அஞ்சலி ரெ. சோமசுந்தரம் (1949-2023)

சுமார் பத்து வயது நிரம்பியிருந்த சோமசுந்தரம், தமிழகத்தின் நற்சாந்துபட்டிப் பள்ளிமேடையில், ஓரங்க நாடகமொன்றில் அலெக்ஸாண்டரைப் போரில் சந்தித்த புருஷோத்தமன் என்ற இந்திய மன்னனாகக் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசிப் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றார். அப்போது அவரிடம் வந்துசேர்ந்த நடிப்பும் நாடகமும் அவருடனேயே வளர்ந்தன.

ரெ. சோமசுந்தரம்

சிங்கப்பூருக்கு ‘ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ்’ கப்பலில் 1959இல் வந்துசேர்ந்தார். உயர்நிலைக்கல்வி முடித்த நிலையில் மேற்கல்வியைத் தொடரவியலாத குடும்பச் சூழல். அன்றைய சிங்கப்பூரின் தமிழர் திருநாள், பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் ஓரங்க நாடகங்கள் தயாரித்து வழங்கினார். அக்காலப் பிரபலங்களான வரதன், பாலன், ஆதி, டி.ஆறுமுகம், ஜெயராமன் ஆகியோருடன் இனைந்து நடித்தார். முதலில் பகுதிநேரக் கலைஞராகவும் பிறகு முழுநேர ஊழியராகவும் சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றினார்.

பி.கிருஷ்ணனின் ‘வாழ்க்கையோ வாழ்க்கை’ இவரைச் சிறந்த வானொலிக் கலைஞராக அடையாளம் காட்டியது. ‘காட்சியும் கானமும்’, ‘இசை சொல்லும் கதை’, ‘கவிஞர் நெஞ்சம்’, தமிழில் பேசுவோம்’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். செய்தி வாசிப்பு, விளையாட்டு வர்ணனை என நாடகத்திற்கு அப்பாலும் பல துறைகளில் சிறந்துவிளங்கினார்.

எம்.கே.நாராயணன் எழுதித் தயாரித்த 64 வார வானொலி மகாபாரதத்தில் துரியோதனனாக நடித்தார். இராமாயணத்தில் ராவணன், ஒதெல்லோவில் டியூக் என இவர் ஏற்றுநடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் பேசும்படியாகவும் நீடித்து நினைவில் நிற்கும் வகையிலும் அமைந்தன. தொடக்கப்பள்ளி மாணவர்களிலிருந்து வளர்ந்த நடிகர்கள்வரைப் பல்வேறு தரப்பினரும் தம் கலைத்திறனை வளர்த்துக்கொள்ள உதவும்வகையில் பல பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்ததோடு, 1980களில் துணைச் செயலாளராகவும் பின்னாளில் தலைவராகவும் பணியாற்றினார். தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பல பொறுப்புகளிலும் துணைத்தலைவராகவும் 1990-2008 காலகட்டத்தில் செயல்பட்டுள்ளார். வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ‘சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள்’ (1990), ‘பெத்தமனம் கல்லு’ (2014) ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

கலைச்செம்மல் விருது, மதிப்புமிக்க சமூக சேவைக்கான பதக்கம் (Distinguished Service Medal, DSM), தேசிய தின விருது, சிறந்த நடிகர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனத் தன் கலை, சமூகப் பங்களிப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்ற ரெ.சோமசுந்தரம் கடந்த மாதம் (மார்ச் 2023) 74ஆம் வயதில் காலமானார்.

சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் (தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் அ.வீரமணி, மாலதி பாலா, மா.பாலதண்டாயுதம், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற வெளியீடு, 2019) நூலில் ‘கலைச்செம்மல் திரு ரெ.சோமசுந்தரம், DSM’’ என்னும் தலைப்பில் பாத்திமா சகாயராணி ஆரோக்கியதாஸ், குமார் சுபா அக்‌ஷ்யா, அம்ரிதா பூர்ணா கிரண், அடைக்காப்பன் கிருஷ்ணன் ஆகியோர் எழுதிய கட்டுரையின் சுருக்கமான வடிவம். ஓரிரு தகவல்கள் ‘தமிழ் முரசு’ (18.03.2013) அஞ்சலிக் குறிப்பிலிருந்து பெறப்பட்டன.