அறுமீன் காதலன்: தமிழொளியில் மின்னும் சிந்துவெளி எழுத்துகள்

பேராசிரியர்
‘அசோகன்' அஸ்கோ பர்ப்போலா

அசோகன் என அன்புடன் அழைக்கப்படும் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா, இந்தியவியல், தெற்காசியக் கல்வித்துறையின் கௌரவப் பேராசிரியராக ஃபின்லாந்தின் ஹெல்சிங்க்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர் 1941இல் ஃபின்லாந்தில் பிறந்தவர். சிந்து சமவெளி வடிவங்களைப் புரிந்துகொள்ளுவதில் கணினியை அறிமுகப்படுத்தியது, அவ்வடிவங்களுக்கு வேறு எந்த மொழிக்குடும்பத்தைக் காட்டிலும் திராவிட மொழிக்குடும்பம் நெருக்கமாக அமைகிறது என ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது ஆகிய இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் ஏப்ரல் 2022இல் இணைந்து ஏற்பாடுசெய்த இணையவழிக் கருத்தரங்கில் அவர் பேசியதன் சுருக்கமான மொழிபெயர்ப்பு இங்கே. முழு நிகழ்ச்சியையும் காண:https://youtu.be/nbStc8vEeW0

சிந்து சமவெளி நாகரிகம் உலகின் ஆகப்புராதன நாகரிகங்களுள் ஒன்று. ஏறக்குறைய 4500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அதற்கு முந்தைய காலத்தியதாக எகிப்திய, சுமேரிய நாகரிங்களைக் குறிப்பிடலாம்.

-அறுமீன்

முதன்முதலில், 1875இல், ஒரு கல்லாலான முத்திரை ஹரப்பாவிலிருந்து (இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதி) கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்பிறகு சுமார் 150 ஆண்டுகளுக்குப்பின், சிந்து சமவெளி நாகரிகம் 1920இல் கண்டறியப்பட்டது. அப்போதிருந்தே சிந்து சமவெளி எழுத்துகளை வாசிப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன, ஆனால், எந்த முயற்சியும் பரவலாக ஆய்வாளர்களால் ஏற்கப்படவில்லை.

வேறு பழங்கால நாகரிகங்களின் எழுத்துகளை வெற்றிகரமாக வாசித்த முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட சில அணுகுமுறைகள் சிந்து எழுத்துகளை வாசிக்கும் முயற்சிகளுக்குப் பயன்பட்டன என்றாலும், தொடர்புடைய வேறு எழுத்துகள் இன்மை, மொழிபெயர்ப்புகள் வரலாற்றுத் தகவல்கள் இன்மை, எழுத்துகளுக்கிடையில் இடைவெளிக் குறிகள் இன்மை உள்ளிட்ட சவால்களும் நிறையவே இருந்தன.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த சிந்து முத்திரைகள், பொறிப்புகளைப் பார்வையிட 1971இல் அந்நாடுகளுக்குச் சென்றேன். அப்போதுதான் இன்னும் வெளியிடப்படாத, வெளியுலகு அறியாத ஏராளமான முத்திரைகளும் பொறிப்புகளும் இருப்பதைக் கண்டேன். எம் ஆய்வுக்குழு முதல் வேலையாக அவற்றின் படங்களைச் சேகரித்துத் தொகுத்து வெளியிடத் தொடங்கியது. இதுவரை நான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன, மேலும் இரண்டு வரவுள்ளன.

கிடைத்துள்ள 400க்கும் மேற்பட்ட சிந்து வடிவங்களைத் திறம்படப் பகுப்பாயும் பொருட்டு, 1982இல், கணினியில் உள்ளீடு செய்தோம். அவற்றுள் பல வடிவங்கள் சிற்சில வேறுபாடுகளுடன் ஒன்றுபோலவே இருந்தன. அவற்றை ஒத்திசையும் வடிவ முறைகளைக்கொண்டும் (concordance) அவை பொறிக்கப்பட்டுள்ள இடங்களிடையே உள்ள ஒற்றுமைகளைக்கொண்டும் (context) புரிந்துகொள்ள முயன்றோம்.

என்னுடைய ஆய்வு முறைமை இரண்டு அடிப்படையான விஷயங்களைக் கொண்டது; மொழி, எழுத்துமுறை. முதலாவது, சிந்து மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த வேறு தனித்தியங்கும் மொழிகள் இருப்பதை உறுதிசெய்வது. இரண்டாவது, சிந்து வடிவங்களின் தன்மை எந்த வகையான எழுத்துமுறையைச் சேர்ந்தது எனக்கண்டறிவது. ஏனெனில் எழுத்துமுறைகளுக்கு ஏற்ப அவற்றை வாசிக்கும் முயற்சியின் அணுகுமுறைகளை மாற்றவேண்டியிருக்கும்.

தெற்காசிய, மேற்காசிய, தென்கிழக்காசிய, திராவிட மொழிக்குடும்பங்களை சிந்து மொழிக்குடும்பத்துடன் ஒவ்வொன்றாக ஒப்பிட்டு ஆராய்ந்ததில் திராவிட மொழிக்குடும்பம் (மொத்தம் 26 மொழிகள்) நெருக்கமாக இருந்ததைக் கண்டோம். ரிக்வேத காலத்து (பொ.ஆ.மு.1200) இந்தோ ஆரிய மொழியில் திராவிட மொழியிலிருந்து பெறப்பட்ட முகம், களம், பழம் போன்ற சொற்கள் இருந்தன. உறவுகளுக்குள் திருமணமுறை அமைப்புகளிலும் இம்மொழிகள் பேசப்பட்ட பகுதிகளில் ஒற்றுமைகள் இருந்தன. அது கூடுதல் உறுதிப்பாட்டைத் தந்தது.

அடுத்தது எழுத்துமுறை. எழுத்துமுறைகளில் ஆகப்பழமையானது சித்திர எழுத்துமுறை (logo-syllabic, பொ.ஆ.மு.3300). அதன்பிறகு அவற்றிலிருந்து எளிமைப்படுத்தப்பட்ட அசைவெழுத்துமுறை (syllabic, பொ.ஆ.மு.2300). கடைசியாக எகிப்திய எழுத்துமுறையை எளிமையாக்கி அமைக்கப்பட்ட அகரவரிசை எழுத்துமுறை (alphabetic, பொ.ஆ.மு.1600). சிந்து வடிவங்கள் சித்திர எழுத்துமுறையைச் சேர்ந்தது என்பதை உறுதிசெய்தோம். சித்திர எழுத்துமுறை என்றால் குறிக்கவிரும்பும் தோற்றத்தைப் படமாக வரைந்துவிடும் முறையன்று, ஒலிப்பு வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு வடிவம் எங்கே பொறிக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக்கொண்டு அவற்றின் அர்த்தத்தை ஊகிக்க முயன்றோம். எடுத்துக்காட்டாக, அச்சு முத்திரைகளில் இருக்கும் வடிவங்கள் வணிக, நிர்வாக, அடையாள, உத்தரவாத அர்த்தங்களைக்கொண்ட சொற்களாக இருக்கலாம். ஆயுதங்கள் என்றால் அதற்கேற்ப பொருள் மாறலாம்.

பொறிப்புகளிலுள்ள குறிப்படங்களும் உதவின. எடுத்துக்காட்டாக, V வடிவப் பொருள் ஒன்றுடன் மண்டியிடும் மனிதரைக் காட்டும் பொறிப்பொன்று, V வடிவம் வருமிடங்களில் ‘பானை’ என்ற அர்த்தத்தில் சரியாகப் பொருந்தியது. ஆனால் அர்த்தம் விளங்கினாலும் இச்சொற்கள் சிந்து சமவெளி நாகரிக மொழியில் எவ்வாறு உச்சரிக்கப்பட்டன என்பதைக் கண்டறிய இயலாது.

இவ்வாறு சிந்து எழுத்துகளுக்கு அர்த்தங்களை அளிக்கும்போது அவை ஹரப்பா பின்புலத்தோடு பொருந்தவேண்டும், தெற்காசியப் பாரம்பரியத்தோடு ஒத்துப்போகவேண்டும் அதோடு மெசபடோமிய (இன்றைய ஈராக், அதைச் சுற்றிய சில பகுதிகள்) தொடர்புகளோடும் இணைந்து வரவேண்டும். எடுத்துக்காட்டாக, ஹரப்பா பானை ஓடொன்றில் நட்சத்திரங்களும் மீன்களும் ஒன்றாகப் பொறிக்கப்பட்டிருந்தன. இன்றும் அனைத்து திராவிட மொழிகளிலும் மீன் என்னும் சொல் இருக்கிறது. மீன், விண்மீன் இரண்டுமே மின்னுகிறது. ‘மின்'(னுதல்) என்னும் வேர்ச்சொல் நெருக்கம் இருக்கிறது. ஆகவே தொடர்பும், பொருளும் அமைந்து வருவதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட
முதல் முத்திரை

சித்திர எழுத்துகளில் மீனைக் கண்டறிவது மீனை மட்டும் கண்டறிவதல்ல. ஆறு கோடுகளும் அதற்கருகில் மீனும் இருப்பதுபோல ஒரு சிந்து வடிவம் கிடைத்துள்ளது. ஆறுமீன் அல்லது அறுமீன் எனப் புரிந்துகொள்ளலாம். ஆறு குழந்தைகளாகப் பிறந்து ஆறு கார்த்திகைப் பெண்டிரால் ஒன்றிணைந்தவன் என்னும் புராணத்தின்படி முருகனுக்கு ‘அறுமீன் காதலன்’ எனவொரு பெயருண்டு. ஒரு ஹரப்பா கடவுளுக்கு அருகிலும் அதே கோடுகளும் மீனும் வரையப்பட்டுள்ளதால் அது முருகன்தான் என்பதை அழுத்தமாகச் சொல்லமுடிகிறது. வெளி, வெள்ளி, வேள் போன்ற வேறுபல தொடர்புகளையும் கொண்டு பிற இடங்களில் அதன் பொருத்தப்பாட்டை உறுதிசெய்தோம். இதுபோலப் பல எடுத்துக்காட்டுகளை அளிக்கமுடியும்.

திராவிட மொழிகளுள் தமிழ் இன்றும் அதன் அத்தனை மாற்றங்களுடனும் தன் பழமையை ஆக அதிகமாகத் தக்கவைத்துள்ளது என்பதாலும், தமிழின் செழுமையான இலக்கிய வளம் ஏராளமான தொன்மையான சொற்களைக் காப்பாற்றிக்கொண்டு வருவதாலும் சிந்து எழுத்துகளைப் புரிந்துகொள்வதற்கு ஆய்வாளர்களுக்குத் தமிழ் பெருமளவில் உதவிவருகிறது.