மறத்தல் மக்களின் இயல்பு,நினைவூட்டுதல் எழுத்தாளரின் கடமை!

சிங்கப்பூர் இலக்கியத்துக்கும் எனக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ‘காரிகாவனம்’ என்னும் சிங்கப்பூர்வாழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பை அண்மையில் காவ்யா பதிப்பகம் மூலம் கொண்டுவந்திருக்கிறேன். அதைத்தவிர ‘ஓ..சிங்கப்பூர்’ என்னும் தொகுப்பில் ஷாநவாஸ், எம்கே குமார் உட்படப் பல்வேறு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைக் குறித்த பார்வைகளை கட்டுரைகளாக எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

கடந்த மாதம் (ஜனவரி 2023) நடந்த 49வது சென்னை புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஒரு புத்தக அரங்கமும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அரங்கத்தில் சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் ஹேமாவின் ‘வாழைமர நோட்டு’ நூலைப் பற்றியும் எனக்கு தெரிந்த அளவில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

நான் வாசித்த பல சிங்கப்பூர் புனைவுகளில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் வேராக இருக்கிற தமிழக உறவுகள், பாசப்பிணைப்பு, ஏக்கம் இவற்றைப்பற்றியும் இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த சூழலின் அனுபவங்களையும் பேசும் பல்வேறு கதைகளைப் பார்க்கமுடிந்தது. பலர் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். திருப்பூரில் சக்தி விருது ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்குத் தரப்படுகிறது. அவ்விருதை சிங்கப்பூரைச் சார்ந்த மணிமாலா மதியழகன் பெற்றுள்ளார். வாழைமர நோட்டுக்காக ஹேமாவும் பெற்றுள்ளார்.

சுப்ரபாரதி மணியன்

படைப்பிலக்கியத்தில் நுழைகிற பலரும் கவிதையிலிருந்து உரைநடைக்குச் செல்வார்கள் ஆனால் ஹேமா சிறுகதையிலிருந்து கட்டுரை வடிவத்துக்கு வந்திருக்கிறார் என்பது முக்கியமாக இருக்கிறது. சிங்கப்பூர் பொன்விழா சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற ஹேமாவின் ‘ஒளி தேடும் விட்டில் பூச்சி’ என்ற கதை குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறையினரின், குழந்தைகளின் இயல்பை அதில் நுணுக்கமாக விவரித்திருக்கிறார். தி சிராங்கூன் டைம்ஸ் 2018 இதழ் ஒன்றில் ‘இரைச்சல்’ என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது ஜெல்லி என்ற பெண்ணையும் அவளது சூழலையும் பற்றிய கதை. அக்கதையில் ஒரு மாயக்குரல் வரும். அக்குரல்தான் சிங்கப்பூரில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்புக் காலத்தைத் தேடிச்செல்ல ஹேமாவுக்கு வழிகாட்டியிருக்க வேண்டும்.

தாய்லாந்து, வட மலாயாக் கரைகளில் வந்திறங்கிய ஜப்பான் வீரர்கள் விரைந்து முன்னேறி மிதிவண்டிகளில் சிங்கப்பூர் நகரத்திற்குச் செல்கிறார்கள். வெடிகுண்டு தாக்குதல். தீயில் பல கட்டடங்கள், வீடுகள் எரிகின்றன. மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின்றன. மருத்துவமனையில் நோயாளிகள் தண்ணீர்கூடக் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் அப்படி சிரமப்படுகிற ஒரு மருத்துவமனையில் நோயாளிகளை வெளியில் கூட்டிச் செல்கிறார்கள். அவர்களும் தண்ணீர் கிடைக்கும், பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தனியே கூட்டிச் செல்லப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

கெத்தே என்ற 16 மாடி கட்டடத்தில் ஜப்பான் கொடி ஏற்றப்படுகிறது. அந்தச் சமயத்தில் சீனப் புத்தாண்டு வருகிறது. வழக்கமான புத்தாண்டு என்றால் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் போர், ஆக்கிரமிப்புச் சூழலில் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாட மக்களால் இயலவில்லை. வீட்டில் இருக்கும் துண்டுத் துணியை வெட்டி அதில் சிவப்பு வட்டம் போட்டு, ”எங்களுக்கு உங்கள் மீது பகையில்லை, கீழ்ப்படியத் தயாராக உள்ளோம்” என்பதை ஜப்பானியரிடம் குறிப்பிடுகிறார்கள்.

போர்க் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். சரியான உணவு இல்லை. சயாம் மரண ரயில் பாதை கட்டுமானத்திற்காக பல இந்தியர்கள் கொண்டுசெல்லப்படுகின்றனர். சிங்கப்பூரில் உணவு போதிய அளவில் கையிருப்பில்லை. இருந்ததை ஜப்பானியர் எடுத்துக் கொள்கிறார்கள். கள்ளச் சந்தையில் மக்கள் உணவுப் பொருட்களை வாங்கவேண்டி இருக்கிறது. ஒரு முட்டை விலை 200 வெள்ளிக்குப் போய் விடுகிறது. இந்த நிலையில் பணப் பற்றாக்குறையைப்போக்க ஜப்பானியர் பணம் அச்சிட ஆரம்பிக்கிறார்கள். அப்பணம்தான் வாழைக்குழையுடன் அச்சிடப்பட்ட வாழைமர நோட்டு.

கள்ளச் சந்தையில் டாலர் மதிப்பு உயர்ந்து ஜப்பானியருடைய வாழைமர நோட்டுக்கு மதிப்பு குறைகிறது. சிறு பொருளை வாங்கக்கூட பை நிறைய நோட்டுகளை எடுத்துச் செல்கிறார்கள். பணத்தைவிட சம்பளமாக உணவு பொருட்கள் விரும்பப்படுகிறது. உணவுப் பொருட்கள் திருடப்படுகின்றன. பல மணி நேரம் வரிசையில் நின்று உணவுப் பொருட்களைப் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சுண்ணாம்பு கலந்த அரிசி 20 கட்டி வழங்கப்படும். அதுவும் பின்னால் குறைக்கப்படுகிறது. உணவுப் பிரச்சனையைத் தீர்க்க வீடுகளில் காய்கறி பயிரிடச்சொல்லி அரசாங்கமே குறைந்த விலையில் விதைகளைத் தருகிறது. பள்ளிகளில், கைதிகளின் முகாம்களிலும் பயிர்கள் நடப்படுகின்றன. மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை சீக்கிரம் வளரும் என்பதால் அவற்றை வளர்க்க முன்னுரிமை தரப்படுகிறது. அதிலும் வளர்கின்ற செடியில் இருக்கிற கிழங்கைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு செடியை மட்டும் நட்டுவிட்டுப் போகுமளவுக்குப் பஞ்சம்.

சோளம் நிலக்கடலை கேழ்வரகு கலந்த ரொட்டியை சாப்பிட வேண்டியிருக்கிறது. அரசாங்கம் தருகிற நூடுல்சில் செம்பனை எண்ணெய் வாசனையைப் போக்க அதைத் தண்ணீரில் அலசி வெயில் காயவைத்து சாப்பிடவேண்டி இருக்கிறது. புதிய இடங்களில் குடியேற்றங்கள் ஏற்படுகின்றன. காடுகளை அழித்துத் தற்காலிக சாலைகள், வீடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. எண்ணெய், சோப்பு, பால் போன்ற பொருட்களையும் உணவுப் பொருட்களையும் தாமாகவே உற்பத்தி செய்துகொள்ள மக்கள் கற்றுக் கொள்கிறார்கள். மீன், வாத்து, கோழி வளர்க்கிறார்கள்.

ஜப்பான் 1945இல் சரணடைந்தது. ஆனால் சிங்கப்பூரை மீட்டெடுக்க மேலும் பல்லாண்டுகள் ஆயின. இதுபோன்ற பல விஷயங்களை ஒன்றுக்கொன்று இனைவுகொள்ளும் சுமார் 20 கட்டுரைகளில் ஹேமா தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் தொடராக எழுதினார். அதுவே தொகுக்கப்பட்டு அவருடைய வாழைமர நோட்டு என்னும் முதல் புத்தகமாக வெளிவந்தது.

ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றி எழுதிய ஹேமா அதற்கு ஒரு நூற்றாண்டுக்குமுன்பே டச்சுக்காரர்களில் வருகையால் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்களையும் தி சிராங்கூன் டைம்ஸில் இரண்டாம் தொடராக எழுதி இருக்கிறார். வரலாற்றைச் செய்தியாக அன்றி உணர்வாய்ச் செய்வதும் கடந்தகாலத்தை உயிருடன் மீட்டெடுப்பதும் அவசியமான தேவை. மறத்தல் மக்களின் இயல்பு, நினைவூட்டுதல் எழுத்தாளரின் கடமை என்று சொல்வார்கள். அந்த வகையில் சிங்கப்பூர்ச் சரித்திரத்தின் ஒரு பகுதியை வாழைமர நோட்டு அழுத்தமாக நினைவூட்டுகிறது.