
பொதுப் பேருந்துகளில்
சூரிய மின்சாரம்

சிங்கையில் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘கோ-அஹெட் சிங்கப்பூர்’ தன் 52 டீசல் பேருந்துகளின் கூரைகளில் மிகமெல்லிய சூரியவொளித் தகடுகளை (ultra-thin solar panels) நிறுவி மின்சாரம் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. லண்டனில் தனது பேருந்துகளில் நிறுவி சோதனைகள் செய்தபின் இத்திட்டம் தற்போது சிங்கைக்கும் வரவுள்ளது. இத்தகடுகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால் பேருந்தின் எரிபொருள் செலவில் சுமார் 4 விழுக்காடு வரை மிச்சமாகும் என்றும், ஓராண்டில் ஒரு பேருந்தின் கரிம வெளியேற்றம் சுமார் 4 டன் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கையில் 2050 வாக்கில் கரிமக் கழிவற்ற நிலையை அடையும் அரசின் கொள்கைக்கு ஆதரவாக அனைத்துத் துறைகளும் இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளன.
பூச்சிகளிலிருந்து புரோட்டின்!!

சிங்கப்பூர் உணவு முகவை கூடிய விரைவில் சில்வண்டு (crickets) எனப்படும் சுவர்க்கோழிப் பூச்சிகளை உணவுக்காக இறக்குமதி செய்யவும் விற்கவும் அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பூச்சிகள் புரதச்சத்து மிக்கவை; மனிதர்கள் உணவாக உட்கொள்ள ஏற்றவை என்பது பல ஆய்வுகளுக்குப் பிறகு பல ஆண்டுகளாகவே கூறப்பட்டுவருகிறது. ஆனாலும் பூச்சிகளை அப்படியே உண்பது பலருக்கும் இயலாது என்பதால் அவற்றிலிருந்து புரதத்தைப் பிரித்தெடுத்து மாவாக பால் அல்லது இதர பானங்களில் கலந்து அருந்த இயலும் என்பதால் இதற்கான தயாரிப்பு நிறுவனங்களும் சந்தையும் பெருகிவருகிறது. எனவே சிங்கையிலும் இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் சாத்தியம் உள்ளது.
முயலாண்டை வரவேற்கும் சிங்போஸ்ட்!

இந்த சீனப்புத்தாண்டு முயல் ஆண்டு. அதையொட்டி வழக்கம்போல சிங்போஸ்ட் 30 காசு, 1.50 வெள்ளி மதிப்புகளில் இரண்டு தபால்தலைகளை வெளியிட்டுள்ளது. சிங்போஸ்ட்டுக்காக 2013ஆம் ஆண்டு முதல் தபால்தலைகள் வடிவமைக்கும் லிம் அன்-லிங் இவற்றையும் வடிவமைத்துள்ளார். இவைதவிர முதல்நாள் உறை (first day cover), தபால்தலைகள் சேகரிப்போருக்கான தனிப்பட்ட 8 சிறப்பு தபால்தலைகள் எனப் பலவும் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்புத் தபால்தலைகளை வடிவமைத்தவர் 2000ஆவது ஆண்டு முதல் இத்துறையில் இருக்கும் ஆண்டி கோ (Andy Koh).
“ட்விங்கிள்டோஸ்” மறைந்தார்

ஒலிம்பிக் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே சிங்கை வீரர் என்ற பெருமையைக் கொண்ட ச்சியா பூன் லியோங் தனது 97வது வயதில் மறைந்தார். பந்தை சிறப்பாகக் ‘காலா’ளும் மிகத்திறமையான வீரர் என்பதாலேயே “Twinkletoes” எனும் செல்லப்பெயருக்குச் சொந்தக்காரர். லண்டனில் 1848இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சீனாவுக்காக விளையாடினார். பின்னர் 1950 முதல் 52 வரை சிங்கைக்காக விளையாடித் தொடர்ந்து மூன்றுமுறை மலேசியக் கிண்ணத்தை வெல்ல உறுதுணையாயிருந்த வீரராகவும் திகழ்ந்தவர். கால்பந்தைப் போலவே தனது வாழ்வையும் மிகவும் நேசித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தவர் என்று அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் நினைவுகூருகின்றனர்.