சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல

பாலபாஸ்கரன்

ஒரு சீனப் புத்தாண்டு தினத்தில் (பிப்ரவரி 15, 1915) இங்கு நிகழ்ந்த இந்திய சிப்பாய்க் கலகத்தைக் குறிப்பிடாமல் சிங்கப்பூர்ச் சரிதத்தை எழுதமுடியாது. வட இந்தியாவின் பல பகுதிகளில் பிரிட்டிஷ் கொடுங்கோன்மை நிர்வாகத்தை எதிர்த்து 1857-1858இல் 18 மாதம் நீடித்த இந்திய சிப்பாய்க் கலகத்துடன் இதை ஒப்பிட இயலாது.

முதல் விடுதலைப் போராட்டம் என்றும் கூறப்படும் வடஇந்தியர் கலகத்தில் செத்து மடிந்தவரின் சரியான எண்ணிக்கை ஒரு போதும் தெரியப்போவதில்லை. ஒரு லட்சம் இந்தியரும் 11 ஆயிரம் பிரிட்டிஷாரும் உயிரிழந்தனர் என்பது ஒரு கணக்கு. கலகம் முடிந்து இந்தியரைப் பழிவாங்கும் படலம் தொடங்கியபோது மொத்தம் எட்டு லட்சம் பேர் இறந்துபட்டனர் என்பது மற்றொரு கணக்கு.

கலகத்தின் காரணமாகவும் நோய் நொடிகள், பஞ்சம் பசி பட்டினியாலும் பழிவாங்கும் நடவடிக்கைகளாலும் 1857லிருந்து அடுத்த பத்தாண்டுவரை பத்து மில்லியன் பேர் உயிரிழந்தனர் என்பதை மும்பை வரலாற்றாசிரியர் அமரேஷ் மிஸ்ரா லண்டனில் ஆராய்ச்சி செய்தபோது கண்டறிந்தார். வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மாண்ட ஜான்சி மகாராணி லட்சுமிபாய் வெளிப்படுத்திய மகத்தான தீரமும் போராட்டமும் இந்த விடுதலைக் கிளர்ச்சியில் அடங்கியுள்ளன.

ஊட்ரம் ரோடு சிறைச்சாலையில் அனைவருக்கும் தெரியும்படி
சுட்டுக்கொல்லப்பட்ட சிப்பாய்கள் (மார்ச் 1915)

சிங்கப்பூர்க் கலகத்திலும் பிரிட்டிஷாரை எதிர்த்தவர்கள் டாங்லின் (Tanglin) ராணுவ முகாமில் தங்கியிருந்த வடஇந்திய சிப்பாய்கள்தாம். ஐந்தாம் காலாட்படையின் வீரர்கள் அவர்கள். பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். முதல் உலகப் போரில் துருக்கிய விவகாரம் ஒரு முக்கிய அங்கம். போரின் ஒரு கட்டமாகத் தங்களைத் துருக்கிக்கு எதிராகப் போர்செய்ய அனுப்பிவிடுவார்கள் என்ற வதந்தியை நம்பி இங்கிருந்த முஸ்லிம் துருப்பினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். துருக்கிக்கு ஆதரவாக நிதியும் திரட்டி அனுப்பினர். முதல் உலகப் போரில் துருக்கி சுல்தான் ரஷ்யாவின் பக்கம் சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் உள்ள இந்திய முஸ்லிம்களுக்கு இது இக்கட்டான நெருடலைக் கொடுத்தது. பிரிட்டனா துருக்கியா என்று அவர்கள் சங்கடப்பட்டார்கள்.

மொத்தம் 47 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஊட்ரம் சிறைச்சாலையில்,சுவருக்கு வெளியேபொதுமக்களின் பார்வையில பகிரங்கமாகச்சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஐந்தாம் காலாட்படையின் 815 வீரர்களில் பாதிப்பேர் பிப்ரவரி 15 திங்கட்கிழமை பிற்பகல் மூன்றரை மணிக்குத் தங்கள் கைவரிசையைத் தொடங்கினர். முதல் நடவடிக்கையாக முகாமின் ஐந்து பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் அதிகாரிகள் மூன்று பேர் உடனே மாண்டனர். மற்ற இருவர் தப்பிவிட்டனர். கொக்கோஸ் தீவுக்கப்பால் ஆஸ்திரேலியா ஜெர்மனியின் எம்டன் கப்பலைத் தாக்கியபோது கைதான 309 ஜெர்மானியர் டாங்லின் முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பிரிட்டிஷாருக்கு எதிராகத் தங்களுடன் சேர்ந்துகொள்ளுமாறு கிளர்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டு, சிறைக் காவலர் அனைவரையும் சுட்டுக் கொன்றனர். ஆனால் ஜெர்மானியர் 17 பேரும் டச்சுக் கைதிகள் 3 பேரும் மட்டுமே வெளியே வந்தனர்.

கிளர்ச்சியாளரில் ஒரு தரப்பினர் வழியில் கண்டவரை எல்லாம் சுட்டுத் தள்ளிக் கொண்டே கெப்பல் துறைமுகம், பாசிர் பாஞ்சாங் நோக்கிச் சென்றனர். இரவு சூழத் தொடங்கியது. வெள்ளைக்காரப் பெண்டிரும் குழந்தை குட்டிகளும் படகுகளில் ஏறிக் கடலில் நின்றுகொண்டிருந்த கப்பல்களில் அடைக்கலம் புகுந்தனர். பிரிட்டிஷ் Cadmus கடற்படைக் கப்பல் பிறகு துறைமுகத்தில் வந்து அணைந்தது. கிளர்ச்சியாளர்கள் சிதறிச் சென்றனர். பொதுமக்களின் பயமும் சற்று நீங்கியது.

பிப்ரவரி 17 அன்று, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் ஆகியவற்றின் போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்தன. கடற்படை வீரர்கள் கிளர்ச்சியாளர் பலரை விரட்டிச் சரணடைய வைத்தனர். பலர் ஜோகூருக்குத் தப்பியோடினர். ஜோகூர் சுல்தான் அவர்களை வளைத்துப் பிடித்து சிங்கப்பூரிடம் ஒப்படைத்தார். பிப்ரவரி 20அன்று ரங்கூனிலிருந்து நான்காம் பிரிட்டிஷ் பட்டாளத்தினர் வந்து சேர்ந்தனர். அலைந்து திரிந்த மற்ற கிளர்ச்சியாளர்களும் பிடிபட்டார்கள்.

சரியாக ஒரு வாரம் கழித்து, பிப்ரவரி 23 அன்று, குற்ற விசாரண ஆரம்பமானது. மொத்தம் 47 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஊட்ரம் சிறைச்சாலையில், சுவருக்கு வெளியே, பொதுமக்களின் பார்வையில் பகிரங்கமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைப் பார்வையிட 15 ஆயிரம் பேர்வரை கூடினர். மாண்ட சிப்பாய்களின் எண்ணிக்கை 56. சிப்பாய்களின் மனத்தை மாற்றி அவர்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிய குற்றத்திற்காக மன்சூர் காசிம் என்ற குஜராத்தி காப்பிக் கடைக்காரர் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷ் ராணுவத்தினர் 33 பேரும் பொதுமக்கள் 14 பேருமாக மொத்தம் 47 பேர் உயிரிழந்திருந்தனர்.

பிறகு கட்டாய ராணுவப் பயிற்சி கொண்டுவரப்பட்டது. ஆனால் 18 முதல் 55 வயது வரையிலான பிரிட்டிஷார் மட்டுமே பயிற்சி பெற முடியும். மற்ற இனத்தவருக்குப் பயிற்சி வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தியர் அனைவரும் தங்களைக் கட்டாயமாகப் பதிந்து கொண்டு, அனுமதிப் பத்திரம் எடுத்துக்கொண்டுதான் நடமாட வேண்டும் என்ற அவசரக் கட்டளை வெளியானது. முஸ்லிம் விவகாரங்கள் பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முகம்மதிய ஆலோசனை மன்றம் என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு 1915 பிற்பகுதியில் நிறுவப்பட்டது. அதேபோல இந்து விவகாரங்கள் பற்றி ஆலோசனை வழங்க இந்து ஆலோசனை மன்றம் 1917இல் அமைக்கப்பட்டது. சிப்பாய்க் கலவரத்தின் விளைவாக, இந்தியர் தொடர்பில் அவசரமாக அமைக்கப்பட்ட அவ்விரண்டு மன்றங்களும் இன்றுவரை தொடர்ந்து நீடிக்கின்றன.

ராஃபிள்ஸ் அவரது முதல் மனைவி ஒலிவியா, இரண்டாம் மனைவி சோஃபியா

பிரச்னைகளோடு பிறந்த சிங்கப்பூர் எப்படி வளரத் தொடங்கியது என்பதையும் எத்தகைய சிக்கல்கள் முகிழ்த்தன என்பதையும் அப்போதைய அதிகாரிகள் அவற்றை எவ்வாறு அணுகினார்கள் என்பதையும் எடுத்துச்சொல்ல ஏராளமான ஆவணங்களும் கட்டுரைகளும் புத்தகங்களும் வரைபடங்களும் ஓவியங்களும் பத்திரிகைச் செய்திகளும் ஒலி-ஒளிப்பதிவுப் படைப்புகளும் மலிந்து கிடப்பது அதிசயத்திலும் அதிசயம். சின்னஞ்சிறு சிங்கப்பூருக்கு வாய்த்த வரலாற்றுச் சித்திரங்கள் அதையொத்த மற்ற ஊர்களுக்கு இவ்வளவு அதிக அளவில் கிடைத்திருக்குமா?

ராஃபில்சின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் முழு நூல்கள் மட்டும்,1897முதல்2008வரை,16 வெளியாகின.மற்ற நூல்கள்,
கட்டுரைகள் தனி.

இன்றும் சிங்கப்பூரைப் பற்றிப் புதுப்புதுத் தகவல்களும் புத்தகங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. ராஃபில்சின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் முழு நூல்கள் மட்டும், 1897 முதல் 2008 வரை, 16 வெளியாகின. மற்ற நூல்கள், கட்டுரைகள் தனி. அவருடைய மனைவி சோஃபியா ஹல் நிறைய ஆதாரங்களைப் பொழிந்து அவருடைய பாணியில் ஏற்கனவே 1830இல் ஒரு சுருக்கமான வரலாறும், 1835இல் இரண்டு பகுதிகளாக ஒரு நீளமான வரலாறும் எழுதினார். ராஃபில்சின் வாழ்க்கையைப்பற்றி இப்போது நாம் அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கு சோஃபியாவின் புத்தகம் அவசியம்.

ராஃபில்சின் முதல் மனைவி ஒலிவியாவைப் பற்றி இரண்டாவது மனைவி சோஃபியா மூச்சுவிடவில்லை. இந்த நூல்களில் இரண்டைத் தவிர எல்லாமே ராஃபில்சை அளவுக்கு மீறிப் புகழ்பாடும் ரகத்தைச் சேர்ந்தவை. ராஃபில்சைக் குறைகூறி எழுதுவோர் மிக அரிது. வித்தியாசமான இந்த எதிர்ப்போக்கு ரகத்தைச் சேர்ந்ததுதான் சையட் ஹுசேன் அல்அத்தாஸ் 1971இல் வெளியிட்ட Schemer or Reformer? எனும் 65 பக்க ஆங்கிலப் புத்தகம்.

சையட் யாசின் என்பவர், 1823 மார்ச் 11, மாலை நேரத்தில், வெறித்தனமாகக் கர்னல் ஃபார்க்குவாரின் நெஞ்சில் கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டு, ஹை ஸ்ட்ரீட்டில் சையட் ஒமார் வீட்டு வாயிற்படியில் இந்துப் போலீஸ்காரரைக் குத்திக் கொன்றுவிட்டு அலைந்தபோது ஃபார்க்குவாரின் மகன் சிப்பாய்களுடன் வந்து யாசினைச் சாகடித்தார். செய்தியறிந்து ராஃபில்ஸ், முன்ஷி அப்துல்லா முதலானோர் வந்து கூடிவிட்டனர். சையட் ஒமாருக்கு, பினாங்கிலிருந்து குடியேறிய அரபு வர்த்தகரான சையட் யாசின் 1,400 வெள்ளி கடன்பட்டிருந்தார். கடனைத் தீர்க்காவிட்டால் சிறைவாசமென்று ஃபார்க்குவார் தீர்ப்பளித்ததால்தான் யாசின் ஆத்திரமடைந்து கத்திக்குத்தில் இறங்கி, மாண்டார்.

சிறைக்கைதிகள் வந்து யாசின் கால்களைக் கட்டி உடலை இழுத்துக்கொண்டு போய்த் திடலில் போட்டனர். மறுநாள் ராஃபில்ஸ் ஒரு மாட்டுவண்டி ஏற்பாடு செய்து யாசின் சடலத்தைக் கொண்டு போய்த் தஞ்சோங் மாலாங்-கில் (Teluk Ayer) ஒரு மரக்கம்பத்தில் கட்டி 14 நாள் தொங்கவிட்டார். பிறகுதான் தஞ்சோங் பாகாரில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் மலாய் இனத்தினரிடையே அதிருப்தி, சலசலப்பை உண்டுபண்ணியது. சையட் உசேன் அல்அத்தாஸின் புத்தகம், இந்தச் சம்பவத்தையும் ஜாவா நிர்வாகத்தில் ராஃபில்ஸ் மேற்கொண்ட சில முறைகேடான நிகழ்வுகளையும் கடுமையாகச் சாடியது.

ராஃபில்சின் விசித்திரமான வாழ்க்கை எனும் மணிமகுடத்தில் மகத்தான கோஹினூர் வைரமாக ஜொலிப்பது நவீன சிங்கப்பூரின் உதயம். ஜோகூர் சுல்தான் என்று அவசரம் அவசரமாக அங்கீகரிக்கப்பட்ட மலாய்த் தலைவர் ஒருவரிடமிருந்து, அதிகாரபூர்வமான ஓர் ஒப்பந்தத்தின்படி, சட்டபூர்வமாக சிங்கப்பூரைப் பெற்றுக்கொண்ட ஒரு சாதுரியமான சூழ்ச்சி இது என்று வரலாற்றாசிரியர் சிலர் வருணிப்பதுண்டு.

சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்துக் குடியேற்றம் நிறுவிய முறையில் ராஃபில்ஸ் நடந்துகொண்ட விதத்தையும் அதில் ஃபார்க்குவார் உள்ளிட்ட மற்றவர்களுக்குரிய பங்கை அவர் மறுப்பதையும் வரலாற்றாளர் குறிப்பிடாமல் போவதில்லை. ராஃபில்ஸ் புகழுக்கு ஆசைப்படுபவரே தவிர காசு பணத்துக்கு அலைபவர் அல்லர் என்றும் சொல்வதுண்டு.

சாமர்செட் சீமாட்டிக்குக் கடிதம் எழுதிய ராஃபில்ஸ், “இந்த இடந்தான் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய மலாய்ப் பரம்பரையினர் உருவாக்கிய பழைய சிங்கப்பூர்த் துறைமுகத் தலைநகரம். அதே இடத்தில்தான் இப்போது பிரிட்டிஷ் கொடியை ஏற்றியிருக்கிறேன் நான்” என்று இடத்தின் பழம்பெருமையைப் புகழ்ந்துரைத்தார். அதேபோன்று மற்றொரு நண்பருக்கு ராஃபில்ஸ் எழுதிய கடிதத்தில், “மலாய்க் கல்வி மட்டும் இல்லாமல் போயிருந்தால் சிங்கப்பூரைப் பற்றி எனக்கு அறவே தெரிந்திருக்காது” என்றார்.

ராஃபில்ஸ் வங்காளத்தின் ராணுவ நிர்வாகக் கழகச் செயலாளர் லெப்டனன்ட் கர்னல் ஜேம்ஸ் யங் என்பவருக்குக் கப்பலில் இருந்துகொண்டே கடிதம் எழுதினார். சிங்கப்பூரைத் தீர்வையற்ற துறைமுகமாக வைத்திருக்க வேண்டும் என்பதே என் உறுதியான முடிவு என்று பிரகடனப்படுத்தினார் ராஃபில்ஸ். வரியற்ற துறைமுகம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒரு பழக்கந்தான். ராஃபில்ஸ் அதைப் புதிதாய்க் கொண்டுவரவில்லை. அதிகமாக வரிவிதித்து வணிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கிய டச்சுக்காரரின் பழக்கத்தை முறியடித்து, அவர்களின் வர்த்தத்தை சிங்கப்பூருக்குத் திசைமாற்ற வரியற்ற துறைமுகமே சிறந்தவழி என்று தீர்மானித்தார் அவர். பினாங்குகூட 1826 நவம்பர் 21 அன்று தீர்வையற்ற துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.

தீர்வையற்ற துறைமுகமாக இருந்தபோதிலும் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட சூதாட்டம், கஞ்சாக்குடி, விபசாரம், ஆயுத விற்பனை ஆகிய கேடுகளைத் தாராளமாக அனுமதித்து அவற்றில் சம்பாதித்த முதலாளிகளை லட்சாதிபதிகள் ஆக்கி, ஏழைகளைப் பிழிந்தெடுத்த பாவங்கள் மலிந்த நகரம் (sin city) என்ற அடைமொழியால் சிங்கப்பூர் சற்று அருவருப்பாகப் பார்க்கப்பட்டது என்பதும் உண்மை.


(தொடரும்)