க்ரிப்டோ கரன்சி (Crypto Currency) எனப்படும் மின்காசு பற்றி நாளேடு, காணொலி, வானொலி, இணையத்திலிருந்து நம் கவனம் பெற, செய்திகள் வராத நாளே இல்லை. ஆமாம், மின்காசு என்றால் என்ன?
2008-ல் சடோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்கிற புனைப்பெயரில் பெயர்வெளியிட விரும்பாத ஒருவரோ சிலரோ பிட்காயின் (Bitcoin – BTC) பற்றிய தொழில் நுட்பத்தை ஒரு வெள்ளைக் கட்டுரையாக வெளியிட்டனர். பிட்காயின் என்ற பெயரும் குறிப்பிட்டு அதை உருவாக்குவதற்கான வழிமுறைகள், சூட்சுமம் போன்றவை அந்தக் கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பின்பற்றி 2009ல் பிட்காயின் உற்பத்தியாக ஆரம்பித்தது. அப்போது அதன் விலை $0.0003 தான். அப்போது 2,00,000 பிட்காயின் கொடுத்து ஒருவர் Pizza வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போதைய விலை என்ன என்று எழுதி நீங்கள் இந்த இதழைப் படிக்கும்போது அது வேறு எங்கோ போயிருக்கும். எனவே இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பிட்காயின் பயன்படுத்தும் சூட்சுமம் (Algorithm) வழி மொத்தமே 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மார்ச் 2021 படி ஏறக்குறைய 18.6 மில்லியன் பிட்காயின்கள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. எஞ்சிய பிட்காயின்கள் உற்பத்தி செய்து முடிக்க எப்படியும் 2035 ஆகிவிடும். அதற்கப்புறம் மொத்தமே 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே 700 கோடி மக்கள் பயன்படுத்தக் கிடைக்கும். ஆகவே தோண்டத்தோண்ட வரும் தங்கத்தையும் வெள்ளியையும் வைரங்களையும் விட பிட்காயின் விலை அதிகமாக இருக்கும் எனச் சில வியாபாரிகள் கருதுகின்றனர்.