சுமார் 30 வருடங்களுக்குமுன் சிங்கப்பூருக்கு வந்த புதிதில் நாங்கள் குடி இருந்ததே சைனா டவுன் பாய்ண்ட் வட்டாரத்தில்தான். அப்போதெல்லாம் சீனப் புத்தாண்டின் வருகையை வெளிப்புற கொண்டாட்டங்களை வைத்துத் தெரிந்து கொள்ளவில்லை. சின் ஸ்வீ ரோட்டில் இருந்த ‘பாப்புலர்’ புத்தகக் கடையில் சிவப்பு வண்ணக் காகித உறைகள், சேவல் படங்களை வைத்துத்தான் சீனப் புத்தாண்டு என விசாரித்து அறிந்தேன்.
பக்கத்து வீட்டில் குடி இருந்த மலாய்க்காரப் பெண் என்னிடம் “சாமானெல்லாம் வாங்கிட்டியா” என்று ஏதோ பேச்சுக் கொடுக்கக் கேட்பதாக எண்ணிவிட்டேன். மறுநாளிலிருந்து இரண்டுநாள் வேலைக்கு விடுப்பு. சாவகாசமாக ஈரச் சந்தைக்குப்போய் காய்கறி வாங்கலாம் என்று போனால் அந்த இடமே வெறிச்சோடிக் கிடந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அப்படியே இருந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்த போது சீனப் புத்தாண்டுக்கு ஈரச் சந்தையும் கடைகளும் 10 முதல் 15 நாட்கள் வரைகூடச் சாத்தி இருக்கும் என்றார்! இப்போதெல்லாம் அப்படி நீண்ட நாட்கள் ஈரச் சந்தையையோ கடைகளையோ மூடுவதில்லை.
சீனர் வீடுகளின் வெளியே அவர்கள் பயன்படுத்திய இருக்கைகளும் இதர அறைக்கலன்களும் போகியைப் போல அன்று வெளியே வைக்கப்பட்டிருந்தன. தற்போது வேண்டாம் எனத் தள்ளப்படும் பொருட்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று தோன்றுகிறது உணர்வுசார் கொண்டாட்டங்கள் அப்படியே இருந்தாலும் பொருளாதார நிலையின் அடிப்படையை நோக்கிக் கொண்டாட்டங்கள் நகரத் தொடங்கி விட்டன என நினைக்கிறேன்.
பிறகு சுமார் 20 வருடங்களுக்கு முன்பிருந்து சீனப் புத்தாண்டுக்கு ஒளியூட்டும் வழக்கமும் விழக்காலக் கடைகளும் தொடங்கியபின் அனைத்து இனத்தினரையும் அவை “வா வா” என்று அழைப்பது போல உற்சாகம் தொற்றிக்கொண்டது. பொருளியல் வளர்ச்சியோ மந்த நிலையோ அது சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பார்த்தாலே புரிந்துவிடும்.