அரசியலில் இருக்கக்கூடாது என்பது ஒரு போலித்தனம்; ஏமாற்று வேலை. அரசியலில் இல்லாமல் எப்படி எழுத்து வரும்? அரசியல் என்பது என்ன? அது உங்கள் உலகப் பார்வையைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. ஒவ்வொரு அரசியலுக்கும் பின்னர் ஓர் ஐடியாலஜி இருக்கிறது. மார்க்சியம், திராவிடம், காந்தியம், இறையியல், இந்து மதம், இஸ்லாம், சூஃபியிஸம், கிறிஸ்டியானிடி என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின்னர் ஓர் உலகப் பார்வை இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவம் மனிதர்களையும், மனிதர்களுடைய உணர்வுகளையும் உறவுகளையும் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு வழிகாட்டுகிறது. வழிமுறைகளைச் சொல்கிறது. ஒரு வழிமுறையைக் கொடுக்கிறது.
பெரியார் உலகைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு ஒரு வழிமுறையைக் கொடுக்கிறார். சூஃபியிசம் இன்னொரு விதமான வழிமுறையைக் கொடுக்கிறது. நான் சூஃபியிஸம் சார்ந்த ஓர் ஆளாக இருந்தால் அதன் வழியாக என் கவிதைகள் உருவாகும். நான் ஒரு பெரியாரிஸ்டாக இருந்தேனென்றால் சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்கள், சிக்கல்கள், சமூக ஏற்றத் தாழ்வுகள் இவற்றைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு பெரியார் வேண்டும். அம்பேத்காரிஸ்டாக இருந்தால் அது எனக்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். எனவே அரசியலும், தத்துவமும் ஒரு படைப்பள்ளிக்கு இருந்தே ஆக வேண்டியன. எழுதப் படிக்கத் தெரிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசியலும் தத்துவமும் தெரிந்திருப்பது; அவற்றைச் சார்ந்திருப்பது.