மெல்ல மெல்ல எங்கள் சந்திப்புகள் வருடத்திற்கு ஓரிருமுறை என்பதாக மாறியிருந்தது. தொலைபேசி அழைப்பையும் ஏற்கவியலாத தூரத்துக்குச் சென்றுவிட்டிருந்தார்.
கனகராஜ் சாரைப் பார்க்கப் போயிருந்தேன். அவரைச் சந்திப்பதைக் குறித்து முன்பெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. எப்போதும் பரபரப்பாக இருப்பவர். அவர் பரபரப்பைத் தேடிக் கொண்டாரா அல்லது பரபரப்பு அவரைச் சூடிக்கொண்டதா என்று கண்டுபிடிக்க இயலாத வகையில் ஓடிக்கொண்டேயிருப்பார். அவரைச் சந்திப்பதற்கு ஒருவாரத்துக்கு முன்பாகவே தகவல் சொல்லிவிடவேண்டும். அதன்பின்னரும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குறுஞ்செய்தி வழியாக நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எல்லாம் சரியாக அமைந்ததென்றால் அவரைச் சந்திக்க இயலும். கடைசி நிமிடத்தில்கூட ஏதாவது ஓர் அவசர அழைப்பு வந்துவிடலாம், உடனே ஓடிவிடுவார்.
இம்முறை நான் தொலைபேசியில் அழைத்ததும் உடனே அவர் என் அழைப்பை ஏற்றுக்கொண்டது எனக்கே வியப்பாக இருந்தது. வழக்கம்போல “அடுத்த வாரம் உங்களைச் சந்திக்க வரலாமா?” என்றபோது, “ஏன், நாளையே சந்திக்கலாமே?” என்றார். நான் அழைத்த எண் சரியான எண்தானா என்று மறுபடி உறுதிப்படுத்திக்கொண்டேன். வாழ்க்கை எத்தனையோ விசித்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டேன்.
கனகராஜ் சார் ஒரு பெரிய பெட்ரோலிய நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்தவர். துறைசார்ந்த பேச்சாளர். அவரது உரைகளைக் கேட்பதற்கு துறையின் நிபுணர்கள் காத்திருப்பார்கள். நானும் அவரது மேற்பார்வையில் சிலகாலம் வேலை செய்திருக்கிறேன். அவரிடமிருந்து குறிப்பிடத்தகுந்த சில விஷயங்களைக் கற்றிருக்கிறேன். காலவோட்டத்தில், நான் வேறு நிறுவனங்களுக்குச் சென்றுவிட்டேன். ஆனாலும், அவரை அவ்வப்போது சந்தித்து வந்தேன்.
இப்போ கவிழுத்து போட்ட வண்டி மாதிரி பொழுத நகர்த்த முடியாம கிடக்கேன். இது ஒரு மாதிரி ஆபத்தான நிலை என புரிகிறது .
உயர் பொறுப்புகள், துறைசார்ந்த கூட்டங்கள், நிர்வாகச் சிக்கல்கள், அதனைத் தீர்க்கும் விதங்கள் என சதா ஓய்வில்லாமல் சுழன்றபடி இருப்பவர். ஒரு கட்டத்தில் அவரைச் சந்திப்பது அசாத்தியமாக ஆகியிருந்தது. மெல்ல மெல்ல எங்கள் சந்திப்புகள் வருடத்திற்கு ஓரிருமுறை என்பதாக மாறியிருந்தது. தொலைபேசி அழைப்பையும் ஏற்கவியலாத தூரத்துக்குச் சென்றுவிட்டிருந்தார்.
மறுநாள் மாலை சரியாக ஐந்து மணிக்கு அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். அவரே வந்து கதவைத் திறந்தார். கடந்த சில வருடங்களில், ஆள் பாதியாக இளைத்து விட்டிருந்தார். முதுமையின் வாயிலில் பிரவேசித்திருப்பதன் அடையாளங்கள் அவரது உடலில் தெரிந்தன.
“என்ன சார், ஆள் பாதியா இளச்சுட்டீங்க?” என்றேன
“மீதிய என் கம்பெனிக்கு குடுத்திட்டேன்” என்றார் சிரித்தபடி.
தொலைக்காட்சியில் ‘மெகா சீரியல்’ ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. அவர் தொலைக்காட்சி பார்க்கக் கூடியவரல்ல. அதற்கான நேரமும் அவருக்கு இருந்ததில்லை.
“ஆச்சர்யமா இருக்கா..” என்றார்.
“ஆமாம்” என்றேன்.
சிலர் "நான் வேலையை திருமணம் செய்து கொண்டவன்" என்று பெருமிதமாகச் சொல்லி கொள்ளவும் செய்வார்கள்
“ரிட்டயர்ட் ஆயிட்டேன். வேறென்ன செய்றதுன்னு தெரியல. உலகமே இப்போ புதுசா தென்படுது. வேலைல இருந்தப்போ எல்லாமே இருந்தது, நேரத்தைத் தவிர. இப்போ நேரம் மட்டும்தான் இருக்கு. பையன் ஸ்காட்லேண்டுல இருக்கான். மனைவி கோயிலுக்கு போயிடுவா, இல்லைன்னா உறவுக்காரங்க வீடுகளுக்குப் போயிடுவா. நமக்கு அதெல்லாம் செட் ஆகல. டி.வி. அதவிட்டா முகநூல். இதுவும் சலிச்சுப் போச்சு. எதையும் புதுசா கத்துக்குற முனைப்பும் இல்ல. நீயெல்லாம் வேலை முடிச்சு வீட்டுக்குப் போனா இலக்கியம் வாசிக்கிற ஆள். அந்த மாதிரி நான் எதுவுமே செய்யல அல்லது கத்துக்கல. வேலை, அது சார்ந்த படிப்பு, அது சார்ந்த டென்ஷன்.. அப்படியே காலம் போயிருச்சு. இப்போ கவிழ்த்துப் போட்ட வண்டி மாதிரி பொழுத நகர்த்த முடியாம கிடக்கேன்.இது ஒரு மாதிரி ஆபத்தான நிலைன்னு புரியுது. இதுல இருந்து எப்படி மீள்றதுன்னும் தெரியல” என்றார்.
“வேலைல இருந்தப்போ பொண்டாட்டி குழந்தையோட சரியா நேரம் செலவழிக்கல. அதனால இப்போ அவங்ககிட்ட என்னோட நேசத்த புதுப்பிச்சுக்கவும் முடியல. எனக்கு அந்த மாதிரி முயற்சிகள் ஒருவகை போலித்தனமா சுயநலமா தென்படுது. இப்படியே இருந்துடலாமேன்னும் தோணுது. தெருவுல இறங்கிப் போனா ஜனத்தொகையெல்லாம் விஸ்வரூபமெடுத்து மூச்சை முட்டுது. பார்க்கில வாக்கிங் போறப்ப கூட இன்னொருத்தர் தோளோட தோள் இடிக்காம நடக்க முடியல. நிலம் குறுகிட்டு வருது. ஜனம் அதிகரிச்சுட்டே போகுது. என் காலம் கடந்திருச்சோன்னு நினைக்கிறேன்” என்ற கனகராஜ் சாரைப் பார்த்து, “அப்படியெல்லாம் இல்ல சார், இப்போதான் நீங்க உங்களச் சுத்தியிருக்கிற உலகத்த முதன்முதலா ஆழமா கவனிக்க ஆரம்பிச்சிருக்கீங்க” என்றேன்.
“உங்களுக்குப் பிடிச்ச நண்பர்களோடப் பொழுதக் கழிக்கலாமே சார்” என்றேன்.
எல்லாமே மிக எளிமையாகத்தானே இருந்திருக்கிறது. இதைப்போய் ஏன் நாம் சிக்கலாக்கிக் கொண்டோம் என்று புரிகையில் காலம் கடந்துவிடுகிறது.
“அதுவும் முடியலப்பா. அவங்க என்னைத் தேடி வந்தப்ப நான் பிஸியா இருந்துட்டேன். இப்போ எனக்கு நேரம் இருக்கும்போது அவங்களப் பிடிக்க முடியல. உன்னமாதிரி என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒருசில நண்பர்கள் அப்பப்போ பார்க்க வர்றாங்க. அவ்வளவுதான். இவ்வளவு வருஷமா உயர் பதவியில இருந்து ஈகோ கெட்டிப்பட்டிருச்சு. அதனால, இப்போ தெருவில இறங்கிப் போனா, எதிர்ல வர்ற ஒவ்வொருத்தரும் என்ன ஏளனமாப் பார்க்கற மாதிரி ஒரு உணர்வும் எனக்குள்ள உருவாயிட்டிருக்கு.. கரைதட்டின கப்பல் மாதிரி ஸ்டக் ஆயிட்டேன்” என்றார்.
எனக்கு அவருக்கு என்னவிதமான ஆறுதல் வார்த்தைகள் சொல்வதென்று தெரியவில்லை. என்னை விட பல வருடங்கள் மூத்தவர். அதனால் அவருக்கு ஆலோசனை சொல்வதற்குக் கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. வேலை வேலை என்று வேலையைக் கட்டிக்கொண்டிருப்பவர்கள் ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்கள். இவர்களில் சிலர் “நான் வேலையைத் திருமணம் செய்து கொண்டவன்” என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். வேலை சார்ந்த உயரங்களை அடைந்துவிடுவார்கள். ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். ஒரு கட்டத்தில் வேலை அவர்களைக் கைவிடும்போது, அவர்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது. ஏனெனில், வேலை தங்களைக் கைவிடும் என்ற நிலையை அவர்கள் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை.
“ஆனா, எனக்கு ஒருவிஷயம் ரொம்ப ஆச்சர்யமா இருக்குப்பா. இப்போல்லாம் என்னச் சுத்தியிருக்கிற இந்த உலகமே மெதுவா இயங்கிட்டு இருக்கற மாதிரித் தோணுது. ஒருநாள் நான் வேலைபாத்த மணலி ஆஃபிஸுக்குப் போனேன். நான் போனப்ப, அதிசயம் மாதிரி, அந்தப் பாதையில எந்த போக்குவரத்து நெரிசலும் இல்ல. பெரிய சிக்னல்கள்ல போலீஸும் இல்ல. எந்தச் சிக்கலும் இல்லாம, எந்த டென்ஷனும் இல்லாம, பூ மாதிரி கார ஓட்டிக்கிட்டுப் போனேன். நான் இத்தன வருஷமா போன பாதையில எத்தனை பள்ளிக்கூடம், எத்தனை பழமுதிர்சோலை, எத்தனை செல்போன் கடைகள்.. இதையெல்லாம் முன்னாடி நான் கவனிச்சதேயில்ல. இத்தனைக்கும் டிரைவர்தான் காரை ஓட்டுவார். நான் ஃபைல பாத்துக்கிட்டே போயிருக்கேன். ஒருநாள் கூட ஜன்னலுக்கு வெளிய வேடிக்கை பாத்ததில்லைன்னு நினைக்கிறப்ப வெட்கமா இருக்கு” என்றார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வீட்டிற்கு அப்பால் எதுவுமில்லை’ என்ற கதையில், கதைநாயகனுக்குத் தனக்கு என்ன தேவையோ அது மட்டுமே அவன் பார்வையில் தோன்றும். அவனது வீடு, அலுவலகம், அவன் செல்லும் பேருந்து, இவற்றைத் தவிர வேறு எதுவும் அவனது பார்வை வட்டத்தில் விழுவதில்லை. கனகராஜ் சார் சொல்லச் சொல்ல, எனக்கு அக்கதைதான் நினைவுக்கு வந்தது.
கனகராஜ் சாரிடமிருந்து விடைபெற்றுத் திரும்பும் வழியில் எனக்குத் தோன்றியது, வாழ்க்கை முழுக்க ஒருவழிப் பாதையில் சிக்கிக்கொண்டவர்கள் அல்லது ஒருவழிப்பாதையே உலகமாய் வாழ்ந்தவர்களுக்கு மாற்று வழிகள் புலப்படுவதில்லை. ஒருவழிப் பாதையின் முடிவுக்கு வந்து நிற்கையில் அதற்கப்பால் பாதை தென்படாதபோது அவர்கள் பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். ஆனால், எல்லாமே மிக எளிமையாகத்தானே இருந்திருக்கிறது. இதைப்போய் ஏன் நாம் சிக்கலாக்கிக் கொண்டோம் என்று புரிகையில் காலம் கடந்துவிடுகிறது.
அதிகாலையில் ஒரு ரவுண்டானா
கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்
ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை
எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு
காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிட முடியாதது
திடீரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.
அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது
மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க
இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்
தாவா ஏதுமின்றித் தத்தமது வழியில் போகின்றன.
சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?
சபரிநாதனின் இக்கவிதை சொல்வதுபோல, எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சாலைக்கு இப்படியொரு சாதாரண முகமும் இருக்கிறது. எப்போதுமே பரபரப்பான வாழ்க்கையின் நடுவிலும் இப்படியான சாதாரண அன்றாடங்களும் ஒளிந்திருக்கின்றன. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியொரு எருமை மெதுவாக, மிக மெதுவாக, மிக மிக மெதுவாக காதுகளை அசைத்தும், கொம்புகளை அசைத்தும் நடைபோடுகிறது. நம்முடைய பரபரப்பின் கூர்வாளால் அந்த எருமையை ஒருபோதும் கொன்றுவிடாமல் பாதுகாப்போமாக.