சிங்கப்பூர் சுகப்பிரசவம் இல்ல

பாலபாஸ்கரன்

ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தப்படி (1824) பென்கூலின் குடியேற்றப் பகுதியை 1825 மார்ச் 1இல் பிரிட்டிஷார் டச்சுக்காரரிடம் ஒப்படைத்த தருணத்தில் அங்கிருந்த சுமார் 900 இந்தியக் கைதிகள் பினாங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களில் 202 பேர் அதே ஆண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர். முதல் அணியாக 1825 ஏப்ரல் 18இல் மதராஸ் கைதிகள் 80 பேர் ஹொரேஷியோ கப்பலில் வந்தனர். அவர்களில் ஒரு மாது உட்பட 73 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். இரண்டாவது அணியாக ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 25இல் வங்காளக் கைதிகள் 122 பேர் வந்தனர். ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒரு மாது உட்பட மொத்தம் 88 பேர். இவர்கள் அனைவரும் சிங்கப்பூர் ஆற்றுக்குப் பக்கத்தில் தற்காலிகமாகத் திறந்தவெளிக் கொட்டகைகளில் முதலில் தங்கினார்கள்.

அதன்பிறகு மேலும் கைதிகளின் வரவை எதிர்பார்த்து 2000 கைதிகள்வரை தங்கக்கூடிய குடியிருப்புக் கொட்டகைகள் பிராஸ் பாஸா நீரோடைக்கருகில் அன்றைய இந்துக் கோவிலுக்குப் பக்கத்தில் 13199 பவுன் செலவில் கட்டப்பட்டன என்று மேஜர் J.F.A McNair (1828-1910) தனது கைதிகளின் வரலாறு பற்றிய அற்புதமான புத்தகத்தில் (Prisoners Their Own Warders, 1899) எழுதியிருக்கிறார். இந்துக் கோவில், பெர்ல்ஸ் குன்று ஆகியவற்றின் அருகிலிருந்து கைதிகள் மணல் அள்ளிக்கொண்டு போய் கமர்ஷியல் சதுக்கத்தில் கொட்டி நிரப்பினர் என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

நிர்வாகப் பொறியாளர், தலைமை நில அளவையாளர், கைதிகளின் கண்காணிப்பாளர், அரசாங்கச் செயலாளர், சட்டசபை அங்கத்தினர் என்று பல முக்கியப் பொறுப்புகளை வகித்து, முழுக்க முழுக்க கைதிகளால் கட்டப்பட்ட செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம், கவர்னர் மாளிகை (இஸ்தானா) முதலான பல கட்டுமானங்களை வெகுசிறப்பாக முடித்துக் கொடுத்த அவருடைய பெயரைத்தான் பூன் கெங் வட்டார மெக்னேர் ரோடு தாங்கியிருக்கிறது.

அவருடைய பெயரைத்தான் பூன் கெங் வட்டார மெக்னேர் ரோடு தாங்கியிருக்கிறது. ‘மாரியம்மன் மெக்னேர்’ என்று அவரை நாம் நம்முடைய வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

‘மாரியம்மன் மெக்னேர்’ என்று அவரை நாம் நம்முடைய வரலாற்றில் பதிந்து கொள்ளலாம். எனவே, பிராஸ் பாஸா பகுதியில் இந்துக் கோவில் செயல்பட்டது என்பதற்கு இது உறுதியான சான்று. நான் மெக்னேரின் நூலை 1982இல் ஸ்டாம்ஃபர்ட் ரோடில் இருந்த பழைய தேசிய நூலகத்தில் படித்தேன். இப்போதுதான் இங்கே பதிவுசெய்கிறேன்.

ஆகவே முதல் கைதிகளின் கூட்டம் 1825 ஏப்ரலில் சிங்கப்பூருக்கு வந்தபோது இந்துக் கோவில் இருந்தது என்பது உறுதியாகிறது. மாரியம்மன் கோவிலைத்தான் மெக்னேர் இந்துக் கோவில் என்கிறார். அப்படியென்றால் கோவில் எப்போது கட்டப்பட்டது? தெலுக் ஆயர் பகுதியில் முதன்முதலாக இந்து ஆலயத்துக்கு வழங்கப்பட்ட இடத்தை, வழிபாட்டுக்கு இன்றியமையாத நன்னீர் வசதி இல்லாத காரணத்தால் அப்போதைய இந்து சமூகம் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மாற்று இடமாக பிராஸ் பாஸா நன்னீர் ஓடையை ஒட்டிப் புதிய இடம் வழங்கப்பட்டதென்று நம்பலாம். இரண்டு தரப்பினர் 1822இல் கோவில் கட்ட விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் யார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆயினும் பினாங்கு தரப்பினர், மற்ற தரப்பினர் என அவர்களைக் கருதலாம். பினாங்கிலிருந்து வந்து குடியேறிய இந்தியரே கோவிலைக் கட்டிப் பராமரித்தனர் என்பதை அவர்கள் சம்பந்தப்பட்ட ஓர் ஆவணத்தின் மூலம் அறிய முடிகின்றது

ஆரம்பத்திலேயே (1823) கிட்டத்தட்ட இதே இடத்திற்கு அருகில் ஓடையை ஒட்டியிருந்த ஒரு பெரிய ஆலமரத்துக்குப் பக்கத்தில் சீனர்கள் ஒரு கோவிலைத் தன்னிச்சையாக எழுப்பிக் கொண்டார்கள். அதைப் பார்த்த ராஃபில்ஸ் அக்கோவிலை அகற்றும்படி கர்னல் ஃபார்க்குவாருக்கு உத்தரவிட்டார். அந்த வட்டாரத்தில் தேவாலயம் கட்டப் போவதாக ராஃபில்ஸ் அறிவித்தார். ஆற்றங்கரை ஓரத்தில் ஃபார்க்குவாரின் நாயை ஒரு முதலை கடித்துக் குதறியதைக் கண்ட அவருடைய உதவியாளர்கள் 16 அடி நீள முதலையைக் கொன்று அதனை ஆலமரத்தில் கட்டித் தொங்கப்போட்டனர்.

பிராஸ் பாசா ஆற்றங்கரையில் எழுந்த மாரியம்மன் கோவில் 1827 ஆரம்பத்தில் சவுத் பிரிட்ஜ் ரோட்டுக்கு இடம் மாறியது. முதலில் எளிமையாக இதைக் கட்டிக் கொடுத்த இந்தியக் கைதிகளே பின்னர் 1843இல் ஆலயத்தின் முதல் கல் கட்டடத்தையும் எழுப்பிக் கொடுத்தார்கள். அரசாங்க நில அளவையாளரும் கட்டுமானப் பொறியாளருமான ஜான் டர்ன்புல் தாம்சன் என்பவரே மூன்றடுக்கு முகப்புக் கோபுரம் கொண்ட மாரியம்மன் ஆலயத்தை வடிவமைத்து, அதன் ஓவியத்தையும் தீட்டிக் கொடுத்திருக்கிறார். முதல் கோபுரம் தென்னிந்தியப் பாணியில் சுதைச் சிற்பங்களுடன் அமையவில்லை.

சர் வால்டர் ஜான் நேப்பியர் (1909)

இவ்வட்டாரத்தில் இந்து ஆலயத்துக்கு ஒரு முன்மாதிரி என்றால் மலாக்காவில் டச்சுக்காரர் நிர்வாகத்தின்போது 1781-இல் எழுந்த  பொய்யாத விநாயக மூர்த்தி கோவிலைத்தான் சொல்லவேண்டும். அதன் கோபுரம் மூன்று அடுக்கு மட்டுமே. ஒவ்வோர் அடுக்கும் நீள்சதுர அமைப்பைக் கொண்டது. பெரும்பாலும் அதை ஒட்டியே தாம்சன் மிகச் சொற்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் நீள்சதுர வடிவில் சிங்கப்பூர் மாரியம்மன் கோபுரத்தை எழுப்பியிருப்பதாக நான் கருதுகிறேன். தாம்சன் ரோடு இவர் பெயரில் அமைந்ததே.

இருபதாண்டுகள் கழித்து, 1862-63-இல்தான் தமிழகப் பாணியில் சிறுசிறு சுதைச் சிற்பங்கள் பொதிந்த உயரமான கோபுரம் இந்தியக் கைதிகளின் ஒத்துழைப்பில் உருவானது. கைதிகளின் வருகை 1873-இல் நின்றுவிட்டது. மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்து இடத்திலேயே 1826-இல் தோன்றியது ஜாமியா பள்ளிவாசல். இரண்டு வழிபாட்டு மையங்களும் இந்தியரின் சமயத் தேவைகளை நிறைவேற்றி வைத்தன. ஆலயச் சடங்குகளின்போது எழும் மேளதாள ஒலி தங்கள் தொழுகைக்கு இடையூறு தருவதாகப் பள்ளிவாசல் நிர்வாகம் 1827 மே மாதம் அரசாங்கத்திடம் புகார் செய்தது. இந்து சமூகத்தின் முக்கியப் பிரதிநிதிகள் சுமார் முப்பது பேர் தங்கள் தரப்பு வாதத்தை பதில் மனுவில் ஆங்கிலத்தில் எழுதித் தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்துப்போட்டு அனுப்பி வைத்தனர். நாராயணப்பிள்ளையின் பெயர் அந்த மனுவில் இடம்பெறவில்லை. 1827ஆம் ஆண்டின் முற்பாதியில் அவரைச் சிங்கப்பூரில் காணமுடியவில்லை.

டோபி காட் கல்வெட்டு, அந்த இடம் 1821லேயே இந்து வழிபாட்டு மையமாக இருந்தது என்பதைப் புலப்படுத்தியது.

சமய சகிப்புத் தன்மைக்குச் 1830களில் சோதனை ஏற்பட்டதுண்டு. அக்காலக்கட்டத்தில் இந்தியரில் முக்கால்வாசிப்பேர் சிங்கப்பூர் ஆற்றில் சரக்குகளை ஏற்றி இறக்கிய படகோட்டிகள். அவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். இந்து ஊர்வலம் ஒன்று 1836இல் முஸ்லிம் சமயத்தவரால் இடைமறிக்கப்பட்டுக் கைகலப்பு மூண்டபோது ஒருவர் மாண்டதாக சிங்கப்பூர் ஃப்ரீ பிரஸ் செய்தி (1836 மே 4) வெளியிட்டது.

ஜான் டர்ன்புல் தாம்சன் ஆற்றிய மகத்தான சாதனைகள் பற்றி சிங்கப்பூர் அருங்காட்சியகம் 1979இல் வெளியிட்ட An Early Surveyor in Singapore எனும் நூல் நமக்கு வேண்டிய மிக முக்கியத் தகவல் ஒன்றையும் தருகிறது. பழைய ஆர்ச்சர்ட் ரோட் சிவன் கோவில் டோபி காட் பெருவிரைவு ரயில் நிலையக் கட்டுமானத்திற்காக 1984இல் இடிக்கப்பட்டபோது தென்பட்ட ஒரு கல்வெட்டு, அந்த இடம் 1821லேயே இந்து வழிபாட்டு மையமாக இருந்தது என்பதைப் புலப்படுத்தியது. அதை உறுதிப்படுத்தும் ஒரு சிறு கல்வெட்டு அங்கே கண்டெடுக்கப்பட்டது. எனவே மாரியாத்தா ஆலயம் அமைவதற்கு முன்னரே இந்துக்களின் முதல் வழிபாட்டுத் தலம் ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் தோன்றிவிட்டது என்பதை அறியலாம். இந்து சமயத்தின் எந்தத் திருமேனிக்கு அங்கு ஆதியில் வழிபாடு நடைபெற்றது என்பது தெரியவில்லை. அது சிவலிங்கமாகவே கூட இருந்திருக்கலாம்.

இந்து சமயத்தினர் முதல் தீமிதி உற்சவத்தை 1835இல் ஆல்பெர்ட் ஸ்ட்ரீட் திடலில் பயபக்தியுடன் கொண்டாடி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஆல்பெர்ட் ஸ்ட்ரீட் அக்காலத்தில் தீமிதித் தெரு என்றே வழங்கப்பட்டது. திரௌபதியம்மனை சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்த பிறகு 1840 முதற்கொண்டுதான் ஆலய வளாகத்துக்கு உள்ளேயே தீமிதி தொடங்கியது. தன் ஆண்குழந்தையையும் தூக்கிக்கொண்டு 1892இல் தீக்குழியில் நடந்துசென்ற ஒரு தாய் கால் இடறிக் கீழே விழுந்தபோது குழந்தைக்குக் கடும் தீப்புண்கள் ஏற்பட்டு மறுதினமே அது இறந்துவிட்டது. ஐரோப்பிய சமூகத்தினர் ‘காட்டுமிராண்டித்தனமான’ தீமிதிப் பழக்கத்தை அறவே தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்று பத்திரிகையில் தீவிரமாக எழுதினர். காவல் துறையும் தீமிதிக்குத் தற்காலிகத் தடை விதித்து, ஒரு வழக்கும் போட்டுத் தீமிதியை நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும் என்று முறையிட்டது.

சார்பில் வாதாடிய 35 வயது இளம் வழக்குரைஞர் வால்ட்டர் ஜான் நேப்பியர், தீமிதியைவிட மோசமான, காட்டுமிராண்டித்தனமான பல பழக்கவழக்கங்கள் இங்கிலாந்தில் பின்பற்றப்படுகின்றன என்றும், ஒருவர் எப்படி பக்தி செலுத்துகிறார் என்பது அவருடைய சொந்த தனிப்பட்ட விஷயம் என்றும், இந்தியாவில்கூடத் தீமிதிக்குத் தடை விதிக்கப்படவில்லை என்றும், அப்படித் தடை செய்யவேண்டுமென்றால் சட்டசபைதான் அதைச் செய்ய வேண்டுமே தவிர ஒரு சாதாரண போலீஸ் இலாக்காவுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றும் வெகு சாமர்த்தியமாக வாதாடி இந்து மக்களின் தீமிதித் திருவிழாவைத் தக்கவைத்து விட்டார். தஞ்சோங் பாகார் காமாட்சியும் பொத்தோங் பாசிர் நீலாட்சியும் 1914 அக்டோபர் மாதத் தீமிதியில் தடுமாறி நெருப்பில் விழுந்து புண்பட்டதாக அன்றைய மலாய விளக்கம் பத்திரிகை செய்தி போட்டது.

இந்தியாவிலிருந்து சிறைக்கைதியாக வந்து சேர்ந்த கிருஷ்ணையர் என்ற புரோகிதரை சிங்கப்பூர் கவர்னர் ஜார்ஜ் பான்ஹம் (George Bonham) 1839இல் விடுதலை செய்து மாரியம்மன் கோவிலில் பூஜை நடத்த அனுமதி வழங்கினார். ஐயர் 25 ஆண்டுகள் கோவில் ஊழியம் புரிந்த தருணத்தில் ஒரு சிறுவனை அடித்துத் துன்புறுத்தியதற்காக 1864இல் மறுபடியும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. ஐயரை விடுதலை செய்யும்படி இந்து சமூகத்தினர் கோவில் நிர்வாகத்தின் மூலம் அரசாங்கத்திற்கு விண்ணப்பம் அனுப்பினர். மாரியம்மன் கோவிலின் பஞ்சாயத்து நிர்வாகம் வம்பு வழக்கு, போட்டி பிணக்குகளால், 18 ஆண்டுகளுக்குக் கணக்கும் காட்டாமல் ஒழுங்காக நடைபெறாமல் நீதிமன்றம் தலையிட்டபோது, ஆலயம் பாழடைந்து பழுது பார்க்க முடியாமல் சீரழிந்து கிடந்ததைச் சுற்றுப்பயணிகள் பார்த்து அதிருப்தி அடைந்தார்கள் என ‘ஸ்ட்ரெய்ட்ஸ் அப்சர்வர்’ பத்திரிகை 1875 மே மாதம் சுட்டிக்காட்டியது.

இந்தியாவிலிருந்து சிறைக்கைதியாக வந்து சேர்ந்த கிருஷ்ணையர் என்ற புரோகிதரை சிங்கப்பூர் கவர்னர் ஜார்ஜ் பான்ஹம் (George Bonham) 1839இல் விடுதலை செய்து மாரியம்மன் கோவிலில் பூஜை நடத்த அனுமதி வழங்கினார்.
ஜான் டர்ன்புல் தாம்சன்

கோவிலின் புனரமைப்புப் பணிகளுக்கு 1876 செப்டம்பரில் கஞ்சா வணிக சீனப்பிரமுகர் ச்சியா ஹாங் லிம் 600 வெள்ளி நன்கொடை வழங்கி, தேவைப்பட்டால் மேலும் கேளுங்கள் என்று சொல்லி, இந்தியரின் ஒற்றுமையற்ற, அக்கறையற்ற மனப்பான்மையை மறைமுகமாக உணர்த்தியது கசப்பான சம்பவமே. ஹாங் லிம் வழங்கிய நன்கொடைக்கு ஆர்.ஆர்.சின்னப்பா பிள்ளை என்பவர் 1876 செப்டம்பர் 5 ‘டெய்லி டைம்ஸ்’ பத்திரிகையில் மனமார்ந்த நன்றி தெரிவித்தபோது சு. வேதாசலம் பிள்ளை, நாராயணன் செட்டி, அழகா பிள்ளை ஆகியோர் இந்து சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் என்ற தகவலும் தெரியவந்தது