கல்விக்குப் பணம் பெறும்போது கத்திமேல் நடக்கிறேன்-பாரதி மூர்த்தியப்பன்

பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்மொழி, இலக்கிய, பண்பாட்டுப் பயிலரங்குகளைக் கடந்த பத்தாண்டுகளாக Educlassic கல்வி நிறுவனத்தை நிறுவி நடத்திவருகிறேன். தொழிலில் சக தோழிகளின் பங்கு கணிசமானது. எவ்வகைப் பயிலரங்காக இருப்பினும் அதில் மொழிக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதி செய்கிறோம். தோரணம் பின்னுவதோ, முறுக்கு சுற்றுவதோ வேலை அல்ல, அவற்றோடு இணைந்திருக்கும் பண்பாட்டு, மொழிக்கூறுகளை மாணவர்களுக்கு உணர்த்துவதே பணி.

பாரதி மூர்த்தியப்பன்
மொழி, பண்பாட்டுக் கல்விநிறுவன உரிமையாளர்

பாடத்தைக் கற்பிக்கலாம், படைப்பாற்றலைக் கற்பிக்க முடியது. ஆனால் அதைத்தேடும் பயணத்துக்கான பாதையைக் காட்டமுடியும். அத்தகைய நுணுக்கமான கற்பித்தல் பணியில் ஒருபோதும் கற்பிப்பவர் தன்னை முன்நிலைப்படுத்தக் கூடாது. அதேசமயம் தேவையான இடங்களில் ஆகர்ஷிக்கவும் வேண்டும். அங்கீகாரத்தை எதிர்பார்க்கக்கூடாது, ஆளுமையுடனும் திகழவேண்டும். இவை முக்கியமானவை மட்டுமல்ல சவாலானவையும்கூட.

ஒரு முறை பயிலரங்கில் ஒரு மாணவர்க்கு ஒரு வார்த்தைகூடப் பிழையில்லாமல் எழுத முடியவில்லை, அவர் ஒரு சிறிய கதையை எழுத வேண்டும். அவருக்கு உதவி செய்து கதையை எழுதி முடித்ததும் அந்த மாணவர் “ஆசிரியை எனக்கும் எழுத வருகிறது” எனக் கண்கலங்கிக் கூறியதை மறக்க முடியாது. கொடுக்கக் கொடுக்கக் கொடுப்பவரிடம் பெருகும் கல்வி ஆன்ம நிறைவளிப்பது. தொழில் என்றால் பணம் இருக்கும். ஆயினும் கல்வித் தொழிலுக்குச் சேவையே பிரதான நோக்கு. கல்விக்குப் பணம் பெறும்போது கத்திமேல் நடப்பதுபோலக் கவனமாகச் செய்கிறேன்.