அஞ்சலி எம்.கே. நாராயணன் (1937-2023)

சிங்கப்பூரில் வானொலி முதலில் தன் ஒலிபரப்பைத் தொடங்கிய 1936க்கு அடுத்த ஆண்டுதான் எம்.கே.நாராயணன் பிறந்தார். சிங்கப்பூரில் வானொலி கேட்டு வளர்ந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த அவர் பின்னாளில் தமிழ் வானொலிப் பிரிவின் தலைவராக உயர்ந்தார்.

மாணவர் மணிமன்றத்திலும் பிறகு சிக்லாப் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். பள்ளிக் காலத்திலேயே நாடகத்தில் ஆர்வம்கொண்டிருந்தவர் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சலீம்-அனார்கலி நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி மேடையேற்றினார். சாங்கி வட்டார இந்திய மக்களின் நலனை முன்னிட்டு 1958இல் தொடங்கப்பட்ட ‘இந்தியர் நல நிலைய’த்தில் ‘கலைவாணி நாடகக்குழு’ என்ற துணை அமைப்பும் இருந்தது. அக்குழுவின் இயக்குநராகவும் நாடக எழுத்தாளராகவும் செயல்பட்ட நாராயணன், 12 மேடை நாடகங்களை அரங்கேற்றினார்.

சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்த ‘தென்றலுக்குப்பின் புயல்’ (1958), ‘அணைந்த தீபம்’ (1959) உள்ளிட்ட அவரது பல நாடகங்களில் பல்லினத்தோரும் சேர்ந்து நடித்தனர். சாங்கி தமிழ்ப்பள்ளிக் கட்டட நிதிதிரட்டலுக்காக ஹேப்பி வோர்ல்ட் அரங்கத்தில் மேடையேறிய இவரது ‘அன்பின் ஜோதி’ (1959) நாடகம் ஆயிரக்கணக்கில் ரசிகர்களை ஈர்த்ததோடு சுமார் 15,000 வெள்ளி திரட்டி சாதனையும் படைத்தது. பிறகு மீண்டும் இந்நாடகம் நியூ ஸ்டார் அரங்கில் (நியூ வோர்ல்ட், 1960) நிகழ்த்தப்பட்டது. பல புதிய கலைஞர்கள் இவரது நாடகங்களில் அறிமுகம் கண்டனர்.

நாராயணன் வானொலியில் முழுநேர ஊழியராக 1962 முதல் பணியாற்றத் தொடங்கினார். அதன்பிறகு கலைவாணி நாடகக்குழுவை விட்டுவிட்டாலும் நாடகங்கள் வானொலியில் தொடர்ந்தன. ‘மர்ம மேடை’ நாடகம் அடைந்த வெற்றி அவரை மர்ம, திகில், துப்பறியும், பேய் நாடகங்களின் நாயகராக ஆக்கியது. தொலைக்காட்சி 1963இல் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது அதிலும் இவரது பங்களிப்புகள் தொடங்கின.

ஏராளமான நாடகங்கள் மட்டுமின்றி மரபிசை, பண்பாட்டு நிகழ்ச்சித் தயாரிப்புகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.

நாராயணன் எழுதித் தயாரித்த ‘மகாபாரதம்’ 64 வாரங்களுக்கு (1986-88) தொடராக வெளிவந்து புகழ்பெற்றது. அதன் வீச்சின் காரணமாக அத்தொடர் 90களிலும் புத்தாயிரத்திலும் நான்குமுறை மறுஒளிபரப்பு கண்டது. புராணங்கள் மட்டுமின்றி ‘சிலப்பதிகாரம்’ போன்ற பழந்தமிழ்க் காவியங்கள், ‘கரித்துண்டு’, ‘சித்திரப்பாவை’ போன்ற நவீன இலக்கியப் படைப்புகளையும் நாடகமாக்கியுள்ளார். தென்கிழக்காசியாவில் இந்தியக் கலை, கலாசாரத்தின் செல்வாக்கை ஆராய்ந்து ‘சுவடுகள்’ தொலைக்காட்சித் தொடராக வழங்கியிருக்கிறார்.

தன் பங்களிப்புகளுக்காக முத்தமிழ்ச் செல்வர், கலைமாமணி, கலாரத்னா, தமிழவேள் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்ற எம்.கே.நாராயணன், கடந்த மாதம் (மார்ச் 2023) 86ஆம் வயதில் காலமானார்.

சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் (தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் அ.வீரமணி, மாலதி பாலா, மா.பாலதண்டாயுதம், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற வெளியீடு, 2019) நூலில் ‘வானொலியில் மகாபாரதம் படைத்த கலைமாமணி எம்.கே.நாராயணன்’ என்னும் தலைப்பில் அமுதம் சரவணகுமார் எழுதிய கட்டுரையின் சுருக்கமான வடிவம். ஓரிரு தகவல்கள் ‘தமிழ் முரசு’ (15.03.2013) அஞ்சலிக் குறிப்பிலிருந்து பெறப்பட்டன.

ஆற்றோரத்தில் ஒரு மாளிகை

கடந்த மாதம் மறைந்த ‘மர்மக்கதை மன்னன்’ எம்.கே.நாராயணனின் ‘ஆற்றோரத்தில் ஒரு மாளிகை’ நாவலின் ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து
ஒரு பகுதி…

ஆண்டுக்கு ஒருமுறையாவது மணிவண்ணனும் கலாவும் கோலாம்பூர் பத்துமலைக்குச் சென்றுவிடுவார்கள். முருகப் பெருமானைத் தரிசித்த பிறகு கோலாலம்பூரில் இருக்கும் கலாவின் உறவினர் வீட்டில் ஓரிருநாள் தங்கியிருந்துவிட்டு வீடு திரும்புவார்கள்.

மாளிகையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இரண்டுநாள் மாளிகையில் தங்கி இருந்துவிட்டு வரலாம் என்று கலியப்பெருமாள் கூறினார். மாளிகையில் இருநாள் தங்கி இருந்துவிட்டுப் பத்துமலைக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பலாம் எனக் கதிரவன் கூறியதை மணிவண்ணன் ஏற்றுக்கொண்டான். வசதிகளைப் பொறுத்து மாளிகையில் ஒருநாள் தங்குவதா இரண்டுநாள் தங்குவதா என்பதைப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்மானித்துக்கொண்டனர்.

கலியப்பெருமாள் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு கதிரவன் கூறக் கூற மணிவண்ணன் காரை ஓட்டினான். பெண்கள் இருவரும் பலவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பெகான் பட்டணத்தைத் தாண்டி கார் சென்றுகொண்டிருந்தது. சிறுசிறு மலாய்க் கிராமங்கள். பின்னர்ப் பொட்டல்வெளிகள் – காடுகள் எனக் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.

“அதோ…. அந்தச் சாலையில் திரும்பு மணி…” என்றான் கதிரவன்.

குறுகலான சாலை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பொட்டல் வெளி. ஆங்காங்கே சில மரங்கள்.. புதர்கள்.

சற்றுத்தொலைவில் மாளிகை தெரிந்தது.

“அதுதான்.. மாளிகை” என்று கதிரவன் கூவினான்.

மாளிகை கம்பீரமாக ஆற்றின் அருகே நின்றது.

ஆற்றோரத்தில் நின்று காரைப் பார்த்துகொண்டிருந்த கலியபெருமாள் காரை நோக்கி வந்தார்.

காரில் இருந்து இறங்கிய மணிவண்ணன், கதிரவன், கலா ஆகியோரை, “வாங்க தம்பி… வாங்கம்மா….” என்று கூறிய கலியப்பெருமாள். இறுதியாக இறங்கிய பத்மாவைப் பார்த்ததும் திடுக்கிட்டவராக அவளை நோக்கினார்.

“என்ன சார்… அப்படிப் பார்க்கிறீங்க… என் பேரு பத்மா…” என்று கூறிக் கதிரவனைப் பார்த்தாள்.

அதற்குள் கலா குறுக்கிட்டு, “இவதான் கதிரவனோட வருங்கால மனைவி” ”என்று அறிமுகப்படுத்தினாள்.

“என்னை மன்னிச்சிடுங்க. எங்கேயோ பார்த்த முகமா இருக்கேன்னு அப்படிப் பார்த்தேன்” என்றார். அதற்குள் மாளிகையில் இருந்து ஒருவன் வெளியே வந்தான். அவனைக் கண்டதும், “வா, வைரப்பா… கார்ல இருந்து பொருள்களை எடுத்துக்கொண்டு போய்வை…” என்று கூறிவிட்டு, “வைரப்பன் பொக்கானுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு அவனைக் கண்டதும், “வா, வைரப்பா… கார்ல இருந்து பொருள்களை எடுத்துக்கொண்டு போய்வை…” என்று கூறிவிட்டு, “வைரப்பன் பொக்கானுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்திலதான் இருக்கான். வாரத்துல ஒருநாள் வந்து மாளிகையைச் சுத்தம் செஞ்சுட்டுப் போவான். ரொம்ப நம்பிக்கையானவன்” என்று கூறியவர், “தம்பி, மாளிகை எப்படி இருக்கும்?” என்று மணிவண்ணனை நோக்கிக் கேட்டார். “இப்படிப்பட்ட பங்களாக்களை மாளிகைகளை சாங்கி, சொம்பவாங் பகுதிகள்ல பார்த்திருக்கேன். உயர் பதவியில RAF – Naval Baseல இருந்த ஆங்கிலேயர்களுக்காகக் கட்டப்பட்ட அந்த பங்களாக்கள் மாதிரி இருக்கே” என்றான் மணிவண்ணன்.

“சரியாச் சொன்னீங்க தம்பி. பக்கத்துல ஒரு ரப்பர் எஸ்டேட் இருந்தது. அந்த எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஓர் ஆங்கிலேயன் இந்த மாளிகையைக் காலனித்துவக் கட்டட அமைப்பு முறைப்படிக் கட்டி இருந்தான். பிறகு ஒரு சீனன் இதை வாங்கினான். அவன்கிட்ட இருந்ததுதான் உங்க அப்பா வாங்கினாரு. ம். வாங்க…” என்று கலியப்பெருமாள் முன்செல்ல மணிவண்ணன், கலா, கதிரவன், பத்மா நால்வரும் பின் தொடர்ந்தனர்.

பத்மாவுக்கு ஒரே ஆனந்தம். சின்னக் குழந்தைபோல பரபரவென்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரண்டு மாடி கொண்ட அந்த மாளிகையில் கீழ்த்தளாத்தில் வேலைக்காரர்களுக்கு என இரண்டு அறைகளும், ஒரு ’ஸ்டோர்’ ரூமும் இருந்தன. அதனை நிலவறை என்று குறிப்பிட்ட கலியப்பெருமாள் அதுபற்றிப் பிறகு கூறுவதாகக் கூறினார்.

மேல் மாடியில் ஐந்து அறைகள் இருந்தன. அந்த ஐந்து அறைகளில் நான்கு அறைகள் திறந்திருந்தன. ஒவ்வோர் அறையிலும் இருவர் படுத்துக்கொள்ளக் கட்டிலும், எழுதப் படிக்க ஒரு மேசையும் படுக்கை அறையுடன் இணைக்கப்பட்ட குளியல் அறையும் இருந்தன. நவீன வசதிகளுடன் கூடிய அந்த அறைகள் ஹோட்டல் அறைகளை நினைவூட்டக் கூடியவையாக இருந்தன.

இரண்டு அறைகள் ஆற்றை நோக்கி இருந்தன. ஓர் அறையில் மணிவண்ணனும் கலாவும் தங்கிக்கொள்ளலாம் என்றும் அடுத்த அறையில் கதிரவனும் பத்மாவும் தங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. தன் அறையைப் பத்மாவே தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஓர் அறையில் கலியப்பெருமாள் தங்கிக்கொள்வதாகக் கூறினார்.

“பலமுறை இங்க வந்திருக்கேன். ஆனா… தங்கினதே கிடையாது” என்றார் கலியப்பெருமாள்.

கதிரவன், பத்மா தேர்ந்தெடுத்த அறைக்கு எதிரே இருந்த அறையைச் சுட்டிக்காட்டிய கலியப்பெருமாள். “நான் முதன்முதலா வந்தப்பாவே கதவு திறக்க முடியாம பூட்டை யாரோ உடைச்சிருக்காங்க. அது அப்படியே stuck ஆகிட்டுது” என்றார்.
மணிவண்ணன் கதவுக் குமிழைத் திருப்ப முயன்றான், முடியவில்லை.

குமிழ் இருந்த இடத்தைக் காண்பித்து, “இந்தப் பகுதியை வெட்டி எடுத்தாத்தான் கதவைத் திறக்க முடியும். பிறகு புதுசா ஒரு கதவு செய்யணும். அதனாலதான் அப்படியே விட்டுவச்சிட்டேன். இன்னும் இரண்டு நாள்ல கதவை உடைச்சு வேறு கதவு போட ஏற்பாடு செஞ்சிடுறேன்” என்று கூறிய கலியப்பெருமாள் “ம் வாங்க கீழே போகலாம்” என்றார்.

மணிவண்ணன் தயங்கிக்கொண்டே, “நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த மாளிகையைச் சுத்தம் செய்து பராமரிக்கவும் – வைரப்பனுக்குச் சம்பளம் கொடுக்கவும்….?”
“எப்படிப் பணம் கிடைக்குதுன்னு கேட்கிறீங்களா தம்பி? கடைசியா என்னைச் சந்திச்சு உயில் எழுதச் சொன்னப்பவே உங்க அப்பா ரொக்கமாக இருபதாயிரம் ரிங்கிட் கொடுத்தாரு. அதைக் கொண்டுதான் எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கேன்” என்று கலியப்பெருமாள் விளக்கம் தந்தார்.

கீழே வந்தபோது, காபி, வாட்டப்பெற்ற ரொட்டித்துண்டுகளுடன் வைரப்பன் காத்திருந்தான்.
“ம்… எல்லாரும் காப்பி குடிங்க” என்று கூறிய கலியப்பெருமாள் “காலையில சிங்கப்பூர்ல இருந்து புறப்பட்ட நீங்க இங்க சரியா மூணு நாலு மணிக்கு வந்துடுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி மூன்றரை மணிக்கு வந்துட்டீங்க. சரி… இனி உங்க முடிவுதான்… அதாவது இங்க தங்கப் போறீங்களா… அல்லது?” கலியப்பெருமாள் கூறி முடிப்பதற்குள் பத்மா, “Oh, I like this place. Please, let it be a picnic for us,” என்றாள்.

“உங்களுக்கெல்லாம் இந்த மாளிகை ரொம்பப் பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும். முன்பு நாம் பேசினபடி நீங்க எத்தனை நாளைக்கு வேணுமுன்னாலும் இங்க இருக்கலாம்.. இன்னைக்குச் சாப்பாட்டுக்குன்னு வைரப்பன்… இதோ மீ கோரேங், ரோஜா, புரோட்டான்னு நிறைய வாங்கிட்டு வந்திருக்கான். நாளைக்குக் காலைச் சிற்றுண்டிக்கு ஏதாவது… வாங்கிட்டு வந்துடுவான். சொந்தமா சமைக்கணுமின்னாலும் அதுக்குள்ள வசதிகளும் இருக்கு” என்று கூறிய கலியப்பெருமாள் சமையல் அறையையும் காண்பித்தார்.

மின்சார சமையல் சாதனங்களுடன் அடுப்புக்கரி, மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பழைய முறை அடுப்புகளும் இருந்தன.

“எப்போதாவது மின்சாரத் தடை ஏற்பட்டா எவ்விதப் பாதிப்பும் இல்லாம தொடர்ந்து செயலாற்றலாம். இதே போல மெழுகுவத்திகளும், பெட்ரோமாக்ஸ் விளக்கும் இருக்குது” என்று கலியப்பெருமாள் கூறி, “ தம்பி, இதுதான் நிலவறை” என்று சுட்டிக்காட்டினார்.

“இது ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கே” என்று கதிரவன் கேட்டதற்கு “ஆமா, ஆனா, மணிவண்ணன் அப்பா இதை இடிச்சுக்கட்டிப் பூமிக்கடியில் ஓர் அறையைக் கட்டிட்டாரு” என்று கூறி அறைக்கதவைத் திறந்தார்.