நம்பிக்கையைப் பெற்றபின்னரே நியாயமான விலை உயர்வு-கோகிலாதேவி

தொழில்தொடங்கும் ஆர்வம் இருந்தபோதும் நிலையான வருமானம் தரும் வேலையை உதறிவிட்டுச் சொந்த வியாபாரம் தொடங்குவது எளிதான முடிவாக இல்லை. என் கணவரின் ஊக்குவிப்பால் தைரியமாகக் குதித்து சுவா சூ காங்கில் 2020இல் கே.எஸ். மினிமார்ட்டைத் தொடங்கிவிட்டேன்.

கோகிலாதேவி
சில்லறைவிற்பனையாளர்

சில்லறை வர்த்தகத்தின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்கள். முழுநாளும் அசராமல் கடையில் இருக்கவேண்டும். ஆனால் தரமான பொருட்களை விற்கிறோம் என்கிற திருப்தி எனக்கு இருந்தது. ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் வாடிக்கையாளர்களாகக் கடைக்கு வரும்போது அது உறுதிப்பட்டது. பார்ப்பதற்கு எளிதாகக் தோன்றினாலும் அதீதப் பொறுமையும், விடாமுயற்சியும் தேவைப்படும் தொழில் இது. புது வாடிக்கையாளர்கள் எதிர்பாரத திசைகளிலிருந்து வரும்போது மேலும் உற்சாகத்துடன் உழைக்கவும் இன்னும் தொழிலை விரிவுபடுத்தவும் எண்ணம் பிறக்கிறது.

விற்பனைப் பண்டங்களின் விலையுயர்வு இத்தொழிலின் பெருஞ்சவால். ஒவ்வொரு நாளும் விலையில் மாற்றங்கள் இருக்கும் ஆனால் அதைக் காரணமாகக்காட்டி ஒவ்வொரு நாளும் விலையை மாற்றி விற்பது கடினம். வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை உருவாகும்வரை காத்திருந்துதான் விலையை உயர்த்தமுடியும். பொருளின் விலை விசாரித்த ஒருவரிடம் பின்னால் நின்றுகொண்டிருந்த பழைய வாடிக்கையாளர் ஒருவர் “இவர்களிடம் விலை சரியாகத்தான் இருக்கும்” என்று குரல் கொடுத்தபோது நெகிழ்ச்சி ஏற்பட்டது. நியாயமான விலை என் தொழிலின் தர்மம்.