“உரக்க வாசித்து உள்ளத்தின் காதுகளால் கேளுங்கள் “

தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மாவுடன்
திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து ஓர் உரையாடல்

தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் சரி,
தக்கநேரத்தில் பொருத்தமான குறளைச்
சொல்லிவிடுகிறார்கள்.
தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) அமெரிக்காவில் பிறந்தவர். கவிஞர், நிகழ்கலைஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டவர், பன்மொழித் திறனாளர். தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்குமேல் வாழ்ந்து பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டும் கற்ற தாமஸ் புரூக்ஸ்மாவின் தமிழிலிருந்து நேரடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் (The Kural: A New Translation of the Classical Masterpiece on Ethics, Power and Love, Beacon Press, 2022) கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஜி.யு.போப் காலந்தொட்டு நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் அவை பொதுவாகக் கருத்துகளுக்கே முன்னுரிமை அளித்துள்ளன. திருக்குறளின் கருத்து, கவிநயம், ஓசைநயம், வடிவம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை விட்டுவிடாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற சவாலைத் தனக்கு இட்டுக்கொண்டு, ஏறக்குறைய ஐந்தாண்டுகள் உழைத்து, தாமஸ் புரூக்ஸ்மா உருவாக்கியுள்ள ‘The Kural’ பல பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. அம்மொழிபெயர்ப்பை முன்வைத்து ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அவருடன் மின்னுரையாடியது. தமிழில் எழுப்பப்பட்டக் கேள்விகளுக்குத் தமிழிலேயே தாமஸ் புரூக்ஸ்மா பதிலளித்தார்.

அறநெறி புகட்டும் ஓர் ஆசிரிய பீடமாக அன்றி தோளில் கைபோட்டுப் பல்வேறு வாழ்வியல் அம்சங்களை உரையாடும் நட்பாக நீங்கள் குறளைப் பார்க்கிறீர்கள். உங்களுக்குக் குறள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது?

1998இல் கல்வி உதவித்தொகை ஒன்றைப் பெற்று (Oberlin Shansi Fellowship) மதுரைக்குச் சென்று தமிழ் கற்க ஆரம்பித்தேன். தொடக்க காலத்திலேயே திருக்குறளைப் பற்றிக் கேள்விப்பட்டது உறுதி. எங்கே, எவ்வாறு என்று தெளிவாக நினைவில்லை. தமிழைப் பற்றிப் படிக்கும்பொழுது ஒரு குறிப்புப் பார்த்திருக்கலாம். யாராவது அதைப் பற்றிப் பேசியிருக்கலாம். ஆனால் முதன்முதலாகத் திருக்குறளைக் கையில் எடுத்துக்கொண்டது எப்போது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் ‘பேச்சு ஆங்கிலம்’ சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தேன். மீனாட்சி சுந்தரம் என்ற மாணவன் என்னை வீட்டிற்குக் கூப்பிட்டான். அவன் பெற்றோர்கள் வியக்கத்தக்க விருந்து பரிமாறிச் சிறப்பாகக் கவனித்தனர். எனக்கு அப்போது தெரிந்திருந்த தமிழை அவர்களுடன் பேசிப்பார்த்துக்கொண்டே இருந்தேன். நேரம் இனிமையாகவும் வேகமாகவும் கழிந்தது. கிளம்பும்பொழுது மீனாட்சி சுந்தரத்தின் அப்பா எனக்கு இரண்டு புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்; ஒன்று பாரதிதாசன் கவிதைகள். மற்றொன்று திருக்குறள்.

அக்காலத்தில் என் நோக்கம் இலக்கியம் படித்தல் அல்ல. பேச்சுத் தமிழ் கற்றுக்கொள்ள ஒரு கிராமத்தில் தங்குதல், கிராமிய வாழ்க்கையை நேரில் பார்த்தல், மக்களோடு பழகுதல் ஆகியவைதாம் என் நோக்கம். இருந்தாலும் செல்லும் இடங்களிலெல்லாம் குறட்பாக்கள் தென்பட்டுக்கொண்டிருந்தன. அரசுப் பேருந்தில் ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒரு பலகையில் குறள் எழுதப்பட்டிருக்கும்.

என் தமிழ் ஆசிரியர் முனைவர் கு.வே.இராமகோடி அவர்களும் அவருடைய மனைவி திருமதி கு.இரா.பத்மாவதி அவர்களும் பேசும்போது அடிக்கடி இயல்பாகக் குறட்பாக்கள் வரும். அவர்கள் மட்டுமா? தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் சரி, தக்கநேரத்தில் பொருத்தமான குறளைச் சொல்லிவிடுகிறார்கள். அப்படித்தான் குறள் எனக்கு அறிமுகமானது.

குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பியது ஏன் ?

மதுரைக்கு வந்து ஈராண்டுகளில் ஓரளவுக்குத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். அருமையான வலையப்பட்டி கிராமத்தில் மக்களோடு பழகிப் பழகித் தமிழ்ப் பண்பாட்டையும் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது என் ஆசிரியர் பேச்சுத்தமிழ் மட்டும் போதாது, படிப்படியாகத் தமிழ் இலக்கியமும் பயிலவேண்டும் என்று ஊக்குவித்துக்கொண்டே வந்தார். டிசம்பர் 2000த்தில் நான் அமெரிக்கா திரும்புவதற்குள் ஒளவையாரின் மூதுரையை என்னை அன்போடு படிக்கவைத்தார்.

இருபத்தைந்து பாடல்களை மனப்பாடமும் பண்ணவைத்தார். அந்த அனுபவம் எனக்கு ஒரு பெரிய வாசலாய் இருந்தது. ஒளவையாரின் எளிமையான ஆனால் ஆழமான வெண்பாக்களை உரக்க வாசித்துக் கேட்டபொழுதுதான் அதுவரை கவிதை என்றால் என்ன என்பது புரியாதிருந்த நான் அதைச் சுவைத்துப் படிக்க ஆரம்பித்தேன். இவ்வாசல் மூலமாக இலக்கியம் என்னும் மாநகரத்துக்குள் — இல்லை, நாட்டுக்குள், நல்லுலகத்துக்குள் — புகுந்துவிட்டேன்.

பிறகு என் ஆசிரியருடன் இணைந்து A Feast for the Tongue: Forty Servings of Spoken Tamil with Helpings of Equally Spoken English என்னும் வழிகாட்டி நூலை எழுதத் தமிழ்நாட்டுக்கு 2002இல் திரும்பிவந்து ஆறு மாதங்கள் தங்கினேன். அதன்பின் 2003-2004 ஆண்டுகளில் அமெரிக்க அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை (Fulbright Fellowship) ஒன்று கிடைத்து மிக்க மகிழ்ச்சியோடு மதுரைக்கு மீண்டும் சென்றேன்.

முனைவர் இராமகோடி வீட்டிலும் நான் தங்கியிருந்த கிராமத்திலும் புறநானூறு, குறுந்தொகை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நூல்களை ஆழமாக ஆராய்ந்து பயின்றேன். அவற்றுள் மிக முக்கியமானதாகத் திருக்குறளை உணர்ந்தேன். என்னுள்ளத்தைக் கவர்ந்த குறட்பாக்களையெல்லாம் மனனம் செய்துவிட்டேன். குறள் வெண்பா இயற்றவும் பயிற்சி மேற்கொண்டேன். மணக்குடவர், பரிமேலழகர் போன்ற புகழ்பெற்ற உரையாசிரியர்களின் உரைகளையும் படித்தேன். ஆனாலும் ஒரு கணம்கூடத் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணமோ யோசனையோ எழவில்லை.

என் ஆசிரியர் அவ்வப்போது “யாராவதுப்பா… கவிநயத்தோடு திருக்குறளை மொழிபெயர்த்தா நல்லா இருக்குமே,” என்பார்.

“ஆமாங்கய்யா, அப்படி செஞ்சா நல்லாதான் இருக்கும்,” என்பேன்.

“அதோடு, நாம படிச்ச உரையெல்லாம் வெச்சிக்கிட்டு பண்ணா — அப்பா, அருமையா இருக்கும்,” என்பார்.

“ஆமாங்கய்யா, அப்படிதான் செய்யணும், தக்க ஆள் வந்து பண்ணட்டுமே” என்பேன்.

என்னுள்ளத்தைக் கவர்ந்த குறட்பாக்களையெல்லாம்
மனனம் செய்துவிட்டேன். குறள் வெண்பா இயற்றவும்
பயிற்சி மேற்கொண்டேன்.

அவர் என்னை மனதிற்கொண்டு மறைமுகமாக உணர்த்திய அக்குறிப்புகளை உணர்ந்துகொள்ள எனக்கு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த விஷயமானாலும் இது செய்யவேண்டும், இது செய்யக்கூடாது என்று நேராகச் சொல்லுவார். ஆனால் அவரும் ஒரு கவிஞர் என்பதால் இப்படிப்பட்ட ஒரு வினை செய்யவேண்டும் என்று நேராகச் சொல்லமுடியாது. மறைமுகமாகத்தான் சொல்லமுடியும். ஏனெனில் சொந்தமாக ஒருவருக்கு மனதில் தோன்றினால்தான் அந்தவேலை செவ்வனே ஓடும் என்பது அறிஞர் கண்ட உண்மை.

கடைசியாக 2016இல் எனக்குக் குறளை மொழிபெயர்க்கத் தோன்றிவிட்டது. செய்துமுடித்து அடுத்த ஆண்டு தமிழ்நாடு வந்து முழு கையெழுத்துப் பிரதியையும் நானும் ஐயாவும் இணைந்து படித்தோம். ஒவ்வொரு குறளின் மொழியாக்கத்தையும் மேம்படுத்தவேண்டும் என்று ஐயா தூண்டிக்கொண்டே வந்தார். மறக்கமுடியாத ஒரு கோடைக்காலம் அது.

சென்ற ஆண்டு, ஜனவரி 11, 2022, மதிப்புமிக்க Beacon Press என் மொழிபெயர்ப்பை வெளியிட்டது. என் ஆசிரியர் 2019இல் காலமாகிவிட்டதால் அதை அவர் கையில் நூலைக்கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் மறையும்முன் திருத்திய கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டார் என்கிற வகையில் எனக்கு ஓர் ஆறுதல்.

இசையும் ஓசையும் அர்த்தத்தின் ஆழத்தையும் அடர்த்தியையும் காட்டிவிடும், கூட்டிவிடும். கவிதையில் மௌனப் பகுதிகளும் பேசும்.

உங்களுடைய நூலில் வள்ளுவருக்கும் வாசகருக்கும் இடையே விழச்சாத்தியமான பலநூற்றாண்டு இடைவெளியை வெற்றிகரமாகச் சுருக்கிவிட்டீர்கள். கருத்து, வடிவம், ஓசைநயம், கவிநயம் போன்றவற்றை இழக்காமல் வாசகரை அணுக்கமாக உணரச்செய்வதும் உங்கள் நோக்கமாக இருந்ததா?

என் மனமார்ந்த நன்றி. அதுதான் என் நோக்கம். தமிழில் திருக்குறள் படிக்கும்பொழுது நமக்கு ஓர் அருமையான அனுபவம் ஏற்படலாம். இவ்வனுபவமானது என்றும் புதுமையான பசுமையான அனுபவம். இறப்பில்லாத அனுபவம். ஆங்கிலத்திலும் இதே விதமான ஓர் அனுபவம் ஏற்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளை வைத்துக்கொண்டு பணிசெய்தேன். கருத்து, வடிவம், ஓசைநயம், கவிநயம் போன்ற செய்யுளுக்கும் கவிதைக்கும் பாட்டுக்கும் உரிய தன்மைகள் ஒன்றாக இணைந்துவந்தால்தான் இவ்விதமான அனுபவம் ஏற்படமுடியும்

‘தெய்வ’ப்புலவர் ஆக்கப்பட்டுவிட்ட வள்ளுவரைக் ‘கவிஞர்’ என்று கண்டெடுத்து, குறளின் கவித்துவத்தை நினைவூட்டியுள்ளீர்கள். குறள் ஒரு செய்யுள் மட்டுமல்ல, கவிதை என்று தோன்றிய முதல் தருணம் எது?

திருக்குறளைப் படிப்பதற்கு முன்பே அப்படித் தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் குறளைப் படிக்கவும் மொழிபெயர்க்கவும் எனக்குத் தோன்றியிருக்காது. பேச்சுத்தமிழ் படிக்கும்பொழுதே இரண்டு குறட்பாக்களைக் கேட்டு மிகுந்த இன்பம் அடைந்திருந்தேன். முதலாவது, ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’, இரண்டாவது, ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. இரண்டுமே வியக்கவைக்கும் விளையாட்டுத்தன்மை வாய்ந்தவை, அதேநேரத்தில் நுண்ணறிவுள்ளவையும்கூட.

நிறைய திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் திருக்குறளின் கருத்தையும் கொள்கையையும் மட்டுமே பெரும்பாலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அது திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆகாது. திருக்குறளின் உரை மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். ஏன் திருக்குறள் படிக்கிறோம்? கருத்தும் கொள்கையும் மட்டுமின்றி அவை சிறந்த வடிவத்தோடும் தாளத்தோடும் ஓசையோடும் இசையோடும் உவமையோடும் மனதில் என்றென்றும் நிற்கவைக்கும் கவிநயத்தோடும் பின்னிப்பிணைந்து கிடப்பதால் அதைக் படிக்கிறோம், கேட்கிறோம், சுவைக்கிறோம். மொழிபெயர்ப்பிலும் கூடுமானவரை அவையனைத்தும் கிட்டவேண்டும்.

எக்குறளுக்காவது அர்த்தம் பிடிபடாமற்போனால் “உரக்க வாசித்து உள்ளத்தின் காதுகளால் கேட்டுப்பாருங்கள்” என்று உங்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். கவிதை உரக்க வாசிக்கப்படும்போது மேலும் தெளிவடையும் என்பது உங்கள் அனுபவமா? ஏன் அவ்வாறு நிகழ்கிறது?

கவிதை கம்மென்று படித்தலுக்கு அல்ல. கேட்டலுக்கே கவிதை. கவிதையின் தாளமும் பொருள் அளிக்கும். இசையும் ஓசையும் அர்த்தத்தின் ஆழத்தையும் அடர்த்தியையும் காட்டிவிடும், கூட்டிவிடும். கவிதையில் மௌனப் பகுதிகளும் பேசும். அதையெல்லாம் கேட்டு அனுபவித்தால்தான் கவிதை நமக்குச் சொல்வதை முழுமையாக உணரமுடியும்.

ஓசை நயத்துக்கு நீங்கள் அளிக்கும் கவனம் வியப்பளிக்கிறது. ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி’ குறளில் மழை ‘துப், துப், துப்’ என்ற ஒலியுடன் தூவுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ குறளின் இசையை ‘Hold to the hold of one who holds nothing’ என்று ஆங்கிலத்திலும் தக்கவைத்துள்ளீர்கள். மனதில் பதிய ஏதுவாக அமைவதைத் தவிர்த்து, குறளின் ஓசைநயங்களுக்கு வேறு தாக்கங்களும் இருப்பதாக நினைக்கிறீர்களா?

கவிதை அதன் சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சொல்லும். ஒன்றென்றால் ஒன்று மட்டுமா? பல பொருட்களை ஒன்றாக ஒரேநேரத்தில் சொல்லும். அந்நேரம் சாதாரணமான ‘நேரம்’ அல்ல. எல்லாநேரமும் அதில் அடங்கும். இதெல்லாம் எதனால் சாத்தியமாகிறது? இசையால். இசையானது ஒரு கவிதையின் அர்த்தத்துக்கே அர்த்தம் கொடுக்கும். ஒலிவடிவத்துக்கு ஒளி உண்டாக்கும்.

மனதில் பதிய ஏதுவாக ஓசைநயம் அமைவது இன்றியமையாதது. மனதில் பதிந்தால்தான் ஒரு கவிதை நமக்குச் செய்யவேண்டிய நன்மைகளைச் செய்யும். இளம்வயதில் மனதில் பதிந்த ஒரு பாட்டு பிற்காலத்தில் உதவும். எப்போது என்று குறிப்பாகச் சொல்லமுடியாது. ஆனால் தக்கசமயத்தில் என்று நிச்சயம் சொல்ல முடியும். “நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருதலால்” என்று ஒளவையார் சொன்னதுபோல.

இடைக்கோடுகளை (hyphens) பல குறட்பாக்களில் பயன்படுத்தியுள்ளீர்கள். அதிகபட்சமாக ஒரேகுறளில் மூன்று இடைக்கோடுகள்வரை இடம்பெற்றுள்ளன. தமிழ் மூலவடிவத்தை ஒட்டியே ஆங்கில மொழிபெயர்ப்பை அமைக்க முயன்ற நீங்கள் இடைக்கோடுகளைச் சேர்த்தது ஏன்?

ஆங்கில இலக்கணத்துக்கும் தமிழ் இலக்கணத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் குறைப்பதற்காக அவ்வாறு செய்தேன். ஓர் எளிமையான எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தில் My name is Thomas என்பதற்குப் பதிலாக My name Thomas என்று சொன்னால் அது இலக்கணப் பிழை. ஆனால் தமிழிலோ என் பெயர் தாமஸ் என்று சொன்னால் ஒரு தப்பும் இல்லை. திருவள்ளுவர் அடிக்கடி இவ்வாறே சொற்றொடர் அமைப்பார். இடைக்கோடுகளை வைத்து இவ்வமைப்புக்கு நெருக்கமாக வரமுடியும். எப்படி?

ஆங்கிலத்தில் My name — Thomas எழுதினால், My name என்பதற்கும் Thomas என்பதற்கும் இடையே ஓர் இடைவெளி கொடுத்து வாசிப்போம். இவ்விடைவெளி மிகவும் அர்த்தமுடையது. சொற்றொடருக்கு உயிர் கொடுப்பதோடு இலக்கணப் பிழையையும் எடுத்து வீசிவிடும். ஒரு பின்னணிக் கதை உண்டு எனத் தெரிவிக்கும். கவிஞர் எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson) தன் கவிதைகளில் அருமையாக இடைக்கோடுகள் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம்.

ஆணா பெண்ணா என்பதை விட 
அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது.
 அந்தவகையில் பாலைத் தக்கவைக்கும் 
முயற்சியில் பண்பை இழந்துவிடக்கூடாது.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுள் ஓர் ஆணாகத்தான் (வாலறிவன், ஏகினான், ஐந்தவித்தான்) உருவகிக்கப்படுகிறார். உங்கள் மொழிபெயர்ப்பில் one who is truth, a person, those free of all five senses எனப் பாலின அடையாளமின்றி அமைகிறார். இது ஒரு முற்போக்குத் தன்மையை வள்ளுவருக்கு வலிந்து அளிப்பதாக ஆகாதா?

முனைவர் கு.வே. இராமகோடியுடன்
தாமஸ் புரூக்ஸ்மாவின் பெற்றோர் கிளென், ஐலீன் புரூக்ஸ்மா (1999)

கடவுள் ஒன்றுதான் என்றும் வாலறிவன், ஏகினான், ஐந்தவித்தான் போன்ற பெயர்கள் ஒன்றான கடவுளின் குணங்களைக் குறிக்கும் என்றும் படிக்கலாம். அல்லது, இவ்வுலகத்திலும் வானுலகத்திலும் பல தெய்வங்கள் வாழ்கின்றார்கள் என்றும் வாலறிவன், ஏகினான், ஐந்தவித்தான் போன்ற பெயர்கள் தனித்தனிக் கடவுளரைக் குறிக்கும் என்றும் படிக்கலாம். அவ்விரண்டும் வேண்டாமென்றால், வாலறிவன், ஏகினான், ஐந்தவித்தான் போன்ற பெயர்கள் மிக உயர்ந்த ஆசிரியராகிய மனிதர்களைக் குறிக்கும் என்றும் கருதிப் படிக்கலாம். இப்படிப்பட்ட திறந்த பண்பை மொழிபெயர்ப்பில் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு மொழிபெயர்த்துள்ளேன்.

ஆணா பெண்ணா என்பதை விட அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அந்தவகையில் பாலைத் தக்கவைக்கும் முயற்சியில் பண்பை இழந்துவிடக்கூடாது. திருவள்ளுவரின் காலம் ஆண்பாலுக்கு முதலிடம் கொடுத்த காலம். அக்கால மக்கள் புரிந்துகொள்ள அக்கால மொழியில்தான் எழுதவேண்டும். அதற்குப்பின் பெரிய இடைவெளியில் காலமும் கலாச்சாரமும் மாறியிருக்கின்றன. இக்காலத்தில் எழுதியிருந்தால் இப்பேர்ப்பட்ட கடவுளின் அல்லது மனிதர்களின் செயலையும் பண்பையும் குறித்து இக்கால மொழியில்தான் திருவள்ளுவர் சொல்லியிருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

நுண்ணிய பல நூல்களைக் கற்றாலும் இயற்கையாக உள்ள அறிவே மிஞ்சும் (373) என்று ‘ஊழ்’ அதிகாரத்தில் கூறும் வள்ளுவர், கற்கக் கற்க அறிவு நிறையும் (396) என்று ‘கல்வி’ அதிகாரத்தில் கூறுகிறார். இரண்டு குறள்களிலும் ‘அறிவு’ என்னும் சொல் வருவதால் ஒரு முரண் உண்டாகிறது. நீங்கள் ஒரு குறளில் knowledge, மற்றொன்றில் mind என்று மொழிபெயர்த்து முரணின்றி ஆக்கிவிட்டீர்கள். குறள்களுக்கிடையே ஒரு consistency-ஐ அளிக்கவேண்டிய உந்துதலுக்கு ஆளானீர்களா?

மதுரை வலையப்பட்டி கிராமத்தில் தாமஸ் புரூக்ஸ்மா வசித்த குடும்பத்தினருடன்

இங்கு நுணுக்கமான ஒரு விஷயம் சொல்லவேண்டியிருக்கிறது. கவிதையை மொழிபெயர்க்கும்பொழுது தனித்தனிச் சொற்களை அல்லாமல் அவற்றின்மேல் எழும் கவிதையின் அமைப்பை மொழிபெயர்க்கவேண்டும். இவ்வமைப்புதான் நுண்ணிய பொருளைக் கொடுக்கும். அமைப்பைச் சரியாக மொழியாக்கும் நோக்கில், தமிழின் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு வெவ்வேறு குறள்களில் ஆங்கிலத்தில் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்த வேண்டிவரும். சொற்கள் மாறினாலும் அமைப்பு சரியாக இருந்தால் முழு அர்த்தமும் சரியாக வரும்.

உங்கள் கேள்வியிலுள்ள எடுத்துக்காட்டையே பார்ப்போம். முரண் சொல்லளவில் இல்லாவிடினும் அமைப்பளவில் உண்டு; 396ஆம் குறளின் மொழியாக்கத்தில் வெறும் ‘mind’ என்று மட்டும் சொல்லாமல் ‘deepens’ என்னும் வினைச்சொல்லைச் சேர்த்து ஒரு சொற்றொடர் கொடுத்திருக்கிறேன்: “a mind deepens.” இச்சொற்றொடர் அறிவூறும் என்பதைக் குறிக்கும்.

ஒவ்வொரு அமைப்பையும் தமிழிலுள்ளபடி அப்படியே ஆங்கிலத்தில் சரியாக உண்டாக்க முடிந்ததா? இல்லை. அங்கங்கே எனக்கு முழுதிருப்தி கிடைக்கவில்லை. திருப்தி கிட்டாதபோது ஒரு குறிப்புரை கொடுத்து அதில் இந்த மாதிரியான விஷயங்களை விளக்கியிருக்கிறேன். சொல் நுணுக்கமும் காட்டியிருக்கிறேன். அக்குறிப்புகளும் இம்மொழிபெயர்ப்பின் முக்கியமான ஒரு பகுதி.

வலையப்பட்டி கிராம விழாவில் ஒரு நாடகத்தின் புரவலர் என்கிற வகையில் கௌரவிக்கப்படும் தாமஸ் புரூக்ஸ்மா(2020)
மொழியிலும் அரசியலிலும் வள்ளுவரின் நுண்ணறிவு வியக்கவைக்கிறது. ஆனால் ஒரே ஒரு துறையை மட்டும் சொல்லவேண்டுமெனில் உளவியல் என்பேன்.

‘தவம்’ என்னும் சொல்லை tavam என்றே விட்டுவிட்டீர்கள். அதற்கு வழக்கமாகப் பயன்படும் சொல்லான penance கிறித்தவப் பின்புலத்தை அளிக்கும் என்று உரையாடலில் குறிப்பிட்டீர்கள். அதுபோலவே ‘ஊழ்’ (fate). ஆங்கிலத்தில் fate-க்கு ஒரு fairy tale தன்மை உண்டென்பதால் destiny-யைவிடப் பொருத்தம் என்றீர்கள். அதிகாரத்தின் தலைப்பை வாசித்த மாத்திரத்தில் வாசகர் பண்பாட்டுச் சாய்வு அடைவதைத் தவிர்க்கும் இந்த அணுகுமுறை மிக நுட்பமானது. வேறுசில இடங்களைக் குறிப்பிட இயலுமா?

‘Destiny’ என்னும் சொல் பேச்சு வழக்கில் ஒரு குறிப்பிட்ட முடிவைக் குறிக்கும். ஊழுக்கு அதைவிட அகன்ற அர்த்தம் உண்டு என நம்புகிறேன். ஆகவே திருவள்ளுவருக்கு ஊழ் என்பது என்ன என்று நாம் தெரிந்துகொள்ள முழு அதிகாரத்தையும் கூர்ந்து காணவேண்டும் என்பேன். திருவள்ளுவரே இச்சொல்லை விளக்குவார். தவமும் அப்படித்தான்.

இன்னொரு எடுத்துக்காட்டு ‘நீத்தார் பெருமை’. பெரும்பாலோர் ‘The Greatness of Ascetics’ அல்லது ‘The Greatness of Renunciants’ என்று மொழிபெயர்ப்பார்கள். Ascetics, Renunciants ஆகிய சொற்கள் பழையதாகத் தொனிக்கும். ஆனால் இக்காலத்திற்கும் நீத்தார் பெருமை பொருந்தும். ஆகவே நீத்தாரை எப்படி அழைக்கலாம் என்பதைவிட நீத்தார் என்ன செய்திருக்கிறார்கள் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைத்து ‘The Greatness of Letting Go’ என்று தலைப்பு கொடுத்திருக்கிறேன். திருக்குறளின் என்றென்றும் பசுமையான புதுமையான பண்புகளை முன்வைக்க விரும்பியதால் அப்படிச் செய்தேன்.

நூலின் இறுதியில் பரிமேலழகர், மணக்குடவர் இருவரது உரைகளிலிருந்தும் உதவிக் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. திருக்குறளுக்கு எத்தனையோ உரைகள் இருந்தும் இவ்விரண்டைத் தேர்ந்தெடுத்தது ஏன்? ஒப்பீட்டளவில் தங்களுக்கு மிகவும் பிடித்த உரை எது? ஏன்?

என் குறிப்புரையில் பரிமேலழகரும் மணக்குடவரும் அவ்வப்போது வருவர் என்றாலும் பெருமளவிலான குறிப்புகள் என் சொந்த அனுபவத்திலிருந்தும் ஆராய்ந்து யோசித்த சிந்தனைகளிலிருந்தும் வந்திருக்கின்றன.

திருக்குறள் பயிலும்பொழுது திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்தைப் படித்தேன். அதில் பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்து உரைகளையும் கவனமாக ஆராய்ந்தேன். மிகப் பழமையான, தலைசிறந்த உரைகளை வைத்துக்கொண்டு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்பது என் குறிக்கோள். எனக்குப் பரிமேலழகர் உரையின்மேல் ஒரு தனி மதிப்பு. உரை எப்படி இருக்கவேண்டும் என அவர்தான் வழிகாட்டினார். இருந்தும் மிகவும் பிடித்த உரை மணக்குடவருடையதே. சுருக்கமாகவும் தெளிவாகவும் விறுவிறுவென்று சொல்லிக்கொண்டே போவார்.

உங்களுடைய இசைப்பயிற்சி, தத்துவக் கல்விப் பின்புலங்கள் திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு எவ்வகையிலும் பங்களித்தனவா?

மிகுந்த பங்களித்தன. என்னைப் பொறுத்தவரை இசைப்பயிற்சியிலிருந்தே என்னுடைய கவித்திறனும் செய்யுளாற்றலும் பிறந்திருக்கின்றன. தத்துவக் கல்வியிலிருந்தே திருவள்ளுவரின் எண்ணத்திலும் எளிமையிலும் நுழையும் துணிவு பிறந்தது. திருக்குறளை மொழிபெயர்ப்பதற்கு எத்தனையோ அனுபவங்கள், வாய்ப்புகள், ஆசிரியர்கள், ஊர்கள், நூல்கள், நண்பர்கள் ஒன்றாகச் சேரவேண்டியிருந்தது. அவற்றுள் ஒன்று விடுபட்டிருந்தாலும் இப்படி மொழிபெயர்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

The Kural வெளியாகி ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது. டேவிட் ஷுல்மன் போன்ற அறிஞர்கள் முதல் ஆர்வலர்கள்வரை உங்கள் மொழிபெயர்ப்பைப் பாராட்டியுள்ளனர். உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் மனதில் தைத்த வாசகர் கருத்து எது? ஏன்?

மொழிபெயர்ப்பு அறிஞர்கள் பாராட்டியிருப்பதில் மகிழ்ச்சி. அதனிலும் மகிழ்ச்சி தருவது பொதுமக்கள் எனக்கு அனுப்பிய செய்திகளும் கடிதங்களுமே. தமிழ் தெரியாத ஒருபெண், “ஒவ்வொரு காலையிலும் ஓர் அதிகாரத்தை எடுத்து அதில் என்னைக் கவரும் ஒரு குறளைத் தேர்ந்தெடுப்பேன்” என்றும் “அதுவே அன்றைய குறள்; அக்குறளும் அன்றைய என் அனுபவங்களும் எப்படியெல்லாம் இணைகின்றன என்று பார்த்துக்கொண்டேயிருப்பேன்” என்றும் சொன்னார்.

இன்னொருவர் அமெரிக்காவிலுள்ள தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய அம்மா அடிக்கடி குறளை எடுத்துச் சொல்வார்களாம். அவருக்கோ தமிழ் அறிவு இருந்தும் திருக்குறள் கற்கும் அளவு படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. “உங்கள் மொழிபெயர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டேன். கேட்டவுடன் இரண்டு பிரதிகள் வாங்கிவிட்டேன். ஒன்று எனக்கு, இன்னொன்று அம்மாவுக்கு. இப்போது வாராவாரம் ஓர் அதிகாரம் ஒன்றாகப் படிக்கிறோம்” என்று தெரிவித்தார். இவையெல்லாம் எனக்கு அளிக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது.

இசை, பாடல், கதை, மாயாஜாலம் எனப் பல்வேறு அம்சங்களை இணைத்து
நிகழ்ச்சிகள் அமைப்பதில் தாமஸ் புரூக்ஸ்மா வல்லவர்.
அப்படியொரு நிகழ்ச்சியின்போது
(A Thousand Thanks: The Gift of Sadako and Her Cranes, 2018)

திருக்குறளை ஆழ்ந்து வாசிக்கும்போது வள்ளுவர் தொழிலால் ஓர் அரச ஆலோசகர், ஒரு விவசாயி, ஒரு மருத்துவர் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. உங்களை வள்ளுவர் பெரிதும் பிரமிக்கச் செய்த ஓரிரு துறைகளைக் குறிப்பிட இயலுமா?

பெரிதும் பிரமிக்கச் செய்யும் துறை செய்யுள் துறையே. ஷேக்ஸ்பியர் (Shakespeare) எவ்வாறு தலைசிறந்த புலவரோ அவ்வாறே திருவள்ளுவரும் தலைசிறந்த புலவர், கவிஞர், சான்றோர். அதனால்தான் அரசன், அமைச்சர், விவசாயி, மருத்துவர், காதலர் இவர்களெல்லாம் எப்படி இருப்பார்கள் என்பதோடு எப்படி இருத்தல் வேண்டும் என்பதையும் ஆழமாகக் கவனிக்க முடிந்தது.

மொழியிலும் அரசியலிலும் வள்ளுவரின் நுண்ணறிவு வியக்கவைக்கிறது. ஆனால் ஒரேயொரு துறையை மட்டும் சொல்லவேண்டுமெனில் உளவியல் என்பேன். மனிதரின் அகம் காதலில், திருமணத்தில், இல்வாழ்வில் அடையும் பல்வேறு நிலைகள் அவருக்கு ஆழமாகத் தெரிந்திருக்கின்றது. புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை ஆகிய அதிகாரங்கள் காட்டும் புலமை திகைப்பானது.

மனப்பாடம் செய்வதும் நல்லதுதான் ஆனால் ,
அது கட்டாயமாக இருக்கக்கூடாது , விரும்பி செய்யவேண்டும் .

வள்ளுவர் ஒருவரா, பலரா? எந்த மதத்தைச் சேர்ந்தவர்? போன்ற கேள்விகள் சர்ச்சைகளாகவே தொடர்கின்றன. இக்கேள்விகள் அவசியமானவையா? பிரதி ஆதாரம் (textual evidence) கொண்டு எந்த முடிவையாவது முன்வைக்க முடியுமா?

குடும்பத்தின் கடைசி மகனுடைய திருமண விழா பதாகையில் தாமஸ் புரூக்ஸ்மாவும் (2009)
(ஒரு மகனாக பி .டாம் என்ற பெயரில்)

என்னைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். ஏனெனில் அவற்றில் இறங்கி அலைந்து திரிந்தால் திருக்குறளையே படிக்காமல் போய்விடக்கூடும். ஆய்வாளனாக அன்றி ஒரு கவிஞனாகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் என் அனுபவத்தில் திருவள்ளுவர் ஒருவரே. மேலும் சங்ககாலம் தொட்டுத் தொகுப்பு என்னும் நூலமைப்பு இருந்திருக்கிறது. அதற்கு மரபு உண்டு, இலக்கணமும் உண்டு. ஆகவே திருக்குறள் பலர் எழுதிய தொகுப்பாக இருந்திருந்தால், அது நமக்கு ஒருநூலாக அல்லாமல், தொகுப்பாகவே தெளிவாகத் தெரிந்திருக்கும்.

திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கேட்கலாம். ஆனால் அதைவிட முக்கியமானது திறந்த மனத்தோடு திருக்குறளைப் படித்தல்தான். சுவைத்துச் சிந்தித்துப் படித்தால் குறளே நமக்கு வேண்டிய பதில்களைக் கொடுக்கும்.

குறள் ஒரு விதையைப்போல நமக்குள் விழுந்து, சேர்ந்து வளர்ந்து தழைக்கக்கூடியது என்கிறீர்கள். ஏறக்குறைய கால்நூற்றாண்டாகக் குறளோடு உறவாடிவரும் உங்களுக்கும் அது நிகழ்ந்திருக்கும். ஒரு குறள், விருட்சமாகும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

இரண்டு எடுத்துக்காட்டுகள். முதலாவது, என்னை ஆரம்பத்திலேயே கவர்ந்த குறள். எல்லாருக்கும் தெரிந்த குறளும் கூட:

         நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
         அன்றே மறப்பது நன்று

நன்றி மறப்பது நன்றன்று என்பது எல்லாருக்கும் உடன்பாடான கருத்து. நன்றல்லது மறப்பதோ, அதிலும் அன்றே மறக்கவேண்டும் என்பதோ யோசிக்கவேண்டியவை. நன்றல்லதை நினைத்துகொண்டே இருந்தால் நமக்குத்தான் வருத்தம். மனத்தைப் புண்படுத்திக் கொள்ளும் ஈடிலா வழி. ஆகவே மறப்பது நல்லது என்பது புரிகிறது. ஆனால் கேட்க நன்றாக இருந்தாலும் அதன்படி நடப்பது ஆகக்கடினமான ஒன்று. ஆனாலும் கைவிடாமல் கால்நூற்றாண்டாக அதை அன்றாடம் நடைமுறைப்படுத்தப் பழகிக்கொண்டுதான் வருகிறேன்.

இரண்டாவது குறள்:

         ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
         கூடி முயங்கப் பெறின்

ஊடுதல் என்பது விசித்திரமான ஒன்று. ஆரம்பத்தில் அது கவிதையில் மட்டுமே வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வீட்டிலும் உறவிலும் நட்பிலும் உண்டாகின்ற வேறுபாடுதான் ஊடுதல். அது வராமல் இருக்கப் பார்க்கலாம். இருந்தும் அது பெரும்பாலும் பொய்க்கும் முயற்சியாகத்தான் ஆகும். இங்கு வள்ளுரின் கருத்து அருமையானது. ஊடுதல் வரும். வந்தே தீரும். வரவும் வேண்டும். வந்தால்தான் நம்முடைய காதலையும் உறவையும் நட்பையும் வளப்படுத்திக்கொள்ள முடியும். ஒருவரையொருவர் இன்னும் தெளிவாகப் பார்க்கமுடியும். முன்பைவிட மேலும் இன்பமாக வாழமுடியும். வளமையும் தெளிவும் இன்பம் வளர்க்கும் தேவைகளே.

திருக்குறளை மனப்பாடப் பகுதிக்காகவும், ஒப்புவித்தல் போட்டிக்காகவும், கட்டுரை மேற்கோள்களுக்காகவும் அல்லாமல் உணர்ந்து ஈடுபடும் விதத்தில் குறளை சிறார், பதின்மவயதினருக்கு சுவாரஸ்யமாக எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்?

மனப்பாடம் செய்வதும் நல்லதுதான் ஆனால் அது கட்டாயமாக இருக்கக்கூடாது, விரும்பிச் செய்யவேண்டும். மிக முக்கியமானது என்னவென்றால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் அவரவர் தம் சொந்த குறள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, தனக்குப் பிடித்த ஒரு குறளும் இக்கால வாழ்க்கையும் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் குறித்த அனுபவங்கள். அதோடு ஒரு குறளை மனதில் வைத்துக்கொள்வது எவ்வாறு நன்மைபயக்கும் என்பதை சொந்த அனுபவத்தின் வழியாகக் காட்டவேண்டும்.

சில இடங்களில் எனது மொழிபெயப்பும் பயனுள்ளதாக இருக்கலாம் என்று நம்புகிறேன். தமிழ் சிறாரும் பதின்மவயதினரும் அவ்வளவாகத் தமிழ் பேசாத நாடுகளில் ஒரு வழிகாட்டியாகவும் குறளைத் தமிழிலும் படிக்க அழைக்கும் கருவியாகவும் மொழிபெயர்ப்பு அமையலாம்.

ஔவையின் மூதுரை, நல்வழி பாடல்களை ஏற்கெனவே மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளீர்கள் [Give, Eat, and Live: Poems of Avvaiyar, Translated by Thomas Hitoshi Pruiksma, Red Hen Press, 2009]. தற்போது The Kural. மேலும் தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புத் திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா? தொடர்ந்து பழந்தமிழ்ச் செல்வங்களைச் சரியான முறையில் உலகறியச் செய்வதற்கு தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றி!

சென்ற ஆண்டில் (2022) ஆண்டாள் அருளிய திருப்பாவையை மொழிபெயர்த்து என்னுடைய நண்பர் ஜான் (C.F.John) என்னும் கலைஞரோடு இணைந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாசுரத்தையும் முன்வைத்து ஓர் உரையாடல்.

இவ்வாண்டிலோ அடுத்த ஆண்டிலோ வெளிவரும் என்று நம்புகிறேன். நாவல் ஒன்றும் எழுதிக்கொண்டு வருகிறேன்.

மொழிபெயர்ப்புத் துறையில் எனக்குள்ள சிக்கல் என்னவென்றால் ஒரு படைப்பை என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. படைப்புதான் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்னுடைய அனுபவம் அப்படி. ஆகவே அடுத்து என்ன வரும் என்று உங்களைப்போலவே நானும் காத்திருந்துதான் பார்க்கவேண்டும், வேறு வழி இல்லை!
இவ்வினிமையான உரையாடலுக்கு என் பணிவான நன்றி!