சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல!

பாலபாஸ்கரன்

பொருத்தமான ஒரு துறைமுகம் அவசியமாகவும் விரைவாகவும் தேவை என்ற தீர்மானத்துக்கு வங்காளத்தின் புதிய கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ் பிரபு (நிர்வாகம் 1813 – 1823) வந்துவிட்டார். 1818இல் கல்கத்தா சென்ற ராஃபிள்சை அந்தத் தேடலில் ஈடுபடுத்தி, மலாய்ப் பிரதேசங்களுக்கு கவர்னர் ஜெனரலின் தனி முகவர் எனும் அதிகாரத்தையும் ராஃபிள்சுக்கு வழங்கினார். அந்தப் பொறுப்புக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் சம்பளமும் எடுத்துக்கொண்டார் ராஃபிள்ஸ்.

வட சுமத்ராவின் அச்சை அரசாட்சியுடன் நட்புறவை வளர்த்துக்கொண்டு ரியோ, ஜொகூர் அல்லது அதற்குத் தெற்கே ஒரு வர்த்தக மையத்தை நிறுவும்படியும், அதேசமயம் டச்சுக்காரருடன் உரசல் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் ஹேஸ்டிங்ஸ் பிரபு ராஃபிள்சுக்குத் தெளிவான உத்தரவிட்டார். அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு 1818 டிசம்பர் 7 அன்று கல்கத்தாவைவிட்டுப் பினாங்கு புறப்பட்டபோது ஹேஸ்டிங்ஸ் பிரபு கடைசியாகச் சொன்னது ‘சர் ஸ்டாம்ஃபர்ட், என் முழு ஆதரவு உமக்கு எப்போதும் உண்டு‘ என்பதுதான், (Sir Stamford, you can depend on me).

தெற்கேதான் துறைமுகம் என்பது உறுதியானதும் ஞானோதயம் பிறந்தது ராஃபிள்சுக்கு. மற்றைய இடங்கள் யாவும் பின்னுக்கு ஒளிந்துகொள்ள, பண்டைய சிங்கப்பூர் மட்டும் முன்னுக்கு விசுவரூபம் எடுத்தது. கப்பலிலேயே உட்கார்ந்து 1818 டிசம்பர் 12 அன்று மலாய்க் கல்விமான் அறிஞர் வில்லியம் மார்ஸ்டனுக்குக் கடிதம் எழுதினார் ராஃபிள்ஸ்.‘என் கவனம் இப்போது முதன்மையாக ஜோகூரின் மீது பதிந்து கிடக்கிறது. என்னுடைய அடுத்த கடிதம் சிங்கப்புரா என்ற பழம்பெரும் நகரத்திலிருந்து எழுதப்பட்டாலும் நீங்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை’

என்று எழுதித் தன்னைத்தானே மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டார் ராஃபிள்ஸ். மூன்று வாரப் பயணத்திற்குப் பிறகு பினாங்கு வந்து சேர்ந்தவுடன் 1819 ஜனவரி 8 அன்று ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்குக் கடிதம் தீட்டினார் ராஃபிள்ஸ்.

‘இதுவரை கிடைத்த ஒவ்வொரு தகவலும் ஜோகூரை ஒட்டிய சிங்கப்பூர்த் தீவின் தகுதியையும் மதிப்பையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, பரம திருப்தி. நம்முடைய சீன வர்த்தகத்துக்குத் தோதான வசதியான துறைமுகம் சிங்கப்பூர். மிக அற்புதமான இத்துறைமுகத்தைக் காத்துக்கொள்வதும் மிக எளிது. ரியோ தீவைவிட சிங்கப்பூர்த் தீவு மிகவும் பயனுள்ளதாக அமையும். டச்சுக்காரர் இந்தப் பக்கம் வருவதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக சிங்கப்பூர் ஆள்நடமாட்டம் அற்றுவிட்டது. இப்போது சுமார் ஈராயிரம் பேர் அங்குப் புதிதாகக் குடியேறியுள்ளனர். கௌரவமான தலைவர் ஒருவர் அங்கே தங்கியிருக்கிறார். சிங்கப்பூர்ப் பிரதேசம் பழைய ஜொகூரின் ஒரு பகுதியாக இருப்பதால் நாம் அங்கே போவதற்கு உரிமையில்லை என்று டச்சுக்காரர் ஒருவேளை சொல்லக்கூடும்.’

இந்த ஒப்பந்தம் மட்டும் செல்லுபடியாகி சிங்கப்பூர் முதலிலேயே கிடைத்திருந்தால் ராஃபிள்சுக்கு இடம்தேடும் வேலையே இல்லாமல் போயிருக்கும். ஃபார்க்குவார் கதாநாயகன் ஆகியிருப்பார்!

கைவிடப்பட்ட சிங்கப்பூர்த் தீவுக்கு 1811இல்தான் தெமெங்கோங் அப்துல் ரஹ்மான் நூறு ஆதரவாளர்களுடன் குடியேறி இருந்தார். ஈராயிரம் பேர் என்று ராஃபிள்ஸ் தன் கடிதத்தில் எழுதுவது மிகவும் அதிகபட்சம்.

பினாங்கிலிருந்து 1819 ஜனவரி 16 அன்று ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் அரசியல் செயலாளர் ஜான் ஆடமுக்கு ராஃபிள்ஸ் கடிதம் எழுதி, சிங்கப்பூரை ஒட்டிச் சுற்றிலும் சின்னஞ்சிறு தீவுகள் பல இருப்பதால் கப்பல்கள் அணைவதற்கு வசதியான சிறுசிறு துறைமுகங்கள் கிடைக்கும்; நம்முடைய நோக்கத்திற்கு இது மிக நல்ல வாய்ப்புகளை வழங்கும்; மலாக்கா நீரிணையைக் கடந்து செல்லும் நமது சீன வணிகத்திற்கு ரியோ தீவைவிட சிங்கப்பூரே மிக அனுகூலமானது; அதேநேரம், ரியோ நீரிணையைக் கடந்து செல்லும் எந்தக் கப்பலும் சிங்கப்பூரின் பார்வையில் படாமல் போகமுடியாது என்றெல்லாம் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

அன்றைய தினமே, புதிய இடத்தை நாடித் தெற்கு நோக்கிச் செல்லப்போகும் கர்னல் ஃபார்க்குவாருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதிப் பதினாறு உத்தரவுகள் போட்டார். கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஜொகூரைவிட சிங்கப்பூரே நமக்குப் பொருத்தமான இடம்; முதலில் சிங்கப்பூருக்குச் செல்லுங்கள், அங்கு டச்சுக்காரர் யாரும் இல்லையென்றால் நேரத்தை விரயமாக்காமல் ஒரு பொருத்தமான இடத்தைத் தேர்வுசெய்து, துறைமுகப் பகுதியை நிறுவி, பிரிட்டிஷ் கொடியை உடனே ஏற்றிவிடுங்கள்; அதன்பிறகு ரியோ தீவு சென்று ஏற்கனவே நீங்கள் அதன் சுல்தானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துவிடுங்கள்; ஜொகூர்த் தலைவர் அதிகாரம் ஏதுமின்றி சிங்கப்பூர் நீரிணைப் பகுதியில் வசிக்கிறார், அவர் நமக்கு உதவியாக இருக்கலாம்; இடம் கிடைத்துவிட்டால் நீரே அதன் நிர்வாகியாக இருப்பீர், பிறகு நான் வந்து உங்களையெல்லாம் சந்திப்பேன் என்றெல்லாம் எழுதிக் கொடுத்தார் ராஃபிள்ஸ்.


ஆகவே புதிய துறைமுகத்தைத் தேடிப் பினாங்கிலிருந்து பயணப்படுவதற்கு முன்னரே சிங்கப்பூரை மிகத் தெளிவாக ராஃபிள்ஸ் மனத்தில் வரித்துக்கொண்டார் என்பதையும், சிங்கப்பூரைப் பற்றி ராஃபிள்ஸ் முன்னரே விரிவாக அறிந்து வைத்திருந்தார் என்பதையும் வலியுறுத்த இத்தகைய கடிதங்களை வரலாற்றாசிரியர்கள் எடுத்துச் சொல்வதுண்டு.

ஜெனரல் ஹேஸ்டிங்ஸ் பிரபு

கர்னல் ஃபார்க்குவார் ரியோ சுல்தான் அப்துல் ரஹ்மானுடன் 1818இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தையே ராஃபிள்ஸ் இங்குக் குறிப்பிடுகிறார். 1795 நவம்பர் முதல் 1818 ஆகஸ்ட் வரை மலாக்காவை பிரிட்டிஷ் நிர்வாகத்தில் விட்டுவைத்தனர் டச்சுக்காரர். தங்கள் எதிரியான பிரான்ஸ் மலாக்காவைக் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவே அந்த ஏற்பாடு. கர்னல் ஃபார்க்குவார் அப்போது மலாக்காவின் தலைமை நிர்வாகியாக இருந்தார். ஜொகூர் சிங்கப்பூர்ப் பிரதேசங்கள் யாவும் ரியோ சுல்தானுக்கு அடங்கியவை. அதனால் பிரிட்டிஷார் ஜொகூர் துறைமுகங்களில் கட்டுப்பாடின்றி நடமாடவும் சிங்கப்பூர்த் தீவில் ஒரு வணிகத் தலத்தை நிறுவிக்கொள்ளவும் ரியோ சுல்தானுடன் 1818இல் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அதற்காக ஃபார்க்குவாரைப் பினாங்கு அரசாங்கம் 1818 ஆகஸ்ட் மாதம் அவ்வட்டாரத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்தான் அந்த உடன்பாட்டில் அப்போது கையெழுத்திட்டார். ஆனால் அதே தருணத்தில் மலாக்கா மீண்டும் டச்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனால், ரியோ சுல்தான் எப்போதுமே தங்களுக்கு அடங்கியவர் என்றும் வேறு யாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்ள அவருக்கு அதிகாரம் கிடையாதென்றும் சொல்லி, ஃபார்க்குவார் செய்துகொண்ட சிங்கப்பூர் உடன்பாட்டை டச்சு அரசாங்கம் நிராகரித்துவிட்டது. இந்த ஒப்பந்தம் மட்டும் செல்லுபடியாகி சிங்கப்பூர் முதலிலேயே கிடைத்திருந்தால் ராஃபிள்சுக்கு இடம்தேடும் வேலையே இல்லாமல் போயிருக்கும். ஃபார்க்குவார் கதாநாயகன் ஆகியிருப்பார்!

ராஃபிள்சின் நடவடிக்கை பினாங்கு கவர்னர் கர்னல் ஜான் அலெக்சாண்டர் பேனர்மனுக்கு அறவே பிடிக்கவில்லை. பினாங்கிலிருந்து 1819 ஜனவரி 19 அன்று 120 சிப்பாய்கள், பீரங்கிகளை இயக்கும் இருபது முப்பது ஐரோப்பிய வீரர்கள், மற்ற உதவியாளர்கள் ஆகியோருடன் எட்டுக் கப்பல்களில் தெற்கு நோக்கிப் பயணம் தொடங்கியது. கர்னல் ஃபார்க்குவார், நீர்ப்பரப்பு ஆராய்ச்சியாளர் கேப்டன் டேனியல் ராஸ் (Daniel Ross) முதலானோர் ரியோ, கரிமூன் பகுதிகளைப் பார்வையிடப் புறப்பட்டனர். மறுநாள் அச்சைக்குப் போக ராஃபிள்ஸ் தயாரானார்.

கல்கத்தாவிலிருந்து சில விவரங்கள் கிடைத்தபின் நீங்கள் போகலாம் என்று ராஃபிள்சை அச்சை போவதற்குத் தடுத்துவிட்டார் பேனர்மன். பினாங்கு கவர்னர் சூழ்ச்சி செய்கிறார் என்பது ராஃபிள்சுக்குப் புரிந்துவிட்டது. ஆகவே இரவில் உறங்கச் சென்ற ராஃபிள்ஸ் பேனர்மனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, அதிகாலையில் அவருக்குத் தெரியாமல் ரகசியமாக வெளியேறித் தம் சொந்தக் கப்பலை அடைந்து பினாங்குத் துறைமுகத்தைவிட்டு வெளியேறி ஃபார்க்குவார் குழுவினருடன் சேர்ந்துகொள்ள விரைந்தார்.

வேடிக்கை பார்க்கவந்த சீனர்களும் மலாய்க்காரர்களும் தாமாகவே முன்வந்து புல் பூண்டுகளை வெட்டித்தள்ளிக் காட்டையும் அழித்து இடத்தைச் சுத்தப்படுத்திக் கொடுத்தனர்.

கேப்டன் ராஸ் போகும்போதே சிங்கப்பூரை மேலும் சற்று உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே சென்றார். முன்பொரு தடவை சீனாவுக்குச் சென்றபோது சிங்கப்பூரைப் பார்த்து அதன் சாதகமான அம்சங்களைக் கணித்து அசைபோட்டது அவருக்கு நன்றாக ஞாபகத்துக்கு வந்தது. ரியோ சென்றபோது அது டச்சு மேலாண்மையில் இருப்பது உறுதியாய்த் தெரிந்துவிட்டது.

கரிமூன் பகுதியை 1819 ஜனவரி 27 அன்று கவனமாகக் கண்ணோட்டம் இட்டனர். அப்போது ராஃபிள்சும் கரிமூன் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஃபார்க்குவாருக்குக் கரிமூன் கிடைத்தால்கூடப் போதும் என்ற எண்ணம் எழுந்தது.

ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்திறங்கிய இந்தியானா கப்பலின் தோற்றம்

சிங்கப்பூருக்கு மேற்கேயுள்ள கரிமூன் தீவுக்கூட்டம் கரடுமுரடான பாறைகள் மலிந்து கிடப்பதால் குடியேற்றத்துக்குக் கொஞ்சங்கூட வாய்ப்பே இல்லை என்று கேப்டன் ராஸ் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார். அந்த நேரத்தில்தான் சிங்கப்பூரின் வரைபடத்தைக் காட்டி அதைக் கண்ணோட்டம் விடலாமே என்று ராஸ் யோசனை சொன்னார். மலாய் இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளின் மூலம் சிங்கப்பூர் பெருமையுடன் திகழ்ந்த ஒரு பண்டைய நகரம் என்ற உண்மை ராஃபிள்சின் முன் மீண்டும் நிழலாடியது. அது அவருக்கு மேலும் உரமூட்டியது.

சிங்கப்பூர்க் கடற்கரைக்கு 1819 ஜனவரி 28 வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்கு வந்தனர் ராஃபிள்ஸ் குழுவினர். உடனே தெமெங்கோங்கின் ஆதரவாளர் சிலர் கப்பலுக்கு வந்து ராஃபிள்சைச் சந்தித்தனர். டச்சுக்காரர் யாராவது இருக்கிறார்களா என்பதுதான் ராஃபிள்சின் முதல் கேள்வி. இல்லை என்றே பதில் கிடைத்தது. ராஃபிள்சும் ஃபார்க்குவாரும் துப்பாக்கி ஏந்திய ஓர் இந்தியச் சிப்பாயுடன் கப்பலை விட்டிறங்கிக் கடற்கரை சென்றபோது உடன் வந்த இரண்டு கப்பல்களிலிருந்து மரியாதைக் குண்டுகள் முழங்கின. தெமெங்கோங் அப்துல் ரஹ்மான் அவர்களை வரவேற்று உரையாடினார். சிங்கப்பூரில் கால் பதித்த முதல் இந்தியர் துப்பாக்கி ஏந்திய இந்த ஒற்றைச் சிப்பாய்தான்.

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை ராஃபிள்சின் இந்தியானா கப்பலில் தெமெங்கோங்குடன் தொடர்ந்து பேச்சு நடைபெற்றது. சுல்தானுக்கு ஆண்டுக்கு ஐயாயிரம் வெள்ளியும் தெமெங்கோங்கிற்கு ஆண்டுக்கு மூவாயிரம் வெள்ளியும் உதவித்தொகை வழங்க முடிவானது.

பிரிட்டிஷ் துறைமுகத்துக்கு இடம் வழங்க தெமெங்கோங் ஒப்புக்கொண்டார். அன்றே ஒரு முன்னோடி இணக்கக் குறிப்பு தயார் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கொடியும் ஓர் அடையாளத்துக்காக முதன்முதலாய் ஏற்றப்பட்டது. ஜனவரி 30 சனிக்கிழமை ராஃபிள்சும் தெமெங்கோங்கும் குறிப்பில் கையெழுத்திட்டனர்.

ஜனவரி 29, 30 தேதிகளில் ஐரோப்பிய வீரர்களும் ஏனைய சிப்பாய்களும் கப்பல்களைவிட்டு இறங்கி ஆற்றங்கரைக்கு வந்து ஓரிடத்தில் சில கூடாரங்களை அமைத்தனர். வேடிக்கை பார்க்கவந்த சீனர்களும் மலாய்க்காரர்களும் தாமாகவே முன்வந்து புல் பூண்டுகளை வெட்டித்தள்ளிக் காட்டையும் அழித்து இடத்தைச் சுத்தப்படுத்திக் கொடுத்தனர்.

கேப்டன் டேனியல் ராஸின் வரைபடம் (1820)

முறையான உடன்பாட்டில் சுல்தானும் கையெழுத்திட வேண்டும். யார் சுல்தான் என்பதில் உள்ள அரசுரிமைச் சிக்கல் ராஃபிள்சுக்கு ஏற்கனவே தெரிந்த சங்கதிதான். ஃபார்க்குவார் மூலம் கடைசி நிலவரத்தை இப்போது மேலும் நன்றாக அறிந்து கொண்டார். ஜொகூர், சிங்கப்பூர் ஆகியவற்றின்மீது அதிகாரம் கொண்டிருந்த ரியோ-லிங்கா சுல்தான் மஹ்முட் 1812இல் காலமானபோது வாரிசுகளின் அரசுரிமைப் பூசல் தலைதூக்கியது. சுல்தானுக்கு அரசபரம்பரை மனைவியர் மூலம் ஆண்மக்கள் பிறக்கவில்லை. சாதாரணக் குடும்பத்து மனைவியருக்குப் பிறந்த ஆண்பிள்ளைகள் இருவர் மட்டும் இருந்தனர்.

இளைய இளவரசன் துங்க்கு அப்துல் ரஹ்மான் பூகிஸ் இனத் தாய்க்குப் பிறந்ததால் அவனுக்கு டச்சு, பூகிஸ் ஆதரவு கிடைத்தது. அதனால் அவனுக்கு சுல்தான் பதவி உறுதியானது. மூத்த இளவரசன் துங்க்கு லோங் எனும் துங்க்கு உசேன் சாதாரண மலாய்க் குடும்பத்துப் பெண்ணுக்குப் பிறந்தவன். அதனால் அவன் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டான். மூத்தவனாகிய துங்க்கு உசேனுக்குத்தான் பதவி என்று காலஞ்சென்ற சுல்தான் கூறிவிட்டு மறைந்தாலும் பூகிஸ் இனத்தவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

தங்கள் கைப்பாவையாக இருக்கக்கூடிய தங்கள் இனத்து பூகிஸ் இளங்குமரனையே அவர்கள் பதவியில் அமர்த்தினார்கள். அந்நேரம் துங்க்கு உசேன் திருமணம் புரிந்து கொள்ள பாஹாங் சென்றிருந்தான். மறைந்த சுல்தானை அடக்கம் செய்வதற்குமுன் புதிய சுல்தான் பதவியில் அமரவேண்டும் என்பது மரபு. ஆகவே அவசரம் அவசரமாக இளையவன் துங்கு அப்துல் ரஹ்மான் சுல்தானாகப் பதவியேற்றான். அந்தப் பதவியேற்பைப் பினாங்கு பிரிட்டிஷ் நிர்வாகம் 1813இல் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டது. அப்போதைய பினாங்கு நிர்வாகத்தின் செயலாளராகப் பணியாற்றிய ராஃபிள்சும் ஜொகூர், பாஹாங், சிங்கப்பூர் போன்ற அவற்றின் சார்புப் பிரதேசங்கள் அனைத்திற்கும் துங்க்கு அப்துல் ரஹ்மானே அதிகாரம் வாய்ந்தவர் என்பதை வெளிப்படையாகவே அங்கீகரித்தார்.

ஆனால் இப்போது காற்று திசை மாறியது. அவசியமான சுயநலத்திற்காக மூத்தவன் துங்க்கு உசேனைத் தற்சமயத்திற்கு சுல்தானாக அங்கீகரித்துத் தன் திட்டத்தை நிறைவேற்றிகொள்ள ராஃபிள்ஸ் தீர்மானித்தார். சிங்கப்பூருக்குத் தெற்கே பிந்த்தான் (Bintan) தீவின் தஞ்சோங் பினாங்கில் ஒதுங்கித் தனியாக வாழ்ந்துகொண்டிருந்த துங்க்கு உசேனை ரகசியமாக சிங்கப்பூருக்குக் கொண்டுவர ஃபார்க்குவாரும் மற்றவர்களும் மூன்று கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.