அமைதியான
‘மாஜோங்’,இனம்தாண்டிப் பரிமளிக்கும் ‘சிங்கே’

சீனப் புத்தாண்டு வசந்த விழா என்றும் போற்றப்படுகிறது. சிங்கப்பூரின் தமிழ் வானொலியில் அண்மைக்காலம் வரைக்கும் சந்திரமுறைப் புத்தாண்டு என்றுதான் கூறிவந்தார்கள். இப்போது, சீனப்புத்தாண்டு என்றே அறிமுகம் செய்கிறார்கள். சைனா டவுன் பகுதி மட்டுமன்றி, குடியரசு முழுவதுமே அழகிய ஓவியங்களாலும் வண்ணத் தோரணங்களாலும் அழகுபடுத்தப்படும் விழாவாக சந்திரமுறைப் புத்தாண்டு காலப்போக்கில் மலர்ந்து வந்துள்ளது.

புக்கிட் பாஞ்சாங் தொகுதியில், 1960 களிலும் 70களின் பிற்பகுதி வரையிலும், தியோச்சூ சங்கக் கட்டடத்திலிருந்து புக்கிட் பாஞ்சாங் சமூக நிலையம்வரை பலவிதமான பட்டாசுகள் கொடிகளில் தொங்கவிடப்பட்டு வெடிக்கப்பட்டது இன்னும் என் நினைவில் நிற்கிறது. மறுநாள் காலையில் சாலைகள் பட்டுப் போர்வைகளால் போர்த்தப்பட்டதுபோலத் தோற்றமளிக்கும். இன்று பட்டாசுகளுக்கே குடியரசில் வேலையில்லை. அந்தச் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களுக்கு அங்கு கடைகள் வைத்திருக்கும் பெரும் முதலாளிகள் அங்பாவ் (சிவப்பு உறை) எனப்படும் அன்பளிப்புப் பணத்தைச் சிவப்பு உறைகளில் இட்டுக் கொடுத்தனர்.

சீனக் குடும்பங்களில் அன்று உறவினர்களுக்கு மட்டுமே அங்பாவ் தந்தார்கள். இன்று மற்ற இன சிறுவர் சிறுமிகளுக்கும் அண்டை அயலார் அங்பாவ் தருகிறார்கள். இது பல்லின பலமொழி கூட்டுச் சமுதாயம் கொண்டு வந்துள்ள வளர்ச்சி. சீனப் பெருநாளுக்கு முதல்நாள், குடும்பத்தினர் யாவரும் ஒன்றுகூடி, விருந்துண்பது சீனக்குடும்பங்களில் அன்றுபோல இன்றும் நடைபெறுகின்றது. சிங்க நடனமும் கடல்நாக (dragon) நடனமும் தொடர்ந்து நடைபெறுவதை வீடமைப்புப் பேட்டைகளில் காணலாம். ஆனால் நகரப் பகுதியில் அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு புத்தாண்டிலும் இடுகாடுகளைச் சுத்தம் செய்து, முன்னோர்களுக்குப் படையல்களை வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் சீன மக்களிடம் முன்னைப் போலவே தொடர்கிறது.

சிங்கப்பூரில் மாஜோங் விளையாட்டு சீனர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று. பல மூத்த மகளிரும் ஆர்வமாகக் கலந்துகொள்வர். ஜாலான் காயூ பகுதியில் நள்ளிரவுக்குப் பின்னரும் பெரிய சத்தத்துடன் சிலர் விளையாடியதால் காவல்துறை தலையிட நேர்ந்தது. இப்போதுள்ள சட்டம், இரவு பத்து மணிக்குமேல் சத்தம் கூடுதலாக இருக்கக்கூடாது என்பதுதான். சந்திரமுறைப் புத்தாண்டின் முதல்நாள் இப்போதும் மாஜோங் விளையாடப்படுகிறது ஆனால் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுபோல அவ்வளவு ஆரவாரத்துடன் அது இல்லை என்று சீன நண்பர்கள் கூறுகின்றனர்.

செ.ப. பன்னீர்செல்வம்

‘சிங்கே’ ஊர்வலம் 70களில் சிறிய அளவில் ஆரம்பித்தபோது சீனர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சீன வழக்கங்கள், தொன்மங்கள் மட்டுமே இடம்பெற்றன. ஆனால் இப்போது இந்திய, மலாய், யூரேஷிய மக்கள் உட்பட அனைவரும் ஈடுபடும், சிங்கப்பூர்ப் பல்லின சமுதாயத்தின் அடையாளங்களையும் கலைகளையும் காட்டும் பெரும் அணிவகுப்பாக சிங்கே மாறியிருக்கிறது. ஆசியாவிலேயே நீளமான சிங்கே ஊர்வலத்தில் கூட்டுப்பண்பாட்டு ஒற்றுமையைப் பார்க்க முடிகின்றது. சீனப் பெருநாளையொட்டி நடைபெறும் விளக்குத் திருவிழாவிலும் (Lantern Festival) அனைத்து இனச் சிறார்களும் வீடமைப்புப் பேட்டைகளில் இப்போது கலந்துகொள்வதும் ஓர் இனிய மாற்றந்தான்.