நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் இரு கண்கள்-ஜோதி. மாணிக்கவாசகம்

பொருளைத் தயாரிப்பவர்களுக்கும், அதை வேண்டுவோருக்கும் இடையில் நான் இருக்கிறேன். இந்தத் தொழிலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், என்னிடம் பொருள் வாங்குவோருக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதாது, அந்தப் பொருளை எனக்கு விற்பவரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். தொழிலின் ஆணிவேரான ஊழியர்களிடமும் நேர்மையாக இருக்கவேண்டும், குறிப்பாக ஊதிய விஷயங்களில். நஷ்டங்களும் இடர்பாடுகளும் சறுக்கல்களும் வரலாம் ஆனால் அவற்றை வெளிப்படைத் தன்மையுடன் எதிர்கொள்ளவேண்டும்.

ஜோதி. மாணிக்கவாசகம்
ஏற்றுமதி, இறக்குமதி நிறுவன உரிமையாளர்

நான் சில வருடங்களாக ஏற்றுமதி செய்துவந்த பொருளை மற்றொரு தொழிலதிபர், என் நண்பர்தான், என் வாடிக்கையாளரைச் சந்தித்து என்னைவிட ஒருவெள்ளி குறைவாகக் கொடுப்பதாகச் சொன்னார். அது நான் வாங்கும் விலையை விடக் குறைவு. போட்டிக்காகச் செய்தார். என்னால் அந்த விலைக்கு தர இயலாததால் அவரிடமே வாங்கி கொள்ளுங்கள் என்று வாடிக்கையாளரிடம் கூறிவிட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு விலை ஏற்றப்பட்டதோடு மட்டுமின்றி குறிப்பிட்ட காலத்தில் பொருள்களும் அனுப்பப்படவில்லை. பாதிக்கப்பட்ட பழைய வாடிக்கையாளர் மீண்டும் என்னிடம் வந்தார். அவருக்குப் பொருளை அனுப்பினேன்; அடுத்த ஆறு மாதத்திற்கான ஒப்பந்தமும் கிடைத்தது. இனி அவர் வேறு ஒருவரையும் நம்பிச் செல்லமாட்டார்.

இறுதிவெற்றி நேர்மைக்கே, இடைக்காலத்தில் பொறுமை அவசியம். பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. இதுவே என் விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் பின்பற்றும் தொழில் தர்மம்.