நவீன இலக்கியத்தின் மொழி

நவீன இலக்கியம் – ஒரு அறிமுகம்

இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் வாசகச் சூழலில் முன்னெப்போதைக் காட்டிலும் நவீன இலக்கியப் படைப்புகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. வாசிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் நவீன இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விரிவான விவாதங்களும், விமர்சனக் கட்டுரைகளும், நூல் அறிமுகக் கட்டுரைகளும் பெருகி வருகின்றன. இணையம் அதற்கு முக்கிய காரணம் என்றாலும் கூட, இவ்வாறான விரிவான வாசிப்பும், கவனமும் நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளான புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி போன்றவர்கள் எழுதிய மணிக்கொடி காலகட்டம் துவங்கி 1980-களின் இறுதி வரையிலும் எழுதிய படைப்பாளிகளுக்கே கூட அவர்கள் எழுதிய காலங்களில் கிடைக்கவில்லை என்பது ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தாலும், காலத்தின் கரிசனம் இப்போதாவது நவீன இலக்கியத்தின் மீது விழுந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியடையத்தான் வேண்டும். ஒருவகையில், காலம், தள்ள வேண்டியவர்களைத் தள்ளி, அள்ள வேண்டியவர்களை அள்ளி இலக்கிய வாசகர்களின் முன்வைத்திருக்கிறது.

இன்று சிங்கப்பூரில் பல இலக்கிய அமைப்புகளும் ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களின் அன்றாட பணிகளுக்கிடையே இலக்கியத்துக்காகத் தன்முனைப்புடன் கதைகள் எழுதியும், கட்டுரைகள், கவிதைகள் எழுதியும், படைப்பூக்கத்துடன் செயல்பட்டு வரும் படைப்பாளிகள் அதிகரித்துள்ளனர். இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும், இலக்கிய விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்றும், இலக்கியப் படைப்புகளின் மீதான விமர்சனக் கட்டுரைகள் எழுதியும் சூழலில் ஆக்கப்பூர்வமாகப் பங்களிப்பாற்றும் தனிநபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில், நவீன இலக்கியத்தின் பயணப் பாதை விசாலமாகிக் கொண்டுவரும் இத்தகைய சூழலில் நாம் நம்மையே சில அடிப்படையான கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை நாம் எந்த அளவிற்கு ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறோம்? நவீன இலக்கியப் படைப்பாளிகளின் பெயர்களை மனப்பாடமாகத் தெரிந்த நமக்கு அதன் அடிப்படையான பண்புகளைப் பற்றி எந்த அளவிற்குத் தெரியும்?

நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை நாம் எந்த அளவிற்கு ஆழமாக அறிந்துவைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நம்முடைய இலக்கியப் படைப்புகளை மேலும் நுட்பமாகவும் ஆழமாகவும் செழுமைப்படுத்த முடியும். எதையும் எழுதாவிட்டாலும் கூட, பொதுவான வாசகத் தளத்திலே கூட ஒரு இலக்கியப் படைப்பின் சாரத்தைச் சட்டென்று உள்வாங்கி அதை நிகர்வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அதன் பல்வேறு அர்த்த அடுக்குகளுக்குள் சஞ்சரிக்கும் ஆழ்ந்த வாசிப்பும் கைகூடும்.

நவீன இலக்கியத்தின் தோற்றம்

நவீன இலக்கியத்தின் தோற்றம் குறித்து பவ்வேறு கருத்துகள் காணக்கிடைக்கின்றன. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றியதே நவீன இலக்கியம் என்று ஒரு தரப்பும், பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியதே நவீன இலக்கியம் என்று இன்னொரு தரப்பும் சொல்கின்றனர். ஆனாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் உச்சம் பெற்றதே நவீன இலக்கியம் என்ற கூற்றே உலகெங்கும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நவீன இலக்கியம் தோன்றியது 1910 ஆம் ஆண்டில் என்ற ஒரு தகவலும் உண்டு. எட்கர் ஆலன் போ, வர்ஜீனியா வுல்ஃப் போன்றவர்கள் உலகளவில் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாக அறியப்படுகின்றனர்.

சில விமர்சகர்கள், 1910 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரையிலான நவீன இலக்கியத்தை, Early Modernism என்றும் 1930 ஆம் ஆண்டிலிருந்து 1960-கள் வரையிலான காலகட்டத்தை Later modernism என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

படைப்புகளின் வெளிப்பாட்டினையும், உள்ளடக்கத்தினையும் வைத்துப் பார்க்கையில், மரபை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது நவீன இலக்கியம் என்ற கூற்று உண்டு. இரு உலக யுத்தங்கள் நிகழ்த்திய மானுடப் பேரழிவும் இலக்கியப் படைப்புகளில் ஆழமான பாதிப்பைச் செலுத்தின. மானுடத்தின் மகத்தான கனவுகளின் வீழ்ச்சி, மானுட மதிப்புகளின் சிதைவுகள் யாவும் உலக யுத்தக் காலகட்டத்தில் வெளிவந்த படைப்புகளின் பேசுபொருளாயின. வாழ்வின் அர்த்தம் என்ன என்றும், மனிதனின் செல்திசை என்ன என்றும், மதத்தை மானுடத்திடமிருந்து பிரித்தல் அல்லது மதத்தின் அர்த்தத்தையும் சாரத்தையும் மறுபரீசிலனை செய்தல் போன்ற இருத்தலியல் சார்ந்த தேடல்களை நவீன இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளின் வழி முன்வைத்தனர். சமூகம் ஒரு மனிதனிடம் எதிர்பார்க்கும் அடிப்படையான உணர்வுகளையெல்லாம் போலித்தனமாக ஒரு மனிதனால் பிரதிபலித்துக்கொண்டேயிருக்க முடியாது போன்ற பார்வைகளையெல்லாம் (அந்நியன் – ஆல்பெர் காம்யூ) இருத்தலியலை முன்வைத்த நவீன இலக்கியப் படைப்புகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

அச்சு ஊடகம்

அச்சு ஊடகத்தின் வளர்ச்சிக்கும் நவீன இலக்கியத்துக்கும் அடிப்படையிலேயே ஆழமான தொடர்புண்டு. அச்சு ஊடகம் தோன்றியபின் தோன்றியதே நவீன இலக்கியம் என்ற கூற்றையும் முழுவதுமாக மறுக்கவியலாது. அதுவரை ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்ட சிறுபான்மை வட்டத்துக்கள் மட்டுமே புழங்கிவந்த இலக்கியம், அச்சு ஊடகத்தின் வளர்ச்சியால் வெகுஜனத்தைச் சென்றடைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பரவலான கல்வியினால், வாசிக்கக்கூடியவர்கள் அதிகரித்தனர். வாசிப்பு அதிகரித்ததால் நவீன இலக்கியத்தின் வீச்சும் அதிகரித்தது.

மரபான இலக்கியத்துக்கு காதுகளே பிரதான கருவிகள். ஓலைச்சுவடிகளின் குறுகிய எல்லைக்குள் யாப்பு வகுத்த பாதையில் இசைத்தன்மையை ஏற்றிக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட செய்யுள்கள் மனிதனின் காதுக்குள் இனிய ஓசைநயத்தோடு புகுந்து அவனது சிந்தையைச் சென்றடைந்தது. நவீன இலக்கியத்துக்கோ மனிதனின் கண்களே பிரதான கருவிகள். கண்களின் வழியாக ‘வாசிக்கப்படுவதால்’ நவீன இலக்கிய வடிவங்களான கவிதைகளுக்கோ, சிறுகதைகளுக்கோ இசைத் தன்மையோ, கட்டுப்படுத்தப்பட்ட ஓசை அமைதியோ தேவைப்படுவதில்லை. காகிதங்கள் அமைத்த நீண்ட பரப்பில், விரிவாக எழுந்தன நவீன இலக்கிய வடிவங்கள். நவீன இலக்கியப் படைப்புகளின் தனித்துவமான அம்சங்களான விரிவும், பொருள்மயக்கமும், வாசகப் பங்கேற்பும், துண்டாடப்பட்ட கதைசொல்லல், படிமங்கள், குறியீடுகள் இவை யாவும் முக்கியத்துவம் பெறுவது, மனிதனின் கண்கள் வழியாக அவை அவனது சிந்தைக்குள் செல்லும் ஏற்பாட்டினால்தான்.

நவீன இலக்கியம் தோன்றியது அச்சு ஊடகம் தோன்றியபின் என்றவுடன் அடுத்த கேள்வி எழுகிறது. அச்சில் வருவதெல்லாம் நவீன இலக்கியமா? இன்றும் மரபான இலக்கிய வடிவங்களான பிள்ளைத் தமிழும், தூதும் கலம்பகமும் இக்காலத்து இலக்கியம் என்ற பெயரில் அச்சில் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அச்சில் வெளியாகும் இலக்கியத்தில் வாசகன் முக்கியமான கவனிக்க வேண்டியது அது எதைக் குறித்துப் பேசுகிறது, யாரை நோக்கிப் பேசுகிறது என்பதைத்தான். மரபான இலக்கியத்தின் முக்கியமான பண்பு அது மன்னர்களை நோக்கிப் பாடப்பட்டது. மரபான இலக்கியப் படைப்பாளி மக்களுக்கு முதுகு காட்டி, மன்னனுக்கு முகம் காட்டிப் பேசியவன். நவீன இலக்கியவாதி ஆள்வோருக்கு முதுகுகாட்டி மக்களை நோக்கிப் பேசக்கூடியவன். இது ஒரு அடிப்படையான வேறுபாடு. சாமானிய மக்களும், அவர்களின் வாழ்க்கைப்பாடுகளும்தாம் நவீன இலக்கியத்தின் முக்கியமான பேசுபொருள்கள். ஜனநாயகத்தன்மையை அவற்றிலிருந்து பிரிக்கவியலாது. நிலப்பிரபுத்துவ மனநிலையை ஊக்குவிக்கும் எந்தப் படைப்பும் நவீன இலக்கியமாகாது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.

பல்துறை ஊடாட்டம்

இலக்கியம் வாசிக்கும் ஒருவர் தான் வாசிக்கும் பிரதியில் இலக்கிய இன்பத்தையும் தாண்டி, பிற பல துறைகளின் அறிமுகத்தையும் பெற நேர்ந்தால் அது நவீன இலக்கியப் பிரதியாகிறது. குறிப்பாக, பிற துறையில் இருப்பவர்களே அப்பிரதியை வாசிக்கையில் அவர்களுக்கே அவர்களின் துறை குறித்த ஒரு புதிய பார்வை ஏற்படுமானால் அப்பிரதி மிக முக்கியமான நவீன இலக்கியப் பிரதியாகிறது.

உதாரணமாக: தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”, “கரமசோவ் சகோதரர்கள்” ஆகிய இரு பெரும் நாவல்களையும் இன்றளவும் மனோதத்துவத் துறையில் இருப்பவர்கள் வழிகாட்டி நூலாகவே வாசிக்கிறார்கள். புகழ்பெற்ற மனோதத்துவ மேதையான நீட்ஷே தஸ்தாவெஸ்கியை “Dostoevsky, the only psychologist from whom I’ve anything to learn.” என்கிறார். நவீன உளவியலின் தந்தையாகப் போற்றப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட், தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் தந்த பாதிப்பினால் “Dostoevsky and Parricide” என்ற ஆய்வுக்கட்டுரையே எழுதியுள்ளார். தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை, புனிதமான பைபிள், குரான், கீதையைக் காட்டிலும் முக்கியமாக வாசிக்கப்படவேண்டியது என்கிறார் ஓஷோ. இப்படி மனோதத்துவத் துறையின் மேதைகளுக்கே தஸ்தாயெவ்ஸ்கி என்னும் இலக்கியவாதியின் நாவல்களில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றால், அவரது நாவல்களை நவீன இலக்கியத்தின் சிகரங்கள் என்று இலக்கிய உலகம் ஏன் கொண்டாடாது?

Image result for dostoevsky

உலக இலக்கியப் பிரக்ஞை

நவீன இலக்கியவாதிகளுக்கு தங்களின் படைப்பு உலக இலக்கியப் பரப்பில் எங்கு நிற்கிறது என்ற பிரக்ஞை இருக்கும். தான் சார்ந்த குறுகிய நிலப்பரப்பைத் தாண்டி உலகின் எல்லையை நோக்கி விரியும் பார்வையை நவீன இலக்கியப் பிரதி முன்வைக்கும். உள்ளுர் ஜமீன்தார்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த மரபான கவிராயர்களின் காலகட்டத்தில்தான் பாரதி பிரெஞ்சுப் புரட்சியையும் ருஷ்யப் புரட்சியையும் பற்றி தன் கவிதைகளில் பாடினான். (“புரட்சி” என்ற வார்த்தையையே பாரதிதான் ஏற்படுத்தினான் என்பாரும் உண்டு). விரிவான உலக இலக்கிய அறிமுகம் இருந்த காரணத்தினால் பாரதி தன்னை “ஷெல்லிதாசன்” என்றே அழைத்துக்கொண்டார். நவீன இலக்கியத்தின் முன்னோடியாக கவிதையில் பாரதியும், உரைநடையில் புதுமைப்பித்தனும் கிடைத்தது தமிழர்களின் நல்லூழ் என்றுதான் சொல்லவேண்டும்.

Image result for புதுமைப்பித்தன்

ஆக, நவீன இலக்கியத்தின் அடிப்படையான பண்புகளாக அச்சிற்கேற்ற வடிவமும், வாசகன் கண்கள் வழியே அவனுக்குள் உள்நுழையும் வடிவமும், ஜனநாயகப் பண்பும், பல்துறை ஊடாட்டமும், படிமங்கள் குறியீடுகள் வழியே வாசகனது கற்பனையைத் தூண்டும் பண்பையும் சொல்லலாம்.

நவீன இலக்கியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இவற்றையும் தாண்டி மேலும் சிலவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும்.

மீமொழி. இது அனைவரும் அறிந்த மொழிக்குள் புழங்கும் நுண்மையான இன்னொரு மொழி. நமக்குத் தெரிந்த ஒரு வார்த்தைக்கு அதன் இயல்பான பொருளையும் தாண்டி இன்னொரு பொருளை ஏற்றுதல் என இதைச் சொல்லலாம். நவீன கவிதை என்பது இவ்வகை மீமொழியின் சொற்களால் இயங்குவதே.

நவீன கவிதையில் இதன் பங்கு வலிமையானது. பாறை என்பதை அதன் நேர்ப்பொருளில் குறித்துப் பழக்கப்பட்ட மரபான இலக்கியத்துக்கு மாறாக இறுகிப் போன ஒரு தனிமனிதனின் ஆளுமையைச் சுட்ட இந்த வார்த்தை பயன்பட்டால் அது மீமொழியின் வார்த்தையாகிறது. அதுபோலவே நதி என்பதை நதியாகப் பார்க்காமல் காலத்தின் குறியீடாகப் பார்த்தல், இலைகளின் அசைவை மானுட வாழ்வாகப் பார்த்தல், இருளை, அறியமுடியாத எதிர்காலத்தின் குறியீடாகப் பாவித்தல், கடல் அலைகளை ஓயாது மலர்கின்ற மலர்களாகப் பாவித்தல் ஆகிய இவ்வியல்பு நவீன இலக்கியத்தின் மொழித்தளத்தில் நிகழும் முக்கியமான மாற்றங்களாகும்.

இதை நவீன கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பதனாலும், குழுவாக அதைக் குறித்து விவாதிப்பதன் வாயிலாகவும் தெரிந்துகொள்ள முடியும். உரைநடையிலும் இவ்வகை மீமொழிப் பிரயோகம் உண்டு. காஃப்காவின் உருமாற்றம் கதையின் நாயகன் கரப்பான் பூச்சியாக மாறினான் என்று வாசிக்கையில் வெறுமனே அதைக் கடந்துபோகாமல் கரப்பான்பூச்சி என்பது எதன் குறியீடு என்று யோசித்தாலே போதும் இவ்வகை மீமொழி வார்த்தைகள் எளிதில் புரிந்துவிடும். இவ்வகைப் பொருள்மயக்கங்கள் வழியேதான் நவீன இலக்கியம் முன்னகர்கிறது.

நவீன இலக்கியத்தின் முக்கியமான பலம் என்பது அது வாசகர் மேல் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை. வாசகர் தன்னுடைய கற்பனையைப் பயன்படுத்தி தான் சொல்லவருவதை அறிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில்தான் இவ்வகை மீமொழியில் அமைந்திருக்கின்றன நவீன இலக்கியப் படைப்புகள். பன்மைத்தன்மையும், படிமத்தன்மையும், சிடுக்கு மிகுந்த சொற்றொடர்களும், நேர்க்கோடற்ற கதைசொல்லலும் ஆகிய இவையாவும் வாசகனை ஆசிரியனுக்கு நிகரான பீடத்தில் கொண்டுவருவதற்கான எத்தனங்களே.

மரபான இலக்கியத்துக்கும் நவீன இலக்கியத்துக்கும் இடையேயுள்ள அடிப்படையான வேறுபாடுகள் கீழுள்ள அட்டவணைக்குள் இடம்பெற்றுள்ளன. இந்த அட்டவணை ஒரு குறைந்தபட்ச தெளிவான பார்வையை அளிக்கவல்லது என்றே கருதுகிறேன்.

மரபான இலக்கியம்

நவீன இலக்கியம்

ஓலைச்சுவடிகளில் புழங்கிய இலக்கிய வடிவம்

அச்சில் புழங்கும் வடிவம், அச்சில் மட்டுமே புழங்கும் வடிவம்

பிரதான வடிவம் – செய்யுள்

பிரதான வடிவம் – சிறுகதை, நாவல், கவிதை (Free Verse), வடிவத்திலும் பொருளிலும் நவீனம்

செவியே உள்வாங்கும் கருவி – மனனம் மூலம் நிலைபெற்று பரவலாக்கப்படும் தன்மை

கண்ணே உள்வாங்கும் கருவி, கண்கள் மூலமாக மனதிற்குள் நிலைநிறுத்தப்படும், மனனம் என்பது அவசியமில்லை

அரசர்கள்/ஆள்பவர்களை நோக்கிப் பேசிய வடிவம், நிலப்பிரபுத்துவ காலகட்டம்

மக்களை நோக்கிப் பேசிய வடிவம், ஜனநாயகத்தன்மை

உலக இலக்கியப் பிரக்ஞையின்மை

உலக இலக்கியப் பிரக்ஞை

பல்துறை ஊடாட்டம் நிகழவில்லை

பல்துறை ஊடாட்டம்

மொழி (Language)

மீ மொழி (Meta Language )

அலங்காரத் தன்மை (Rhetoric)

நேரடியான மொழி (Plain/Dull Language)

தெளிவின் மூலம் முன்னகர்வது (Clarity)

பொருள்மயக்கத்தின் மூலம் முன்னகர்வது (Ambiguity)

வெகுஜனத் தன்மை

சிறிய வட்டத்திற்குள் புழங்குவது

வாசகனை மாணவன் நிலையில் வைப்பது

வாசகனும் சக ஆசிரியனே

ஒற்றைப் பரிமாணம் (Single Dimensional), சமநிலையின்மை (Unbalanced)

பல பரிமாணம் (Multi Dimensional ), பன்மைத்தன்மை, சமநிலை (Balanced)

பெரும்பாலும் மதத்தின் தொடர்புடையவை

மதத்தினின்று தனித்திருத்தல் அல்லது மதத்தை மறுபரீசிலனை செய்யும் நோக்கமுடையவை

நிலைத்த இலக்கணம் (Fixed Grammar)

பல்வேறு வடிவ/உத்தி வெளிப்பாடுகள் (எ.டு: Stream of consciousness, Realism, Surrealism, Cubism etc.,)

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்