பேச்சுத்தமிழே மூச்சுத்தமிழ்

சிங்கப்பூரும் ஷிஃப்மனும்

          கல்விகற்ற தமிழர்களும் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தியே
 பொதுவெளியில் உரையாடினர். அது எழுத்துத்தமிழே 
  மதிப்புக்குரியது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

பேசாத்தமிழான பேச்சுத்தமிழ்

சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொண்டும் மேம்படுத்திக்கொண்டும் வருகிறது. அதற்கு அதன் நீண்டநெடிய பாரம்பரியமும், கனமான பரிமாணங்களும், சிங்கப்பூரில் ஓர் அதிகாரத்துவ மொழி எனும் அங்கீகாரமும் காரணங்களாக அமைகின்றன. ஆயினும், ஏறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ்மொழிப் புழக்கம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. படித்தவர்கள் பலரது இல்லங்களில் அன்றாட மொழியாகத் தமிழ் தொடரவில்லை. தமிழை விரும்பிப்பேசும் படித்த தமிழர்கள் தமிழை ஒரு ‘கூலி’ மொழியாகப் பார்க்க விரும்பவில்லை.

செந்தமிழை (Classical Tamil) அல்லது எழுத்துத்தமிழைத் (Written Tamil) தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்கிற விருப்பம் பேச்சுத்தமிழுக்குப் பாதிப்பை அளித்தது. சிங்கப்பூரின் பள்ளிகளில் தமிழ் வகுப்புகளில் எழுத்துத்தமிழே கற்பித்தல் ஊடகமாகவும், தொடர்புமொழியாகவும், ஆசிரியர் -மாணவரிடையே இடைவினையாடல் (Interactive) மொழியாகவும் இருந்தது. மாணவர்கள் வகுப்பின்முன் படைக்கும்போது எழுத்துத்தமிழில் படைப்பது ஊக்குவிக்கப்பட்டது. மேலும் கல்விகற்ற தமிழர்களும் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தியே பொதுவெளியில் உரையாடினர். அது எழுத்துத்தமிழே மதிப்புக்குரியது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. இந்நிலையில் மாணவர்கள் உணர்வுப்பூர்வமாகப் பயன்படுத்தும் ‘தாய்மொழி’யாக ஆங்கிலம் அமைந்துபோனது.

பிறந்தது முதல் கேட்டும், எழுத்தை அறியுமுன்பே 
பேசவும் செய்த பேச்சுமொழியை எழுத்துமொழிக்காகத் 
தாரைவார்க்க இயலாது.

பேச்சுப் போட்டிகளும் விவாதப் போட்டிகளும் எழுத்துத்தமிழிலேயே நடைபெற்றன. மாணவர்கள் எழுத்துத்தமிழை மனப்பாடம் செய்து அரங்கில் பேசினர். எதிரணியின் கேள்விகளுக்குத் தங்களது பதில்களை உடனுக்குடன் பேச்சுத்தமிழில் சொல்லவியலா நிலை. தமிழில் நன்கு தேர்ச்சிபெற்ற மாணவரும் தொலைக்காட்சி நேர்காணலில் தன் வெற்றியை எடுத்துக்கூறுவதற்கு எழுத்துத்தமிழையே மனனம்செய்து பேசும் நிலை இருந்தது. ஆனால், எழுத்துத்தமிழ் மட்டுமே ஒரு தொடர்புமொழியாகத் தமிழரிடையே நீடிப்பது சாத்தியமா?

முந்தைய தலைமுறைத் தமிழ்க் கல்வியாளர்களுக்குப் பேச்சு, எழுத்து ஆகிய இரு மொழி வகைகளிலும் வடிவங்களிலும் புழக்கம் இருந்தது. பேச்சுத்தமிழை வீட்டில் பேசினர். ஆயினும் பல்கலைக்கழக நிலையில் திருத்தமான எழுத்துத்தமிழில் பேசுவதே தமிழுக்கு மதிப்பு என்று நம்பினர். ஆனால் வீட்டில் தமிழ்பேசாத தமிழர்களுக்கு எழுத்துத்தமிழே தாமறிந்த ஒரே தமிழாக இருந்தது. சிலர் வீட்டில்பேசும் தமிழுக்குப் பெரும் மதிப்பில்லை என்றெண்ணித் தமக்குத் தமிழ் பேசத்தெரியாது என்றும் கூறினர். இன்றும் இத்தகைய போக்கு உண்டு. இவர்களது வாழ்வில் பேச்சுத்தமிழ் என்பது காலமுழுதும் பேசாத்தமிழாகவே ஆகிப்போனது.

தரமான பேச்சுத்தமிழ்

வகுப்பறையில் “வணக்கம் மாணவர்களே! இப்போது நாம் புத்தகத்தை எடுத்துப் பக்கம் பதினைந்துக்குச் செல்வோமா?” என்று தமிழாசிரியர் அன்று பேசியதைப் பலர் நினைவுகூரலாம். அன்றைய சூழல் அறியாதோருக்கு இது வியப்பைத் தரலாம். தொலைத்தொடர்புச் சாதனங்களிலும் எழுத்துத்தமிழிலேயே உரையாடல்கள் இடம்பெற்றன. உணர்வுடன்கூடிய உரையாடலுக்குப் பயன்பட வேண்டிய பேச்சுத்தமிழ் ஏன் சவலைப் பிள்ளையாக ஆனது? பேராசிரியர் ஷிஃப்மனுக்கு (Professor Harold F Schiffman) பெரும் வியப்பைத் தந்த கேள்வி இது. அவர் ஆராயத் தொடங்கினார்.

பன்மொழித்துவச் சமூகத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம் தனது மொழியை எவ்வாறு காத்துக்கொள்வது? பராமரிப்பது? அதன் சவால்கள் என்னென்ன? அச்சவால்களைச் சமாளிக்கும் வழிமுறைகள் என்னென்ன? என்பதெல்லாம் அம்மொழியினுள் அன்றாடம் வாழ்பவரைவிட வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு இன்னும் எளிதாகத் தெரியும். அதுவே அவர் ஒரு மொழியியல் அறிஞராகவும் அமைந்துவிட்டால் அவரால் பொருத்தமான பதில்களை மட்டுமின்றிப் பரிந்துரையையும் அளிக்கவியலும். ஷிஃப்மன் அதைத்தான் செய்தார்!

இரட்டைவழக்கு (diglossic) மொழியான தமிழில் பேச்சுவழக்குக்கும் எழுத்துவழக்குக்கும் இடையில் உள்ள இடைவெளி மிகவும் பெரிது. பிறந்தது முதல் கேட்டும், எழுத்தை அறியுமுன்பே பேசவும் செய்த பேச்சுமொழியை எழுத்துமொழிக்காகத் தாரைவார்க்க இயலாது என்கிற கருத்துடைய மொழியியல் அறிஞர் ஷிஃப்மன், பேச்சுமொழி என்றால் கொச்சைமொழி என்று பல மொழியியலாளர்கள் எண்ணிய காலத்தில் பேச்சுமொழி வகைகளுக்குள்ளேயே தரமான பேச்சுத்தமிழும் இருக்கிறது என்றும் அது ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கிறது என்றும் ஆதாரங்களுடன் வாதிட்டார்.

தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இல்லங்களிலும் கல்விக்கூடங்களிலும் வெளியிலும் தரமான பேச்சுமொழி எவ்வாறு புழங்கப்படுகிறது, மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அம்மொழிநடை எவ்வாறு உள்ளது, நூல்களிலும் படைப்பிலக்கியங்களிலும் எவ்வாறு அமைந்துள்ளது, பேச்சுமொழியும் எழுத்துமொழியும் அச்சு ஊடகங்களில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்று விரிவாக ஆராய்ந்து, தரமான பேச்சுத்தமிழ் என்று ஒரு வகை உள்ளதைக் கேள்விக்கிடமின்றி நிறுவினார். பேச்சுமொழி, சொல்லுக்குச் சொல் இப்படித்தான் பேசப்படவேண்டும் என்று வரையறுக்கப்படாது, பொருத்தமான பல சொற்கள் சமூகத்தால் புழங்கப்படுவதற்கு வழிவகைகளைக் காட்டியது ‘தரமான’ பேச்சுத்தமிழ். தரமான பேச்சுத்தமிழ் என்பது ஒரு மொழிவகையாக மட்டுமின்றித் துறையாக அமையும் பாங்கை அவர் அடையாளம் காட்டினார். இத்தகு தரமான பேச்சுத்தமிழில் சொற்கள் இடம்பெறும் ஒரு சூழலில் பேசுவோருக்கும் கேட்போருக்கும் மதிப்பை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழர் எல்லோரும் தமிழில் பேசினாலும் அவற்றுள் தரமான பேச்சுத்தமிழ் என்று ஒன்று இருக்கிறது எனக்கண்டறிந்த ஷிஃப்மன், அதனை ஊக்குவித்தார்.

மொழியியலாளர்கள் பேராசிரியர் இ. அண்ணாமலை போன்றோர் இக்கருத்தை இன்றும் எடுத்துக்கூறி வருகின்றனர். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்துப் பேசும்போது பயன்படுத்தும் மொழிவகைதான் தரமான பேச்சுத்தமிழ் என்கிறார் மொழியியலாளர் அண்ணாமலை. இந்த வகை குறித்த விழிப்புணர்வு இன்று அதிகமாகி வருகிறது. இது மொழியியல் நோக்கில் மட்டுமின்றி, தமிழர்கள் தம் தாய்மொழியை அதன் இதத்தையும் பதத்தையும் அன்பையும் நேயத்தையும் உரிமையையும் லாவகத்தையும் அணுவணுவாக ரசித்துப் பேசுவது அவசியம், சாத்தியம் என்று நடைமுறையிலும் எடுத்துக்காட்டப்பட்டது.

பேச்சுத்தமிழில் பேசும்போது, அந்தப் பேச்சினை நயம்படவும் சுவைபடவும் பேசுவது அவசியம். இதைத் தமிழர்கள் தம் உரையாடல்களில் இயல்பாகச் செய்வதைக் கண்ணுற்ற ஷிஃப்மன், உலகத்தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் கட்டுரைகளை எழுதி, இந்த வகைக்குக் கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார் எனலாம். பேச்சுத்தமிழுக்கு இவ்வளவு மதிப்பா என்று சிலர் வியக்கலாம். ஆம், மக்கள் பேசும் தமிழுக்கு அதாவது மக்களால் தரப்படுத்தப்பட்ட உயிரோட்டமான தமிழுக்கு மதிப்பு அதிகம்தான்.

                                 பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் வகுத்த பேராசிரியர் ஷிஃப்மன்!
அமெரிக்கப் பேராசிரியர் ஹெரால்ட் ஷிஃப்மன் பிப்ரவரி 19, 1938இல் பிறந்தவர். ஆங்கிலம் தவிர ஜெர்மன், பிரெஞ்சு, தமிழ் எனப் பன்மொழிகள் அறிந்த இவர் திராவிட மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல், பண்பாட்டுத்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். கடந்த டிசம்பர் 21, 2022 அன்று அமெரிக்காவில் தனது 84ஆம் வயதில் காலமானார்.

தமிழில் தரமான பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் (Schiffman, H F., (1999) A Reference Grammar of Spoken Tamil, New York: Cambridge University Press) என்ற ஆங்கில நூலை எழுதிய ஷிஃப்மன் மொழியியல் உலகிலும் தமிழ்க் கல்வியுலகிலும் தனக்கென ஓரிடம் பெற்றவர். இந்நூலைக் குறித்துப் பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் சுப. திண்ணப்பன், பேராசிரியர் இ. அண்ணாமலை, பேராசிரியர் என்.எஸ். இராஜேந்திரன், டாக்டர் நடராசப்பிள்ளை போன்றோர் சிறப்பாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழில் இடம்பெற்றுள்ள வினைச்சொற்களுக்கு விரிவான ஓர் ஆங்கில அகராதியையும் முனைவர் வாசு அரங்கநாதன் உள்ளிட்ட தம் குழுவினருடன் இணைந்து இவர் உருவாக்கியுள்ளார்.

ஷிஃப்மன் ஆய்வுப் பங்களிப்புகளில் ஒன்றான தரமான பேச்சுத்தமிழ் குறித்த ஆய்வுத்திட்டங்கள் ஏறக்குறைய அரைமில்லியன் வெள்ளிக்குமேல் செலவிடப்பட்டுச் சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வி உலகிற்கு வளம் சேர்த்துள்ளன. தொடர்ந்து வளம் சேர்க்கும் வகையில் பிற தாய்மொழிகளுடன் இணைந்து அவரது தாக்கத்தை எடுத்துக்கூறி வருகின்றன.



            இரட்டை வழக்கு என்பது தமிழில் மட்டுமல்ல அரபி, சுவிஸ் ஜெர்மன், வங்காளம், ஹிந்தி, மங்கோலியம், பர்மியம் போன்ற பல்வேறு மொழிகளில் இடம்பெற்றுள்ளது. முறைசாராச் சூழல்களில் அணுக்கமான தொடர்புக்கும் கூடுதல் மகிழ்ச்சிக்கும் தரமான பேச்சுத்தமிழும், முறைசார்ந்த தொடர்புக்கு எழுத்துத்தமிழும் பயன்படுத்தப்படுகின்றன. இல்லம், பாரம்பரிய நிகழ்வுகள், பண்பாட்டுக் கொண்டாட்டங்கள், உறவினர்கள், நண்பர்களுடன் உரையாடுதல் போன்ற முறைசாராச் சூழல்களில் தரமான பேச்சுத்தமிழும், ஊடகங்களில் செய்தி வாசித்தல், அறிக்கைகளை வெளியிட்டுப் பேசுதல், ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தல், தேசியதினச் சிறப்புரை வழங்குதல் போன்ற முறைசார்ந்த சூழல்களில் எழுத்துத்தமிழும் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஷிஃப்மன்

அமெரிக்கா சென்றிருந்தபோது பேராசிரியர் ஷிஃப்மனைச் சந்தித்துச் சிங்கப்பூருக்கு கல்வியியல் ஆய்வுக்காக வருமாறு அழைத்ததாகப் பேராசிரியர் சுப திண்ணப்பன் தெரிவிக்கிறார். பேராசிரியர் ஷிஃப்மன் அனைத்துலகக் கல்வியாளர் மன்றத்தின் ‘ஃபுல்பிரைட்’ ஆய்வுக் கல்விமானாக 1994இல் சிங்கப்பூர், மலேசியா வந்தபோது அவர் சிங்கப்பூரில் தமிழ் வகுப்பறைகளுக்குச் சென்று பாடங்களைப் பார்த்துள்ளார். ஆசிரியர்கள் சிலர் தம்மையறியாமல் ஆங்காங்கு தரமான பேச்சுத்தமிழைப் பயன்படுத்திய நிலையையும் பார்த்திருக்கிறார். கல்வி அமைச்சில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். சமூக அளவில் தமிழ்மொழியின் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறார். இவ்வாறு தமிழகத்திலும் களஆய்வு மேற்கொண்டு தரவினைச் சேகரித்து ஆராய்ந்திருக்கிறார். தமிழர் எல்லோரும் தமிழில் பேசினாலும் அவற்றுள் தரமான பேச்சுத்தமிழ் என்று ஒன்று இருக்கிறது எனக்கண்டறிந்த ஷிஃப்மன், அதனை ஊக்குவித்தார்.

தரமான பேச்சுத்தமிழ் என்ற ஒரு வகையைப் பற்றிப் பேசும்போது, அது என்ன தரமான பேச்சுத்தமிழ் என்று பல வினாக்கள் தோன்றின. “ஐயா, எனக்கு ஒரு பரோட்டா வேண்டும்” அல்லது, “ஐயா எனக்கு ஒரு பரோட்டா தாருங்கள்” என்று கடைக்காரிடம் கேட்கும் ஓர் இளையரின் பேச்சு கடைக்காரருக்கு வியப்பைத் தரும். “ஐயா, எனக்கு ஒரு பரோட்டா தாங்க” அல்லது “எனக்கு ஒரு பரோட்டா குடுங்க” என்று ஏன் இவர் கேட்கவில்லை என்று கடைக்காரர் நினைப்பார். அவரை அப்படி நினைக்கவைப்பது தரமான பேச்சுத்தமிழ் என்ற ஒன்று இருப்பதுதான். எழுத்துத்தமிழை மட்டுமே கற்ற ஒருவர் இப்படித்தான் கேட்பார் என்று கடைக்காரருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

உரிமையுடன் உட்கார்ந்த பேச்சுத்தமிழ்

இன்று சிறாரும் இளையரும் தமக்குப் பிடித்தமான தலைப்புகளில் மனம் விரும்பிப் பேசத் தரமான பேச்சுத்தமிழ் பயன்படுகிறது. வீட்டில் அப்பா, அம்மாவிடம் பேசும்போது கிடைக்கும் மகிழ்ச்சியான அனுபவம் பள்ளியில் ஆசிரியரிடம் பேசும்போதும் கிடைப்பதாக ஒரு மாணவர் (2009) கூறினார்.

“நான் வந்து வீட்டுல வந்து நல்ல தமிழ் பேசுவோம். எங்க வீட்டுல வந்து எல்லாருக்குமே தமிழ்மொழி ரொம்ப நல்லா தெரியும். So ஆங்கிலம் பேசுவது அவசியம் இல்லை. நம்ம வீட்டுல வந்து தமிழ் மொழிய கொஞ்சம் அதிகமா பேசுனா நம்ம தமிழ்மொழி கொஞ்சம் வளர்த்துக்கொள்ளலாம்” (உயர்நிலை மூன்று பயிலும் மாணவி, 2009)
தமிழ்ல பேசுவது பெருமையா இருக்கு. தமிழ வந்து சுலபமா பேசக்கூடிய மொழி என்று நான் நினைக்கிறேன்” (உயர்நிலை நான்கு பயிலும் மாணவி, 2009)
அன்றாடம் நாம் பேசும் பேச்சுமொழிக்குத் தரமான பேச்சுத்தமிழ் என்று ஒரு தன்மை இருப்பது உணர்த்தப்பட்டதும் அது நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுவதோடு பேச்சுமொழி அதற்கான இடத்தில் உரிமையுடன் உட்காரவும் வழிசெய்கிறது. இதற்குச் சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வி வழியாக உலகத் தமிழர் அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வழிகாட்டியவர் பேராசிரியர் ஷிஃப்மன்.

தரமான பேச்சுத்தமிழின் பயன்பாடு குறித்து அக்குழுவின் தலைவரும் கல்வியாளரும் சமூகக் கவனிப்பாளருமான அருண் மகிழ்நன் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் அனைவரும் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் பயன்படுத்தும் இருமொழியாளர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பு இருந்தும் அதைச் சரியான முறையில் பயன்படுத்தாமல் கைவிட்டுவிடுகிறார்கள் என்று கூறும் ஷிஃப்மன் அந்நிலை மலாயிலும் சீனத்திலும்கூட இருக்கிறது என்கிறார். எழுத்துத்தமிழுக்கு அதிக மதிப்பளித்துக் கற்றுத்தரும்போது சிறுவயதில் பேச்சுத்தமிழில் பேசியவர்களும் பள்ளிமொழிக்குத்தான் மதிப்பு என்று கருதித் தாம் பேசிய தமிழைத் தொடர்ந்து பேசாமல் விட்டுவிட்ட நிலையும் இங்கு இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியை இன்றும் தமிழர் பலர் தமிழ் பேசாமல் இருப்பதை வைத்து அறியலாம்.

சிண்டா மறுஆய்வுக்குழுவின் அறிக்கையில் (1996) தரமான பேச்சுத்தமிழின் பயன்பாடு குறித்து அக்குழுவின் தலைவரும் கல்வியாளரும் சமூகக் கவனிப்பாளருமான அருண் மகிழ்நன் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2005இல் தமிழ்க்கல்வியில் தொடர்பான இன்னொரு மறுஆய்வு அறிக்கையும், படித்தவரும் பாமரரும் அன்றாடம் பேசும் பேச்சுத்தமிழ் தமிழ் வகுப்பில் இடம்பெற வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக அது கற்றவர்கள் பேசும் தரமான பேச்சுத்தமிழாக அமைவது அவசியம் என்றும் வலியுறுத்தியது.

எழுத்துத்தமிழில் ஒரு பாடத்தை வாசிக்க வேண்டியிருந்தாலும் அப்பாடத்தைப் பற்றிய உரையாடல்கள், மாணவரிடையே கலந்துரையாடல்கள் ஆகியன தரமான பேச்சுத்தமிழில் அமைந்தன. இதன் தாக்கம் இன்று தமிழ் வகுப்பறைகளிலும் பள்ளிகளுக்கு வெளியே சமூகத்திலும் பிரதிபலிப்பதைக் காணலாம். மாணவர்கள் தரமான பேச்சுத்தமிழை வீட்டிலும், வீட்டில் பேசாத சூழலில்கூட, குறைந்தது வகுப்பறையில் பேசுவதற்கு வாய்ப்புவசதிகள் இன்று நமக்கு உள்ளன. ஒரு மாற்றத்தை, மேம்பாட்டை சமூகத்திற்குள் கொண்டுவருவதற்குக் கல்வித்துறையும் வகுப்பறையும் ஏற்ற இடங்களே என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தரமான பேச்சுத்தமிழ் குறித்த இந்த விழிப்புணர்வு இன்னும் முன்பே ஏற்பட்டிருந்தால், குறைந்தது 1996 மறுஆய்வு அறிக்கைக்குப் பிறகாவது இடம்பெற்றிருந்தால் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் இல்லங்களில் தமிழ் பேசுவோரின் விழுக்காடு மேலும் அதிகரித்திருக்கும் என்று திடமாக நம்பலாம். சிங்கப்பூரின் இல்லங்களில் தமிழ்க் கைவிடல் கடந்த கால்நூற்றாண்டில் அதிகமாக இருந்தாலும் தமிழ் வகுப்பறைகளில் தமிழ் பேசப்படுவதும் பேச்சுத்தமிழில் பாடங்கள் இடம்பெறுவதும் தமிழைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கு உதவியிருப்பது ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது.

      

சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட தரமான பேச்சுத்தமிழ் இன்று புலம்பெயர்ந்து வாழும் பிற தமிழ்ச் சமூகங்களிலும் செயல்வடிவம் பெற்று வருகிறது.

தரமான பேச்சுத்தமிழானது, வட்டார, சமூகக்குழு வழக்குகளிலிருந்து வேறுபட்டது. அது தன்னுள் வேறுபாடுகளை குறைவாகக் கொண்டது. அவ்வகையைப் பேசுவோர் அதற்குத் தரும் மதிப்பும் அதைப் புழங்குவதில் கொள்ளும் பெருமிதமும் குறிப்பிடத்தக்கன. அம்மொழியைப் பயன்படுத்துபவர்கள் அதனைத் தொடர்ந்து பேசவிரும்புவார்கள். சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட தரமான பேச்சுத்தமிழ் இன்று புலம்பெயர்ந்து வாழும் பிற தமிழ்ச் சமூகங்களிலும் செயல்வடிவம் பெற்று வருகிறது. அவ்வகையில் சிங்கப்பூர் பிற நாடுகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.

பேசவிடுவதே கற்பித்தலின் நோக்கம்

கல்வித்துறையில் தமிழ்மொழியைக் காப்பது, கற்பிப்பது குறித்துப் பலரும் பல கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் பயன்படுத்துவோரை மறந்துவிடக் கூடாது. அவர்களது தேவைகளும் கருத்துகளுமே இன்றியமையாதவை என்கிறார் ஷிஃப்மன். மொழியானது ஓடும் ஆறு போன்றது. ஆற்று நீரைப் பிடித்துத் தேக்குவது இயலாது, கூடாது. அது தன்போக்கில் இயல்பாக, மகிழ்ச்சியாகச் செல்லவேண்டும். தரமான பேச்சுத்தமிழை மாணவர்கள் விரும்பிப் பயன்படுத்த வழிசெய்யாவிட்டால் அவர்கள் தமிழைவிட்டு விலகிடக்கூடும். அப்படி நடந்தும் இருக்கிறது. தொடர்ந்து அவர்களது அடுத்தடுத்த சந்ததியினரும் தமிழை விட்டுவிடும் பெரும் அபாயம் இருக்கிறது. இவர்கள் பயனாளர்கள் மட்டுமல்ல, இவர்கள்தாம் தமிழர்கள்.

ஆசிரியரை மையமாகக்கொண்ட அன்றைய கல்வி முறையுடன் ஒப்பிடும்போது இன்று மாணவரை மையமாகக் கொண்ட கல்விமுறையில் பேச்சுத்தமிழ் இயல்பாக இடம்பெற்று வருகிறது. ஆயினும் தமிழ் மாணவர்கள் விருப்பத்தோடு தமிழ் நூல்களைப் படிப்பது மிகவும் குறைவு. தேர்வில் நல்ல தேர்ச்சிக்காகப் படிக்கிறார்கள். ஒரு மொழியின் நிலை அவ்வாறு அமையக்கூடாது. என்ன செய்யலாம் என்று சிந்திப்பது கல்வியாளர்களின் கடப்பாடு என்று கூறும் ஷிஃப்மன், மாணவர்களைத் தமிழில் பேசவிடுவது கற்பித்தலின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்கிறார்.

திரைப்படங்களிலும் மேடை நாடகங்களிலும் வரும் பகுதிகளை எந்நாட்டில் வாழும் தமிழ்ச் சிறாராலும் புரிந்துகொள்ளமுடிகிறது எனில் அதுவே தரமான பேச்சுத்தமிழின் வெற்றி. இன்று இங்கிலாந்து நாட்டில் பேச்சுத்தமிழிலேயே கட்டுரை எழுதும் போட்டியை நடத்துகிறார்கள் என்பதுடன் தங்களுக்குத் தேவையான பேச்சுத்தமிழ்தான் மூச்சுத்தமிழ் என்றும் புலம்பெயர்ந்த தமிழர் கூறுகின்றனர். தரமான பேச்சுத்தமிழின் வீரியம் தமிழ்பேசும் மாணவர்களுக்குப் பேசுவதில் உற்சாகத்தையும் பிடிப்பையும் கொண்டுவருவதைக்கண்டு இன்று மொழியியலாளர்கள் பலரும் உற்சாகம் தெரிவிக்கின்றனர்.

தமிழின் இக்காலக் கல்வித்தேவைகளை உணர்ந்து குரல் இணைப்புச்சோதனை முறையில் (Matched-guise Technique) ஏற்புடைய வகையை ஆசிரியர்களைத் தெரிவு செய்ய வைப்பது ஓர் ஆய்வு முறையாகும். நூற்றுக்கணக்கான ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட இம்முறை, சமூகத்தின் குரலைக் கண்டுகொள்ள உதவும் முறை. சிங்கப்பூரிலும் அம்முறை மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர்களின் கருத்துகள் பெறப்பட்டன. அதன் வழியாகச் சிங்கப்பூரில் தரமான பேச்சுத்தமிழுக்கு நிலையான இடத்தைக் கொடுக்க முடிந்தது.

பேராசிரியர் ஷிஃப்மனுக்கு நன்றி!

தமிழ்க்கல்வியில் பல ஆய்வுத்திட்டங்களுக்கு ஷிஃப்மன் ஆலோசகராக இருந்துள்ளார். தேசியக் கல்விக்கழகத்தில் 2003-2004 காலப்பகுதியில் ஆசிரியவியல், பயிற்சி குறித்த ஆய்வு மையத்தில் தமிழுக்கு மதிப்புக்கூட்டல், கல்வியில் வளம்சேர்த்தல், தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாக வைத்திருத்தல் போன்ற நோக்கங்களை முன்வைத்துத் தமிழ்த்துறையின் விரிவுரையாளர்களுடன் பேராசிரியர் ஷிஃப்மன் பல உரையாடல்களை நடத்தி வழிகாட்டியுள்ளார். அதன் விளைவாகப் பேராசிரியர் ஆலன் லூக், பேராசிரியர் எஸ். கோபிநாதன், இணைப்பேராசிரியர் வனிதாமணி சரவணன் ஆகியோர் பல ஆய்வுத்திட்டங்களுக்கான முனைப்புகளைத் தமிழ்த்துறையினரிடம் கையளித்தனர். அவற்றின் அடிப்படையில் பல கல்வியியல் ஆய்வுத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 2003 முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

தமிழ் வகுப்பில் தரமான பேச்சுத்தமிழ் தொடர்கிறது, மாணவர்கள் அதனைப் பேசுகிறார்கள் என்று உறுதியாகச் சொல்வதற்கு 2019-2020இல் நிறைவடைந்த தரவு வங்கி வளத்திட்டம் 27 வகுப்பறைகளிலிருந்து ஆதாரங்களைக் கொணர்ந்துள்ளது. எனவே சிங்கப்பூர்ப் பள்ளிக்கல்வியில் முதல்மொழியான ஆங்கிலம் அதிகமாகப் புழங்கப்பெற்றாலும் தமிழ் தனக்கான ஓரிடத்தைப் பெற்றிருக்கும்.

“… my suggestion that spontaneity and creativity will not come in Tamil unless it is used…” தன்னியல்பாகப் பேசப்படும் தரமான பேச்சுத்தமிழே தமிழை வாழும் மொழியாக்கும் என நாம் உணர வழிவகுத்த, அண்மையில் மறைந்த, பேராசிரியர் ஷிஃப்மனுக்கு நமது நன்றிக் கடப்பாட்டைக் காணிக்கை ஆக்குவோம்!