பச்சையிலிருந்து மஞ்சளாகி ஆரஞ்சுக்குத் தாவியபோது நிலைமை சிவப்புக்கு வரப்போகிறது என்ற பதற்றம் தொற்றிக்கொண்டதன் விளைவாக நாங்கள் வாங்கி வைத்திருந்த முகமூடிகளும், கிருமிநாசினிகளும் விற்றுத் தீர்ந்தன. முதல் கோவிட் பரவல் செய்தி வந்தவுடன் எல்லாம் மாறிப்போனது.
சுறுசுறுப்பான அங்காடி கடைகளில் அமர்ந்து சாப்பிடுவது தடைபட்டது. அத்தியாவாசிய சேவைகள் இல்லாத கடைகள் மூடப்பட்டன. அலுவலகங்கள் வீடுகளுக்கு மாறின. வெளிநாட்டுபயணம் கனவானது. வீட்டில் வேலை செய்வது, வேலைக்கும் வீட்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து நெருக்கடியை உருவாக்கினாலும் நாம் எதிர்பார்த்திராத ஏதோ ஒன்று பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.