சீனப் புத்தாண்டு என்பது 1950 களிலும் 1960 களிலும் சீனர்களின் விழாவாகவே இருந்தது. பெரும்பாலும் சைனா டவுன் பகுதியில் கடைகளில் நிரம்பிவழியும் பொருட்களுடன் வியாபாரம் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்றைய சமுதாயம் இன, மொழி அடிப்படைகளில் பிரிந்திருந்ததால் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தீவெங்கும் பரவலாகக் காணப்படவில்லை. மேலும் தமிழர்கள் பெரும்பாலும் சீனர்களின் உணவுகளை அன்று உண்ண மாட்டார்கள். சீன உணவில் பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி மாமிசங்கள் கலந்திருப்பதால் தமிழர்கள் பொதுவாகத் தவிர்த்தனர்.
ஆனால் ஒன்று – சீனப் புத்தாண்டு வந்துவிட்டது என்பதைப் பலரும் அறிந்தது பட்டாசு வழியாகத்தான். சிங்கப்பூரில் எங்கெங்கு சீனர்கள் வாழ்ந்தனரோ, அங்கெல்லாம் பட்டாசு வெடிகள் வானைப்பிளந்து ஒலிக்கும். சீனர்கள் பெரும்பகுதியாக வாழும் தெருக்களில் வெடிக்குப்பைகள் அதிகமாக இருக்கும். அன்று சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு, பெரும்பாலும் தமிழர்கள், அதிகமான வேலை இருக்கும்.
அவர்களில் பலர் திட்டிக்கொண்டே தெருக்களைச் சுத்தம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு கடை, வீட்டிற்குமுன் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு அன்றைய சீனச் சமுதாயம் ஒரு சிறு தொகையைப் பையில்வைத்து அங்பாவ் (ang bao) வழங்கியது. அதனால் அன்றையதினம் பணியாளர்களுக்கு வேலை அதிகமென்றாலும் பணத்தைப் பெற்று மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அக்காலத்தில் சீனப் புத்தாண்டு அன்று எல்லாச் சீனக் கடைகளும் மூடியிருக்கும். அதனால் சிங்கப்பூர் கிட்டத்தட்ட செயல் இழந்ததுபோல் தோன்றும். சீனப் பெருநாளுக்கு முதல்நாள் பெரும்பாலும் சீனர்கள் தங்களுடைய விற்பனையில் பேரம்பேச மாட்டார்கள். நான் கேட்ட விலையில் பொருட்களைத் தந்திருக்கிறார்கள்.
என்னுடைய வகுப்பிலிருந்த சீன நண்பர்கள் முக்கியமாகக் கூறிய ஒன்று இன்றும் எனக்கு வினோதமாக இருக்கிறது. சீனப் பெருநாளுக்கு முந்தைய இரவு அவர்களுடைய சமையலறையில் இருக்கும் கடவுள் தேவலோகத்திற்குச் சென்று அந்தக் குடும்பத்தை பற்றிய குறிப்புகளைக் கொடுப்பாராம். அவ்வாறு குறிப்புகளைக் கொடுக்காமல் இருப்பதற்கு அவரின் வாய் திறவா வண்ணம் உதடுகள் ஒட்டிக்கொள்ளும்படியான உணவுகளை அந்தக் கடவுளுக்குப் படைப்பார்களாம். அப்போது தமிழரான நாம் கும்பிடும் சாமிக்கு வாய்ப்பூட்டுப் போடும்படி எத்தகைய உணவளிப்பது என்று சக தமிழ் மாணவர்களுடன் சேர்ந்து கவலையுடன் தீவிரமாகச் சிந்தித்தது உண்டு.