மொழிபெயர்ப்புக் கவிதை

0
367

மந்திரவாதி

மஹேஷ்

தங்கத்திலிருந்து
அதன் மஞ்சளை
எடுத்துத் தருவேன்.
நீரிலிருந்து அதன் ஈரத்தையும்
விதையிலிருந்து அதன் முளைக்கும் தன்மையைக் கூட.
சோம்பேறித்தனத்தில்
நழுவும் நேரத்தைப்
பிரித்தெடுப்பேன்.
உயரத்திலிருந்து
விழும் சாத்தியத்தை
இறக்கி வைப்பேன்.
நெருப்பைச் சலித்தெடுத்து
வெப்பத்தையும் வெளிச்சத்தையும்
பிரித்துத் தருவேன்.
வெளிச்சத்தையும் கடைந்து
வெண்மையின் படலத்தை நீக்குவேன்.
அதையெல்லாம் செய்யவேண்டுமானால்
மீண்டும் மந்திரக்கோலாக மாற மறுக்கும்
இந்தப் பாம்பினை
முன்பிருந்தது போல
யாராவது மாற்றுவீர்களா?
புழுவாகவோ
பருந்தாகவோ
மாறத் தொடங்கும் என்னை
யாராவது பிடித்துவைப்பீர்களா?

மூலம்: Maanthreekan (மலையாளம்)

கவிஞர் பற்றிய குறிப்பு

வீரன்குட்டி

கேரளாவில் நாராயங்குளம் என்ற ஊரில் 1962இல் பிறந்த வீரன்குட்டி, தற்காலக் கவிஞர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். மலையாளம் மட்டுமல்லாது இவர் ஆங்கிலத்திலும் படைத்துள்ள கவிதைகள், பலமொழிகளில் மொழியாக்கமும் கண்டுள்ளன. தமிழகத்திலும் கேரளத்திலும் பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர். தற்போது மடப்பள்ளி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.