கவிதை காண் கதை – 10

0
430

கவிதை காண் காதை

கணேஷ் பாபு

சாங்கி விமான நிலையத்துக்கு சீனியை வரவேற்கச் சென்றிருந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் சிங்கப்பூருக்கு வருகிறார். அவர் இங்கிருந்து கிளம்பியபோது அவரை வழியனுப்பச் சென்றதும் நான்தான். அந்த நாட்களில் அவரைக் கண்கொண்டு பார்க்கவியலாது. துக்கத்தில் முழுக்க ஒடிந்துபோயிருந்தார்.

கொரோனா ஊரடங்கு துவங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அவர் வேலை பறிபோயிருந்தது. தொட்டாற்சிணுங்கி போன்ற மனப்பாங்குடையவர் அவர். சிறு வசதிக்குறைவையே தாளாமல் புலம்பக் கூடியவர். அப்படிப்பட்டவருக்கு வேலை பறிபோனதும், அவருடைய உலகமே இருண்டுவிட்டிருந்தது. அவர் அதுவரை எதிர்கொண்டதில் ஆக அதிகமான சங்கடம் அதுதான். இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகான சில நாட்களில் அவரது நடவடிக்கைகள் மாற்றமடையத் துவங்கின.

வேலை பறிபோனதும், அவருடைய உலகமே இருண்டுவிட்டிருந்தது. அவர் அதுவரை எதிர்கொண்டதில் ஆக அதிகமான சங்கடம் அதுதான்.

நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். வழியில் எதிர்பட்டாலும் எவரிடமும் முகம் கொடுத்துப் பேசாமலானார். நான் மட்டுமே அவரது புறக்கணிப்பையும் மீறித் தொடர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நம்பிக்கை அளிக்கும் சொற்களைப் பேசிக்கொண்டேயிருந்தால் நாளடைவில் மனம் அதை நம்பத் துவங்கிவிடும் அதிசயத்தை அவரிடம் கண்டேன். அவநம்பிக்கையின் மண்ணில் முழுக்கப் புதையுண்டு போன அவரை, ஒரு கிழங்கை அகழ்ந்தெடுப்பதைப் போல மெல்ல மெல்ல மீட்டெடுத்தேன். உடனே மீண்டும் வேறு வேலைக் கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஊரில் இருந்தபடியே முயன்று கொண்டிருந்தார்.

சாலை முனையில் அவருக்குள் இருந்த நம்பிக்கையின் மணிக்கதவத்தை அவ்வார்த்தைகள் திறந்து கொடுத்துள்ளன.

இடையில் நான் அடிக்கடி அவருடன் தொலைபேசி வாயிலாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் மிகுந்த மனச்சோர்விலும் குழப்பத்திலும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அருகிலுள்ள தேவாலயச் சுவர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்திருக்கிறார். “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே” என்பதில் துவங்கி “நான் உனக்கு முன்பாகச் செல்கிறேன்” என்பதுவரை அவர் ஒவ்வொரு சொல்லாக மீண்டும் மீண்டும் படித்திருக்கிறார். அந்தச் சாலை முனையில் அவருக்குள் இருந்த நம்பிக்கையின் மணிக்கதவத்தை அவ்வார்த்தைகள் திறந்து கொடுத்துள்ளன. “சொல்லுக்கு மிஞ்சிய மருந்து இல்லடா.. அந்த மதில்ல இருந்த ஒவ்வொரு சொல்லும் ஒரு விளக்கு. அந்த வெளிச்சத்தப் பிடிச்சுக்குட்டே மேலேறி வந்துரலாம்” என்று சொன்னார்.

நாமும் எத்தனையோ முறை அதுபோன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவர்களைக் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், அவை ஏன் நம் அகத்துக்குள் விழவில்லை? காரணம், நோயுற்றவனுக்கே மருந்து கிடைக்கிறது. அகம் எரிந்து கொந்தளிக்கையில், வார்த்தைகளின் மெய்யான வெளிச்சத்தை அது அறிகிறது. சாதாரண தருணங்களில் அது இயல்வதில்லை. எண்ணிப் பார்த்தால், அப்படி தனக்குள் மட்டற்ற வெளிச்சத்தை ஏந்தியபடி எத்தனை சொற்கள் நம் பேரிலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றன? வள்ளுவரின் ஒவ்வொரு குறளின் சொற்களும் சூரியப் பிரபைகளல்லவா? அவற்றின் மெய்யான ஒளியை உண்மையில் நாம் உள்வாங்கிக் கொண்டோமா? என்ற குற்றவுணர்ச்சியும் மேலிடுகிறது.

ஆனால், அந்தக் குற்றவுணர்ச்சி நெடுநாட்கள் தொடரவில்லை. சீனிக்கு நம்பிக்கையூட்டிய என்னால், என் சொந்தக் கவலைகளை வெல்ல முடியாமல் போனது. சமீபத்தில் ஏற்பட்ட சில நெருக்கடிகளால் மனம் சோர்ந்திருந்த சமயத்தில், ஒரு கவிதையை வாசிக்க நேர்ந்தது. நவீனக் கவிதையென்றாலே எதிர்மறைக் கூறுகளும், இருண்மையும் நிறைந்தது என்று எவர் சொன்னாலும் அவர் முகத்தின்முன் தூக்கிக் காட்டப்பட வேண்டிய கவிதை இது. ஒவ்வொரு சொல்லும் ஒளியினால் மட்டுமே ஆனது. வே.நீ.சூர்யா எழுதிய ஒரு கவிதை.

உன் பாதை

ஒவ்வொரு இலையும்
ஓர் உலகமன்றி வேறென்ன
நீ சஞ்சலப்படுவதும்
பின் சஞ்சாரம் செய்வதும் எதற்காக?
சூரியப்பிரபையில்
தலையாட்டி பொம்மை போலாடும் மரகதப்பச்சையைப் பார்
எகிறிக்குதி அதனுள்
நீண்டு செல்லும் நரம்புகளே உன் பாதை
தொடர்ந்து போ அதனூடே
கிளைகள் மலைகள்
ஏறு உன் காற்றுப்பைக்கு முகில் காட்டியவாறு
அழற்கதிரெனும் மஞ்சள் குதிரையேறி
சூரியனைக் கடந்து சென்றுவிடு
என்ன ஆயினும்
நூறாயிரம் இருள் உன் சித்த அம்பரத்தில் கவிந்தாலும்
இலைகளிருக்கின்றன உனக்கு
இன்னும் ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்
அதோ பச்சை வண்ணம் உன்னை அழைக்கிறது பார்
போ

இந்தக் கவிதையை நான் வாசித்த தருணத்தில் என் சித்த அம்பரத்தில் உண்மையில் நூறாயிரம் இருள் கவிந்திருந்தது. ஆனால், ஒரு கவிதை அந்த மையிருட்டுக்குள் மரகதப்பச்சை நிற இலைகளைப் புகுத்தி வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டது. அதன்பின் என் சித்த அம்பரத்தில் இருள் கவிவதில்லை. சிறிய சோர்வு ஏற்பட்டாலும் இக்கவிதைகளில் உள்ள இலைகள் நினைவுக்கு வந்துவிடும். “ஆம். இலைகளிருக்கின்றன எனக்கு. இலைகளிருக்கின்றன எனக்கு” என்று மனம் ஆசுவாசம் கொள்ளும்.

நவீன கவிதையின் ஒருமுனையில் பிரமிள் எழுதிய ‘பாலை’ கவிதையையும் அதன் மறுமுனையில் வே.நி.சூர்யாவின் இந்தக் கவிதையையும் வைக்கத் துணிவேன். முன்னது, ஆழ்ந்த துக்கத்தையும் கழிவிரக்கத்தையும் தனக்குள் கொண்டது; பின்னது, நம்பிக்கையையும் பசுமையையும் ஈரத்தையும் முன்வைப்பது. இரண்டு கவிதைகளுமே உண்மையானவை. ஒரு சொல்லும் செயற்கையானதில்லை.

இரண்டுமே மெய் அனுபவங்களாகவும் இருக்கலாம். ஆனால், இலக்கியம் என்பது இருளைக் காமுறுவது போலத் தோன்றினாலும் அது உண்மையில் ஒளியைக் காதலிக்க விழைவது. ஒளியைக் கனவு காண்பது. பல நேரங்களில் ஒளியைத் தொட்டுவிடுவதும் கூட. அதை வாசிக்கும் மனிதனுக்குள்ளும் ஒளியைப் பாய்ச்ச வல்லது இலக்கியம்.

இரண்டுமே மெய் அனுபவங்களாகவும் இருக்கலாம். ஆனால், இலக்கியம் என்பது இருளைக் காமுறுவது போலத் தோன்றினாலும் அது உண்மையில் ஒளியைக் காதலிக்க விழைவது.

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்
என் பாதம் பதிந்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல்தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

பாலைவனம் இருக்கக்கூடிய பூமியில்தான் பசிய இலைகளும் இருக்கின்றன. நான் இலைகளைத் தேர்தெடுத்தேன். வே.நி. சூர்யா காட்டும் மரகதப்பச்சை நிற இலைக்கொத்தாக இருந்தாலும் சரி, அல்லது ஓ.ஹென்றியின் கதையில் வருவது போன்ற இறுதி இலையானாலும் சரி, இலைகளை விரும்பத் தொடங்கிவிட்டால் இருளிலிருந்து அகன்றுவிடலாம் என்று நம்புகிறேன். பசுமையின் தூதுவர்களல்லவா இலைகள்.

சீனிக்கு மீண்டும் சிங்கப்பூரிலேயே வேலை கிடைத்துவிட்டது. அவர் பணிபுரிந்த நிறுவனத்திலேயே மீண்டும் அவரைச் சேர்த்துக்கொண்டார்கள். ‘கூலிங்கிளாஸ்’ அணிந்தபடி வந்தார் சீனி. ஆரத் தழுவிக்கொண்டோம். வெளியே கண்ணாடித் துருவலாய் மழை தூறிக் கொண்டிருந்தது. வீடு நோக்கி டாக்ஸியில் திரும்பிக்கொண்டிருந்தபோது சாலையின் இருமருங்கிலும் மரங்களின் இலைகள் ஈரத்தைச் சொட்டிக்கொண்டிருந்தன. ஒருகணம் அன்னை முலைகள்போல அவை நம்பிக்கைப் பாலைச் சொட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.