ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான அழகும், தனித்துவமும் கொண்டவை. அதிக மழையும், அதிக வெயிலும் கொண்ட ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு சிங்கப்பூரிலிலிருந்து சுமார் நான்கு மணிநேர விமானப்பயணம்தான்.
ஆஸ்திரேலியாவின் தலைக்கிரீடம் போல அமைந்திருக்கும் டார்வின் பகுதியை நாங்கள் 2019 டிசம்பர் மாதத்தில் சுற்றிப்பார்த்துவிட்டு, சில தேசியப்பூங்காக்களிலும் கால் பதித்து வந்தோம்.
இயற்கையாக உண்டான தீபகற்பம் என்பதால், டார்வின் பகுதியில் பலவிதமான கப்பல்களையும் படகுகளையும் பார்க்கலாம்.
மகர ரேகைக்கு மேலே இருக்கும் பகுதி இது என்பதால் கண்ணுக்கு நேரே செங்குத்தாகச் சூரிய ஒளி நம்மேல் பெரும்பாலான நேரத்தில் இருக்கும். டிசம்பர் முதல் வாரம் சுட்டெரிக்கும் வெயில்தான். அடுத்த ஓரிரு வாரங்களில் பருவ நிலை மொத்தமாக மாறி வெள்ளப்பெருக்கு ஆரம்பிக்கும்.
டார்வின் நகரின் பெயரைப் பற்றி எல்லாருக்குமே கேள்வி இருக்கும். சார்லஸ் டார்வின், டார்வின் பகுதிக்கு வந்ததில்லை.1839 இல் உலகம் சுற்றி வந்த பீகிள் கப்பலில் (HMS Beagle) இருந்தவர்களின் கண்ணில் பட்ட இந்தப்பகுதிக்கு, தங்கள் முந்தைய பயணத்தில் உடன் வந்த டார்வின் பெயரை வைத்தார்கள்.
இந்த நகரின் எல்லாப்பகுதிகளிலும் இந்திய முகங்களைப் பார்க்க முடிகிறது. வடஇந்திய உணவுக்கடைகள், தோசைமாவு உள்பட விற்பனை செய்யும் தென்னிந்திய உணவுக்கடைகள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் என ஒரு குட்டி இந்தியாவை தன்னுள் வைத்திருக்கிறது டார்வின். ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களைவிட இங்கு வந்து வேலை பார்ப்பவர்களுக்குக் குடியுரிமை போன்ற சலுகைகள் விரைவில் கிடைப்பதால், பலர் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்.
யார் வந்து அழித்தாலும், எத்தனை முறை நாம் நடந்தாலும், என் கடன் பணி செய்துகிடப்பதே என்று ஒரு வகையான சங்கு உயிரினம், டார்வின் நகரின் மின்டில் (Mindle) கடற்கரையெங்கும் கோலம் போட்டபடி இருந்தது. ஒரு பொன்மாலை பொழுதை நாங்கள் இந்தக் கடற்கரையில் கழித்தோம்.