எழுத்தாளர்களின் சரணாலயம்

0
518
அழகுநிலா

குடும்பத்தோடு பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு வீடுதிரும்பிய சமயத்தில்தான் தேசிய கலைகள் மன்றத்திலிருந்து அழைப்பு வந்தது. “நிலா! மகிழ்ச்சியான செய்தி!” என்று லோஷினி ஆரம்பித்ததும், “நீங்களும் பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டீர்களா?” என்று நான் கேட்க, “ஐயோ நிலா! அதில்லை. தேசிய கலைகள் மன்றத்தின் ‘சங்கம் இல்லம்’ (Sangam House) உறைவிடத் திட்டத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்” என்றார். அடுத்ததாக நான் செய்யவேண்டியவற்றை விவரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அந்த மகிழ்ச்சியான செய்தியை நான் குடும்பத்தினரிடம் பகிர்ந்தபோது, அதுவரை பொன்னியின் செல்வன் இறுதிக் காட்சியில் வந்த பெண்மணியைக் குறித்த ‘சஸ்பென்சை’ உடையுங்கள் என்று எனது கணவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்த மகள், “அம்மா!ப்ளீஸ்ம்மா, என்னை விட்டுட்டுப் போகாதிங்க. நானும் உங்ககூட வர்றேன்” என்று சோகப்பாட்டு பாட ஆரம்பித்தாள். “பாப்பா!நம்ம தொல்லை எல்லாம் இருக்க கூடாதுன்னுதான் அம்மாவை எழுத அனுப்புறாங்க” என்று கணவர் சொன்னவுடன் அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. தினமும் ‘வீடியோ கால்’ செய்து பேசுவதாகச்சொல்லி ஒருவழியாக அவளைச் சமாதானப்படுத்தினேன்.

(இடமிருந்து வலமாக) நிற்பவர்கள்: சாந்தினி, நந்தினி, ரோஹன் அகர்வால்
அமர்ந்திருப்பவர்கள்: சொஹைனி, ரோஹினி மோகன், அர்ஷியா சத்தார், மெஹெர்

‘தேசிய கலைகள் மன்றம் – சங்கம் இல்லம் உறைவிடத் திட்டம் 2022-2023’க்கு எனது அப்பாவைக் குறித்த நினைவுகளை எழுதும் முன்மொழிவோடு விண்ணப்பித்தபோது தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அது நனவானது அப்பாவின் ஆசிர்வாதம். இந்தத் திட்டத்திற்கான உறைவிடம் பெங்களூரு. அப்பாவைக் குறித்து அவர் வாழ்ந்த இந்திய மண்ணிலேயே எழுதப் போவதை எண்ணி நிறைவுகொண்டேன். “உன்னைத் தேடி ஒரு வாய்ப்பு வரும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பாப்பாவைப் பற்றி கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கணவர் அளித்த ஊக்கமும் ஆதரவும் ஆசுவாசமாக இருந்தது. ஒரு பெண்ணின் செயல்பாடுகளுக்கு அவள் குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியமானது. அந்த வகையில் நான் நல்லூழ் செய்தவள்.

‘சங்கம் இல்லம் உறைவிடத் திட்டம்’ 2008இல் அர்ஷியா சத்தார், கிப்ஸன் (Arshia Sattar, DW Gibson) ஆகிய இரண்டு எழுத்தாளர்களால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஐனவரி வரை மூன்று மாதங்கள் பெங்களூருவில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நான்கு அல்லது ஐந்து இந்திய, சர்வதேச எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இத்திட்டத்தின்கீழ் ஒரே இல்லத்தில் ஒன்றாகத் தங்கிக் கற்பதற்கும், எழுதுவதற்கும்,உரையாடுவதற்குமான வாய்ப்பைப் பெறுகிறார்கள். நவம்பர் 2022க்கான எழுத்தாளர்களில் ஒருவராக அந்த அரிய வாய்ப்பை தேசிய கலைகள் மன்றம் மூலம் நான் பெற்றேன். என்னுடன் உடனுறை எழுத்தாளர்களாக சாந்தினி, சொஹைனி, மெஹெர், நந்தினி (Chandini Doulatramani, Sohaini Basak, Meher Varma, Nandini Oza) ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் நால்வரும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள்.

சங்கம் இல்லம் உறைவிடத் திட்டத்தில் இது 15ஆவது ‘சீசன்’. தமிழ் எழுத்துலகின் பெரும் ஆளுமைகள் பலர் இதற்குமுன் பங்கேற்றிருக்கிறார்கள். சல்மா, பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், சா.கந்தசாமி, சுகுமாரன், ஜே.பி.சாணக்யா,பி.அதியமான், ஜி.குப்புசாமி, பிரேமா ரேவதி, சீனிவாசன் நடராஜன், ஸ்டாலின் ராஜாங்கம், ஆனந்த் கிருஷ்ணா, தேவிபாரதி,எத்திராஜ் அகிலன், எஸ்.வி.ஷாலினி என ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. சிங்கப்பூரிலிருந்து ஆங்கில எழுத்தாளர்களான வெய்லிங் வூ, ஜெரமி டியாங் (Wei-Ling Woo, Jeremy Tiang) ஆகியோர் சென்றிருக்கிறார்கள். சிங்கப்பூரில் தாய்மொழியில் எழுதுபவர்களில் முதன்முதலாக இத்திட்டத்தில் பங்கேற்றது நான்தான் என்று கருதுகிறேன்.

இந்த உறைவிடத் திட்டத்தால் என்ன பயன்?

சங்கம் இல்லம் உறைவிடத் திட்டத்தில் இது 15ஆவது ‘சீசன்’. தமிழ் எழுத்துலகின் பெரும் ஆளுமைகள் பலர் இதற்குமுன் பங்கேற்றிருக்கிறார்கள்.
(இடமிருந்து வலமாக) சரவணன் மாணிக்கவாசகம், கே.நல்லதம்பி, பா.கண்மணி, பாவண்ணன்

லௌகீக வாழ்வின் தினசரி நெருக்கடிகளிலிருந்து தப்பித்து ஒரு படைப்பை எழுத எழுத்தாளர் எதிர்கொள்ளும் துயரத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அவருக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அது நேரம். அவருக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பிறரால் பூர்த்தி செய்யப்படும் ஒருநாள் ஆகப்பெரிய பொக்கிஷம். அன்றாடங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தனது படைப்புக்கான அஸ்திவாரத்தைக் கனவுகளில் கட்டி எழுப்பவும், தேவையான தகவல்களைத் தேடி வாசிக்கவும், ஒத்த அலைவரிசையிலிருக்கும் நண்பர்களோடு தனது படைப்பு குறித்துக் கலந்துரையாடவும் ஓர் இடம் கிடைத்தால் அதை எழுத்தாளர்களின் சொர்க்கம் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாகப் பெண் படைப்பாளிகளுக்கு இத்திட்டம் கிடைத்தற்கரிய வரப்பிரசாதம்.

குடும்ப அமைப்பின் ஆணிவேரான – அல்லது அப்படி நம்பவைக்கப்பட்டிருக்கும் – பெண்கள் வெளியுலகிற்கு வருவதும் அங்கு தனக்கான வெளியை உருவாக்கி அதில் தன் ஆளுமையாகக் கட்டமைப்பதும் இன்றளவும் எளிதான காரியம் அன்று. ஒரு நாளின் பெரும் பகுதியை விழுங்கிச் செரித்துவிடும் சமையலறைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக் கற்பனை வானில் எழுத்துச் சிறகுகளைச் சுதந்திரமாகப் படபடக்கச் செய்வது பல பெண் எழுத்தாளர்களுக்கு அரிதாகவே அமைகிறது. இத்திட்டம் அத்தகைய வாய்ப்பை அளித்து மகிழ்ச்சியாகப் படைப்புச் செயலில் மட்டும் மனம் குவிக்க உதவுகிறது.

குடும்பம், குழந்தைகள், தலைமுறை இடைவெளி, பெண்ணியம், உடலரசியல், சமூகச் செயல்பாடு, பெண் விடுதலை இப்படிப் பலவற்றைக் குறித்து மனந்திறந்து எங்களால் விவாதிக்க முடிந்தது.

கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூரிலிருந்து கிளம்பி ஒரு காலைப்பொழுதில் பெங்களூரு சென்றடைந்தேன். வாழ்வில் சில பயணங்கள் விசித்திரமானவை. நான் சென்னையில் வாழ்ந்தபோது பலகாலமாகத் திட்டமிட்டும் நடக்காது போன பெங்களூரு பயணம் தற்போது சிங்கப்பூரிலிருந்து ஓர் எழுத்தாளராகச் செல்ல எந்தத் திட்டமிடலும் இல்லாமலேயே வாய்த்தது. அதுதான் வாழ்வின் விசித்திரம்!

பெங்களூரு என்றாலே குளிர், போக்குவரத்து நெரிசல், தகவல் தொழில்நுட்ப நகரம் போன்றவைதான் என் நினைவுக்கு வரும். அவை அனைத்தையும் பிரதிபலித்துக்கொண்டு பெங்களூரு என்னை வரவேற்றது. விமான நிலையத்திலிருந்து தங்கப் போகும் இல்லத்தை நெருங்க நெருங்க சாலையின் இருபுறமும் ஓங்கி நின்ற மரங்களும் கண்களுக்குப் பரவசமளித்த பசுமையும் லேசாகத் தூறிக்கொண்டிருந்த சாரலும் எழுதுவதற்கான மனநிலைக்கு அப்போதே அடித்தளங்களை அமைக்கத் தொடங்கின.

நாங்கள் தங்கியிருந்த இல்லத்தின் பெயர் ‘ஜாமூன்’ (The Jamun). ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் நாவல் மரங்கள் அதிகம் இருந்துள்ளன. இல்லத்தின் முன்புறத்தில் இரண்டு அடர்த்தியான நாவல் மரங்கள் நின்றிருந்தன. போதிமரத்தடியில் புத்தனுக்குக் கிடைத்த ஆன்ம ஞானத்தைப்போல் நாவல் மரத்தடியில் எனக்கு எழுத்து ஞானம் கிடைக்கட்டும்! ஐந்து அறைகள்,நீண்டு விரிந்த பெரிய கூடம், சிறிய நூலகம், பலகனி, அடுக்களை என்று ‘ஜாமூன்’ பங்களா அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. அறைகளுக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. மலர்த்தேனை சேகரித்துத் தேனடை கட்டும் தேனீக்களைப் போல படைப்பாளிகளும் சொல்தேனைச் சேகரித்து படைப்புக்கூட்டைக் கட்டும் ஏற்பாடு!

‘ஜாமூன்’ இல்லத்திலிருந்து ஒருவீடு தள்ளி இருந்தது அதன் உரிமையாளர் துருப்தியின் (Trupti) இல்லம். அவரது வீட்டிலிருந்து எழுத்தாளர்களுக்கு மதிய, இரவு உணவுகள் வந்தன. அவரது வீட்டில் சமையல் வேலைசெய்த இரண்டு அன்னபூரணிகளும் தமிழ்ப் பெண்கள். இருவரது பெயரும் ராஜம்மா. கர்நாடக, தமிழ்நாட்டு, வட இந்திய உணவுகள் என்று அவர்கள் செய்து அனுப்பும் அற்புதமான உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்ட மயக்கத்தில் எழுதுவதும் வாசிப்பதும் படைப்பாளிகளுக்குச் சவாலென்றே சொல்லலாம். ஐந்து படைப்பாளிகளின் கிறுக்குத்தனங்களையும் பொறுமையாகச் சகித்துக்கொண்டு உரசல்கள் ஏற்படாவண்ணம் வெற்றிகரமாக மேலாண்மை செய்த மேலாளர் ரோஹன் அகர்வால் (Rohan Agarwal) பங்கும் முக்கியமானது.

எப்போது வேண்டுமானாலும் உறங்கி எப்போது வேண்டுமானாலும் எழலாம் என்கிற சுதந்திரம். எங்கள் அன்றாட நிரலில் காலை உணவை மட்டும் நாங்களே தயாரித்துக்கொள்ள வேண்டும். ஞாயிறன்றும் நாங்களே சமைத்துக்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் ஐவரும் ஒன்றுகூடி அரட்டை அடித்தவாறு அவரவர் பாணியில் வித, விதமான உணவுகளைத் தயாரித்தது மறக்கவே முடியாத அற்புதமான அனுபவம்.

அன்றாடம் மதிய உணவிற்காக ஒருமணி நேரம் ஒன்றுகூடும் சமயத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் நூல்கள், சமீபத்தில் வெளியான நூல்கள் குறித்துப் பேசிப் பகிர்ந்து கொள்வோம். அதேபோல இரவுணவிற்குப் பிறகு ஒருமணி நேரம் கலந்துரையாடல் நடைபெறும். உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து அந்நியர்களாக உள்நுழையும் எழுத்தாளர்களுக்கிடையே ஒரேகூரையின்கீழ் ஒன்றாக வாழ்கிறோமென்ற நெருக்கத்தையும் பிணைப்பையும் இந்த இரவுநேரக் கலந்துரையாடல்கள் உண்டு பண்ணின. ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னை வெளிப்படையாக முன்வைத்த தருணமும் இதுதான்.

குடும்பம், குழந்தைகள், தலைமுறை இடைவெளி, பெண்ணியம், உடலரசியல், சமூகச் செயல்பாடு, பெண் விடுதலை இப்படிப் பலவற்றைக் குறித்து மனந்திறந்து எங்களால் விவாதிக்க முடிந்தது.

சொந்த வாழ்க்கை, கடந்தகால எழுத்துப் பணிகள், களப்பணிகள், தற்போது எழுதிக்கொண்டிருக்கும் படைப்பு, எழுதுவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள், வெளியீட்டுச் சிக்கல்கள், மற்றவர்களின் படைப்பை மேம்படுத்த ஆலோசனைகள், பதிப்புத்துறையில் தெரிந்தவர்கள் மூலம் உடனிருக்கும் எழுத்தாளருக்குத் தன்னாலான உதவிகள் எனப் பல நெகிழ்வான பகிர்வுகள் இங்குதான் நடந்தேறும். மேலும் ஒவ்வொரு எழுத்தாளரும் அப்போது தாங்கள் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டுவதும் உண்டு.

என்னுடன் தங்கியிருந்த நான்கு படைப்பாளிகளும் பெண்களாக இருந்ததும், நாங்கள் ஐவரும் 50+, 40+, 30+ என வெவ்வேறு பருவங்களில் இருந்ததும், அந்தந்த வயதுக்குரிய அனுபவங்களையும் நெருக்கடிகளையும் பகிர்ந்து கொண்டதும் எங்களைத் தொடர்ந்து நெருக்கமாக்கியது. ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக எங்கள் குழு இருந்தது. குடும்பம், குழந்தைகள், தலைமுறை இடைவெளி, பெண்ணியம், உடலரசியல், சமூகச் செயல்பாடு, பெண் விடுதலை இப்படிப் பலவற்றைக் குறித்து மனந்திறந்து எங்களால் விவாதிக்க முடிந்தது. அவ்விவாதங்கள் எனக்குப் பல புரிதல்களையும் திறப்புகளையும் அளித்தன.

என்னைத்தவிர பிற எழுத்தாளர்கள் நால்வரும் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்களாக இருந்ததால் நண்பர் ராம்சந்தரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எனது ‘ஆறஞ்சு’ சிறுகதையை அவர்களுக்கு வாசித்துக் காட்டினேன். அங்குசென்றபின் நான் எழுதிய ‘பளிங்கி விழுங்கிய பூதம்’ என்ற எனது அப்பா குறித்த கட்டுரையின் சாராம்சத்தையும் ஆங்கிலத்தில் சொன்னேன். அவர்களுக்கு நான் சொன்னவிதம் மிகவும் பிடித்துப்போனது.

இதுபோன்ற திட்டங்களில் பங்கெடுக்க சில அடிப்படை விஷயங்கள் அவசியமாகின்றன. முதலில் மனப்பாங்கு. எழுத்தாளர் என்கின்ற ஒற்றுமையைத் தவிர மற்ற அனைத்திலும் வேறுபட்டிருப்பவர்கள் ஓரிடத்தில் உறவாடும்போது சகிப்புத்தன்மையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் பழகுவது முக்கியம். சுய கௌரவத்தைச் சற்றுப் புறந்தள்ளிவிட்டுத் திறந்த மனதுடன் அணுகினால் நிறைய கற்றுக்கொள்ளலாம். அடுத்தது ஆங்கிலம். சர்வதேச அளவில் படைப்பாளிகளைச் சந்திக்கும்போது ஆங்கிலத்தில் பேசத் தெரியாவிட்டால் சிரமம்தான். இறுதியாகப் பொறுப்பு. கிடைத்துள்ள அரிய வாய்ப்பை ஊர்சுற்றவும், அரட்டையிலும்,போதையிலும், பொழுதுபோக்கிலும் வீணடிக்காமல் திட்டத்திற்காகச் சமர்ப்பித்த முன்வரைவைச் செயலாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அவசியம்.

தனிமை பலருக்கு சாபம் ஆனால் படைப்பாளிகளுக்கோ பெரும் வரம். தனிமையில் மகிழ்ச்சியாகவும் செயலூக்கம் மிக்கவராகவும் இருக்க ஒரு படைப்பாளியால் முடியும். ஒரு சிறிய அறைக்குள் வாழ நேர்ந்தாலும் ஒற்றைச் சாளரம் அவருக்குப் போதுமானது. எனது அறையில் பெரிய சாளரம் ஒன்று இருந்தது. தனது கிளைகளால் அதன்வழியாக எட்டிப்பார்த்துப் பூத்திருந்த மாமரமும், அக்கிளையில் தாவிவந்து தினசரி என்னைப் பார்த்து ‘ஹலோ’ சொன்ன அணிலும், குளிர் தாங்காமல் காலை நேரங்களில் சூரியக்குளியல் செய்த பழுப்புப் பூனையும், பெங்களூருவில் தனது தோற்றத்தைப் புதிதாகக் காட்டிக் கிறங்கடித்த முழுநிலவும், விடாமல் பெய்து கொண்டிருந்த மென்சாரல் மழையும் எனக்கு வாசிப்பதற்கான, எழுதுவதற்கான போதையை அளித்தன.

பூத்திருந்த மாமரமும், ‘ஹலோ’ சொன்ன அணிலும், பழுப்புப் பூனையும், கிறங்கடித்த முழுநிலவும், மென்சாரல் மழையும் எனக்கு வாசிப்பதற்கான, எழுதுவதற்கான போதையை அளித்தன.

ஆங்கில இலக்கிய உலகம் குறித்து அதிகம் அறிந்திராத எனக்கு சக எழுத்தாள நண்பர்கள் மூலம் இந்தியாவின் ஆங்கிலப் படைப்புலகை அறிந்துகொள்ள முடிந்தது. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதவும் வாசிக்கவும் செய்யும் அவர்கள் நால்வரும்,இந்தியாவில் பிற மாநில மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்படும் நூல்களின் இலக்கியத்தரம் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் நூல்களின் தரத்தைவிடப் பலமடங்கு உயர்ந்தது என்ற கருத்தை வலுவாக முன்வைத்தார்கள்.

உலகத் தரத்திற்கு எழுதப்படும் தமிழ் படைப்புகள் குறித்தோ படைப்பாளிகள் குறித்தோ எந்தவித அறிமுகமும் இல்லாமலிருந்த உடனுறை எழுத்தாளர்களைக் கண்டபோது மொழிபெயர்ப்பின் உடனடித் தேவையை உணர்ந்தேன். தமிழக இலக்கியமே தெரியாமல் இருக்கும் அவர்களுக்குப் புலம்பெயர் தமிழ் இலக்கியம் குறித்து எந்தவித அறிமுகமும் இருக்காது என்பதால் நான்கு மொழிகளில் எழுதப்படும் சிங்கப்பூர் இலக்கியத்தைக் குறித்தும் அதன் போக்கைக் குறித்தும் பகிர்ந்துகொண்டேன்.

‘கார்ப்பொரேட்’ பதிப்பகங்கள், பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் செயல்படும் முகவர்கள், நுண்ணரசியல் சூழ்ச்சிகள், உரிமைத்தொகை தராமல் ஏமாற்றுவது, குழுச்சண்டைகள் எனப்பல சிக்கல்கள் ஆங்கில உலகில் இருப்பதை சக எழுத்தாளர்களின் பேச்சில் உணர முடிந்தது. தமிழுலகமும் விதிவிலக்கன்று. ஒருகட்டத்தில் ‘படைப்பாளியைப்போல் கீழ்மையானவர் உலகிலேயே கிடையாது’ என்று அவர்கள் ஒருமித்தபோது ‘படைக்கும்போது மட்டும்தானே படைப்பாளி, மற்ற சமயங்களில் மகத்தான சல்லிப் பயல்தானே’ என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

பெங்களூருவில் வசிக்கும் எழுத்தாளர் கே.நல்லதம்பி என்னைச் சந்திக்க வந்தார். நிறைய திண்பண்டங்கள் வாங்கிக்கொண்டு அவர் வந்தது ஒருகாலத்தில் என்னைப் பார்க்கக் கல்லூரி விடுதிக்குவந்த அப்பாவை நினைவூட்டியது. எனது கைபேசியில் ‘காச்சர் கோச்சர்’ நல்லதம்பி என்றுதான் வைத்துள்ளேன். எழுத்தாளர் விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதிய ‘காச்சர் கோச்சர்’ நூலை நல்லதம்பி அற்புதமாகத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். நல்லதம்பியை சிங்கப்பூர் வாசகர் வட்டக் கூட்டமொன்றில் அறிமுகம் செய்துகொண்டேன். அவர் மொழிபெயர்க்கும் அனைத்து நூல்களையும் சிங்கப்பூரில் வசிக்கும் தனது மகள் மூலம் எனக்கு அனுப்பி வைத்துவிடுவார். அப்படி அவரனுப்பி நான் வாசித்த நூல்களில் ‘யாத்வஷேம்’ முக்கியமான நூல். இந்த நூலின் மொழிபெயர்ப்புக்காக நல்லதம்பிக்குக் கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

“எங்களைச் சந்திக்க ஒரு விருந்தினர்கூட வரவில்லை. உங்களுக்கு இத்தனை விருந்தினர்களா? அதுவும் அனைவரும் எழுத்தாளர்கள்” என்று ஆச்சரியப்பட்டனர்.

பெங்களூருவில் வசிக்கும் எழுத்தாளர் பாவண்ணன், கண்மணி, தீவிர வாசகர் சரவணன் மாணிக்கவாசகம் ஆகியோரோடு ஒரு மறக்கவியலாத சந்திப்புக்கும் நல்லதம்பி ஏற்பாடு செய்தார். அவர்கள் மூவரையும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறேன். எழுத்து அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களான அவர்கள் என்னைப் பொருட்படுத்தி சந்திக்க வந்திருந்தது மனதை நெகிழச் செய்தது. சிங்கப்பூரில் ஒருமுறை சந்தித்திருந்த எழுத்தாளர் சி.சரவண கார்த்திகேயனும் என்னை மற்றொரு நாள் சந்திக்க வந்திருந்தது மகிழச் செய்தது. ஜாமூனிலிருந்த எழுத்தாள நண்பர்கள் “நிலா! எங்களைச் சந்திக்க ஒரு விருந்தினர்கூட வரவில்லை. உங்களுக்கு இத்தனை விருந்தினர்களா? அதுவும் அனைவரும் எழுத்தாளர்கள்” என்று ஆச்சரியப்பட்டனர்.

சங்கம் இல்லம் எங்களுக்காக இரண்டு விருந்துகளை ஏற்பாடு செய்தனர். ஒன்று சென்று சேர்ந்தவுடன் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு விருந்து. மற்றொன்று பெங்களூருவில் வசிக்கும் முக்கியமான படைப்பாளிகள், பத்திரிகையாளர்களுடனான விருந்து. Jeet Thayil, Indra Chandrasekhar, Ajay Krishnan, Nikita Saxena, Riya Matthew, Bhumika Anand, Rohini Mohan, Jahnavi Phalkey, Dhruvatara Sharma Churai, Raghu Tenkayala, Arshia Sattar, Trupti, Rohan Agarwal ஆகியோர் கலந்துகொண்டனர். நான் ஆவலுடன் எதிர்பார்த்த விவேக் ஷான்பாக் வரவியலாமல் போனதில் சிறு ஏமாற்றம். இவர்களுள் தமிழரான ரோஹினி மோகன் சிங்கப்பூரின் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் இந்திய நிருபராகப் பணியாற்றுகிறார்.

திறந்த வெளியில் பெங்களூரு குளிரில் ஏழுமணிக்குத் தொடங்கிய விருந்து சுய அறிமுகங்கள், இந்திய அரசியல் குறித்த காரசாரமான விவாதம், ருசியான உணவு, மதுக்கிண்ண உரசல்கள், இசை, நடனம், அரட்டைக் கச்சேரி, வெடிச்சிரிப்பு எனக் களைகட்டி நள்ளிரவு தாண்டி முடிவுக்கு வந்தது.

இந்த விருந்தில் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன: “சிங்கப்பூரில் எழுத்தாளர்கள் தாங்கள் விரும்புவதை வெளிப்படையாக எழுதுவதற்கான சூழல் இருக்கிறதா?” என்பது முதல் கேள்வி. “முன்பிருந்த நெருக்கடிகள் குறைந்து ஆங்கிலச் சூழலில் எழுதுபவர்கள் தற்போது வெளிப்படையாக எழுதும் போக்கு தொடங்கியிருக்கிறது. ஆனாலும் நெடுங்காலமாகச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த யானை, சங்கிலியை அவிழ்த்த பிறகும் கிடைத்திருக்கிற விடுதலையை அறியாததுபோலத் தாய்மொழி எழுத்தாளர்கள் பலர் இன்றளவும் சுயதணிக்கையைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.” என பதிலளித்தேன்.

“நீங்கள் இன்னும் சுதந்திரமாக உங்கள் படைப்பை எழுதும் பொருட்டு எதிர்காலத்தில் சிங்கப்பூரை விட்டு வெளியேறி இந்தியா வந்துவிடும் திட்டம் ஏதும் உண்டா?” என்பது இரண்டாவது கேள்வி. “இதுவரை அப்படியான திட்டங்கள் ஏதும் இல்லை. எதிர்காலத்திலும் அப்படி நடக்காது என்றுதான் தோன்றுகிறது. எனது இயல்பும் எனது எழுத்தின் இயல்பும் புரட்சிக்கானதோ போராட்டத்துக்கானதோ இல்லை. ஒரு பெண்ணாக எழுதுகிறேன், என்னை முன்வைக்கிறேன் என்பதையே எனக்கான அரசியல் செயல்பாடாகக் கருதுகிறேன்” என்று பதிலளித்தேன்.

எழுத்தாளர் நந்தினி, ‘நர்மதா’ அணைக்கட்டு விவகாரத்தில் போராளியாகச் செயல்பட்டவர். அந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளின் குறிப்பாக ஆதிவாசிப் பெண்களின் வாய்மொழி வரலாற்றைச் சேகரித்துக்கொண்டிருப்பவர். அதை நூலாக எழுதவே அவர் ‘ஜாமூன்’ இல்லத்திற்கு வந்திருந்தார். தான் சிறைக்குச் சென்ற அனுபவங்கள், சிறையில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள், பொய்யாகப் புனையப்பட்டு முடிவுறாமல் நீளும் வழக்குகள், சக போராளியோடு காதல் திருமணம், போராட்ட வாழ்வால் குழந்தை பெற்றுக்கொள்ளாதது என்று அவரது கதையைக் கேட்டபோது எழுத்துச் செயல்பாடு ஒவ்வொரு படைப்பாளிக்கும் பிரத்யேகமான களங்களில் அமைகிறது என்பதை உணர்ந்தேன்.

யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் சுதந்திரமாக இயங்க முடிவது இத்திட்டத்தின் பலம். ஆனால் அந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடாத தார்மீகம் எழுத்தாளர்களுக்கு அவசியம்.

சொஹைனி அடிப்படையில் ஒரு கவிஞர். தனது கவிதைத் தொகுப்பிற்காக ‘International Beverly Manuscript Prize’ பெற்றவர். கனவுருப் புனைவு (speculative Fiction) வகைமையில் ஒரு நாவல் எழுதுவதற்கான முன்வரைவோடு வந்து எழுதிக்கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியை அவர் வாசித்துக் காட்டியபோது கவிஞர்கள் புனைவு எழுதும்போது மொழி அதன் உச்சங்களைத் தொடுவதைக் காணமுடிந்தது. அவர் ஒரு பதிப்பகத்தில் எடிட்டராகப் பணிபுரிந்தவர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடனும் தனக்குள் இருக்கும் எடிட்டர் வெளிவருவதால் தொடர்ந்து விரைந்து எழுதமுடியாமல் போகிறது என்று சொல்லிச் சிரித்தார்.

மற்றொரு எழுத்தாளரான சாந்தினி தனது குடும்ப வரலாற்றை நினைவுக்குறிப்புகள் (Memoir) பாணியில் எழுதுவதற்காக வந்திருந்தார். சிந்தி இனத்தவரான அவரது குடும்பம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். தனது மூத்த குடும்ப உறுப்பினர்களை மெய்நிகர்வழி நேர்காணல் செய்தல், பிரிவினை குறித்த நூல்களை தேடித்தேடி வாசித்தல், அது தொடர்பான திரைப்படங்களைப் பார்த்தல் என அவர் தனது எழுத்திற்கான அடிப்படைகளை விரிவாகவும் வலுவாகவும் கட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்.

மெஹெர் ஒருவாரம் தாமதமாக ‘ஜாமூன்’ இல்லத்திற்கு வந்து சேர்ந்தாலும் குறுகிய காலத்தில் எங்கள் குழுவில் இயல்பாக இணைந்து கொண்டார். மானுடவியலாளரான இவரது ‘Bad Table Manners’ என்ற உணவு குறித்த வலையுரைத்தொடர் பிரபலமானது. இவரும் தனது படைப்பு குறித்த முதல்நிலைத் திட்டமிடலுக்காக வந்திருந்தார்.

ஜாமூன் நூலகத்தில் சங்கம் இல்லம் திட்டத்தில் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளின் நூல்களும் வாசிப்புக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தின் வழியாகத்தான் அதுவரை வாசிக்கத் தவறிய எழுத்தாளர் தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ வாசித்துவிட்டு நான்கைந்து நாட்கள் பித்தேறிய மனதோடு திரிந்து கொண்டிருந்தேன். சிங்கப்பூர் திரும்பியவுடன் அவரது ‘நீர்வழிப்படூம்’ நாவலை வாசித்து முடித்தேன். அனைத்து வாசக நண்பர்களிடமும் “தேவிபாரதியை வாசியுங்கள்! தேவிபாரதியை வாசியுங்கள்!” என்று அரற்ற ஆரம்பித்துவிட்டேன். தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற படைப்பாளிகளில் ஒருவர் தேவிபாரதி.

தேசிய கலைகள் மன்றத்திற்குச் சமர்ப்பித்த முன்வரைவில் ஐம்பது விழுக்காட்டை மூன்று வாரங்களில் எழுதி முடித்தேன். இத்திட்டத்தில் பங்குபெறாமல் போயிருந்தால் இது சாத்தியமாகி இருக்குமா என்பது சந்தேகம்தான். எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் இராதது இத்திட்டத்தின் சிறப்பம்சம். காலக்கெடு என எதுவும் இல்லை. சில சமயங்களில் காலக்கெடுக்கள் படைப்பாளிக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிப் படைப்பூக்கத்தை பாதிக்கக்கூடும். யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் சுதந்திரமாக இயங்க முடிவது இத்திட்டத்தின் பலம். ஆனால் அந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடாத தார்மீகம் எழுத்தாளர்களுக்கு அவசியம்.

ஒரு வலசைப் பறவையாக எழுத்தாளர்களின் சரணாலயத்தில் தங்கி நான் எழுதி முடித்திருக்கும் நூல் ‘அப்பன்’. முழுவதுமாக நிறைவடைந்து அச்சுக்குச் சென்றிருக்கும் ‘அப்பன்’ விரைவில் வெளியாகவுள்ளது. இதைச் சாத்தியமாக்கிய சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்திற்கும் சங்கம் இல்லத்திற்கும் ஒரு படைப்பாளியாக எனது நன்றிகள். இனிவரும் ஆண்டுகளிலும் தேசிய கலைகள் மன்றம் இத்திட்டத்தைத் தொடர்ந்தால் தமிழ், சீன, மலாய் மொழி எழுத்தாளர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.