கவனம் தந்தனர். நீண்ட நாள் தோழிகள் போல, நாங்கள் பிரிய மனமின்றி நடுநிசி வரை சிங்கப்பூர் சாலையொன்றில் நகர்ந்து கொண்டிருந்தோம். பின் அவரவர் வாகனத்தில் ஏறிக்கொள்ள, நான் நடந்தே என் அறைக்குத் திரும்பினேன்.

ஒருநாள், கிடைத்த நேரத்தில், கனகலதா என்னை கிழக்குக் கடற்கரைக்கு அழைத்துச்சென்றார். மதிய வேளையின் மெளனத்துடன், அகாலத்தின் திடத்துடனும் இருந்தது, கடல். இந்த உலகத்தில் மனிதன் எங்கு சென்றாலும், உயிர்ப்புள்ள ஒரே தொடர்பு ஊடகம் கடல்தான். அன்று மாலை, கவிதா கரும், கனகலதா, நான் மூவருமாய் ஒரு தாய்லாந்து உணவகத்தில் மதிய உணவை முடிக்க, என்னை பிச்சினிக்காடு இளங்கோ வந்து அழைத்துச் சென்றார். அவருடன் ஷாநவாசின் உணவகம் சென்று சேர்ந்தோம். ஏற்கெனவே, அவர் அழைத்துக்கொண்டதன் பேரில், சாந்தினி அங்கே வந்திருந்தார். சாந்தினி, ஓர் ஆற்றல் இயந்திரம். அந்த அளவிற்கு வேகமாயும் துடிப்பாயும் இயங்கக்கூடிய சில பெண்களையே நான் இதுவரை சந்தித்திருக்கிறேன். வாஷிங்டனில், புஷ்பராணி அக்கா இத்தகையவர். இவர்கள், எந்த நேரத்திலும் தன் குடும்ப எல்லையிலிருந்து வெளியே வந்து பிறருக்காக உதவக்கூடிய மனநிலை மட்டும் அன்றி, அதன் முழு பொறுப்பையும் தன் கைவசம் எடுத்துக் கொள்வார்கள். என்னைப் பொறுத்தவரை, இது ஓர் அசாத்தியத்திறமை. சிறிய குறுவட்டங்களில் சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களால் தனக்கே கூட எந்தப்பயனுமில்லை. ஷாநவாஸ், பிச்சினிக்காடு இளங்கோ, சாந்தினி, நான் நால்வரும் இரவு உணவு உண்டபடியே, உரையாடலைத் தொடர்ந்தோம். தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்து சென்ற எழுத்தாளர்கள் தந்த ஏமாற்றத்தைக் குறிப்பிட்டார் ஷாநவாஸ். சாந்தினி, உரையாடலின் மையமாய், பேசுபொருளாய், ‘கடவுளை’த் தொடர்ந்தார். இவ்விடத்தில், ஷாநவாஸ் குறிப்பிட்ட ஒரு விடயம் நீண்ட நேரத்திற்கு மனதில் உருண்டு கொண்டே இருந்தது. நீண்ட நாள்கள் நோயில் ஆட்பட்டு, மரணிக்கும் நிலையில் இருந்த ஒரு நீதிபதியைச் சந்தித்த ஷாநவாஸ், ஜட்ஜ்மெண்ட் டே பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது அவர் கூறியது, ‘உண்மையில் இந்த மனித வாழ்க்கையில் நீதி என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகமே மேலெழுகிறது,’ என்று சொன்னாராம்.

அந்த இரவு, சாந்தினி என்னைத் தன் காரில் அழைத்துச் சென்று க்ளெமெண்ட்டில் இருக்கும் வாசுகி அவர்கள் வீட்டில் விட்டார். இந்தப்பயணம் என் வாழ்க்கையில் எந்த நிமிடத்திலும் நினைவிற்கு வந்துவிடும் மிக முக்கியமான பயணம். அந்த இரவு மிகவும் தாமதமாகத் தான் வாசுகியின் வீட்டை எட்டினோம். வாசுகியின் அம்மா ஜெயந்தி என்னைப் பேரன்புடன் அரவணைத்துக் கொண்டார். பெண்கள் சந்திக்கும் அரசியல் பிரச்சனைகளை அவற்றின் நவீன அம்சங்களுடன் துல்லியமாகப் பேசினார். நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு உறங்கச்சென்றேன். அடுத்த நாள் விடியல்காலையிலே, விமானநிலையம் செல்லவேண்டும் என்பதால், பெட்டியில் சாமான்களை அடுக்கிவைத்துவிட்டு உறங்கச்சென்றபோது தான் கவனித்தேன், சாந்தினியிடம் கொடுத்திருந்த என்னுடைய பர்சை வாங்க மறந்திருந்தேன். அந்த நடுநிசியில் பர்ஸ் குறித்து என்ன செய்வது என்பது நீண்ட யோசனையாக இருந்தது. ஆனால், அந்த இரவு, பர்ஸ் சம்பவத்தை மறைக்கும் படியாக, ஓர் அழகான இரவாக மாறி இருந்தது. நான் படுத்திருந்த படுக்கையிலன் வலது புறம் இருந்த நீள ஜன்னல் வழியாகத் தெரிந்த முழு சிங்கப்பூர், அந்த சிங்கப்பூரின் பெரிய வானம், அடித்துப்பெய்த மழை, தொடர் மின்னல் தெறிப்புகள், அவற்றினூடே தெரிந்த அருவி போன்ற வான்மழை காணக்கண் கொள்ளாக் காட்சியாக இருந்தன. நீண்ட நேரம் கண்கள் தானாய்க் களைத்துப்போகும் வரை அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தேன்.

சிங்கப்பூரார்கள் இலக்கியம் மேல் கொண்டிருக்கும் ஆர்வம் குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த ஒவ்வொருவரும் இலக்கிய வெளியில் தங்களை இணைத்துக்கொள்வதில் தீவிரமாக இருந்தனர். பாரதி மூர்த்தியப்பன், சுஜா செல்லப்பன், சுபா செந்தில்குமார் என ஒவ்வொரும் தத்தம் வகையில் தீவிரத்துடன் இருந்தனர். ஷாநவாஸ், நூல்களைத் தேடித்தேடிச் சென்று நூலகத்தில் தான் கழித்த காலத்தைச் சொல்லுகையில் வாசிப்பின் தீவிரம் மேம்பட்டிருந்தது. ஏஷியன் சிவிலைசேஷன்ஸ் அருங்காட்சியகத்தைக் கடக்கையில் தற்செயலாகச் சந்தித்த சுபா தன் கணவருடன் ஓடிவந்து , ரமா சுரேஷ் அவர்களின் புதிய சிறுகதை நூலை என் கையில் அளித்து அன்பு பாராட்டிச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகையில், அதே விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பேச்சாளர் பர்வீன் சுல்தானா, தன் அனுபவமாக, ‘ஆண்களின் கொம்புகளை முறித்துப் பெண்களின் முதுகெலும்பைச் செய்தவர் பெரியார்’, என்று சுபா செந்தில்குமாரின் வரிகளைக் கூறிப் புளகாங்கிதம் கொண்டார். மொழியின் வளம் இலக்கியத்தால் பகிர்ந்துகொள்ளப்படுவதை, அதன் வழியாகவே நாம் எல்லோரும் இணைக்கப்படுவதைப் பல தருணங்களில் உணர்ந்தேன்.

சிங்கப்பூர் பயணத்தின் போது நான் உணர்ந்தவை இவை தான்: மொழி நம் எல்லோரையும் இணைக்கிறது. ஆழமான, இலக்கியப்பரிமாறல்களுக்காக நாம் ஏங்குகிறோம். ஆனால், அதை வளர்த்தெடுக்கும் மெனக்கெடுதலில், மற்ற மொழியினரைப் போல் நாம் சிரத்தையுடன் இருப்பதில்லை. கண்டம் தாண்டிய நாடு தாண்டிய உறவுகளுக்கு, இங்கு நமக்கு இருப்பது போல் உள்நாட்டுச் சிக்கல்கள் இருப்பதில்லை, புதிய பிரச்சனைகள், அந்தந்த நாடு சார்ந்த சிரமங்கள் இருக்கலாம் என்ற நிலையில், நாம் சிக்கித் திண்டாடிக்கொண்டிருக்கும், அல்லது நாம் முன்வைக்கும் விடயங்களே உயர்ந்தவை என்று வியக்கவேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் எட்டுத்திக்கும் சிறகடித்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், நம் இலக்கியங்களைப் படைத்தளிப்பதற்கான உபகரணமாக மொழி ஒன்றே போதுமானது. எத்தனையோ சர்வதேச நிகழ்வுகள் கலந்துகொண்டுவிட்ட போதும், தமிழில் இப்படி ஒரு சர்வதேச இலக்கியப் பெருநிகழ்வைக் கொண்டாடுவதற்கான சாத்தியங்களும் சூழலும் இல்லாதிருப்பது ஒரு பெருங்குறை. யாழ் நூலகம் எரிந்து போனது, இனப்படுகொலை நிகழ்ந்தது, தமிழக அரசியலில் நாம் சமூகநீதி பெற எல்லா தரப்பிலும் போராடும் அவலம், தீண்டாமை என்னும் இழிநிலை இவற்றையெல்லாம் நினைவிற்கொண்டேனும் நாம் நம் திசைகளை விரித்த படியே ஒருமித்துச் செயல்படும் நோக்கம் அவசியம் என்று நம்புகிறேன்.

தங்கியிருந்த ஐந்து நாட்களைக் கருத்தில் கொண்டு நான் அதிகம் நடந்த நாடு என்று சிங்கப்பூரைச் சொல்வேன். நடப்பது குறித்த பெரிய வேட்கை என்னுள் நிறைந்திருப்பதை அப்பொழுது உணர்ந்தது போல், இப்பொழுதும் உணர்கிறேன்.

* * *

வணக்கம். தாமதத்திற்கு மன்னித்து அருள்கூர்ந்து இந்தக்கட்டுரையை ஏற்றுக்கொள்ளவும். இதழ் நடத்துவதில் இருக்கும் சிரமங்களை நன்கு அறிவேன்.

நன்றியும் அன்பும்.

Let the beauty we love be what we do. ~ Rumi
Best Regards,
Kutti Revathi

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்