உள்ளொளியைத் தவறவிட்ட சமர்த்துப்பிரதி

புதுமைப்பித்தனின் எழுத்தால் கவரப்பட்டுத் தன்னைப் புதுமைதாசனாக அறிவித்துக்கொண்ட எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ‘பரோபகாரி’ (1956) சிறுகதையையும், புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ (1934) கதையையும் ஒப்பிட்டுச் சில விமர்சனங்களை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன். இரண்டு கதைகளுமே இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.

கதை சொல்லியே நேரிடையாக வாசகர் முன்னமர்ந்து கதை சொல்வது, இடையிடையே வாசகரிடம் கேள்விகள்கேட்டு அதற்குத் தானே பதில் சொல்வது, இறுதியில் வாசகரிடம் சொல்லிவிட்டு அல்லது கேட்டுவிட்டு விடைபெற்றுக்கொள்வது, ஏழ்மை மற்றும் விபச்சாரம் போன்ற சமூகத்தின் கவலைக்குரிய விஷயங்களையும் எள்ளலோடு வர்ணிப்பது ஆகிய பொது அம்சங்களை இரண்டு கதைகளிலும் காணலாம். இவை சிறுகதைக்கான உத்தி சார்ந்த விஷயங்கள். புதுமைப்பித்தனைப் போலவே எழுத ஆசைப்பட்டுத்தான் எழுதவந்ததாக பி.கிருஷ்ணன் குறிப்பிட்டுவிட்டதால் இவ்வொற்றுமைகளைக் குறித்து பெரிதாக ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் கதைகள் எழுப்பும் உணர்வுகளையும் சிந்தனைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில முக்கியமான வேற்றுமைகள் தென்படுகின்றன.

முதலில், கதைசொல்லியின் குரல்.

பொன்னகரத்தில் கதை சொல்லி வாசகர் முன்னால் அமர்ந்து கதை சொன்னாலும் அவரின் குரல் மட்டுமே ஒலிக்கிறது. தான் யார் என்பதை – குறிப்பாக எவ்வளவு புத்திசாலி, யோக்கியர் என்பதை – வாசகருக்குச் சொல்லிவிடும் எந்த அக்கறையும் அற்ற குரல். பொன்னகரத்தின் சந்து பொந்துகளையும், சேற்றுச்சகதி யமுனைகளையும், அழுகிய பழம், ஊசிய வடை ரகசியங்களையும், மனிதர்கள் வசிப்பதற்கான கூடுகளையும் கண்முன்னால் நிறுத்தவேண்டுமே என்று மெனக்கெடும் குரல்.

பரோபகாரியில் வாசகருக்குத் தன்னைக்குறித்த சொல்வதற்கே எப்போதும் முனைகிறது கதைசொல்லியின் குரல். பெண்கள் விஷயத்தில் தான் உஷார், காண்டேகரும் பாபுராவ் படேலும், கார்க்கியும் வாசிப்பவன், தும்மல் போட்டு பரோபகாரியைக் காப்பவன் என்றெல்லாம் நீளும் குரல் அது. அடுத்தவர் அறையில் நிகழ்வதை சாவித்துவாரத்தின் வழியாகப் பார்க்கும் தன் கீழ்மைமேல் எந்த விமர்சனமும் இல்லாமல், ‘அட சமூகமே நீ இப்படியா கெட்டுச் சீரழியவேண்டும்?’ என்று அவசரமாகத் தன்னைச் சமூகத்திலிருந்து விடுவித்துக்கொண்டு உரத்துக்கேட்கும் போலி அறச்சீற்றக்குரலாகவும் அது இருக்கிறது. ‘இதையெல்லாம் கண்டுரசிக்க நான் என்ன பாவம் செய்தேன்?’ என்ற போலிப் பொருமலையும் அக்குரலில் கேட்கலாம்.

இரண்டாவது, கதைசொல்லியின் பார்வை.

பொன்னகரத்தின் சீரழிந்த சமூகம் அம்மனிதர்களின் குற்றமா என்று கேட்கும் தொனியிலேயேதான் மொத்த வர்ணிப்பும் நகர்கிறது. எள்ளல் என்பது சேற்றுச்சகதியை யமுனை என்று சொல்வதிலும், வீடுகளைக் கூடுகள் என்று சொல்வதிலும்தான் இருக்கிறது. சாராயமும் அழுகிய பழமும் சாப்பிட்டு அம்மக்கள் பசியை மறக்கிறார்கள். அதனால் என்ன? ‘அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு’ என்பது கதைசொல்லியின் பார்வை.

பரோபகாரியில் கதைசொல்லியைத் தவிர மற்றவர்கள் மோசமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் மொத்த வர்ணனையும் இருக்கிறது. ‘ஒரு பாய் ஒரு தலையணையோடு வருகிறவர்களெல்லாம் போகும்போது மல்வேட்டி வைரக்கடுக்கண் ஜொலிக்க…..போய்விடுகிறார்கள்’ என்பதிலும் ‘பத்துப்பதினைந்து கிழங்கள்; இருபது முப்பது ஒன்றிக்கட்டைகள்’ என்பதிலும் எள்ளல் எளிய மனிதர்கள் மீது மோசமான முறையில் வெளிப்படுகிறது. பார்வையும் சூழ்நிலையின் மீது இல்லை. எல்லோருக்கும் ஒரே தர்மம்தான் என்ற தட்டையான பார்வை வெளிப்படுகிறது.

மூன்றாவது, கதைசொல்லியின் மொழி.

பொன்னகரத்தில் ஓடும் ரயிலுக்கு குட்மார்னிங் சொல்லும் குழந்தைகளாகட்டும், குடிகாரர்களாகட்டும், கண்கள் மாசடைந்த தொழிலாளிகளாகட்டும், அடுத்தவன் மனைவி மீது வெகுநாளாகக் கண்வைத்திருந்த ஒருவனாகட்டும், அவ்வளவு ஏன்? தண்ணிபோட்டுவிட்டு ஓடிய குதிரையாகட்டும் அவர்கள் மரியாதையாகத்தான் விளிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை. அதில் நல்லவர் கெட்டவர் பிரித்து என்ன மொழியலங்காரம் வேண்டியுள்ளது என்பதுதான் இக்கதையில் தொழிற்படும் மொழியின் கீழுள்ள சிந்தனை.

பரோபகாரியில் சூழ்நிலையால் தடம் புரளும் பதினான்கு வயதுப் பெண்ணாக இருந்தாலும் அவளைப் ‘பிஞ்சிலே பழுத்தது’ என்றும், விபச்சாரம் செய்யும் பெண்ணை ‘பரோபகாரி வந்தது போனது’ என்று அஃறிணையில் விளித்தும், மரியாதையாக அம்மையார் என்று எழுதும்போதும்கூட அதைக் கிண்டல் தொனியிலேயே எழுதுவதையும் காணமுடிகிறது. ஒருவேளை அவர்கள் கெட்டவர்களாகவோ சமூகத்தைக் கெடுப்பவர்களாவோ இருந்தாலும் இலக்கியத்தின் மொழி சொல்லுக்குச்சொல் வெறுப்பிலா குடிகொள்ளவேண்டும்? கருணை எங்கே? என்ற கேள்விகள் எழுகின்றன.

நான்காவது, கதையின் உள்ளொளி.

பொன்னகரத்தின் அம்மாளு, அடிபட்டுப் படுக்கையில் கிடக்கும் கணவனுக்குப் பால் கஞ்சி கொடுப்பதற்காகத் தன் உடலை விற்று முக்கால் ரூபாய் சம்பாதிக்கிறாள். விபச்சாரத்தைப் பின்னிருந்து உந்தித்தள்ளும் பசி அங்கு மேலெழுகிறது. பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்று ஒய்யாரமாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே பொன்னகரத்தில் இருந்தால் அதன் அர்த்தம் உங்களுக்கு அடிவயிற்றில் இருந்து வரும் என்ற உண்மையான அறச்சீற்றத்திற்கு முன் நாம் தலையைக் குனிந்துகொள்ளவேண்டியுள்ளது. வாசகரை ஏன் இந்த வறுமையை ஒழிக்க முடியாதா? என்று சிந்திக்கவைக்கிறது. அது கதையின் வெற்றி.

பரோபகாரியில் அவளே சொல்வதுபோல ‘எனக்கு வேண்டியது இளமை’ என்பதற்காக விபச்சாரம் செய்யப்படுகிறது. கதையின் முடிவில் ஏன் இந்தப்பெண்கள் இப்படி காமவெறிகொண்டு அலைகிறார்கள் என்ற தவறான கேள்வியை வாசகரிடம் விதைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தன் தவறை மறைப்பதற்காக இந்தச் சமூகத்தைக்கெடுக்கும் பெண்ணாகவும் அவள் இருக்கிறாள். இதைச்சொல்வதற்கா இலக்கியத்தின் சிறப்பான உத்திகளையும் மொழியையும் துணைக்கழைக்கவேண்டும்? கதை தடுமாறுகிறது.

முடிவு

இந்தப் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு விமர்சனத்தின் சாரத்தை இப்படிச் சொல்லலாம்; பொன்னகரம் செயல்பட்ட அதே விதத்தில் செயல்பட்டு அதேவிதமான தாக்கத்தை உண்டாக்க பரோபகாரி முயன்றதா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஒரே மொழியில், ஒரே கருவில் அமைந்தாலும் பொன்னகரத்தின் உடலைத்தான் பரோபகாரி சுவீகரித்துள்ளதே தவிர உள்ளொளியை முற்றிலுமாக இழந்துவிட்டதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. கதையின் தலைப்பே முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. பொன்னகரம் என்பது சமூகம். அதன் பிறழ்வு நம்முடைய தவறு. பரோபகாரி என்பவள் தனியாள். அவள் பிறழ்வு அவளுடைய தவறு. சுருக்கமாகச்சொன்னால் பொறுப்பை ஏற்பதற்கும் பழி சுமத்துவதற்குமான வேறுபாடு. இலக்கியம் எப்போதும் பொறுப்பை ஏற்கத்தான் வேண்டும். புத்திசாலிகள் அல்ல பொறுப்பாளிகளே இலக்கியவாதிகள்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்