காத்திருந்து, கால் மடித்து, கீழமர்ந்து, காலம் கடப்பது கவனிக்காமல் கல்வியையும், கலையையும் கண்டு கற்ற காலங்கள் இன்றில்லை. காத்திருக்கவும் நேரமில்லை, கீழமரவும் காலமில்லை. கால்கள் நடந்து கொண்டே இருக்க கையடக்க கைபேசியின் வழி கைக்குள் அடக்கமாகிறது அனைத்துலகமும். இன்றைய வாழ்வின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமெனில், இன்றைய சமூகத்தின் ஆர்வத்தைத் தக்க வைக்கவும், எந்நேரத்திலும், எங்கும் அவர்களுக்குக் கிடைக்கும் வகையில் தகவல்களும் தரவுகளும் அமைந்திருக்க வேண்டும். அதற்கான ஒரு மிக முக்கிய நிகழ்வு தமிழ் மின் மரபுடைமைத் திட்டம்.