“மடிக்கணினியை எடுக்கக்கூட வகுப்பறைக்குள் செல்ல வேண்டாம்” என்ற சொற்கள் அவனது நெஞ்சைத் துளைத்தன. ஏதோ சொல்ல வந்தவன், ‘இப்போது எதுவும் பேச வேண்டாம்’ என்பதைப்போலப் பார்த்த பிரின்சிபலின் பார்வைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்த அவனது தோள்பையும் வகுப்பறையிலிருந்த மடிகணினியும் பள்ளியின் அலுவலக அறைக்கு வந்து சேர்ந்தன. நைந்த மனத்துடன் அலுவலக அறையைவிட்டு வெளியே வந்தான்.
தொடக்கநிலை ஆறுக்கான உணவு இடைவேளை நேரம். கேண்டீனில் மிகவும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்த மூன்று ஆசிரியர்கள் அவனைப் பார்த்தவுடன் தங்கள் கைத்தொலைபேசியை உற்றுப் பார்க்கத் தொடங்கினர். அதிகரித்த வலியோடு வெளி வாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சில மாணவர்கள் ஓடி வந்து, திடீரென எங்கே போகிறான் எனக் கேட்டனர். அவர்களது பார்வையை கவனமாகத் தவிர்த்து, முக்கியமான வேலை என்று மட்டும் சொல்லிவிட்டுக் கால்களை எட்டி வைத்தான். தனது மனம் இடும் ஓலத்தில் மாணவர்களின் இரைச்சல் அடங்கியிருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.
தன்னை ஒரு குற்றவாளியைப்போல மற்றவர்கள் பார்த்தபோது ஏற்பட்ட வேதனையைவிட “இப்படிப்பட்டவரா நீங்க?” என்று அவள் கேட்டபோது அதிகமானதைப்போலத் தோன்றியது. கால்கள் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன் இருட்டியதை அறிந்து ‘கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்துக்கும் மேல் ஒரு பைத்தியக்காரனைப் போல அங்குமிங்கும் அலைந்திருக்கிறேனே’ என நினைத்தான்.