ஆரம்பப்புள்ளி

‘சேல்ஸ் மேனேஜர்’ என்று விசா பேப்பரில் எழுதியிருந்தது. மேலாளர் வேலை இல்லாவிட்டாலும் பெரிய நிறுவனத்தில் ஏதும் சிறிய வேலையாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

சிராங்கூன் ரோடு வீரமாகாளியம்மன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி, பேருந்து வந்த திசையிலேயே நேராக நடந்தால், இரண்டாம் வலது திருப்பம் டெஸ்கர் ரோடு. அதில் வலதுசாரியில் இருக்கும் ஒரு கடையில் என்னை ஏஜண்ட் இறக்கிவிட்டார்.

“இங்கதான் உனக்கு வேல. மேலயே தங்கிக்கலாம். காலை ஒன்பதிலிருந்து மதியம் இரண்டுவரை வேல. அப்பறம் ரெஸ்ட். சாயங்காலம் நாலுலேர்ந்து ராத்திரி பத்து வரைக்கும் வேல. மாசம் ஒருநாள் விடுமுறை. மூனு வேளை சாப்பாடு உண்டு. வேலைல பிரச்சினை, சம்பளம் அதுஇதுன்னா என்னைத்தான் நீ முதல்ல கூப்புடணும்”.

‘சேல்ஸ் மேனேஜர்’ என்று விசா பேப்பரில் எழுதியிருந்தது. மேலாளர் வேலை இல்லாவிட்டாலும் பெரிய நிறுவனத்தில் ஏதும் சிறிய வேலையாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இங்குவந்தும் மளிகைக்கடையில் வேலை என்பது பெரிய ஏமாற்றமாக இருந்தது. என் முகக்குறிப்பைப் பார்த்த ஏஜண்ட் தோளில் கைபோட்டபடியே கடைக்கு எதிரிலிருந்த மரங்களடர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“நான் இறக்கிவிட்ட பல ஆளுங்க இப்டிதான், உன்ன விட நிறைய படிச்சவங்க, பெரிய கம்பெனில வேல செஞ்சவங்க. இங்க அதெல்லாம் செல்லாது. ஆனா இங்க ஆரம்பிச்சு பெரிய பெரிய தொழில் செய்யுற நெறய பேர நீயே கொஞ்ச நாள்ள தெரிஞ்சுக்குவ. எல்லா ஏத்தத்துக்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்குமில்லயா, அந்தப் புள்ளிய நான் இப்ப உனக்கு இங்க போட்டுருக்கன்.

நல்லா வேல செஞ்சு திறமைய வளர்த்துக்க. ஊர் லைசன்ச வச்சு இங்க ஒரு க்ளாஸ் 3 லைசென்ஸ் எடு. அதுக்குள்ள ஃப்ரண்ட்ஸ் செட் ஆயிடுவாங்க, அவங்ககூட வண்டி ஓட்டிப் பழகு. இதெல்லாம் முடிக்கவே ஒரு வருஷம் ஆயிடும். அதுக்குள்ள புது இடம், ஊரு, பாச, மனுசங்க எல்லாம் பழகி தயக்கமெல்லாம் காணாமப் போயிடும். இந்தக் கடயும் கடத்தெருவும் உனக்கு பெரிய ஆசிர்வாதமா இருக்கும்.

நீ வளர்றதும் தேய்றதும் உன் கைலதான் இருக்கு. இதே கடைலதான் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒருத்தன இறக்கிவிட்டேன். உன்ன மாதிரியே எம்பிஏ படிச்சவந்தான். வந்த புதுசுல வேல பிடிக்கல ஊருக்கு ஏத்தி விட்ருங்கன்னு சொன்னான். நான் சமாதானம் சொல்லி ஆறுமாசம் வேல பாரு, அதுக்கப்புறம் நீ சொல்றத நான் செய்றேன்னு சொன்னேன். என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?”

“என்ன ஆச்சு சார்?”

“நல்லா வேல செஞ்சான், ஆறு மாசத்துல லைசென்ஸ் எடுத்தான். கடைக்கு வரப்போக இருந்த ஒரு ஆள்கிட்ட பழக்கம் உண்டாச்சு. அவன் மூலமா லப்பான் லப்பான் டிராவல்ஸ்ல வேலைக்குப் போயிட்டான். ஆயிரம் வெள்ளிக்கு வந்தவன், பத்து மாசத்துல நாலாயிரம் வெள்ளிக்கு மாறிட்டான். அவனோட பர்மிட் முடியுறதுக்குள்ளவே நல்ல வேலை அமைஞ்சிடுச்சி, நாந்தான் பேசி கையெழுத்து போட்டு புதுகம்பெனிக்கு அனுப்பி வச்சேன். ராஜ வேல. ஏர்போர்ட்ல ஆளுங்கள பிக்கப் பண்ணி ஓட்டல்ல இறக்கி விடணும், சைட் சீயிங் கூட்டிட்டு போகணும். வாங்கறது நாலாயிரம் வெள்ளின்னா, டூரிஸ்ட்காரங்க கைல குடுக்கற வகைல மாசம் ஐநூறு ஆயிரம் தேறும்.

அவனுக்கு சொன்னதையேதான் உனக்கும் சொல்றேன். ஆறுமாசத்துக்கு இங்க இருந்துட்டேன்னா தானா ஒரு வழி பிறக்கும். எதாச்சும் நல்ல வாய்ப்பு வந்துச்சினா என்னோட புல் சப்போர்ட் உனக்கு உண்டு”.

அவர் பேச்சில் இருந்த வசீகரமும் உறுதியும் நானும் அவனைப் போலவே ஆறு மாதத்தில் நல்ல வேலைக்கு மாறிவிடலாம் என்ற நம்பிக்கையைத் தந்தது.

“சம்பளம் வர்ற வரைக்கும் இத செலவுக்கு வச்சிக்க” என்று நூறு வெள்ளி நோட்டு ஒன்றைக் கையில் திணித்தார். “நாளைக்கு காலைல இருந்து உனக்கு வேல ஆரம்பிச்சிடும். வாழ்த்துக்கள்” என்று கைகுலுக்கிவிட்டு கடைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்.

கடையில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். வடநாட்டு முகம். ஏஜண்ட் ஆங்கிலத்தில் எல்லாவற்றையும் பேசி உறுதி செய்தபிறகு என் பக்கம் கையைக் காட்டினார்.

“பெயரென்ன?” என்றார் அப்பெண்மணி.

“சிவகுரு, சுருக்கமா சிவான்னு கூப்பிடலாம்”

அவள் முகம் மலர்ந்துவிட்டது. “இந்தக்கடையில் முன்பு வேலை செய்த பையன் பேரும் சிவாதான். மிகவும் நன்றாக வேலை செய்வான். பொதுவாக இந்தியர்கள் கவனமாக, சிறப்பாக வேலை செய்கிறார்கள். எனக்கு அவர்களைப் பிடிக்கும்” என்றாள்.

நான் குழப்பத்துடன் ஏஜண்டைப் பார்த்தேன்.

“அவங்க பங்களாதேஷ்”

அவள் “டிட்டு” என்று சத்தமாக அழைத்தாள். கடையின் பின்னால் ஏதோ இயந்திரத்தின் ரீங்காரம் நின்றது. உள்ளேயிருந்து நல்ல சிவப்பான, ஒல்லியான, உதடு கருத்த, முன் வழுக்கை விழுந்த, நாற்பது வயதுக்குள் மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். சமையல்காரர்கள் போடும் மேலங்கியும், தலையில் குல்லாயும் அணிந்திருந்தான்.

“என்ன மேடம்?”

ஆயிரம் வெள்ளிக்கு வந்தவன், பத்து மாசத்துல நாலாயிரம் வெள்ளிக்கு மாறிட்டான். அவனோட பர்மிட் முடியுறதுக்குள்ளவே நல்ல வேலை அமைஞ்சிடுச்சி.

“புது ஆள், வேலைக்கு வந்திருக்கு உன் ரூம்ல தங்க வச்சிக்க”

டிட்டு என்னைப் பார்த்தான். பார்வையில் ஒரு சலனமும் இல்லை. “ஓகே மேடம்” என்று திரும்பி உள்ளே சென்றுவிட்டான். மறுபடி மெஷின் ரீங்காரம் கேட்க ஆரம்பித்தது.

கடை மூட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. ஏஜெண்ட் விடைபெற்றார். மேடம் என்னை டிட்டுவோடு இருக்கச் சொன்னாள். பெட்டியை ஒரு மூலையில் வைத்து விட்டுப் பிளாஸ்டிக் திரைச்சீலையை விலக்கி உள்ளே நுழைந்ததும் குப்பென்று மாமிசக் கவிச்சி அடித்தது.

வாயில் புகையும் சிகரெட்டோடு டிட்டு கண்களை இடுக்கிக்கொண்டு பென்னம்பெரிய இறைச்சித் துண்டுகளை அறுத்துக்கொண்டிருந்தான். ஊரில் மரப்பட்டறைகளில்தான் இதுபோன்ற மிஷின்களைப் பார்த்திருக்கிறேன். இது சிறிய மெஷின். சுழலும் பற்சக்கரத்தில் வைத்துத் தள்ளத்தள்ள கீழே சிறிய இறைச்சித் துண்டுகள் விழுந்துகொண்டே இருந்தன.

மெஷினை நிறுத்தி, வாயிலிருந்த சிகரெட்டை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, ஐஸ்பெட்டியின் மேல் என்னை அமரச்சொன்னான். அவன் கையிலும் சிகரெட்டிலும் ரத்தம் படிந்திருந்தது. ஆட்டிறைச்சியும், மாட்டிறைச்சியும், பெரிய மீன்களும் அந்தப்பெட்டியின் உள்ளே பாறைகளாக உறைந்திருந்தன. வெட்டப்பட்ட சிறு துண்டுகள் இரண்டு பெரிய கூடைகள் நிறைய இருந்தன. அவற்றை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு யாருக்கோ கைபேசியில் அழைத்தான்.

பிறகு மேலங்கியைக் கழற்றிவிட்டு கைகால்களைச் சுத்தமாகக் கழுவினான். பின்னால் வருமாறு சைகை செய்துவிட்டு கடையை ஒட்டிய மாடிப்படிகளில் ஏறினான். என் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் போனேன்.

மேல்மாடியின் பின்புறத்தில் நுழைந்தான். அதை ஒரு அறை என்று சொல்ல முடியாது. மாடியின் பின்புற பால்கனி மீது ஒரு தடுப்பு ஏற்படுத்தி மேலே தகரக்கூரை போடப்பட்டிருந்தது. ஓர் ஈரடுக்குக் கட்டிலைக் காண்பித்தான். கீழடுக்கில் அவனும், மேலடுக்கில் நானும் படுத்துக்கொள்ளவேண்டும். உள்ளே தகிக்கும் உஷ்ணம். இரவில்தான் நுழைய முடியும்போல. இன்னொரு ஈரடுக்குக் கட்டில் இருந்தது

“இந்த கட்டில நான் எடுத்துக்கலாமா?”

“அது முடியாது. அங்க வேற ஒருத்தன் இருக்கான். பக்கத்துல சலூன் கடையில வேலபாக்குற பாடோல். ராத்திரி பாக்கலாம். மேல செல்வா அண்ணன். அவரை கொஞ்ச நேரத்துல பாக்கலாம்.    

ஒரு சின்ன ஃபேன், ஒரு பெட்சீட், ஒரு தலகாணி வாங்கிக்க. கட மூடினதும் எங்கூட வா. காசு வச்சுருக்கியா? ஏஜண்ட் குடுத்துருப்பானே, இல்லன்னா மேடம்கிட்ட சொல்லி அட்வான்ஸ் வாங்கித்தரேன்”

பாக்கெட்டைத் தடவிக்கொண்டே “இருக்கு” என்றேன்.

மேடம் பக்கத்துக் கடையில் சாப்பிடச் சொன்னாள். அது ஒரு சிறிய கடை. அமர்ந்து சாப்பிட ஓரிரு இருக்கைகள் மட்டுமே. உணவுகள் முழுக்க வங்காள வகைகள். பெரும்பாலும் பார்சல்தான். அந்தக் கடையும் மேடமுக்குச் சொந்தமானதுதான். அங்குதான் செல்வா என்ற செல்வராஜ் அண்ணனை டிட்டு அறிமுகப்படுத்தினான்.

செல்வா அண்ணன் ஐம்பதுக்கு மேல் இருப்பார். சிரித்த முகம், தளர்ந்த சரீரம். சோறு போட்டு, கொஞ்சம் பருப்பு ரசம் ஊற்றி, தொட்டுக்கொள்ள கோழி இறைச்சி வைத்து என் மேசையில் அவரும் அமர்ந்தார். பேசி அறிமுகம் கொண்டோம்.

எலிவங்கு போல இருக்கும் அந்த அறையில் நான்கு பேர் எப்படித் தங்குவது என்று கலக்கமாகக் கேட்டேன். அதற்கும் சிரித்தவாறே, “டிட்டு அந்த பொந்துலதான் ஒம்போது வருசமா இருக்கான், நான் ரெண்டு வருசமா இருக்கேன். சரியாயிடும் தம்பி. இங்க வரும்போது சுடுதண்ணி கூட வைக்க தெரியாம இருந்தன். இப்பபாரு இந்த கடைல எல்லாமே நாந்தான். பழகிக்கலாம் விடு” என்றார்.

அன்றிரவு டிட்டு முஸ்தபாவில் கொஞ்சம் பொருட்கள் வாங்கிக் கொடுத்தான். அறைக்குத் திரும்பியபோது வெளியே செல்வா அண்ணனும் பாடோலும் அமர்ந்திருந்தனர். பாடோலுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் டிட்டு. சிறிய வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்தோம்.

பாடோலுக்கு அரேபிய முகவெட்டு. அடர்ந்த தாடி. சவரம் செய்தாலும் அடுத்த அரை மணிக்கூரில் முடி முளைக்கும். தோளில், முதுகில், கை, கால் என மயிர் செழித்திருந்தது. ஆனால் தலையில் மட்டும் இல்லை. பழைய படங்களில் வரும் நம்பியார், அசோகன் போல நீண்ட கிருதா வைத்திருந்தார்.

என்னை வரவேற்கப் பாடல் ஒன்றைப் பாட விரும்புவதாகச் சொன்னார். மெல்லிய குரலில் வங்கமொழியில் பாட ஆரம்பித்தார். ஊரில் வயக்காட்டில் பாடுவது போன்ற எளிய, பழகிய மெட்டு. குரல் உதித் நாராயணன் சற்றுக் குழைந்ததுபோல நெளிந்து நாணலாக இருந்தது. ஒரு வார்த்தை கூடப் புரியாவிட்டாலும் நன்றாகவே இருந்தது. செல்வா அண்ணனைப் பார்த்தேன். அவர் கண்களை மூடி லயித்திருந்தார். பாடல் முடிந்ததும் அர்த்தம் கேட்டேன். தெரியாது என்றார்.

வசந்த காலத்தை வரவேற்கும் கிராமியப் பாடலில் வசந்த காலம் என்ற சொல்லை மட்டும் மாற்றி என் பெயரைப் போட்டுவிட்டதாகச் சொன்னார் பாடோல்.

“அருமை. உங்களுக்கு நல்ல குரல்”

மகிழ்ச்சியில் பாடோல் எழுந்து கைகொடுத்தார். “ஊருக்குப் போனதும் பாடல் பாடி ஆல்பம் வெளியிடப் போகிறேன். பாடல்கள் எல்லாம் ரெடி. அதற்காகத்தான் காசு சேர்க்கிறேன். கொஞ்சம் கடனையும் முடிச்சுட்டேன்னா ஆல்பம் வந்துரும்”

டிட்டு எங்கோ பார்த்துக்கொண்டு அடுத்தடுத்த சிகரெட்டுகளைப் புகைத்துக்கொண்டே இருந்தான். அவ்வப்போது பாடோலை கிண்டல் செய்துகொண்டே இருந்தான். ஆரம்பகட்ட தயக்கங்கள் களைந்து ஓரளவுக்கு இடமும், மனிதர்களும் எனக்கு நெருங்கி வந்துவிட்டதான மகிழ்ச்சி உண்டானது. ஏஜண்ட் சொன்னது சரிதான்போல. எல்லோரும் உறங்கச் சென்றோம்.

சரியாயிடும் தம்பி. இங்க வரும்போது சுடுதண்ணி கூட வைக்க தெரியாம இருந்தன். இப்பபாரு இந்த கடைல எல்லாமே நாந்தான். பழகிக்கலாம் விடு.

கொஞ்ச நேரத்தில் ஏதோ உறுமல் கேட்டு என் தூக்கம் கலைந்தது. ஆயிரக்கணக்கான கோலிக்குண்டுகளை கூரையின் தகரத்தில் யாரோ எறிந்துகொண்டிருந்தார்கள். அறையில் மற்றவர்களிடன் ஒரு அசைவுகூட இல்லை, அசந்து தூங்கினார்கள்.

செல்வா அண்ணன் காலை நான்கு மணிக்கும், டிட்டு ஆறு மணிக்கும் கீழே இறங்கினார்கள். நான் மெதுவாக எழுந்து குளித்து, ஊரில் சேகர் அண்ணன் கத்தி மடிப்புடன் தேய்த்துக்கொடுத்த சட்டை, பேண்ட் போட்டு எட்டறைக்கு இறங்கினேன். பாடோல் பத்துமணிக்கு மேல்தான் கடையைத் திறப்பார். என் உடைகளைப் பார்த்ததும் டிட்டு சிரிக்க ஆரம்பித்தான். செல்வா அண்ணனும் தூரத்திலிருந்து சிரித்தார்.

மேடம் கூப்பிட்டாள். “நீ இந்த அளவுக்கு சிரத்தை எடுத்து உடை அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேலைசெய்ய இலகுவான உடை இருந்தால் போதும்” என்றாள். அவளும் லேசாகச் சிரித்ததுபோல் இருந்தது.

பெரிய கோப்பு ஒன்றைக் கொடுத்தாள். “இது எல்லாமே நம்ம சப்ளையர்ஸ். பழைய இன்வாய்ஸ்களைப் பார்த்து தேவையான பொருட்களுக்கு ஆர்டர் கொடு” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டுக் கடைக்குச் சென்றுவிட்டாள்.

மதிய உணவின்போது செல்வா அண்ணன், “இங்கபாரு, மேடம் தாராளமா எதுவேணாலும் எடுத்து சாப்பிடுங்க என்பார். முடிஞ்சவரைக்கும் காய்கறியா பாத்து சாப்பிடு. அதுதான் தெனமும் புதுசா செய்வோம். மட்டன் சிக்கன்ல அப்பப்ப பழசயும் புதுசயும் கலந்து அடிச்சிடுவோம். வயிறு நிக்காது. கொஞ்சம் பழகிட்டுன்னா அப்பறம் எதுவும் சாப்பிடலாம்” என்றார்.

“டிட்டு எப்டிணே? நல்லா பழகுவானா?”

“தான் உண்டு தன் வேலையுண்டு இருப்பான். அவனுக்கு பணத்தேவ அதிகம்பா. சிட்டகாங்குல ஒரு பெரிய கூட்டுக்குடும்பமே அவன நம்பி இருக்கு. ஒவ்வொரு மாசமும், ஒரு பாட்டியோ, தாத்தாவோ நெறய செலவு வச்சிடுவாங்க. சிகரெட் தவிர இவனுக்கு வேற செலவு இல்ல. மீதி பணத்தை அப்டியே அனுப்பிடுவான். நல்ல கேரக்டர்தாம்பா. எறச்சி எடுக்க வர்றவன் டிட்டுவ கரெக்ட் பண்ணி, பில்லுல எடை கம்மியா போடு உன்ன தனியா கவனிச்சிக்கறேன்னு சொல்லிருக்கான். இவன் ஒத்துக்கல, மத்த கடைகள்ல இதெல்லாம் சகஜமா நடக்கறதுதான்.ஆட்டையும் மாட்டையும் கலந்துபோடக் கேப்பாங்க, இவன் மாட்டான்.”

அன்று வந்த ஆர்டர்களுக்கு இறைச்சி அறுக்க ஆரம்பித்தான் டிட்டு. அவன் மளிகைக் கடையைத் திறந்து, கூட்டி வாரி, பொருள்களை அடுக்கிவிட்டு சாப்பாட்டுக் கடைக்குச் செல்லவேண்டும், அங்கு ஓரிரு மணி நேர வேலை. பிறகு ஓய்வுக்குப்பின் மதியவாக்கில் வேலை தொடங்கும். மேடம் ஒன்பது மணிக்கு வந்து செல்வா அண்ணனை ஓய்வுக்கு அனுப்புவார். நான் மளிகைக்கடை முழுக்க பார்த்துக்கொள்ள வேண்டும். அன்றாடம் இதில் எந்த மாற்றமும் இருக்காது. வேலை முடிந்ததும் இரவில் பாடோல் எதாவது பாடலைப் பாட நாங்கள் சுற்றி அமர்ந்து கேட்பது வாடிக்கையானது.

என் முதல் மாத சம்பளத்தில் மதுவிருந்து கொடுத்தேன். அன்றைய பாடோலின் பாடல்கள் துள்ளலாக இருந்தன. செல்வா அண்ணன் ஒருகட்டத்தில் வேட்டியை அவிழ்த்துவிட்டு மேசையை சுற்றிச் சுழன்று ஆட ஆரம்பித்தார். பிறகு கொஞ்ச நேரத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். தான் தொழிலில் நட்டப்பட்டது முதல் பெண்டாட்டி பிள்ளைகளே தன்னை அவமானப்படுத்தியதுவரை சொல்லிச் சொல்லி அழுதார். அவரைத் தேற்றிப் படுக்கவைப்பதற்குள் டிட்டு திணறிப்போனான்.

செல்வா அண்ணனுக்கு எப்போதும் முதலிரவு அறையிலிருந்து வெளியேவரும் பெண்ணின் வெட்கச்சிரிப்பு உதடுகளில் உண்டு. நன்றாகச் சிரித்தார் என்றால் கண்களே தெரியாமல் மறைந்துபோகும். அவருக்கு இழைக்கப்பட்ட ஏகப்பட்ட துரோகங்களை எங்களிடம் இரவுகளில் சொல்லும்போதுகூட சிரிப்பினூடேதான் சொல்வார். அவர் அப்படி அழுததைப் பார்க்க ஏதோ செய்தது.

இப்படி ஒவ்வொரு மாத முதல் வாரத்திலும் முறைவைத்து நடந்த மதுவிருந்துகளால் எங்களுக்குள் நம்பிக்கை கூடிப்போனது. அதிலும் டிட்டு மிகவும் நெருக்கமானான்.

இரவில் படுப்பதற்குமுன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சீனக்கிழவர் வெளியே நடமாடுவதைக் கவனித்திருந்தேன். நிறைமாதப் பூனைபோல மெதுவாக நடந்து படியேறி வந்து எங்களை ஒரு நோட்டம் விட்டு, பிறகு பின்கதவைச் சாத்திக்கொள்வார். இரண்டு பேரை உள்ளே அமர்த்திப் பூட்டினால்கூட மேலே தலை இடிக்காத அளவுக்குக் கதவோரம் ஒரு பெரிய அலுமினியப் பெட்டி. அதைத் திறந்து சில பாலிதீன் பைகளை எடுப்பதும் வைப்பதுமாக ஏதோ துழாவிவிட்டு மறுபடியும் பூட்டிவிட்டுச் செல்வார்.

உப்பிய கன்னம், ஒரு முடிகூட இல்லாத வழுக்கைத் தலை, திறந்தே இருக்கும் பெரிய உதடுகள் கொண்ட வாய். தொள தொள சட்டை, எப்போதும் திறந்திருக்கும் முதல் மூன்று பொத்தான்கள். பல பாக்கெட்டுகள் வைத்த முட்டிக்குக்கீழே நீளும் முக்கால் பேண்ட். தங்கவண்ணம் பூசினால் சீனர்களின் குபேர பொம்மையைப் போலவே இருப்பார்.

கடைக்கு அருகிலுள்ள கோப்பிக்கடையில் ஒரு சுவரோர மேசையில்தான் பொழுதன்னைக்கும் அமர்ந்திருப்பார். பேசும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல்செட்டைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டுக் கால்களை நீட்டியிருப்பார். அப்படியே உறங்கியும் விடுவார். மேசையில் எப்போதும் ஆறிப்போன பாதி டம்ளர் கடுங்காப்பி இருந்துகொண்டே இருக்கும்.

“யார் அவர்? என்ன பெட்டி அது?” டிட்டுவிடம் ஒருநாள் கேட்டேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சிவா. ஆனா அந்த பெட்டிய வச்சுக்கிறதுக்கு வாடகையா 700 வெள்ளி மேடத்துக்கு குடுக்கறார்”

“அய்யோ.. ஒரு முழு அறைக்கான வாடக குடுத்து ஒரு பெட்டிய மட்டும் வச்சுருக்கார்னா அதுல ஏதோ விஷயம் இருக்கு”

செல்வா அண்ணன், “அதெல்லாம் நமக்கு எதுக்கு சிவா, தேவையில்லாத வேல. அவர் பழைய நம்பர் கேங் ஆளு. பாக்கதாம் ஓய்ஞ்சவன் மாதிரி இருப்பார். எதாவது பிரச்சினை வரும்போது பாரு, போலிஸ்காரனே பம்மிட்டு போயிடுவான், சத்தம் விட்டார்னா இடமே அதிரும் அந்தளவுக்கு பவரான குரல். ஊர்ல பஞ்சாயத்து பன்ற பெருசுங்கள பாத்திருக்கல்ல, எப்படியாப்பட்ட பிரச்சினையும் பேசியே பைசல் பண்ணுவாங்கல்ல, அந்தமாதிரி ஆளு” என்றார். உள்ளுக்குள் சிறிய பயம் உண்டானாலும் பெட்டியின் ரகசியம் மீது ஆவலும் அதிகரித்தது.

தினமும் கிழவர் வரும் நேரத்தில் நான் கதவோரம் அமர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். பின்கதவைச் சாத்துவார் என்றாலும் கொஞ்சம் இடைவெளி விடுவார். முழுதாக மூடினால் சத்தம் கேட்டு நாங்கள் அங்கே பார்த்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையாக இருக்கலாம்.

கதவிடுக்கு வழியாக ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. ஆறு இலக்க நம்பர் பூட்டு அது. ஒவ்வொரு நாளும் உன்னிப்பாகப் பார்த்ததில் ஒருவாரத்தில் ஓரளவுக்கு யூகித்துவிட்டேன். முதல் இரண்டு எண்களே மொத்தம் மூன்றுமுறை தொடர்ந்து வருகிறது. ஆனால் கதவிடுக்கு வழியாகக் காணும்போது எண்கள் தெளிவாகப் புலப்படுவதில்லை.

ஒருநாள், “கண்டுபிடிச்சிட்டியா?” என்றான் டிட்டு.

“இல்ல”

“எச்சரிக்கை. கிழவன் பொல்லாதவன்”

“ஒரு ஆர்வத்துலதான் பாக்கறன். மத்தபடி எந்தக் கெட்ட எண்ணமும் இல்ல”

கிழவர் என்னைக் குறுகுறுவென்று பார்ப்பதுபோல இருந்தது. உள்ளுக்குள் உதறல் வந்தாலும் நாம்தான் எதையும் எடுக்கவில்லையே என்ற தைரியமும் இருந்தது.

மேலும் இரண்டு நாட்களில் கண்டுபிடித்துவிட்டேன். அன்று நள்ளிரவுக்குமேல் டிட்டுவையும் அழைத்துக்கொண்டு பூட்டின் எண்களைத் திருகினேன். ஊகித்தது சரிதான், திறந்துகொண்டது. சேட்டைக்கார கிழவன் 696969 எண்ணை சாவியாக வைத்திருக்கிறார்.

உள்ளே வில்லை வில்லைகளாக, சிறிய, பெரிய டப்பாக்களில், ஏராளமாக மாத்திரைகள் இருந்தன. இன்னபிற உபகரணங்களும் இருந்தன. எனக்குப் புரிந்தது. இருந்தபடியே வைத்துவிட்டு சத்தம் வராமல் மூடினேன். டிட்டுவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“என்ன இருக்கும்னு நெனச்ச?”

“இந்தோனேசியா, தாய்லாந்து சிகரெட் இருக்கும்னு நெனச்சேன்”

இருவரும் அறைக்குள் வந்தபோது செல்வா அண்ணன் “உள்ள என்ன இருக்கு?” என்றார்

“அது இப்போதைக்கு உங்களுக்குத் தேவைப்படாதுண்ணே” என்றான் டிட்டு.

மறுநாள் கோப்பிக்கடையில் கிழவர் என்னைக் குறுகுறுவென்று பார்ப்பதுபோல இருந்தது. உள்ளுக்குள் உதறல் வந்தாலும் நாம்தான் எதையும் எடுக்கவில்லையே என்ற தைரியமும் இருந்தது. உண்மையில் அவர் கண் திறந்த நிலையிலேயே அயர்ந்திருக்க வேண்டும். அசைவில்லை. பிறகு எப்போதும்போல கோபி குடித்தார்.

இரவு எங்களுக்கு முன்பே வந்திருந்த டிட்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் இதழில் மந்தகாசப் புன்னகை. “ஒரு சோதனை, சக்ஸஸ் ஆச்சு. அதான்” என்றான்.

“என்ன சோதனை?”

“தலவலிக்கி ஒரு பனடால் கொடுன்னார் செல்வாண்ணன். குளிச்சிட்டு வாங்க தரேன்னேன். வந்தார், கொடுத்தேன். இப்ப மறுபடியும் குளிக்கப் போயிட்டார்” என்று கையிலிருந்த மாத்திரை வில்லை அட்டையைக் காட்டினான். பெட்டியில் பார்த்த அதே மாத்திரை.

நான் பதறி டிட்டுவிடம் “ஏன்டா இதக் குடுத்த? வயசானவங்களுக்கு இதெல்லாம் குடுக்கக் கூடாதுடா முட்டாள், செத்துகித்து தொலஞ்சா என்ன பன்னுவ? நீ நியூஸ் எல்லாம் பாக்கறதில்லையா?” என்று மெதுவாக ஆனால் கோபமாகக் கேட்டேன்.

டிட்டு கொஞ்சம் பயந்தான் என்றாலும் காட்டிக்கொள்ளாமல் “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, பயப்படாத. விஷயம் தெரிஞ்சா அவருக்குப் பதட்டமாகும். அதனால நமக்குள்ளயே இருக்கட்டும்” என்றான். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார் செல்வா அண்ணன். அதே வெட்கச்சிரிப்பு.

“செல்வா அண்ணே யூ ஷவர் அகைன்” என்றான் டிட்டு. அவர் மேலும் வெட்கப்பட்டு அறைக்குள் சென்றார். கோபமாக இருந்தாலுமேகூட எனக்கும் சிரிப்பு வந்தது.

“ஏன் உன்னையே டெஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதானே” என்று டிட்டுவிடம் கத்தினேன்.

“நேத்து நைட்டே பண்ணிட்டேன். அது பாஸ் ஆச்சு சிவா, இருந்தாலும் கொஞ்சம் வயசு கூடின ஆளுக்கு வேல செய்தான்னு பாக்கணும்ல?”

“பாத்து?”

டிட்டுவுக்கு ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஒருநாள் பதட்டத்தோடு ஓடிவந்து கதவை அடைத்துக்கொண்டான்

“சின்னதா ஒரு பிசினஸ் பண்ணலாம் சிவா. நீ எதுவும் செய்யவேண்டாம். சைலண்டா இருந்தாலே போதும்” என்று கண்சிமிட்டினான்.

“டிட்டு, நான் இங்க புதுசா இருக்கலாம், ஆனா வியாபாரம் ஈஸி இல்லன்னு எனக்குத் தெரியும். நீ இதுல இறங்கினா, மிஞ்சிப்போனா மூனு நாள்ல கிழவண்ட்ட மாட்டிப்ப. அப்புறம் என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது” என்று நான் இரைந்துகொண்டிருக்கும்போதே இடையில் ஒருமுறை பாத்ரூம் சென்ற செல்வா அன்ணன் நீண்டநேரம் கழித்து வந்தார்.

“ஊருக்கு டிக்கெட் போடவா செல்வா அண்ணே” என்றான் டிட்டு. “இங்க என்ன செய்யுறனோ அதேதான் அங்கயும், அதுக்கு நான் இங்கயே இருப்பேன்” என்று புறுபுறுத்தபடி போய்ப் படுத்துவிட்டார்.

மறுநாள் செல்வா அண்ணன் எழவே இல்லை. அப்படியே படுத்திருந்தார். டிட்டு பயந்துபோனான். செல்வா அண்ணன் இரண்டு வருடத்தில் ஒருநாளும் விடுப்பு எடுத்ததில்லை. மேடம் வருவதற்குள் கடை திறந்தாக வேண்டும். அண்ணனின் வேலையையும் சேர்த்து டிட்டுவே செய்தான். மேடம் செல்வா அண்ணனைக் காணாமல் மேல் மாடிக்கு விசாரிக்கச் சென்றாள்.

கடுகடுவென்று இறங்கி வந்தவள் டிட்டுவிடம் பெங்காலியில் சண்டையிட்டாள். டிட்டு எதையுமே பேசாமல் தலைகுனிந்தபடி இருந்தான். சாலையில் சென்ற ஓரிருவர் நின்று கவனித்துச் சென்றனர். ஒருசிலர் முகம் சுளித்துக் காதைப் பொத்திக்கொண்டனர்.

ஒருகட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த டிட்டு தன் பர்சிலிருந்த வேலை அனுமதி அட்டையை எடுத்து மேடத்தை நோக்கி விசிறி அடித்தான். “இன்னிக்கே கட் பண்ணி விடு, நான் ஊருக்குப் போறேன். இனி எனக்கும் இந்த கம்பெனிக்கும் சம்பந்தமில்ல” என்பதுபோல ஏதோ கத்திவிட்டு பக்கத்துக் கோப்பிக் கடையில் அமர்ந்து சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். ஆழமாக இழுத்து மெதுவாக விட ஆரம்பித்தான்.

நான் பதறிப்போய் செல்வா அண்ணனிடம் கேட்டேன். தான் டிட்டு பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றார். அப்புறம் ஏன் மேடம் இவ்வளவு கோபப்பட்டார்!

“கார்டை தூக்கி வீசிட்டு போயிட்டான் டிட்டுப்பய” என்றேன்.

“நீ ஒண்ணும் பேசாத சிவா, இது அவங்க பிரச்சின. இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே கடைக்கு வந்துடுவான். இதுமாதிரி பல சண்டைங்க நடந்திருக்கு, கார்ட வீசிட்டு போவான், கொஞ்ச நேரத்துல திரும்ப வந்துடுவான். நீ போ, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கீழ வரேன்” என செல்வா திரும்பிப் படுத்துக்கொண்டார்.

அவர் சொன்னதுபோலவே சிறிது நேரம் கழித்து டிட்டு திரும்பவந்து விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர்ந்தான். மேடமும் எதுவுமே நடக்காததுபோல அவள் வேலையைப் பார்த்தாள்.

பிறகு டிட்டு இரவு நேரங்களில் அடிக்கடிக் காணாமல் போனான். அதிகாலையில்தான் திரும்புவான். இறைச்சி அறுக்கும் இடத்திலேயே அமர்ந்து அவ்வப்போது உறங்கியும் விடுவான். ‘ரெஸ்ட் அவ’ரில் காப்பிக்கடை நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கி விழுவான். முன்புபோல இரவுகளில் கலகலப்பாகப் பேசுவதுமில்லை. அகால நேர அழைப்புகள் வர ஆரம்பித்தன. நானும் செல்வா அண்ணனும் பலமுறை முயன்றும் அவனைப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை. அப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தாலும் டிட்டுவுக்கு ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் பதட்டத்தோடு ஓடிவந்து கதவை அடைத்துக்கொண்டான். என்ன ஏதென்று விசாரித்தோம். எப்படிச் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அவனை வெளியே அமரவைத்து செல்வா அண்ணன் சாந்தப்படுத்தினார். “எங்கள்ட்ட சொல்லு” என்றார்.

கண்ணைத் துடைத்துக்கொண்டு எங்கோ பார்த்தவாறு “நான் முதல்ல மாத்திரய விளையாட்டாதான் குடுக்க ஆரம்பிச்சேன். எதிர்பாக்காதமாரி நல்ல காசு வந்துச்சு. கஸ்டமர் சேந்தாங்க. ஆண்மை மாத்திரயவிடக் கருக்கலைப்பு மருந்துல வருமானம் அதிகம்னு அடையாளம் சொல்லி கேட்டாங்க. அதுவும் பெட்டில இருந்துச்சி. ஒரு ஊர்க்காரப் பையன் ரொம்ப நச்சரிச்சி கேட்டதால கொஞ்சம் எடுத்துக்கொடுத்தேன். அதாலதான் பிரச்சன”

“என்ன ஆச்சு?”

டிட்டு தலையைக் குனிந்துகொண்டான். “அந்த மருந்தை சாப்பிட்ட ஒரு பொண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி ஹாஸ்பிட்டல் கொண்டுபோற வழிலயே செத்துட்டா. அந்தப் பையன போலீஸ் புடிச்சிடுச்சி. அவன் எதாச்சும் சொன்னா எங்கிட்டதான் நேரா வருவாங்க.”

விஷயத்தின் வீரியம் புரிந்தது. டிட்டுவின் கைதுக்காகக் காத்திருப்பதைவிட அவன் தப்பிக்க ஏதும் வழியுண்டா என்று யோசித்தேன். மேலிருந்தே எட்டிப்பார்த்தேன். கிழவர் எப்போதும்போல அமர்ந்திருந்தார். இதுபோல பல சம்பவங்களை அவர் சமாளித்திருக்கலாம்.

டிட்டுவின் கையைப் பிடித்து கீழே இழுத்துச் சென்றேன். கிழவரிடம் விஷயத்தைச் சொன்னோம்.

எரிப்பது போலப் பார்த்தவர், அருகில் ஒரு சந்துக்குள் இழுத்துச்சென்று, டிட்டுவிடம் பொண்ணுக்கு எத்தன வயசு? என்று ஆரம்பித்து சராமாரியாகக் கேள்விகள் கேட்டார். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. சலுப்சலுப்பென்று டிட்டுவின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தார். பிறகு போனில் யாருக்கோ அழைத்தார். லாரி வந்தது. பெட்டியைத் தள்ளிச்சென்று அதில் ஏற்றிக்கொண்டு கிழவர் மறைந்துவிட்டார்.

அன்றிரவு பாடோல் உருக்கமாக ஒரு பாடல் பாடினார். எல்லோரும் படுத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தோம். அப்போது நான் வேலைக்குச் சேர்ந்து சரியாக ஆறுமாதம் ஆகியிருந்தது.