என்னை அவர்களின் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்-ஜெயா ராதாகிருஷ்ணன்

ஓர் ஊடகப்புலத் தொழில்முனைவராக, குறிப்பாக ஒரு கதைசொல்லியாக, தொடர்பாடலுக்குள் செல்வதற்குமுன் முதலில் ஒருவிஷயம் குறித்த மாறுபட்ட கண்ணோட்டங்களை அலசி அவற்றை அசலாகவும், உண்மையாகவும், பொறுப்பாகவும் பிரதிநிதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது. அதில் என்னுடைய இயல்பான சாய்வுகளையும் வரம்புகளையும்கூட நான் கவனமாகக் கணக்கில்கொள்கிறேன். அதன்பிறகே பங்கேற்போரின் சிந்தனைகளைத் தூண்ட நான் முயல்கிறேன்.

ஜெயா ராதாகிருஷ்ணன்
கதைசொல்லி,
ஊடகப்புலத் தொழில்முனைவர்

மார்பகப் புற்றுநோய் குறித்த ஒரு தொடர்பாடல் நிகழ்வுக்காகப் அந்நோய்கண்டு மீண்டவர்களிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் மனந்திறந்து தம் போராட்டங்களையும் வலிகளையும் கொட்டினர். ஆனால் அவற்றை சுவாரஸ்யத்துக்காகவும் காட்சிப்பொருளாகவும் பயன்படுத்தி என் நிகழ்ச்சியை வசீகரமானதாக ஆக்க நான் விரும்பவில்லை. மார்பகப் புற்றுநோய் குறித்துப் பரவியுள்ள தட்டையான, ஒற்றைப்படையான கண்ணோட்டங்களை மாற்றுவதற்கு மட்டுமே அந்த பரந்த அனுபவப் பகிர்வுகளைப் பயன்படுத்தினேன்.

ஒரேவரியில் சொல்லவேண்டும் என்றால், என் எல்லைகளைத் தெளிவாக அறிந்துகொண்டு, பல்வேறு பார்வைகளை விரிவாக ஆராய்ந்துகொண்டு, அனைத்திற்கும் மேலாக என்னை அவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொண்ட பிறகே நிகழ்ச்சித் தயாரிப்புக்கான முடிவுகளைப் பொறுப்புணர்வுடன் எடுக்கிறேன். இதுவே என் தொழிலில் நான் சமரசம் செய்துகொள்ளக்கூடாத தர்மமாக நினைக்கிறேன்.