கடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா

கடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா

‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பெற்ற மூன்றாம் பரிசுதான் பள்ளிப் பருவத்தில் தமிழுக்காக நான் பெற்ற ஒரே பரிசு. அதுவும் அப்பா எழுதித் தந்ததை மனனம் செய்து எழுதிப் பெற்றது. அதன் பிறகு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெறும்வரை மொழி என்பது பள்ளிப்பாடம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.
ஆண்டுகள் கழிந்து திருமணம் முடிந்து கணவருடன் சிங்கப்பூருக்கு வந்தேன். சீராகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் என்னுடைய மூத்த பிள்ளை தொடக்கப்பள்ளியில் நுழைந்தபோது ஒரு சிறு சலனம். பள்ளியில் இரண்டாம் மொழியாகத் தமிழைப் படிக்க வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தாலும் வாய்மொழித் தேர்வும் உண்டு என்பது எனக்குப் புதிய செய்தியாக இருந்தது.

கன்னடம் தாய்மொழி என்பதால் தமிழில் சரளமாகப் பேசுவது என்பது என்னுடைய பிள்ளைகள் அறியாத ஒன்று. இதனை எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி எழுந்தது.

முதலில் சிறுவர் பாடல்களைக் கற்றுத் தர ஆரம்பித்தேன். அதன்பின் நூலகத்திற்கு அழைத்துச் சென்று கதைப் புத்தகங்களை வாசிப்பதற்குக் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுதுதான் தமிழ் மொழி ஆர்வம் எனக்குள் துளிர் விடத் தொடங்கியது. பிள்ளைகள் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் போட்டிகளில் பரிசு பெறும்போது மறைமுகமாக அதில் எனக்கும் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் அதோடு நின்றுவிட மனமில்லை. இன்னும் இன்னும் தமிழோடு புழங்கவேண்டும் என்று உள்ளிருந்து ஓர் உந்துதல்.

அப்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ்மொழி மற்றும் இலக்கியம் பட்டப்படிப்பு (பகுதிநேரம்) இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்து படிக்கச் சேர்ந்தேன். தமிழோடு சேர்ந்து அறிவிலும், அனுபவத்திலும் மிளிர்கின்ற பல பேராசிரியர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பும், அவர்களுடன் அளவளாவி மகிழ்ந்த அற்புதமான அனுபவமாக அமைந்தது இக்கற்றல் பயணம்.

வகுப்புகள் மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்து இரவு பத்து மணிக்கு முடிவடையும். அனைத்து பாடங்களுக்கும் கட்டுரை ஒப்படைப்பு மற்றும் எழுத்துத் தேர்வு என்பது கட்டாயம். ஆனால் வாய்மொழி ஒப்படைப்பு என்பது இலக்கியப் பாடங்களுக்கு மட்டும்தான் உண்டு. மொத்தம் பதினான்கு எழுத்துத்தேர்வுகள். கட்டுரை மற்றும் வாய்மொழி படைப்புகளை முடித்துவிட்டு நிமிரும்போது தேர்வுநாள் நெருங்கி வந்து கழுத்தை நெறிக்கும். படிக்க வேண்டிய பாடங்கள் மலைபோல் குவிந்திருப்பதைக் கண்டு அடுத்து வரும் நாட்களில் மன உளைச்சல் அதிகமாகி வீட்டில் இருப்பவர்களிடம் எரிந்து விழுவேன். தேர்வு நாள் நெருங்க நெருங்கத் தேர்வைக் கண்டுபிடித்தவரையும், என்னைப் படிக்க வற்புறுத்திய என் கணவரையும் திட்டித் தீர்ப்பேன். தேர்வன்று பல்கலைக்கழகத்திற்குக் கிளம்பும் முன்பு படித்தது எல்லாம் மறந்துவிட்டது என்று ‘ஓ’வென்று ஒப்பாரி வைத்த அனுபவமும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் தேர்வைச் சிறப்பாகச் செய்துவிட்டால் வரும் மனநிறைவு எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று.

ஒவ்வொரு பாடமும் முழுமையான கற்றல் அனுபவமாக அமைய வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழகம் இரண்டு வழிமுறைகளில் கற்பித்தல் முறையை வகுத்திருக்கிறது.

ஒவ்வொரு பருவத்திலும் கொடுக்கப்படுகின்ற பாடத்தில் ஆய்வுக் கல்வியை முடித்த சிறந்த அனுபவம் உடைய பேராசிரியர்கள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டு முதலில் அவர்கள் பாடத்தைக் கற்றுக் கொடுக்கத் தொடங்குவார்கள். இந்த வகுப்புகள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். அதன்பிறகு உள்ளூரில் பணியாற்றும் சிறந்த பேராசிரியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் என்று மொத்தம் எட்டு வகுப்புகள் அவர்களின் பாடம் நடைபெறும். இந்த இருவழி கற்பித்தல் வாயிலாகக் கல்வி கற்கும் மாணவர்கள் தமிழகம் சார்ந்த தகவல்களைத் தெரிந்து கொள்வதோடு, சிங்கப்பூரின் நடப்பு நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள வழிசெய்கிறது.

அப்படிச் சிறப்புப் பேராசிரியராக எங்களுக்கு எழுத்திலக்கணத்தைக் கற்பிக்க வந்தவர்தான் தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள். ‘இலக்கணக் கடல்’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் கம்பீரக் குரலுக்குச் சொந்தகாரர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடங்கிய என்னுடைய கல்வி பயணத்திற்கு மிக அழகான தொடக்கத்தைஅமைத்துக் கொடுத்தவர். புன்னகை மாறாது மிக எளிமையாக இலக்கண விதிகளைக் கற்றுக் கொடுத்தார். உதாரணமாக,

அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாச்சொற்களின் பின் வலி மிகும் என்பது இலக்கண விதி.

‘எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்

எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்’

என்று பாடல் வரிகளின் வாயிலாக உதாரணங்களைக் காட்டி அவ்விதியை அவர் எடுத்துரைக்கும்போது இலக்கணம் என்பது பாட்டும் படிப்பும் கலந்த பாடமாக அமைந்தது. இத்தகைய ‘பாடல்களின் வழி தமிழ்ப்பயணம்’ என்ற நிலையை இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்தால் தமிழை எளிதாக அவர்கள் புரிந்து கொள்வதோடு தமிழை விரும்பிக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஊட்டும்.

இதற்கு நேர்மாறாக நின்று என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய பாடம் மொழியியல். இன்று அறிவியலின் வளர்ச்சியால் தமிழ் மொழியில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து வரும் துறை மொழியியல். எழுத்து, சொல், யாப்பு என்று மொழியின் இலக்கணக் கூறுகளை அறிந்து கொண்ட பிறகு கற்க வேண்டிய பாடம். ஆனால் அந்தப் பாடம் முதல் பருவத்திலேயே கொடுக்கப்பட்டதால் ஒலியியன், உருபன் போன்ற சொல்லாடல்களும், நோம் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக்க கோட்பாடு, பெர்னாட் டி சசூரின் அமைப்பு மொழியில் என்பன போன்ற அறிவியல் விளக்கவுரைகளையும் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் பாடத்தைக் கற்பிப்பதற்காகச் சிறப்புப் பேராசிரியராக வந்திருந்தவர் இலங்கையைச் சார்ந்த பேராசிரியர் திரு. எம் ஏ. நுஃமான் அவர்கள். மாணவர்களின் சிரமத்தைப் புரிந்த கொண்ட அவரும் முடிந்த அளவில் எளிமையாகக் கற்றுக் கொடுத்தார்.

இந்தப் பட்டப்படிப்பிற்காகக் கட்டுரை ஒப்படைப்பு, வாய்மொழி ஒப்படைப்பு மற்றும் எழுத்துத் தேர்வு என்று மூன்று நிலைகளில் மாணவர்களின் கல்வித் தரம் கணிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் மொத்தம் நாற்பது கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன். கட்டுரைகளின் தலைப்புகள் சவாலாகவே இருந்தன. அதிலும்குறிப்பாகத் தற்காலப் பயன்பாட்டில் தமிழின் நிலை, மொழியில் ஏற்பட்டு வரும் இலக்கண மாற்றங்கள், அதற்கான காரணங்கள் என்று தேடலை அதிகரிக்கச் செய்யும் சமகால நிலைகுறித்த வினாக்கள் கட்டாயம் உண்டு. இதற்காக நூலகத்தில் புத்தங்களைத் தேடி கண்டறிவதும் அதன்பின் கட்டுரைக்குத் தேவையான தரவுகளைத் தொகுப்பதும் என்று இந்தக் கட்டுரை ஒப்படைப்பு வாசிப்பை அதிகரித்ததோடு சிறந்த தமிழறிஞர்களின் நூல்களை அடையாளம் காணவும் உதவியது.

வாய்மொழி ஒப்படைப்பு என்பது இலக்கியப் பாடத்திற்கு மட்டும் உரியது. இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள செய்யுளை எடுத்துக் கொண்டு அதன் பொருள், யாப்பு, எதுகை மோனை சொல்லாட்சி என்று அதில் இடம் பெற்றுள்ள சிறப்புக் கூறுகளை ஆய்ந்தறிந்து சொல்ல வேண்டும். இதற்கு ‘இலக்கிய நயம் பாராட்டல்’ என்று பெயர். முதலில் செய்த இரண்டு ஒப்படைப்புகள் சற்றே சிரமமாக இருந்தாலும் அந்த அனுபவம் மாறுபட்ட ஒரு கற்றல் அனுபவத்தை அளித்தது.

இலக்கியத்தைப் பொறுத்தவரையில் நாட்டுப்புற இலக்கியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், இக்காலஇலக்கியம், சிற்றிலக்கியம் போன்ற பாடப்பிரிவுகள் ஒவ்வொன்றும் நினைத்துப் பார்த்து மகிழும் வகையில் மனத்திற்கு நெருக்கமாய் அமைந்துவிட்டது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளைப், பண்பாட்டு விழுமியங்களைப், பாரம்பரிய விடயங்களைத் தாங்கி நிற்கும் கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை நான் விரும்பிப் படித்தேன்.

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ (புறம்- 183)

என்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடல் கல்வியால் ஒருவன் அடையும் சிறப்புகளைவலியுறுத்தி, அனைவரையும் கல்வி கற்கத் தூண்டும் வகையில் அமைகிறது. அன்றே கல்வியின் சிறப்பை அறிந்திருந்த நம் முன்னோர்களின் அறிவுத்திறன் இன்றும் வியக்கவைக்கிறது.

தமிழக இலக்கிய வரலாறு மட்டுமன்றி மலாயா – சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றம், மக்களின் வாழ்க்கை முறை, தமிழுக்காகப் பாடுபட்ட பெருந்தகையார்கள் என்று சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறும் பாடப்பகுதியாக அமைந்தது சிறப்பிற்குரியது. இதன் வாயிலாகப் பிழைப்பிற்காக வந்த மக்கள் படைத்த வாய்மொழி இலக்கியங்களான நாட்டுப்புற இலக்கியங்கள் வழி அன்றைய மக்களின் வாழ்வியல் முறை அவர்கள் அடைந்த இன்னல்கள் ஆகியவற்றை அறிய முடிந்தது.

“பால்மரம் வெட்டலான்னு

பழைய கப்பல் ஏறிவந்தேன்

– – – – – – – – – – – – – – – – – – –

முப்பத்தஞ்சி காசு போட்டு

மூட்டெலும்ப முறிக்கிறானே”

என்ற பாடல் பால்மரக்காட்டில் உழைக்கும் வர்க்கத்தினர் பட்ட வேதனையை உணர்த்தி நிற்கின்றது.

1863 ஆம் ஆண்டு முத்துக்கருப்பன் செட்டியார் அவர்களால் படைக்கப்பட்ட ‘தண்ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம்’ என்னும் கவிதை நூல் காலத்தால் மூத்த நூலாக அறியப்படுகின்றது. இதன் பிறகு 1886 தொடங்கி 1930 வரை மலர்ந்த சிங்கப்பூர் – மலேசிய இலக்கியப் படைப்புகளில் இறையுணர்வே ஆதிக்கம் செலுத்தியது. பெரியாரின் வருகைக்குப் பிறகு, 1930 தொடங்கி 1942 வரை சீர்திருத்த கருத்துகளைத் தாங்கிய படைப்புகள் வெளிவந்தன. 1942 முதல் 1945 வரை இருந்த ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவை விடுவிப்பதையே சிங்கை இலக்கியங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. 1952ல் தமிழவேள் கோ. சாரங்கபாணியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் திருநாள் ஏற்படுத்திய தாக்கத்தால், தமிழ் – தமிழர் பெருமைகுறித்துப் பாடப்பட்டன.

1965ல் சிங்கப்பூர் குடியரசான பிறகு இறையுணர்வு, காதல், சமுதாயச்சிக்கல், இயற்கை ஆகியவை பாடு பொருள்கள்ஆகியன. இவ்வாறு காலமுறைக்கேற்ப மாற்றம் கண்ட மலேசிய – சிங்கப்பூர் இலக்கிய வரலாறு குறித்தும், சிறந்த அறிஞர்களின் பார்வையில் மலர்ந்த காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புறப்பாடல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்குச் சிங்கப்பூர் இலக்கியப் பாடப் பகுதி பேருதவியாக அமைந்தது.

இலக்கியத்தைப் பொறுத்த வரையில் முடிந்த அளவில் சில செய்யுட்களை மட்டுமாவது மனனம் செய்ய வேண்டும் என்றகோட்பாட்டைக் கொண்டிருந்தேன். மறதி அந்த ஆசையைப் பலவீனப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால்திரையிசை பாடல்கள் மட்டும் ஆண்டுகள் கடந்தபோதும் நினைவில் நிற்பது புரியாத புதிர்.

தமிழ் கற்றல் அனுபவத்தைக் குறித்து எண்ணும்போதெல்லாம் முக்கோண வடிவம் என்னுடைய நினைவிற்கு வரும். முக்கோணத்தில் இருக்கின்ற மூன்று முனைகளில் ஒரு முனையில் நானும், மற்ற இரு முனைகளில் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் நிற்க எங்கள் மூவரையும் இணைக்கும் இணைப்புக் கோடுகளாக அங்கே நின்றது தமிழ்மொழி மட்டுமே.

குறுகிய கால அளவிலும் தேர்வு நோக்கிலும் இக்கல்விப் பயணம் அமைந்ததால் நுனிப்புல் மேய்ந்த அனுபவமாக மட்டுமே அமைந்து விட்டது. மொழியின் ஆழமும் அதன் அகலமும் அதிகரித்துக் கொண்டே வரும்வேளையில் இனிவரும் காலங்களில் அதன் ஆழத்தை அளந்து பார்ப்பதற்கான பயணத்தைத் தொடரவேண்டும்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்