கவிதை காண் காதை-11

0
598

பிரிவு

கணேஷ் பாபு

“வான்கண் விழியா வைகறை யாமம்” என்றொரு வரி சிலப்பதிகாரத்தில் உள்ளது. சூரியன் இன்னும் உதயமாகாத வைகறை இருள். “வான்கண்” என்று சூரியனைச் சொல்கிறார் இளங்கோ. ஆனால், அன்றைய வைகறையில் இவ்வரி மனதில் தோன்றினாலும், அதன் சொல்நயத்தை என்னால் ரசிக்க முடியவில்லை. விமானத்தைப் பிடிப்பதற்காக அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். மகள் பிறந்திருந்த சமயம் அது. குடும்பம் சென்னையில் இருந்தது. நான் பணி நிமித்தம் சிங்கப்பூருக்கும் லண்டனுக்கும் அலைந்துகொண்டிருந்தேன். இடையில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் விடுமுறையில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தேன்.

அன்று அதிகாலை லண்டன் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். வழக்கமான பயணப் பொதிகள், கூடுதலாகக் குளிராடைகள், கையுறைகள் எனக் கலந்துகட்டிப் பெட்டிகளைப் பூட்டிக்கொண்டிருந்தேன். ஒரு நிழலைப் போல மனைவியும் எல்லாக் காரியங்களுக்கும் உதவிக் கொண்டிருந்தாள். அந்தக் காலை வேளையில் சாப்பிடத் தோன்றவில்லை. வெறும் காபியை மட்டுமே பருக முடிந்தது. எல்லாம் சரியாக இருந்தது. பயணத்துக்குத் தயார். ஆனாலும், வீட்டை விட்டுக் கிளம்ப முடியவில்லை. கீழே டாக்ஸி காத்துக் கொண்டிருந்தாலும், உடனே புறப்பட்டுவிட முடியவில்லை.

எல்லாம் சரியாக இருந்தது. பயணத்துக்குத் தயார். ஆனாலும், வீட்டை விட்டுக் கிளம்ப முடியவில்லை. கீழே டாக்ஸி காத்துக் கொண்டிருந்தாலும், உடனே புறப்பட்டுவிட முடியவில்லை.

கண்ணுக்குப் புலப்படாத காலச்சுமையொன்று தோளில் அமர்ந்து கொண்டதுபோல உடம்பு கனத்து ஸ்தம்பித்தது. சோபாவில் அமர்ந்து கொண்டேன். வாசற்படிக்கப்பால் எதுவும் புலப்படவில்லை. திடீரென, வீடு அந்தரத்தில் மிதப்பது போல இருந்தது. அப்படியே இருந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்றும் நினைத்தேன். உடம்பிற்கு எதுவுமில்லை. இது பிரிவுத் துயரம் அளிக்கும் மனச்சுமை.

குடும்பத்தை விட்டுத் தனியாகப் பயணம் செய்யும் அதிகாலைகளில் எனக்கு மிகுந்த துயரத்தை அளிப்பது படுக்கையறை விளக்கின் சுவிட்சை மனைவி அழுத்தும் ஓசைதான். பிரம்மாண்டமானதொரு தேவாலய மணியின் ஓசையைக் காட்டிலும் கனத்த ரீங்காரத்தை எழுப்பக்கூடியது அந்த ஸ்விட்சின் ஒலி. அந்த ஸ்விட்சைப் போட்டதும் உடனே ஒன்று தோன்றுகிறதே, அதற்கு “ஒளி” என்றா பெயர்?

தொட்டிலில் உறங்கும் குழவியின் புன்னகை. இதந்தரு மனைவியின் மைத்தடங் கண்களில் நீர்த்தடம். அவளது விரல்களைப் பற்றியபடியே சிறிது நேரம்தான் அமர வாய்க்கிறது. அடுத்து எப்போது விடுமுறை கிடைக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாத பணிச்சூழல். மூளைக்குள் பணி சார்ந்த குடைச்சல்கள் வேறு. மூளை அலுவலகத்திலும் மனம் வீட்டிலுமாகப் பிரிந்து கிடக்கிறது. ஒருவழியாக அவளிடம் விடைபெற்று, வினாடிகளின் விசையை எதிர்த்து நீந்த முடியாமல் நீந்தி வாசற்படியைக் கடக்கிறேன். பிரிவின் கரங்கள் இட்டுச்செல்ல நடக்கிறேன். டாக்ஸி தெருமுனையில் மறைவது வரை இரு விழிகள் அதைப் பின்தொடர்கின்றன.

டாக்ஸி ஓட்டுநர் இத்தகைய எத்தனையோ பிரிவுகளைப் பார்த்திருக்கும் அனுபவத்தில் எதுவும் பேசாமல் வண்டியோட்டிக் கொண்டிருந்தார். அந்த அதிகாலையில் அவரைப் பார்க்கையில் எனக்குப் பொறாமையாக இருந்தது. அன்றிரவு அவர் வீடுதிரும்பும்போது அவரை வரவேற்க அவருக்கான மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா!

எண்ண அலைகள் என்னுள் விம்மியபடி இருந்தன. இந்த அதிகாலையிலும் உலகில் எண்ணிக்கையற்ற பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் எத்தனை லட்சம் மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களும் அவர்களுக்குப் பிரியமானவர்களைப் பிரிந்து செல்பவர்கள்தாம். அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கும் பிரியமானவர்களின் பிரிவுத்துயரோ மேலும் தீவிரமானது.

விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு பயணியின் பெட்டியும் அதனுள் இருக்கும் பொருட்களோடு பிரிவுத் துயரையும் சேர்ந்து சுமப்பவைதாம். முப்பது கிலோ என்பது பெட்டியின் கனம்தான். அதனுள் இருக்கும் பிரிவின் கனத்தை எந்தக் கருவியால் அளந்து விட முடியும்?

காலங்கள் தோறும் எத்தனையோ மனிதர்கள் தம் குடும்பங்களைப் பிரிந்தபடி வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். எண்ணிக்கையற்ற மனிதர்கள், தம் இளமையை முழுக்க வெளிநாடுகளில் செலவிட்டுப் பொருள் சம்பாதித்துக் குடும்பம் வளர்த்தவர்கள். நெருக்கிக் கட்டப்பட்ட வீடுகளின் இடையிலிருக்கும் சிறிய சந்துகளின் வழியே தென்றல் வீசுவதைப் போல, கிடைக்கும் சிறிய விடுமுறைகளில் குடும்பம் நடத்திப் பிழைத்தவர்கள். பிரியத்தின் மலர்களின் மீது நடந்துதான் பொருள் ஈட்டப்பட வேண்டுமா? திரைகடல் ஓடித்தான் திரவியம் தேட வேண்டுமா?

அவரைப் பார்க்கையில் எனக்குப் பொறாமையாக இருந்தது. அன்றிரவு அவர் வீடுதிரும்பும்போது அவரை வரவேற்க அவருக்கான மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா!

வாலிபம் ஒரு கனவைப் போல மறைந்து தேய, பிரியமானவர்களின் நினைவைச் சுமந்தபடியே, தெரியாத நாட்டில் பிழைத்துப் பொருளீட்டும் மனிதர்களை நினைக்கையில் மனம் குழப்பமடைகிறது. இவர்கள் சாதனையாளர்களா? பரிதாபத்துக்குரியவர்களா? இவர்கள் பணக்காரர்களா? ஏழைகளா? இழக்கக் கூடாதவற்றையெல்லாம் இழந்து இவர்கள் பெறுவதுதான் என்ன? இவர்கள் இழந்தவற்றை எல்லாம் இந்தப் பிறவியில் மீட்டுக்கொள்ளத்தான் முடியுமா? இவர்களில் ஒருவனாகத்தானே நானும் இருக்கிறேன் என்று நினைக்கையில் மாபெரும் துயரத்தின் பேரலையொன்று என்னை மூழ்கடித்து நான் நின்றிருக்கும் பூமிக்கடியில் புதைத்து விட்டுச் செல்வது போலிருக்கிறது.

இவர்கள் சாதனையாளர்களா? பரிதாபத்துக்குரியவர்களா? இவர்கள் பணக்காரர்களா? ஏழைகளா? இழக்கக் கூடாதவற்றையெல்லாம் இழந்து இவர்கள் பெறுவதுதான் என்ன?

பிரியமானவர்கள் நிறைந்திருக்கும் குடும்பங்களை விட்டு வெளியேறி ஏதேதோ நாடுகளில் மொழி புரிந்தும் புரியாமலும், தட்பவெப்பக் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு, நல்லவர்களையும் கெட்டவர்களையும் கடந்து சென்று பொருளை ஈட்டுகிறார்கள் மனிதர்கள். இவர்களின் தராசுத் தட்டுகள் எப்போதும் சமமாகப் போவதில்லை என்று இவர்கள் அறிந்திருப்பார்களா? ஒரு தட்டில் பொருளையும், மறு தட்டில் பிரிவுத்துயரையும் வைத்தால் எப்படி இரு தட்டுகளும் சமமாகும்?

பிரியமானவர்கள் எல்லாம் நிறைந்திருக்கும் தட்டு தரையில் இருக்கிறது. மறுதட்டில், நாம் சம்பாதிக்கும் நாணயங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கொட்டப்படுகின்றன. எவ்வளவு கொட்டினாலும், அந்தத் தட்டு அந்தரத்திலேதான் நிற்கிறது. நாணயங்களைச் சம்பாதிக்கும் நம்மையும் அந்தத் தட்டு அந்தரத்திலேயே பிடித்துவைத்துக் கொள்கிறது. தரைத்தட்டினில் இருக்கும் பிரியமானவர்களை நெருங்க முடியாமலும், அந்தரத்தில் இருக்கும் தட்டில் நிலைகொள்ள முடியாமலும், நாம் தவிக்கிறோம். காலமெனும் துலாமுள் இக்காட்சியை மௌனமாகப் பார்த்தபடியிருக்கிறது.

பொருள், ஊழின் கரங்களைப் போல நம்மை முன்னால் இட்டுச் செல்கிறது, பிரிவுத் துயரோ நம் கால்களைக் கட்டிக் கொண்டு பின்னால் இழுக்கிறது. இரண்டையும் சமாளித்து எப்படியோ நகர்கிறது வாழ்க்கை. “எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் பாம்புச் சட்டையைப் போல நகர்கிறது வாழ்க்கை” என்ற சுகுமாரனின் கவிதை ஒன்று நினைவில் தோன்றுகிறது. எத்தனை குரூரமான படிமம்?

பொருளா? பிரிவா? என்ற இந்தக் கேள்விக்கு இன்று வரையிலும் எவராலும் திட்டவட்டமான பதிலைச் சொல்ல முடியவில்லை. விக்ரமாதித்யனாலும். “பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்” என்கிறான் ஒரு கவிஞன். இன்னொரு கவிஞனோ அந்தப் பொருளைத் தேடி, பிரியமானவர்களைப் பிரிந்து அலைகிறான், மனம் கிடந்து அடித்துக் கொள்ள. பொருள் இருளை மட்டுமல்ல, இன்னும் என்னென்னவற்றையெல்லாம் அறுக்கப் போகிறதோ?