குறைந்தபட்சக் கடமையாற்றல்

சிவானந்தம் நீலகண்டன்

அண்மையில் ‘Quiet Quitting’ என்ற ஒரு பதத்தை ஆங்கில ஊடகங்களில் அடிக்கடிக் காணமுடிகிறது. தேவையான, ஆகக்குறைவான அளவுக்குமட்டும் தன் வேலைகளை நிறைவேற்றிவிட்டு ஊதியம் பெற்றுக்கொள்ளும் ‘குறைந்தபட்சக் கடமையாற்றல்’ போக்கு என அதனை வரையறுக்கலாம். குறைந்தபட்சக் கடமையாற்றல் பழைய கள்தான், அதை Quiet Quitting என்ற புதிய மொந்தையில் அடைத்துள்ளனர் என்று சிலர் கருதுகின்றனர். போக்கு புதிதல்ல என்றாலும் மூன்றாண்டு நீடித்த பெருந்தொற்றுக் காலத்திற்குப்பின் அது கணிசமாக அதிகரித்துவிட்டது என்போரும் உளர்.

குறைந்தபட்சக் கடமையாற்றலில் தவறு ஏதுமில்லை என சரிபாதிபேர் நினைப்பதாக ஓர் அமெரிக்கக் கணக்கெடுப்பு கூறுகிறது. மொத்தத்தில், குறைந்தபட்சக் கடமையாற்றும் போக்கு அதிகரித்திருக்கிறதோ இல்லையோ அப்போக்கு தவறில்லை என்போர் அதிகரித்துள்ளனர் எனலாம். இது சரியா? தவறா? என்று சூடுபிடித்த இணைய விவாதங்களால் 2022-இல் அதிகம் அடிபட்ட பத்து ஆங்கிலச் சொற்பயன்பாடுகளுள் ஒன்றாக Quiet Quitting ஆகி, ‘காலின்ஸ்’ அகராதியிலும் இடம்பெற்றுவிட்டது.

ஒரு நீண்டகால அல்லது தீவிரமான திட்டத்தை முடித்து அடுத்த திட்டத்தைத் தொடங்குவதற்குமுன் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைந்தபட்சக் கடமையாற்றலாம்.

குறைந்தபட்சக் கடமையாற்றலை ஒரு கோட்பாடாக அல்லாமல் நடைமுறையில் வைத்து நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். உடலுழைப்பு, மூளையுழைப்புத் தொழிலாளருக்கிடையே வேலைச்சூழல், எதிர்பார்ப்பு, உற்பத்தி, ஊதியம் என அனைத்திலும் திட்டவட்டமான வேறுபாடுகள் உள்ளன. மேலும் மூளையுழைப்புத் தொழிலாளர்களே குறைந்தபட்சக் கடமையாற்றலில் நன்மைகளும் இருப்பதாக வாதிடுகிறார்கள் என்பதால் இங்கு நாம் ஊழியர், தொழிலாளர் எனும்போது மூளையுழைப்புத் தொழிலாளர்களையே மனதிற்கொள்வோம்.

குறைந்தபட்சக் கடமையாற்றல் பழைய கள்தான், அதை Quiet Quitting என்ற புதிய மொந்தையில் அடைத்துள்ளனர் என்று சிலர் கருதுகின்றனர். ஒப்பந்தப்படியோ ஒப்புக்கொண்டபடியோ வேலைகளைச் செய்துமுடிக்கிறோம், அதற்கேற்ப அளிக்கப்படும் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறோம். அதோடு நிறுத்திக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை. மேலும், நம் வாழ்க்கையில் வேலை என்பது ஒரு பகுதிதான். வாழ்வாதாரம் முக்கியமானது என்றாலும் வேலையில் முன்னேறுவதை மட்டுமே வாழ்க்கையாக வரித்துக்கொண்டுவிடுவது தவறு.

விரைவான பதவியுயர்வு, அதிக ஊதியம், ஊக்கத்தொகை எனக் கண்பட்டைபோட்ட குதிரையைப்போல ஓடுகிறோம். நேரத்தின் ‘மதிப்பு’ தெரியாமல் அதற்கு ‘விலை’ வைத்துவிடுகிறோம். வாழ்க்கையைப் பரபரப்பாகவும் அழுத்தம் மிக்கதாகவும் ஆக்கிக்கொள்கிறோம். துயரமான உண்மை என்னவெனில் அந்த அளவுக்கு அதில் ‘பெறுமதி’ (worth) இல்லை – இந்தப் பார்வையே குறைந்தபட்சக் கடமையாற்றலுக்கு அடிப்படையாகவும் உந்துவிசையாகவும் இருக்கிறது.

இந்தப் பார்வையில் உண்மை இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அவ்வுண்மை எல்லார்க்கும் எல்லாக் காலத்திலும் பொருந்தும் பொதுவான உண்மை அல்ல என்பதையும் சேர்த்து முழுமையாக்க வேண்டும். உள்ளார்ந்த நிறைவுக்காக விருப்பார்வத்துடன் (passion) ஒரு வேலையில் ஈடுபடுவோருக்கு அவ்வுண்மை பொருந்தாததைக் காணலாம். ஊதியத்தைக் காட்டிலும் ஆர்வமும் நிறைவுமே இவர்களை இயக்குகின்றன. ஒரு துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பது இவர்களே. இவர்களிடம் வாழ்க்கையின் ‘பெறுமதி’ குறித்துப் பாடமெடுப்பது பொருளற்றது. புதிதாக வேலைக்குச் சேர்ந்து, விரைந்து அடிப்படைகளைக் கற்கவேண்டிய சூழலில் இருப்போருக்கும் இவ்வுண்மை பொருந்தாது. இப்படிப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

சரி, யாருக்குத்தான் பொருந்தும்? ஒரு நீண்டகால அல்லது தீவிரமான திட்டத்தை முடித்து அடுத்த திட்டத்தைத் தொடங்குவதற்குமுன் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைந்தபட்சக் கடமையாற்றலாம். தன்முன் இருக்கும் இருவேறு பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் கடந்தகாலத்தைக் கூர்மையாகவும் எதிர்காலத்தை நிதானமாகவும் யோசிக்க வேண்டியிருக்கும்போது குறைந்தபட்சக் கடமையாற்றலாம். இதைப்போன்ற பல தருணங்கள் உண்டு. எப்படியானாலும் அது குறிப்பிட்ட ஒருவரின் குறுகியகாலத் தேர்வாகவே அமையவேண்டும். நீண்ட நெடுங்காலத்திற்குக் குறைந்தபட்சக் கடமையாற்றுவது நற்பலன்களைத் தராது என்பது என் பார்வை.

குறைந்தபட்சக் கடமையாற்றலின் ஊற்றுக்கண் எது? விரும்பியதையே பிழைப்புக்கான வேலையாகவும் செய்ய அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆகவே நம்மில் பலர் கிடைத்ததை விரும்பவேண்டிய சூழலில் இருக்கிறோம். அந்நிலையில் அங்கீகாரத்தையும் நிறைவையும் மகிழ்ச்சியையும் வேலைக்கு வெளியே தேடவேண்டியுள்ளது. அந்தப் புள்ளியில் இருந்துதான் ‘வேலை – வாழ்க்கை சமநிலை’ எய்தும் தேவையும் அத்தேவைக்கு ஈடுகொடுக்கக் குறைந்தபட்சக் கடமையாற்றும் எண்ணமும் எழுகிறது. ஆனால், ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெறவேண்டுமா? வேலையில் திட்டமிட்டு முனைப்பை மழுங்கடித்துக்கொள்வது ஒரு தீர்வாக ஆகுமா? போன்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

இன்னொரு கோணத்திலிருந்து வருவோம். தற்காலத்தில் பெருநிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளுக்கு உடற்பயிற்சிக்கும், விளையாடுவதற்கும், குடும்பத்தினருடன் பயணத்துக்கும், வேலைக்கு வெளியே தம் விருப்பார்வங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நேரம் கிட்டுவது எப்படி? அவர்கள் நிச்சயம் குறைந்தபட்சக் கடமையாற்றவில்லை. அவர்களுக்கும் ஒரு நாளில் 24 மணி நேரமே. பொதுப்போக்குவரத்தில் சென்றுவந்தால் புரியும், வீட்டுவேலைக்குப் பணிப்பெண் வைத்திருக்கவில்லை என்றால் விளங்கும் என்பதெல்லாம் வறட்டுவாதம். அவர்கள் அதிமனிதர்கள், அசாத்தியத் திறனாளர்கள் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வதும் சரியில்லை. நேர்மையாக அவ்வினாவை எதிர்கொண்டால் சில விடைகள் கிட்டக்கூடும்.

குறைந்தபட்சக் கடமையாற்றல் நீக்குப்போக்குகளை இழப்பதால் வேலையிட அழுத்தம் குறைவதற்கு மாறாக அதிகரிக்கவே செய்யும்.

பெருநிறுவனத் தலைமைச் செயலதிகாரிகள் செய்யும் வேலை என்ன? குறைவான ஆனால் அதிகத் தாக்கம் விளைவிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பதே அவர்களின் பிரதான வேலை. அவற்றின் விளைவுகளுக்கும் அவர்களே முழுமுதற் பொறுப்பு. இவ்விரண்டுக்காகவும்தான் அவர் ஒரு நிறுவனத்தின் ஆக அதிகபட்ச ஊதியம் பெறுகிறார். குறைவான வேலை, அதிக ஊதியம், அவற்றோடு விரும்பியதைச் செய்வதற்கான நேரம் – அனைவரும் விரும்பத்தக்க இக்கலவை எவ்வாறு தலைமைத்துவ வேலையில் சாத்தியமாகிறது?

அனுபவத்தில் பார்க்கும்போது, முதல்போட்டுத் தொழில் நடத்துவோர் தம்மிடம் வேலைசெய்யும் அனைத்துநிலை ஊழியரிடமும் எதிர்பார்ப்பதும் ஏறக்குறைய தலைமைச் செயலதிகாரிகளின் வேலையைத்தான். அதாவது, அளிக்கப்பட்ட வேலையைத் தாக்கமுள்ள விதத்தில் புத்தாக்கத்துடன் செய்யவேண்டும். செய்தவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக நம்பிக்கையான முறையில் நடந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான். சுருக்கமாகச் சொன்னால் கிட்டத்தட்ட முதலாளியைப் போலவே நடந்துகொள்ளும் ஒரு தொழிலாளி (entrepreneurial employee).

ஒரே நிறுவனத்தில் பல்லாண்டுகள் வேலைசெய்வது ஒருகாலத்தில் விசுவாசமானதாகக் கருதப்பட்டது. தற்போது திறம்படவும் புத்தாக்கங்களுடன் வேலை செய்பவரே விசுவாசமான ஊழியர். அத்தகைய ஓர் ஊழியர்க்கு பதவியுயர்வு, அதிக ஊதியம், நீக்குப்போக்குகள், இதர சலுகைகள் அளிப்பது மட்டுமின்றி நிறுவனத்திலிருந்து வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்வதும் நிறுவனத்தின் பொறுப்பாகக் கருதப்படுகிறது. ஊழியரைத் தக்கவைக்கும் திட்டங்கள் (employee retention schemes) எல்லாப் பெருநிறுவனங்களிலும் உண்டு. ஊழியர் விசுவாசம் காட்டும்போது நிறுவனமும் விசுவாசமானதாக இருக்கிறது! ஆனால் குறைந்தபட்சக் கடமையாற்றல் தன்னியல்பாகவே பரஸ்பர விசுவாசத்திற்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடுகிறது.

இன்னொரு பிரச்சனையும் உண்டு. வேலையில் ஓர் ஊழியர் சம்பாதித்துள்ள நம்பிக்கையின் (trust) அளவைப் பொறுத்தே அவர்களுக்கான சுதந்திரமும் அமைகிறது. எப்படியும் சரியான நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்துவிடுவார், கடைசி நேரத்தில் காரணம் சொல்லமாட்டார் என்ற பெயரைப் பெற்றுவிட்ட ஓர் ஊழியரை மணிக்கொருமுறை சோதித்துத் தன் நேரத்தை வீணடித்துக்கொள்ள எந்த மேலாளரும் விரும்புவதில்லை.

ஆனால் கணக்குப் பார்த்து வேலைசெய்வோரிடமும், மணியடித்தால் கிளம்பிவிடுவோரிடமும், சட்டத்தை அதன் வார்த்தைகளால் வளைப்போரிடமும் அப்படி இருக்கவியலாது. ஒரு வேலையிட அவசரத்தின்போது கடிகாரத்தைப் பார்க்காத ஓர் ஊழியரிடம் அவருக்கு ஒரு தனிப்பட்ட அவசரகாலச் சூழல் நேரும்போது மேலாளரும் நீக்குப்போக்காக நடந்துகொள்வது இயல்பு. குறைந்தபட்சக் கடமையாற்றல் அத்தகைய நீக்குப்போக்குகளை இழப்பதால் வேலையிட அழுத்தம் குறைவதற்கு மாறாக அதிகரிக்கவே செய்யும்.

சரி, நிறுவனத்தின் அவசரத் தேவைகளின்போது நிச்சயம் கைவிட மாட்டேன் ஆனால் அன்றாட வேலையில் தொடர்ந்து கற்கவோ, புத்தாக்கத்தை அளிக்கவோ, அடுத்தடுத்த பதவி நிலைகளுக்கு முன்னேறவோ எனக்கு விருப்பமில்லை. அப்படியான குறைந்தபட்சக் கடமையாற்றலில் என்ன பிரச்சனை? என்ற கேள்வியிலும் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன.

குறைந்தபட்சக் கடமையாற்றலுக்கு மாற்றாக புத்தாக்கக் கண்ணோட்டம், பொறுப்பான செயலாக்கம் ஆகியவற்றை முன்மொழியலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது, வாழ்வாதாரம் எந்நேரமும் பாதிக்கப்படும் அபாயம். என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. அது பொருளாதாரச் சுணக்கத்தால் பலர் வேலையிழந்து கொண்டிருந்த காலம். நாங்கள் அனைவரும் முழுநேர வேலைகளில் இருந்த, பகுதிநேர மாணவர்கள். “உங்கள் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள அதிகபட்சமாக நீங்கள் செய்யக்கூடியது என்ன?” என்று கேட்டார். ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னோம். “வேலையிடத்தில் செம்மைநோக்குடன் வேலைசெய்யும் 15 விழுக்காட்டினரில் ஒருவராக உங்களைத் தொடர்ந்து வைத்துக்கொள்வதே ஒரேவழி” என்றார். இல்லாவிட்டால் எந்நேரமும் வேலையிழப்பு நேரிட்டு வாழ்வாதாரம் பாதிக்கலாம். குறைந்தபட்சக் கடமையாற்றி அந்நிலையை அடைய இயலாது என்பதால் வலியச்சென்று தலைக்குமேல் கத்தியைத் தொங்கவிட்டுக் கொள்வதில் என்ன நிம்மதி இருக்கிறது?

இரண்டாவது, செம்மைநோக்கு (excellence) மனநிலை பாதிப்படைவது. செய்வன திருந்தச்செய். ‘திருந்தச்செய்’ என்றால் அவரவரால் இயன்ற அளவில் செம்மையாகச் செய்வது. சாதாரணத் திறனாளரா அதிதிறனாளரா என்பது அவரவரளவில் செம்மையாகச் செய்வதற்குப் பொருட்டில்லை. பிடித்ததில் செம்மையாகச் செய்வேன், பிடிக்காததில் குறைத்துக்கொள்வேன் என்போமென்றால் காலப்போக்கில் பிடித்த வேலையிலும் நம் செம்மையின் தரம் வீழ்ச்சியடைந்துவிடும்! ஏனெனில் செம்மையாகச் செய்வதென்பது ஒரு தேர்வல்ல, பழக்கம். மேலும் திருந்தச் செய்வது என்பது திருத்திச் செய்வதும்தான். அதாவது தொடர்ந்து மேம்படுவது (progress). அதற்கும் செம்மைநோக்கு மனநிலை அவசியம். குறைந்தபட்சக் கடமையாற்றல் அதை பாதிக்கும் என்றால் அதில் நிச்சயம் பெறுமதி இல்லை.

குறைவாக்கம் (Minimalism) என்கிற கருத்தாக்கத்தைக் கைக்கொண்டு எளிமையான வாழ்க்கை வாழ்வோரும் அதேவழியில் குறைந்தபட்சக் கடமையாற்றலும் சரிதான் என்கிற முடிவுக்கு வருகின்றனராம். அது பிழை. தனிப்பட்ட வாழ்வில் அவரவர் கோட்பாட்டுக்கேற்ப வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஒரு நிறுவனத்தின் ஊழியராக நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முனைவதே சரி. நிறுவனத்தின் எதிர்பார்ப்பு புத்தாக்கம், பொறுப்பேற்பு, செம்மைநோக்கு.

புத்தாக்கம், பொறுப்பேற்பு, செம்மைநோக்கு என்பதெல்லாம் நேரத்தையும் ஆற்றலையும் அதிகமாக விழுங்கக்கூடியவை என்று நாம் அஞ்சவோ, தயங்கவோ வேண்டியதில்லை. சில வேலைகள், சில தருணங்களில் அப்படி ஆகலாமேதவிர பெரும்பாலான நேரங்களில் அவை கோருவது வழக்கமான வழிகளிலிருந்து விடுபட்ட சிந்தனைகளை மட்டுமே.

என் அண்டைவீடு விற்கப்பட்டது. புதிய உரிமையாளர் குடிபுகுமுன் வழக்கம்போல வீடு புதுப்பித்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. ஒருவாரத்திற்கு அன்றாடம் கடும் இரைச்சல், இடைஞ்சல். புரிந்துகொள்ள முடிந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாத பல தருணங்கள். புதுப்பிப்பு வேலைகள் முடிந்ததும் என் வீட்டு வாசலில் ஓர் அட்டையும் அதன்மேல் ஓர் இனிப்பும் வைக்கப்பட்டிருந்தது. அதில், “எங்கள் புதுப்பித்தல் வேலைகளின் இரைச்சல் உங்களைத் தொந்தரவு செய்திருக்கும். தவிர்க்கவியலாத அதற்காக வருந்துகிறோம். நம் உறவு இனிமையாகத் தொடங்கட்டும்” என்று அவ்வட்டையில் எழுதப்பட்டிருந்தது. என் ஒருவார எரிச்சலும் ஒரே நொடியில் மறந்துபோனது. அதுதான் புத்தாக்கம், பொறுப்பு.

அனுமதி பெற்றுத்தான் புதுப்பித்தல் செய்கிறோம், அண்டைவீட்டாரிடம் எதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டப்படி நினைத்திருந்தாலோ வீடு புதுப்பித்தல் செய்வதும் இரைச்சல் எழுவதும் காலகாலமாக உள்ளதுதானே இதில் புதுமையாக யோசிக்க என்ன இருக்கிறது என்று வழக்கமான எண்ணத்துடன் போயிருந்தாலோ அவர்கள் என் மனதில் இடம்பிடித்திருக்க மாட்டார்கள். ஒரு சிறு அட்டை, ஒரேயொரு இனிப்பு இவற்றின் விலையும் அவற்றைத் தயாரிப்பதற்கான உழைப்பும் குறைவுதான் ஆனால் தாக்கமும் பெறுமதியும் அதிகம்.

குறைந்தபட்சக் கடமையாற்றலுக்கு மாற்றாக புத்தாக்கக் கண்ணோட்டம், பொறுப்பான செயலாக்கம் ஆகியவற்றை முன்மொழியலாம் என்று நினைக்கிறேன். வேலையிலும் வாழ்க்கையிலும் சிறப்பான மாற்றங்களை அவை நிச்சயம் உண்டாக்கும். இது வெறும் கோட்பாடல்ல, அனுபவத்தில்கண்ட நடைமுறை உண்மை!