சிங்கை வரலாற்றெழுத்தின் சுடர்

0
447
ஷாநவாஸ்

‘தமிழ் இதழ்கள் 1875 – 1941’ என்ற தலைப்பில், பிப்ரவரி 2011இல், ஆய்வாளர் பாலபாஸ்கரனின் உரை நிகழ்ச்சி வாசகர் வட்ட ஏற்பாட்டில் அங் மோ கியோ நூலகத்தில் நடைபெற்றது. முதன் முதலில் அவரை அங்குதான் சந்தித்தேன். சிங்கை வர்த்தமானி தொடங்கி, சிங்கைநேசன், தங்கை நேசன் என்று சுமார் 50க்கும் மேற்பட்டப் பத்திரிகைகளை அவை ஆரம்பித்த ஆண்டுகள், காரணங்கள், ஆசிரியர்கள், ஒவ்வொன்றும் அற்ப ஆயுளில் முடிந்த கதைகள் என அவர் ஆற்றொழுக்காக விவரித்துச் சென்றதைக் கண்டு மலைத்துப் போனேன்.

ஒரு பத்திரிகையின் மூடுவிழா நடக்கும்போது புதிதாக இன்னொரு பத்திரிகையாளர் முளைத்துவந்து அடுத்த பத்திரிகையைத் தொடங்கிவிடும் அன்றைய ஆர்வத்தை அவர் தொகுத்தளித்த நீண்ட பட்டியலில் கண்டேன். அதனால் உண்டான உற்சாகத்தால் மேலும் இதழியல் வரலாற்றை அறிந்துகொள்ளவும், ஆண்டு வாரியாகப் பிரித்துப் பத்திரிகைகளின் முகப்புப் பக்கங்களைச் சேகரிக்க உதவியாகவும் அவர் வீட்டுக்குத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.

பாலபாஸ்கரன் அவர்களை அன்றிலிருந்து கடந்த 12 ஆண்டுகளாக அவருடைய இல்லத்திற்குச் சென்று சந்திப்பதும், நண்பர்களை அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடுவதுமாக இருந்திருக்கிறேன். மிகவும் சுருக்கமாகப் பேசக்கூடியவர். இலக்கியப் போக்குகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை முகத்துக்கு நேராகவே சொல்லிவிடும் இயல்பு கொண்டவர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றாலும் சமநிலை இழக்காமல் தான் தொகுத்து வைத்திருக்கும் கைப்பிரதிகளை நூலாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். நொபொரு கராஷிமா 2015இல் இறந்தபோது அவரைப்பற்றிய அஞ்சலிக் குறிப்பை தி சிராங்கூன் டைம்ஸில் வெளியிட எழுதி வாங்கினேன். ‘கல்வெட்டு பேசும் தமிழன் சரித்திரம், ஐம்பது ஆண்டு அதைக் கேட்டுச் சொன்ன கராஷிமா’ என்ற தலைப்பில் அதுவரை வெளிவராத பல தகவல்களுடன் அக்கட்டுரை வெளியானது.

‘கோ சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை’ என்ற அவரது நூலை 2016இல் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் வெளியிட்டோம். அந்த நூலுக்கு சிங்கப்பூர் இலக்கியப் பரிசும் கரிகாற்சோழன் விருதும் பெற்றார். இலக்கிய வரலாற்றுப் பாதையில் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை உணரவைக்கும் கட்டுரைகள் அடங்கியது அவரது ‘சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம், சில திருப்பம்’ என்ற நூல். ம.நவீனும், லதாவும், சிவானந்தம் நீலகண்டனும் அவருடைய நூல்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகள் வல்லினம், தி சிராங்கூன் டைம்ஸ் இதழ்களில் வாசிக்கக் கிடைக்கின்றன.

ஒரு படைப்பை ரசித்து வாசிப்பதும், தர்க்கரீதியாகப் பகுத்துத் தொகுப்பதும் இருவேறு அணுகுமுறைகள். சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் பற்றி விமர்சனத் தொகைநூல் எதுவும் வரவில்லை, அது வரவேண்டும் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார். ஜப்பானிய ஆக்கிரமிப்பு பற்றிய புனைவு நூல்களும், அல்புனைவு நூல்களும் அண்மைக்காலத்தில் சிங்கப்பூரில் வரிசைகட்டி வெளிவருவதைப் பற்றி அவர் மகிழ்ச்சி அடைந்தாலும் அவை ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில் இல்லை என்பது குறித்துத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் .

துணைவியாருடன் பாலபாஸ்கரன்

தமிழர் வரலாறு தானாக வாராது, ஆராய்ந்து எழுதவேண்டும்! சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குக் காட்டிய அக்கறையை நாம் சிங்கப்பூரின் அடிநாளைய தமிழர் வரலாற்றுக்குக் காட்டி இருக்கிறோமா? ‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர் – தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ என்னும் இவ்வட்டாரத் தமிழர் வரலாற்று ஆய்வுநூல், ‘மலாயா மான்மியம்’, ‘சிங்கப்பூர் தமிழர் இருநூற்றுவர்’ போன்ற தமிழ் ஆளுமைகளின் தொகுப்புகள் போன்ற சில குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் நடந்துள்ளபோதிலும் தமிழ்ச் சமூக வரலாற்றில் இன்னும் ஆய்வுசெய்யவும் பதிவுசெய்யவும் எஞ்சியிருப்பவை ஏராளம்.

பனிக்காட்டு நாடுகளில் அவ்வப்போது ஏதோவொரு ஆதாரத்தைக் கண்டறிவதும் அதைவைத்து வரலாற்றைத் தோண்டி எடுப்பதும் எனத் தொடர்முயற்சிகள் நடப்பதைக் கேள்விப்படுகிறோம். தாய்மொழியிலேயே அவர்களுக்கு நிறையத் தரவுகளும் கிடைக்கின்றன. தென்கிழக்காசியப் பின்னணியில் இந்தியர்களின் குடியேற்றங்களை ஆய்வுபூர்வமாக இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் நிறைய எழுதினர். அதில் சிங்கப்பூர் பெரிய அளவில் இடம்பெறவில்லை எனத் தன் வருத்தங்களை அடிக்கடி வெளிப்படுத்துவார். ‘நகரகிகோத்தாகமா’ என்னும் 1365இல் வெளியான ஜாவானிய நூலைப்பற்றிக் கேள்விப்பட்டு, “அதை எப்படியாவது பெற்றுத்தாருங்கள் அதில்தான் துமாசிக் பற்றிய ஆரம்பகால வரலாறு எழுதப்பட்டுள்ளது” என்றார். அவர் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற இயலவில்லை.

மிகவும் சுருக்கமாகப் பேசக்கூடியவர். இலக்கியப் போக்குகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை முகத்துக்கு நேராகவே சொல்லிவிடும் இயல்பு கொண்டவர்.

மலாக்காவில் ஆட்சி நடத்திய மன்னர் பரமேச்வரா, நாடுபிடிக்கும் காலங்களில் பலதடவை பதுங்கிச் சென்ற இடமாக சிங்கப்பூர் இருந்ததையும், சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயில் எழுந்தது 1821இல் என நம்புகிறோம் ஆனால் அதற்கு முன்பே, 14ஆம் நூற்றாண்டில் பல இந்துக் கோயில்கள் ஃபோர்ட் கானிங்கில் கட்டப்பட்டிருக்கின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றை மேலும் ஆராய்ந்து புகுந்து எழுதும் எழுத்தாளர்கள் இன்று நம்மிடம் இருந்தும், நாட்டம் காட்டுவதில்லை என்பார்.

ஆய்வு செய்வோரிடம் நுனிப்புல் மேயும் பழக்கம் கூடிவருகிறது. ஆகவே, திறன்மிகுந்த புதிய ஆய்வாளர்களை உருவாக்க நாம் முனையவேண்டும். அப்போதுதான் தேசிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாக இயலும். வரலாற்று ஆய்வாளர்கள் தானாகவே உருவாக மாட்டார்கள், அதற்கும் ஊக்கம் தேவை. ஆராயப்பட வேண்டிய, இந்தியர்களின் வாழ்வுப் பின்னணி இன்னும் நிறைய உள்ளது. அதுவே சிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியின் அடையாளம் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்ல படைப்பாளர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பார்.

அவர் உடல் நலிவுற்றிருந்த கடந்த சுமார் 10 ஆண்டுகளில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். அவர் துணைவியார் 2020இல் இறந்ததால் அவர் மனம் நலிவுற்று இருந்தபோது நண்பர்களைப் பார்க்க விரும்பினார். ம.நவீன் சிங்கப்பூர் வரும்போதெல்லாம் அவரைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கனகலதா, அருண் மகிழ்நன், சிவானந்தம், பொன் சுந்தரராசு ஆகியோரோடு அவரைப் பார்த்து வருவோம். அருண் அவர்களின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடினோம். அதுவே பாலபாஸ்கரன் கடைசியாக வெளியில் வந்த தருணமாக அமைந்துவிட்டது.

அவருடன் குறுகிய தூரமே நான் பயணித்துள்ளேன் ஆனாலும் முக்கியமான தருணங்களில் அவருடன் இருந்திருக்கிறேன். இறுதிக் காலத்தில் அவர் மிகவும் கனிந்துவிட்டார். நோயுற்று சிகிச்சையில் இருந்தபோதும் தன் உடல் நலம் பற்றிய பேச்சுக்களை அறவே தவிர்ப்பார். அவ்வப்போது நண்பர்களைச் சந்திக்கும் ஆவலை வெளிப்படுத்துவார். உடல் சூழ்நிலை எதுவும் அவரது மெய்யான படைப்பூக்கத்தைக் குறைக்கவில்லை மாறாக நெருக்கடிகளுக்கு மீறிய எதிர்விசையுடன் வெளிப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

உடல் சூழ்நிலை எதுவும் அவரது மெய்யான படைப்பூக்கத்தைக் குறைக்கவில்லை மாறாக நெருக்கடிகளுக்கு மீறிய எதிர்விசையுடன் வெளிப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

Tamil Journalism in Singapore and India 1875 – 1941 (Filling up the Gap ) என்னும் ஆங்கிலக் கைப்பிரதியையும், ‘சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல’ என்னும் தமிழ்ப் பிரதியையும் மெய்ப்பு பார்த்து தி சிராங்கூன் டைம்ஸ் வெளியீடாகப் பதிப்பிக்கக் கொடுத்துள்ளார். அவருடைய அறை முழுதும் நிரம்பியுள்ள குறிப்புகளை ஒழுங்குபடுத்தி உடல்நலம் கடுமையாகச் சரிவதற்கு முன்பே பத்திரப்படுத்தியுள்ளார்.

Early Tamil Printing (books and periodicals) in Singapore and Malaysia, The Indian Mutiny in Singapore in 1915, The Origin and Growth of the Tamil Nesan and the Tamil Murasu என மூன்று தலைப்புகளில் அவர் சேகரித்து வைத்துள்ள எழுத்துப் பிரதிகளையும் தொகுத்து நூல்களாகக் கொண்டுவரவேண்டும். அதுவே அந்த முன்னோடி ஆய்வாளருக்கு நாம் செய்யும் அஞ்சலி.