எதை விட்டுத்தரலாம் எதை விடக்கூடாது என்ற தெளிவு அவசியம்-முஹம்மது பிலால்

மாணிக்கத்தை (Ruby) எடுத்துக்கொண்டால் அதில் genuine, synthetic, unheated, heated, glass-filling எனப் பலவகைகள் இருக்கின்றன. வாங்குகிறவருக்கு விஷயஞானம் இருக்கிறதோ இல்லையோ நான் அவற்றின் தன்மைகளையும் உண்மைகளையும் சொல்லியே விற்பேன். அதனால் சில நேரங்களில் வியாபாரம் நடக்காமல்கூடப் போகும். அந்த நேரத்தில் ஒரு விற்பனை குறைகிறது என்றாலும் அதைவிட அதிகமாக நம்பிக்கை வளரும், அது நீண்டகால நோக்கில் விற்பனையைப் பெருக்கும்.

முஹம்மது பிலால்
நவரத்தினக்கல் வர்த்தகர்

ஒரு வியாபாரி தன் மகன் படித்திருக்கிறார் என்றும் ஆனால் தொழிலில் அனுபவம் வேண்டும் என்றும் என்னை அணுகினார். மகனின் விருப்பப்படி கற்களை வாங்க விட்டு, ஒருவேளை அவர் வாங்கிய கற்கள் மூன்று மாதங்களுக்குமேல் விற்க இயலவில்லை என்றால் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வேறுகற்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்க இயலுமா என்று கேட்டார். விற்பனை ரசீதில் விற்ற பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று நான் போட்டிருக்கிறேன். ஆயினும் அவரது வேண்டுகோளின் நோக்கை அறிந்து நீக்குப்போக்குடன் ஏற்றுக்கொண்டேன். ஆகவே எதை விட்டுத்தரலாம் எதை விட்டுத்தரக்கூடாது என்ற தெளிவு தொழிலில் அவசியம்.

குணமானவர்களை வைரம், மாணிக்கம், முத்து, தங்கம் என்றெல்லாம் விளிப்பதுண்டு. மனிதரின் மதிப்பை மட்டுமின்றி அவர்களின் தூய்மையையும் பறைசாற்றவே அப்படிப் பாராட்டுகிறோம். ஆகவே அக்கற்களை விற்கும் நான் அவற்றின் தூய்மையை (purity) ஒருமாற்றும் குறைவின்றிக் காத்தாக வேண்டும். அதில் நீக்குப்போக்குக்கு இடமில்லை. அதுவே என் தொழிலின் தர்மம்.