இணையம், சமூக ஊடகம், கணினி ஆகியவற்றில் தமிழ்மொழியைப் புழங்கக்கூடிய சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குத் தமிழ் எழுத்துருக்கள் (Fonts) துணையாகத் திகழ்கின்றன. கணினியின் ‘கையெழுத்து’ எழுத்துரு எனலாம். பல்வேறு எழுத்துருக்கள் பயன்பாட்டில் உள்ளபோதிலும் ஆங்கிலத்தில் இருக்கும் அளவிற்குத் தமிழில் எழுத்துருக்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. அந்தக் குறையைப் போக்க சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் புது முயற்சியில் இறங்கியுள்ளார். 28 வயது JS சசிகுமார் புதிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி வருகிறார். ‘இருவர்’, ‘அலைபாயுதே’ என அவரின் எழுத்துருக்களுக்குப் பெயரும் சூட்டியுள்ளார்.