அரபு-அறபு எது சரி?

முனைவர் த. சுந்தரராஜ்

தமிழ்ச்சூழலில் அரபு மொழி, அரபு நாடுகள், அரபு வசந்தம், அரபிக்கடல், அரேபியர் போன்ற சொற்கள் புழக்கத்திலுள்ளன. العربي-என்னும் அறபுச்சொல்லை அரபி என்று எழுதுவது தமிழ் ஊடகங்களின் பொது வழக்காயிற்று. ஆனால் அறபும் தமிழும் நன்கறிந்த இஸ்லாமியத் தமிழறிஞர்கள் (எ.எம்.எ.அஸிஸ், ம.முகம்மது உவைஸ், செ.பசுலுமுகியிதீன், பி.எம்.பீர்.முகம்மது பாகவி, ஆர்.பி.எம்.கனி போன்றோர்) தங்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களில் அறபு/அறபி என்று எழுதுகிறார்கள். இது இலங்கை மற்றும் தமிழகத்தைச் சார்ந்த இஸ்லாமியத் தமிழறிஞர்களின் பொது வழக்காக இருக்கின்றது. இவ்வாறு இடையின ரகரத்தைக் கொண்டும், வல்லின றகரத்தைக் கொண்டும் எழுதப்படும் இருவடிவங்கள் (அரபு-அறபு) தமிழில் உண்டு. இவ்விரு வடிவங்களில் எது துல்லியமானது என்பதையும், العربي-என்னும் அறபுச்சொல் தமிழில் இவ்விரு வடிவங்களில் வழங்குவதற்கான வரலாற்றுப்பின்னணி என்ன? என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

ஆங்கிலத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. ஏனென்றால் ஆங்கிலத்தில் ஒரு /r/ தான் இருக்கிறது. அறபியிலும் ஒரு /ر/ தான் இருக்கிறது. ஆனால் இது எழுத்துப்பெயர்ப்பு என்னும் அளவில் பொருந்துமே தவிர, உச்சரிப்பு முறையில் ஆங்கில /r/ க்கும்,அறபு /ر/ விற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. ஓர் ஒலி அல்லது ஒரே இனஒலி (உரசொலி, மூக்கொலி…) பல்வேறு மொழிகளில் இருக்கலாம், ஆனால் அவ்வொலியை உச்சரிக்கும் முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு அந்தந்த மொழியின் இயல்பிற்கேற்பத் தோன்றும். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவான ‘உலக ஒலியியல் அகரவரிசை’ (International Phonetic Alphabet) உருவானது.

அறபு /ر/-விற்கு இணையான தமிழ் ஒலியாக வல்லின ‘ற’கரம் திகழ்வதை மரபிலக்கண ஒப்பீடு, அறபுத்தமிழ்ப் பயன்பாடு, ஒலியியல் அகரவரிசை விளக்கம் ஆகிய மூன்று அணுகுமுறைகள் வழி நிறுவலாம்.

/ر/-என்னும் அறபு அதிர்வொலியின் உச்சரிப்பில், அறபுக்கும் ஆங்கிலத்திற்கும் உள்ள வேறுபாடு அறபுக்கும் தமிழுக்கும் இல்லை. ஏனென்றால் /ر/-என்னும் அறபு ஒலிக்கு இணையான உச்சரிப்பு முறையையும், தனி எழுத்துருவையும் கொண்ட ஒலி /ற/ தமிழில் இருக்கிறது. ஒலிப்பிடம், ஒலிப்புமுறை முதலியவற்றில் அறபு /ر/-விற்கு இணையான தமிழ் ஒலியாக வல்லின ‘ற’கரம் திகழ்வதை மரபிலக்கண ஒப்பீடு, அறபுத்தமிழ்ப் பயன்பாடு, ஒலியியல் அகரவரிசை விளக்கம் ஆகிய மூன்று அணுகுமுறைகள் வழி நிறுவலாம்.

மரபிலக்கண ஒப்பீடு:

அறபு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் இன்று கிடைக்கும் முதல் மரபிலக்கணங்களான அல்-கிதாப்பு (பொ.ஆ.800), தொல்காப்பியம் (பொ.ஆ.மு.300) ஆகிய இரு இலக்கணங்களும் தத்தம் மொழி ஒலிகளின் ஒலிப்பிடம், ஒலிப்புமுறை பற்றி ‘ஒலிகளின் பிறப்பியல்’ என்னும் பகுதியில் விவரிக்கின்றன. அப்பிறப்பியலில், குறிப்பாக /ر/, /ற/-என்னும் ஒலிக்கு இரு மரபிலக்கணங்களும் வரையறுக்கும் ஒலிப்பிடம், ஒலிப்புமுறை முதலியவற்றை ஒப்பிடுதல்.

உலக ஒலியியல் அகரவரிசை ஆவணத்தின் ஒரு பகுதி

அறபுத்தமிழ் பயன்பாடு:

தமிழ் ஒலிகளை அறபு எழுத்தில் எழுதும் ‘அறபுத்தமிழ்’ என்னும் தமிழ் முஸ்லீம்களின் ஆதர்ச மொழியில், தமிழில் உள்ள றகரம், ரகரம் ஆகிய இரு ஒலிகளை எழுதுவதற்கு இஸ்லாமியத் தமிழறிஞர்கள் பயன்படுத்திய அறபு எழுத்துக்களை ஒப்புநோக்குதல்.

ஒலியியல் அகரவரிசை விளக்கம்: தற்கால மொழியியல் நோக்கில் தமிழ், அறபு அறிஞர்கள் தத்தம் மொழியில் உள்ள இந்த அதிர்வொலிகளுக்குக் (ر-ற) கொடுக்கும் ஒலிப்புமுறை விளக்கங்களை, உலக ஒலியியல் அகரவரிசையின் பின்னணியிலிருந்து அணுகுதல்.

முதலில், மரபிலக்கண ஒப்பீடு.

தொல்காப்பியமும், அல்-கிதாப்பும் தத்தம் மொழியில் தோன்றிய பிற்கால மரபிலக்கணங்களுக்கு முதன்மைத் தரவாக விளங்கும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றவையாகும். தொல்காப்பியத்தின் ஒலியியல் கொள்கை பலவற்றை, நேமிநாதம் (பொ.ஆ.1200), நன்னூல் (பொ.ஆ.1300), இலக்கண விளக்கம் (பொ.ஆ.1700), தொன்னூல் விளக்கம் (பொ.ஆ.1700) முதலிய பிற்காலத் தமிழ் இலக்கணங்கள் பின்பற்றுகின்றன. அதே போன்று அல்-கிதாப்பின் ஒலியியல் கொள்கையை ஃபாறா (பொ.ஆ.822), முபாறித் (பொ.ஆ.898), இபின் ஜின்னி (பொ.ஆ.1002) முதலிய பிற்கால அறபு இலக்கணிகள் பின்பற்றுகிறார்கள்.

தமிழ் /ற/-வின் பிறப்பு பற்றி தொல்காப்பியர் இவ்வாறு கூறுகிறார்: “அணரி நுனிநா அண்ணம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்”

பொ.ஆ.எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய முதல் அறபு இலக்கணமான அல்-கிதாப் அறபு ஒலியியல் பற்றி நூலின் இறுதிப்பகுதியில் விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக, 565-வது இயலில் அறபு ஒலிகளின் பிறப்பை விவரிக்கிறது. மொத்தம் 29அறபு ஒலிகளின் பிறப்பை 16 ஒலிப்பிடங்களில் வரையறுக்கும் ஸீபவைஹி (அல்-கிதாப்பின் ஆசிரியர்), வரிசைமுறையில் பத்தாவதாக, அறபு /ر/-வின் பிறப்பு பற்றிப் பின்வருமாறு விளக்குகிறார். “/ن/[n]-இன் ஒலிப்பிடத்திலேயே /ر/-வும் ஒலிக்கும், ஒலிப்புமுறையின் போது மட்டும் நுனிநா விளிம்பு பின்னோக்கி வளையும்.

மேலும், அறபு ஒலிகளை ஒலிப்புமுறையின் அடிப்படையில் வெவ்வேறு இனங்களாக வகைப்படுத்தும் போது /ر/-வை மட்டும் “முகற்றறு” (المكرَّرُ) என்னும் தனி வகையில் அடக்குகிறார். அறபியில் “முகற்றறு” என்னும் கலைச்சொல்லின் நேர்ப்பொருள், ‘திரும்பத்திரும்ப’, ‘அதிர்வு’ (repeated) என்பதாகும். இறுதியாக “இவ்வொலி மூச்சோட்டத்தின் இயல்பிலேயே தோன்றும் இறுக்கமான ஒலி” (tight/stop consonant) என்று முடிக்கிறார். இவை அறபு /ر/-விற்கு ஸீபவைஹி கொடுக்கும் முழுமையான ஒலிப்பியல்/உச்சரிப்பு விளக்கமாகும்.

ர, ற உச்சரிப்புகள் பிறக்கும் விதம்

அடுத்து தொல்காப்பியரின் விளக்கத்தைக் காண்போம். தமிழ் /ற/-வின் பிறப்பு பற்றி தொல்காப்பியர் இவ்வாறு கூறுகிறார்: “அணரி நுனிநா அண்ணம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழு. 94). மேலும், தமிழ் மெய்யொலிகளை அவற்றின் ஒலிப்பியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, /ற/-வை உள்ளடக்கிய ஆறு (கசடதபற) மெய்யொலிகளை ‘வல்லெழுத்துக்கள்’ என்று குறிக்கிறார். “வல்லெழுத்து என்ப கசடதபற” (தொல்.எழு. 19)

இப்போது இவ்விரு மரபிலக்கணங்களின் ஒலிப்பியல் விளக்கத்தை ஒப்பீடு செய்வோம். தொல்காப்பியரின் விளக்கத்தில் நுனி என்பது நாவைத் தொடர்ந்து வரும் அண்ணத்திற்கும் பொருந்தும் என்கின்றனர் தொல்காப்பியத்தின் முதன்மையான உரையாசிரியர்களான இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். தொல்காப்பியமும், அல்-கிதாபும் [n] /ன/ /ن/-என்னும் மூக்கொலியையும், [r] /ற/ /ر/ என்னும் அதிர்வொலியையும் ஒரே ஒலிப்பிடத்தில் (நுனி அண்ணம்/Alveolar) சுட்டுகின்றன. [r]-இன் ஒலிப்பிடத்தை விளக்கும் முறையில் இவ்விரு மரபிலக்கணங்களும் வேறுபட்டாலும் அவை சுட்டும் ஒலிப்பிடம் ஒன்றே. அது மட்டுமன்றி [n], [r] ஆகிய இரு ஒலிகளும் ஒலிப்பிடத்தால் இணைந்து, ஒலிப்புமுறையில் மட்டுமே வேறுபடுபவை என்னும் ஒலிப்பியல் கொள்கை தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்புக்கும் பொதுவானதாக இருக்கின்றது.

[r]-ஐ உச்சரிக்கும் போது (ஒலிப்புமுறை) ‘நுனிநா விளிம்பு பின்னோக்கி வரும்’ என்கிறார் ஸீபவைஹி. தொல்காப்பியர் ‘அணரி நுனிநா அண்ணம் ஒற்ற’ என்று மிகச்சுருக்கமாகக் கூறினாலும் ‘அணரி’ (அணர்தல்) என்னும் கலைச்சொல்லின் மூலம், /ற/ [r]-என்னும் ஒலியை எழுப்பும் நாவின் நிலையை துல்லியமாகக் குறிக்கிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் அணர்தலும், ஸீபவைஹி குறிப்பிடும் “முகற்றறு” / ‘அதிர்வு’ (repeated)-வும் நாவின் ஒரே நிலையை (தன்மையை) குறிக்கும் இருவேறு (அணர்வு-அதிர்வு) விளக்கங்களாகும்.

அடுத்தது [r]-இன் முக்கியமான ஒலிப்பியல் கூறை இருவரும் தெளிவாக விளக்குகிறார்கள். ஸீபவைஹி அறபு /ر/-வை இறுக்கமான (tight) ஒலி என்கிறார், தொல்காப்பியர் தமிழ் /ற/ வை வல்லெழுத்து என்று வகைப்படுத்துகிறார். இறுக்கம் – வன்மை ஆகிய இரண்டு சொற்களும் [r]-இன் அடைப்பொலித் (stop) தன்மையைச் சுட்டும் இருவேறு பார்வைகள்.

இவ்வாறு முற்றிலும் வேறுபட்ட தமிழ், அறபு ஆகிய இருவேறு செம்மொழிகளின் முதல் மரபிலக்கணங்கள் தத்தம் மொழியில் உள்ள அதிர்வொலிக்கு (/ற/-/ر/) அளிக்கும் ஒலிப்பியல்/உச்சரிப்பு விளக்கங்களை ஒப்பிடும் போது, /ற/, /ر/-ஆகிய இரண்டும் ஒரே இன ஒலி என்பதையும் தாண்டி, இவ்விரு ஒலிகளுக்கும் உள்ள நுட்பமான ஒலிப்பியல் ஒற்றுமைகளையும் இனம்காண முடிகிறது. ஒலிப்பியலில் உள்ள இந்த ஒற்றுமைகள் அறபு /ر/-வும், தமிழ் /ற/-வும் ஒலிப்பிடத்தாலும் ஒலிப்புமுறையாலும் மிகவும் ஒத்திருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாவது, அறபுத்தமிழ் பயன்பாடு.

பல நூற்றாண்டுகளாக தமிழ் முஸ்லீம்களின் ஆதர்ச மொழியாக விளங்கிய அறபுத்தமிழ் தமிழ் ஒலிகளை அறபு எழுத்துக்களில் எழுதும் தனியொரு மொழிவடிவமாகும். இஸ்லாம் மீதிருந்த பற்றுதலால் இஸ்லாமியத் தமிழறிஞர்கள் தமிழ் மொழியை அறபு எழுத்துருவில் எழுதும் முறையைத் தோற்றுவித்தனர்.

அறபுத்தமிழறிஞர்கள் தமிழ் ஒலிகளுக்குப் பொருத்தமான அறபு எழுத்துக்களை உருவாக்கும்போது சில இடர்பாடுகளை எதிர்கொண்டனர். ஏனென்றால் அறபு-தமிழ் ஆகிய இரு மொழிகளும் அடிப்படையில் வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. இயல்பாகவே இரு மொழிகளின் ஒலிகளுக்கும் வேறுபாடு அதிகம். அந்தச்சூழலில் தமிழ் ஒலிகளுக்குப் பொருத்தமான அறபு எழுத்துக்களை எப்படி உருவாக்குவது?

இஸ்லாமைப் பின்பற்றும் அறேபியரல்லாத பிற மொழி பேசும் முஸ்லீம்கள் தம் தாய்மொழியை அறபு எழுத்துருவில் எழுத முயன்றபோது இந்தச்சிக்கலை எதிர்கொண்டார்கள். இந்த நிலையை அறபு எழுத்தைப் பயன்படுத்தும் சுவாகிலி, ஜாவி, உருது, காஷ்மீரி, சிந்தி, பாஷ்தோ, அறபு மலையாளம் முதலிய அனைத்து மொழிகளும் எதிர்கொண்டன. அறபு எழுத்துக்களைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மொழிகள், தம் மொழியில் உள்ள சிறப்பொலிகளுக்கு அறபு எழுத்துருவிலேயே புதிய குறிகளைப் புகுத்தி, அறபு மொழியில் இல்லாத, புதிய அறபு எழுத்துருக்களை உருவாக்கின.

இஸ்லாமியத் தமிழ் அறிஞர்களே. வல்லின /ற/-விற்கும், அறபு /ر/-விற்கும் உள்ள ஒற்றுமையை இனம் கண்டு, அறபுத்தமிழில் தமிழ் வல்லின றகரத்திற்கு அறபு /ر/-வின் வரிவடிவத்தைப் பயன்படுத்தினார்கள்.

தமிழில் /ர/, /ற/-என்ற ஒரே வர்க்கத்தைச் சார்ந்த இரு ஒலிகள் இருக்கின்றன. அறபியில் உள்ள /ر/, ஒலிப்பிடம் ஒலிப்புமுறை முதலியவற்றில் தமிழின் எந்த ஒலியோடு (ரகரமா? றகரமா?) துல்லியமாகப் பொருந்துகிறது என்பதை முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் தமிழிலும் அறபியிலும் புலமை வாய்ந்த இஸ்லாமியத் தமிழ் அறிஞர்களே. அவர்கள்தான் தமிழின் வல்லின /ற/-விற்கும், அறபு /ر/-விற்கும் உள்ள ஒற்றுமையை இனம் கண்டு, அறபுத்தமிழில் தமிழ் வல்லின றகரத்திற்கு அறபு /ر/-வின் வரிவடிவத்தைப் பயன்படுத்தினார்கள்.

தமிழின் இடையின /ர/-விற்கு புதியதொரு அறபு எழுத்துருவை உருவாக்கினர். அப்புதிய எழுத்துரு ஏற்கனவே உள்ள அறபு /ر/-வின் அடியில் புள்ளி வைத்து /ر/-என்று எழுதுவதாகும். இந்த புள்ளியின் ஒலியியல் மதிப்பு ‘குறுகி ஒலித்தல்’ ஆகும் (பேச்சு வழக்கில் ‘ற’-வை பெரிய ‘ர/ற’ என்றும், ‘ர’-வை சின்ன ‘ர’ என்றும் கூறும் வழக்கம் உண்டு). அறபுத்தமிழில் மிகத்தெளிவான ஒலியியல் அறிவோடு இப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக, உலக ஒலியியல் அகரவரிசை.

உலக ஒலியியல் அகரவரிசையை அடியொற்றித் தற்கால மொழியியல் அறிஞர்கள் தத்தம் மொழியின் ஒலிகளுக்கு கொடுக்கும் விளக்கத்தைக் காண்போம். தமிழ் மொழியியல் அறிஞர்களான க.முருகையன் (1972), க.பாலசுப்பிரமணியம் (1972), செ.வை.சண்முகம் (1975) முதலியோர் தமிழ் ‘ற’கரத்தை ஒலிப்பில்லா அதிர்வொலி (unvoiced / voiceless) என்று வகைப்படுத்துகிறார்கள்.

அறபு மொழியியல் அறிஞர்களான ஏ.ஏ.அல்-நஸீர் (1993), எம்.ஜி.கார்டர் (2004), சாலமோன் ஐ சாரா (2010) முதலியோர் அறபு /ر/-வை ஒலிப்பில்லா அதிர்வொலி (unvoiced/voiceless) என்றே குறிப்பிடுகிறார்கள். எனவே தற்கால மொழியியல் அறிஞர்களின் பார்வையின் அடிப்படையில் நோக்கும் போதும், அறபு /ر/-விற்கு தமிழில் உள்ள வல்லின ‘ற’கரமே இணையான ஒலியாக இருப்பதை உணரலாம்.

மேற்கண்ட மூன்று ஆதாரங்கள் வழி அறபு /ر/-விற்கு இணையான-பொருத்தமான தமிழ் ஒலி-எழுத்து /ற/-தான் என்பது தெளிவாகிறது. எனவே ‘அறபு’ என்னும் வடிவமே துல்லியமானதாகும். ‘அறபு’ என்பது தமிழ்ச்சொல் மரபிற்கேற்ப அமைகிறது. ஆனால் மூல அறபுச்சொல்லின் சரியான ஒலி/எழுத்து வடிவம் ‘அறபி’ (العربي) என்பதாகும். இன்னும் துல்லியமாக ஒலிபெயர்த்தால் ‘அல்-அறபி’ என்று வரும். ‘அல்’ என்னும் பெயரடையோடு ‘அறபி’ என்னும் பெயர்ச்சொல்லை எழுதுவது அறபு மொழியின் மரபு. ‘அல்-கிதாபு’, ‘அல்-ஜசீறா’ என்று பெயர்ச்சொல்லின் முன் பெயரடையிட்டு எழுதுகின்றனர். ஆங்கிலத்திலும் இந்த மரபு (the book, the girl) உண்டு.

 அறபு /ر/-விற்கு இணையான-பொருத்தமான தமிழ் ஒலி-எழுத்து /ற/-தான் என்பது தெளிவாகிறது

இவ்வாறு அறபுமொழியை தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய இஸ்லாமியத் தமிழறிஞர்கள், ‘அறபுத்தமிழ்’ ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்’ ஆகியவற்றில் العربي-என்னும் அறபுச்சொல்லை ‘அறபு’ என்று வழங்கிக்கொண்டிருந்தனர். இவ்வாறு வழங்கப்பட்டு வந்த சூழலில் ‘அரபு’ என்னும் வடிவம் எவ்வாறு தமிழில் நுழைந்தது.

பிற மொழிச்சொல்லை தமிழில் எவ்வாறு எழுதுவது என்பதைப்பற்றி தொல்காப்பியர் காலத்திலேயே விவாதிக்கப்பட்டது. தொல்காப்பியர், பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துக்களின்(ஒலி) இயல்பான புணர்ச்சி விதியின்படி எழுதுவது ஒருவகை, இரு மொழிக்கும் பொதுவான ஒலியமைப்பில் எழுதுவது மற்றொரு வகை என குறிப்பிடுகிறார் (தொல்.சொல்.395,96).

நன்னூலின் ஆசிரியர் பவனந்தி முனிவர் இருவகையான அவ்வெழுத்து முறையை தற்சமம், தற்பவம் என அழைக்கிறார். ‘वर्षम्’ என்னும் வடமொழிச் சொல்லை, சமஸ்கிருத ஒலிப்புமுறையில் ‘வருஷம்’ என்று எழுதுவது ‘தற்சமம்’. தமிழின் இயல்புப்படி ‘வருடம்’ என்று எழுதுவது ‘தற்பவம்’ ஆகும். அதேபோலத்தான் நஷ்டம்-நட்டம். தற்சம வடிவம் செல்வாக்குப்பெற்ற காலத்தில் தான் ஹ, ஸ, ஷ, ஜ, ஶ்ரீ முதலிய கிரந்த எழுத்துக்கள் உருவாகின. தமிழில் தற்சமம், தற்பவம் ஆகிய இரு வடிவங்களையும் வெவ்வேறு குழுக்கள் கைக்கொண்டு வந்திருக்கின்றன.

வடமொழியில் தோன்றிய வால்மீகி இராமாயாணத்தைத் தழுவி தமிழில் தோன்றிய கம்பராமாயாணத்தில், கம்பர் சமஸ்கிருதப் பெயர்களான லக்ஷ்மணன், விபீஷணன், ஸீதா முதலியவற்றை முறையே இலக்குவன், வீடணன், சீதை எனத் தற்பவ வடிவில் மாற்றுகிறார்.

மேற்கண்ட தமிழ் மரபுப்படி, ‘அறபு’ தற்சமம், தற்பவம் ஆகிய இரு வடிவங்களுக்கும் பொருந்தும். அவ்வாறு இரு வடிவங்களுக்கும் பொருந்தக்கூடிய ‘அறபு’ இருக்கும்போது, ‘அரபு’ என்னும் வடிவம் தமிழில் செல்வாக்குப்பெற்றுப் பரவலான புழக்கத்திற்கு வந்தது ஏன் என்பதை ஆராய வேண்டியது இவ்விடத்தில் அவசியமாகிறது.

பரவலான புழக்கத்துக்கு ‘ர’ வந்தது எப்படி?

தற்காலத் தமிழ் வழக்கில் அறபு /ر/-விற்கு இணையான ஒலியாக இடையின ‘ர’கரத்தை முன்னிறுத்தியதில் ஆங்கிலத்தின் பங்கு முதன்மையானது. العربي-என்னும் அறபுச்சொல்லை ஆங்கிலத்தின் (Arabic) வழி ஒலிபெயர்ப்பதன் விளைவே ‘அரபு என்னும் இடையின ‘ர’கரப் பயன்பாடு. ஆங்கில /r/-க்கு இணையான தமிழ் ஒலியாக /ர/ இருக்கிறது. எனவே ஆங்கிலத்தின் வழியே வரும் அறபுச்சொல் ‘அரபு/அரபி’ என்றே தமிழில் ஒலிக்கிறது.

இன்று நாம் அனைவருக்கும் ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழியாக விளங்குகிறது. இரு மொழிகளுக்கிடையிலான அறிவுப் பரிமாற்றம் பெரும்பாலும் ஆங்கிலம் வழியே நிகழ்கிறது. ஆங்கிலம் வழியிலான கருத்துப் பரிமாற்றத்தில் மொழியியல் குறைகள், பொருண்மையியல் குறை அளவிற்கு கவனப்படுத்தப்படுவதில்லை. அதனாலேயே மூலமொழிச் சொல்லை ஆங்கிலத்தன்மையோடு அளிப்பது இயல்பாகியிருக்கிறது. இதை அறபு-அரபு என்னும் சொற்களில் மட்டுமல்ல, ‘தமிழ்’ என்னும் தமிழ்ச்சொல்லை பிற மொழியினர் உச்சரிக்கும் முறையிலும் காணலாம்.

‘தமிழ்’ என்னும் சொல்லை ஆங்கிலத்தில் ‘Tamil’ என்று எழுதுவதும், العربي-என்னும் அறபுச்சொல்லை ஆங்கிலத்தில் ‘Arabic’ என்று எழுதுவதும் ஒரே விதியின்படிதான். அந்த விதி, தருமொழியிலிருந்து (source language) ஒரு சொல்லைப் பெறும் பெறுமொழி (target language) தன் மொழியின் இயல்பிற்கேற்ப (அமைப்பிற்கேற்ப) அச்சொல்லை வடிவமைத்தலாகும். இது எல்லா மொழிகளுக்கும் உள்ள பொதுப்பண்பு.

பிற மொழிகளின் ஒலி அமைப்பை தொடர்புமொழியின் (ஆங்கிலம்) இயல்போடு எழுதும் அந்தமுறை தான், தமிழ் தெரியாதவர்கள் தமிழை ‘டமில்’ என்றும், அறபு தெரியாதவர்கள் العربي-யை ‘அரபி’ என்றும் ஆங்கிலத்தின் வழி அழைப்பதற்கும் காரணமாக அமைகிறது.

தொடர்பு மொழியான ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க, இவ்விதியின் தாக்கமும் அதிகரிக்கும். எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்றால், தமிழ் தெரிந்தவர்களே தமிழ்ச்சொல்லை ஆங்கில வடிவில் உச்சரிக்கும் அளவிற்கு. எடுத்துக்காட்டாக மதுரையை ‘மடுரை’ (Madurai) என்றும், திருச்சியை ‘ட்ரிச்சி’ (Trichy) என்றும், தஞ்சாவூரை ‘டான்ஜூர்’ (Tanjore) என்றும் தமிழர்களே அழைக்கும் அளவிற்குத் தொடர்புமொழியில் உள்ள விதியின் தாக்கம் தமிழில் அதிகரித்துள்ளது. இன்றைய தமிழுக்கு இலக்கணம் செய்யும்போது, ஆங்கிலத்தின் தாக்கம் சில புதிய இலக்கண விதிகளைத் தமிழில் உருவாக்கியிருப்பதைக் காணலாம்.