ஈரச் சந்தை

ஸோயிஇயோ
இருநூறு ஆண்டுகாலப் பயணம் இனியும் தொடருமா?

ஈரச்சந்தை (wet market) பெரிதாகக் கண்டுகொள்ளத்தக்க ஓர் இடமன்று எனப் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் கருதக்கூடும். உலகெங்கிலும்கூட நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்றுக் கிளம்பியதும் பல்வேறு நாடுகளிலும் “ஈரச்சந்தை” என்ற பெயர் பரவலாக அனைவர் பேச்சிலும் அடிபடத் தொடங்கியது.

சிவானந்தம் நீலகண்டன்

சீனாவின் வூஹான் பகுதியிலுள்ள ஓர் ஈரச்சந்தைக்கும் முதலில் பெருந்தொற்று கண்டவர்களுக்கும் தொடர்பிருப்பது 2019இன் இறுதியில் உறுதியானது. கொரோனா நுண்மி ஒரு விலங்கெழு நோய் (zoonotic disease) என வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கானுயிர் (wild animals) விற்கப்பட்ட அந்த ஈரச்சந்தையிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியிருக்கவேண்டும் என ஊகங்கள் எழத்தொடங்கின. ஈரச்சந்தை என்றாலே அதைக் கானுயிர்ச்சந்தை எனப்பலர் விளங்கிக்கொள்வது துரதிருஷ்டவசமானது, ஏனெனில் பெரும்பாலான ஈரச்சந்தைகள் கானுயிர்களை விற்பதில்லை.

ஈரச்சந்தை என்பதை எப்படி வரையறுப்பது?

சிராங்கூன் ஈரச்சந்தை ஒன்றில்
கோழிகள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன (1986). கோழிகள் வெட்டப்படுவது 1993ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது

“பேரளவிலான திறந்தவெளிக் கடைகள் கடலுணவு, இறைச்சி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவற்றின் புதுச்சுனையோடு விற்குமிடம்” என்கிறது ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’. மேலும் இச்சந்தைகள் அங்கேயே மீன், கோழி போன்ற உயிர்ப்பிராணிகளைக் கசாப்பு போடவும் விற்கவும் செய்கின்றன என்றும் அவ்விவரிப்பு சொல்கிறது.

உயிர்மீன்கள் தொட்டிகளில் படபடத்து விசிறியடிக்கும் நீர்த்துளிகளும், இறைச்சியைக் குளிரூட்டும் ஐஸ்கட்டிகள் கரைந்தோடும் நீர்த்தாரைகளும், கசாப்பிடப்பட்ட விலங்குகளின் உதிரமும், அவற்றின் உட்புற நீர்மங்களுமே இச்சந்தைகளுக்கு “ஈரத்தை” அளிக்கின்றன எனக் கூறப்படுகிறது.

உள்ளூர் ஈரச்சந்தை ஒன்றின் தோற்றம் (1900)

ஈரச்சந்தைகளின் மீதான ஆர்வம் உலகத்துக்கு வூஹானிலிருந்து வந்திருந்தாலும் ஈரச்சந்தை என்னும் பெயர் முதன்முதலில் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கலாம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் 13 ஜூலை 1978 அன்று வெளியிட்ட செய்தி ஒன்றில், “கடைக்காரர்கள் கொள்ளை லாபத்தில் இறங்கக்கூடும் என்ற அச்சத்தால் உறைய வைக்கப்பட்ட மீன்களை ‘ஈரச்’சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்க அதிகாரிகள் தயங்குவதாக” எழுதியிருந்தது. அச்செய்தியில் ‘ஈரச்’ என ஒற்றைமேற்கோள் குறிகளுக்குள் எழுதப்பட்டிருப்பது அச்சொல் ஒரு புதிய பயன்பாடு என்பதைக் காட்டுகிறது.

ஆங்கிலத்தில் “wet market” என்னும் சொற்சேர்க்கை 2016இல்தான் ஆக்ஸ்ஃபர்ட் அகராதியில் இடம்பிடித்தது. தென்கிழக்காசியாவில் இறைச்சி, மீன், காய்கறிகள் விற்கும் சந்தை என அப்பயன்பாடு வரையறுக்கப்பட்டிருந்தது. ஈரச்சந்தை என்ற பெயர் பிரபலமாவதற்குமுன் சந்தை அல்லது ‘பசார்’ ஆகிய பெயர்களே வழக்கிலிருந்தன.

ஈரச்சந்தைகளின் மீதான ஆர்வம் உலகத்துக்கு வூஹானிலிருந்து வந்திருந்தாலும் ஈரச்சந்தை என்னும் பெயர் முதன்முதலில் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கலாம்.
தேக்கா சந்தை, 1984 (ஸுஜியாவ் சந்தை Zhujiao Market என்றும் அழைக்கப்பட்டது)

பெர்ஷியாவிலிருந்து கிளைத்த ‘பஸார்’ (bazaar) என்னும் சொல்லிலிருந்து ‘பசார்’ (pasar) என்னும் சொல்லை மலாய்மொழி கடன்பெற்றது. பசார் என்னும் மலாய்ச்சொல் அதிகமாகப் புழங்கியதன் விளைவாகக் கிட்டத்தட்ட அதே ஒலிப்பில் ba sha (巴刹) என்னும் சொல் சீன மொழியிலும் நுழைந்து ஈரச்சந்தைக்கான அதிகாரபூர்வ சொல்லாகவே சிங்கப்பூரில் ஆகிவிட்டது. தென்கிழக்காசியாவின் வேறுசில பகுதிகளிலும் இச்சொல் புழங்குகிறது.

சிங்கப்பூரின் ஆரம்பகால ஈரச்சந்தைகள்

காலனித்துவக் காலத்திற்குமுன் சந்தைகள் இருந்ததற்கான பதிவுகள் குறைவு என்றாலும் வர்த்தகம் நடந்த இடங்களில் சந்தைகள் இயல்பாகத் தோன்றியதற்கான சான்றுகள் உள்ளன. திறந்தவெளியிலும் தற்காலிகக் கொட்டகையின்கீழும் தரையில் பரப்பியோ, கூடைகளில் கொட்டிவைத்தோ காய்கறிகளை விற்கும் கடைகளாகத் தீவு முழுதும் ஆங்காங்கு இச்சந்தைகள் இருந்துள்ளன.

சிங்கப்பூரில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் சந்தை தெலுக் ஆயர் சந்தை என நம்பப்படுகிறது. கண்டபடி வளர்ந்துகொண்டிருந்த சிங்கப்பூரை ஒழுங்குபடுத்தி முறையாக வளரச் செய்யவேண்டும் என்னும் கனவுடன் ராஃபிள்ஸ் 1822இல் நகர மேலாண்மைக்குழு ஒன்றை நியமித்தார். அக்குழுவுக்கு அளித்த வழிகாட்டுதலில் இவ்வாறு குறிப்பிட்டார்:

சைனாடவுன் சந்தையில் ஒரு கடை (1930களில்)
கிளைட் டெரேஸ் சந்தை (1963). இச்சந்தை 1983இல் அகற்றப்பட்டது. அவ்விடத்தில் இன்று கேட்வே அலுவலக வளாகம் அமைந்துள்ளது

‘‘ஒழுங்கு கட்டுப்பாடுகளை முன்னிட்டுத் தாமதிக்காமல் மீன் சந்தையைத் தெலுக் ஆயருக்குக் கொண்டுசெல்வது குழுவின் கடமை. மீன், பன்றி இறைச்சி, காய்கறிச் சந்தைகள் எவ்வளவு நெருக்கமாக அமையலாம் என்பதையும் குழு கருத்தில்கொள்ளவேண்டும். அவை அருகருகே அமைவது தூய்மைக்கும் வசதியான புழக்கத்திற்கும் ஏதுவாக இராது.”
ராஃபிள்ஸ் குறிப்பிடும் மீன் சந்தை மார்க்கெட் ஸ்திரீட்டின் வடகோடியில் ஆற்றோரமாகக் காய்கறிகள் விற்கும் கடைகளுக்கு அருகில் இருந்தது.

மரக்கால்கள், மர உத்தரங்கள், அத்தாப்புப் பனையோலைக்கூரை என மொத்தமாகவே தெலுக் ஆயர் சந்தை ஒரு மரக்கட்டுமானம்.

தெலுக் ஆயர் சந்தை 1825இல் திறக்கப்பட்டது. அச்சந்தை படகுகளில் பொருட்களை ஏற்றவும் இறக்கவும் தோதாகக் கடல் நீருக்குள் ஒருபகுதி நீண்டிருந்த, எளிய கட்டுமானமாக இருந்தது. மரக்கால்கள், மர உத்தரங்கள், அத்தாப்புப் பனையோலைக்கூரை என மொத்தமாகவே தெலுக் ஆயர் சந்தை ஒரு மரக்கட்டுமானம். ஆயினும் அத்தாப்புக்கூரை தீப்பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அச்சந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டது.

அடுத்த ஏழெட்டு ஆண்டுகளில் அச்சந்தை பாழடைந்துபோக, 1833இல் அதே இடத்தில் ஒரு புதிய கட்டடம் எழுப்பப்பட்டது. பொதுப்பணித்துறையின் கண்காணிப்பாளராக இருந்த ஜார்ஜ் கோல்மன் (George D. Coleman) அக்கட்டடத்தை வடிவமைத்தார்.

பழைய சந்தையைக்காட்டிலும் இருமடங்கு பெரிதாக 125 அடி விட்டத்தில் புதிய சந்தை அமைந்தது. எண்கோணச் செங்கல் முகப்புகளுடன், ஒரேமையத்தைக்கொண்ட இரண்டு வளையங்களாக அச்சந்தையின் வடிவமைப்பு இருந்தது. ஒவ்வொரு முகப்பிலும் காற்றோட்டத்திற்கும் ஒளிபுகவும் ஏதுவாக மூன்று தலைவளைவுகளும் (arches) இடம்பெற்றன.

புதிய கட்டடம் கட்டப்பட்டு சுமார் நாற்பதாண்டுகள் கழித்து, 1877இல், அச்சந்தையைப் பார்த்த பிரிட்டிஷ் பயணி ஆனி பிராசி (Annie Brassey) வியந்து இவ்வாறு பதிவுசெய்கிறார்:

‘‘இதுவரை நான் கண்டதிலேயே ஆகச் சுத்தமான, அற்புதமாக ஒழுங்கமைக்கப்பட்ட, எந்த நாற்றமுமில்லாத மீன் சந்தை இதுதான். பறவை இறைச்சிப் பகுதியில் உயிருடன் கொண்டுவரப்படும் பல்வேறு உயிரினங்கள் கத்துவதும் குனுகுவதும் கூவுவதும் கொக்கரிப்பதும் கலந்துகட்டி அபாரமாக ஒலிக்கிறது.”

உயிர்ச்சூடு குன்றாத மீன்கள், உலர் கடலுணவுகள் இரண்டுக்கும் பெயர்போன எலன்பரோ சந்தை 1968 சீனப்புத்தாண்டுக் காலத்தில் மூண்ட தீயால் உருக்குலைந்தது.

ஒரு கடல்நிலக் கையகப்படுத்தும் திட்டத்தால் இச்சந்தை 1879இல் இடிக்கப்பட்டது. சந்தையின் கடைகள் கால்யர் கீ பகுதிக்கு இடமாறின. பழைய சந்தையின் எண்கோண வடிவமைப்பைத் தக்கவைத்துப் புதிய சந்தையை நகர்மன்றப் பொறியாளர் ஜேம்ஸ் மெக்ரிட்ச்சி (James MacRitchie) வடிவமைத்தார். அக்கட்டடம் 1894இல் கட்டிமுடிக்கப்பட்டது.

ஏறக்குறைய 80 ஆண்டுகள் பயன்பாட்டிலிருந்த புதிய சந்தை, அப்பகுதி வணிக, நிதித்தொழில் வட்டாரமாக வளர்ச்சி அடைந்ததையொட்டி 1972ஆம் ஆண்டோடு ஈரச்சந்தையாகச் செயல்படுபடுவதை நிறுத்திக்கொண்டது. பிறகு 1973இல் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. பழைய சந்தை என்னும் பொருளில், 1989இல், லாவ் ப சாட் (Lau Pa Sat) எனப் பெயரிடப்பட்டுத் தற்போது மத்திய வர்த்தக வட்டார ஊழியர்களும் சுற்றுப்பயணிகளும் மொய்க்கும் உணவங்காடியாகப் பரிணமித்திருக்கிறது.

காலப்போக்கில் வெளிச்சம், காற்றோட்டம், கழிவகற்றம் ஆகியவற்றை மேம்படுத்த ஈரச்சந்தைகள் தொடர்ந்து உருமாறத் தொடங்கின.

.நகர மேலாண்மைக்குழு, 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டதில், மேலும் நான்கு சந்தைகளை அமைத்திருந்தது; எலன்பரோ சந்தை (Ellenborough Market) 1845இல், கிளைட் டெரேஸ் சந்தை, ரோச்சோர் சந்தை (Clyde Terrace Market, Rochor Market) இவ்விரண்டும் 1870களில், ஆர்ச்சர்ட் ரோடு சந்தை (Orchard Road Market) 1891இல்.

எலன்பரோ சந்தை

எலன்பரோ ஸ்திரீட், ஃபிஷ் ஸ்திரீட் இரண்டுக்கும் இடையே எலன்பரோ சந்தை இருந்தது. அவ்விரு தெருக்களும் இப்போது அப்பெயர்களில் இல்லை. எலன்பரோ சந்தை ‘புதிய சந்தை’ என்ற பொருளில் மலாய் மொழியில் ‘பசார் பாரு’ என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் சீன தியோச்சூ பிரிவினர் அதிகமாக வாழ்ந்ததால் ‘தியோச்சூ சந்தை’ எனவும் பெயர் வழங்கியது.

உயிர்ச்சூடு குன்றாத மீன்கள், உலர் கடலுணவுகள் இரண்டுக்கும் பெயர்போன எலன்பரோ சந்தை 1968 சீனப்புத்தாண்டுக் காலத்தில் மூண்ட தீயால் உருக்குலைந்தது. விளைவாகச் சுமார் 1000 கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.தீநாக்குகளுக்கு இரையாகாமால் எஞ்சியிருந்த பகுதிகள் பிறகு இடித்துத் தள்ளப்பட்டன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், ஒரு சந்தை, ஓர் உணவங்காடி என 1970களில் அவ்விடம் வளர்ச்சியடைந்தது. அவை மீண்டும் 1990களில் இடிக்கப்பட்டு தற்போதைய கிளார்க் கீ சென்ட்ரல், ஸ்விஸோட்டல் மெர்ச்சண்ட் கோர்ட் (Clarke Quay Central and Swissôtel Merchant Court) இரண்டும் அமைக்கப்பட்டன.

கிளைட் டெரேஸ் சந்தை

‘இரும்புச் சந்தை’ என்ற பொருளில் மலாய் மொழியிலும் ஹொக்கியனிலும் முறையே பசார் பெசி (Pasar Besi), தி பா சாட் [Ti-Pa-Sat (铁巴刹)] என கிளைட் டெரேஸ் சந்தை அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இரும்பாலான கட்டுமானம் என்பதால் அப்படி ஒரு பெயர்.
ஓடுகள் வேயப்பட்டக் கொட்டகைகளின் தொகுப்பாகக் கம்போங் கிளாம் கடற்கரையில் முதலில் இச்சந்தை இருந்தது.

“வெளித்தோற்றத்திற்கு மோசமாக இருப்பது மட்டுமின்றி உட்புறமும் புழங்குவதற்கு ஏற்றதாக இல்லை, இவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது அனேகமாக இயலாதது” என்று பத்திரிகை ஒன்று, 1871இல், அக்கொட்டகைகளைக் குறித்து எழுதியது.

இரும்புத் தூண்கள் உள்ளிட்ட தளவாடங்கள் இங்கிலாந்திலிருந்து 1872இல் இறக்குமதியாகி புதிய சந்தை கட்டுவதற்கு 1873இல் கடைக்கால் தோண்டப்பட்டுத் தலைக்கல் நாட்டப்பட்டது. இன்றைய பீச் ரோடு இருக்குமிடத்தில் அச்சந்தை 1874இல் செயல்படத் தொடங்கியது. காலப்போக்கில் சிறுசந்தைகளுக்கும் கிராமங்களுக்கும் மொத்தமாகப் பச்சைக் காய்கறிகள் விற்கும் பெருஞ்சந்தையாகவும் விநியோக மையமாகவும் அது விளங்கியது. கிளைட் டெரேஸ் சந்தை 1983இல் இடிக்கப்பட்டது. அங்கு இன்று ‘கேட்வே’ அலுவலக வளாகம் இருக்கிறது.

ரோச்சோர் சந்தை

ரோச்சோர் சந்தை 1872இல் கட்டப்பட்டபோது சுங்கை ரோடு வட்டாரத்தின் பிரபல அடையாளமாக விளங்கியது. ஒரு நூற்றாண்டுக்கு அவ்வட்டாரச் சமூகத்திற்குச் சேவையாற்றிய அது 1982இல் இடிக்கப்பட்டது. இச்சந்தையைக் குறித்த தகவல்கள் நம்மிடம் மிகவும் குறைவு. தற்போது ஒரு கார்நிறுத்தப்பகுதி இவ்விடத்தில் உள்ளது.

ஆர்ச்சர்ட் ரோடு சந்தை

தற்போது ஆர்ச்சர்ட் பாயிண்ட் இருக்குமிடத்தில் இருந்த ஆச்சர்ட் ரோடு சந்தை டெங் லெங் பா சாட் (Tang Leng Pa Sat) என்றும் டேங்லின் பா சாட் (Tanglin Pa Sat) என்றும் அழைக்கப்பட்டது. பணக்கார ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் அதிகமென்பதால் சிங்கப்பூரின் பிறசந்தைகளைக் காட்டிலும் இச்சந்தையில் பொருள்களுக்கு விலையதிகம். ராஃபிள்ஸ் விடுதி முகப்பில் இன்றிருக்கும் செயற்கை நீரூற்று அப்போது ஆர்ச்சர்ட் ரோடு சந்தையின் முகப்பில் இருந்தது. இச்சந்தை 1982இல் இடிக்கப்பட்டு அங்கு ஆர்ச்சர்ட் பாயிண்ட் எழுப்பப்பட்டது.

புதிய தலைமுறை ஈரச்சந்தைகள்

ஆர்ச்சர்ட் ரோடு சந்தையில் இறைச்சி சேவைகளைப்பெறக் காத்திருக்கும் பெண்கள் (1960கள்)

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, சந்தைக்கு அருகிலேயே சமைத்த உணவுகள் விற்கப்படும் கடைகளும் அமையும்படி அரசாங்கம் புதியமுறையில் கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது. தெருக்களில் அடைசல்களைக் குறைக்கவும் உணவின் சுகாதாரத்தைக் கூட்டவும் இத்தகைய சந்தையோர உணவங்காடிகள் அமைக்கப்பட்டன.

செங் போ ரோடு சந்தை என்றும் அழைக்கப்பட்ட, 1950இல் திறக்கப்பட்ட, தியோங் பாரு சந்தை ஒரு தொடக்ககால எடுத்துக்காட்டு. “அழுக்கான, சுகாதாரமற்ற, நெரிசல்மிக்க, குளறுபடிகள் நிறைந்த ஒற்றைமாடிக் கட்டடம்” என லிஸ்ஸி லீயின் (Lizzy Lee) சிங்கப்பூர் ஈரச்சந்தைகள் குறித்த நூல் இச்சந்தையை வருணிக்கிறது.

புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடுகளுக்கு ஈரச்சந்தைகள் இன்றியமையாதவை ஆயின. ஒருவகையில் ஒவ்வொரு வட்டாரத்தின் மையமும் அதன் ஈரச்சந்தைதான் எனலாம். காலப்போக்கில் வெளிச்சம், காற்றோட்டம், கழிவகற்றம் ஆகியவற்றை மேம்படுத்த அதிகாரிகள் மாற்றங்களைக் கொணர்ந்ததால் ஈரச்சந்தைகள் தொடர்ந்து உருமாறத் தொடங்கின.

இவ்விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்பட்டது. அவற்றின் இறைச்சிக்கு மருத்துவகுணம் உண்டு என்றும் நம்பப்பட்டது.

இன்று தியோங் பாரு சந்தையும் அதன் உணவங்காடி நிலையமும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோரும் எளிதாகச் சென்றுவரும் இருமாடிக் கட்டடமாக ஆகிவிட்டது. அதன் மையத்தில் ஒரு தோட்டமுற்றமும் உள்ளது. ஈரச்சந்தை முதல் தளத்திலும், உணவங்காடி இரண்டாம் தளத்திலும் அமைந்துள்ளன. பழைய வருணிப்புக்கு மாற்றாக இன்று பளீரென்ற, சுகாதாரமான, காற்றோட்டமுள்ள, கெடுநாற்றம் ஏதுமற்ற, வெளிச்சமான, அவ்வளவு ஈரமில்லாத ஈரச்சந்தையாக ஆகிவிட்டது.

கானுயிர்ச் சந்தையும் கசாப்புச் சந்தைகளும்

சிங்கப்பூரின் ஈரச்சந்தைகள் ஒன்றுபோலவே இருந்தாலும் ஒன்றுமட்டும் வேறுபட்டிருந்தது, அது சைனாடவுன் சந்தை. பாம்பு, முதலை, குரங்கு, நாய், பூனை, முயல், வௌவால் போன்ற விலங்குகளின் இறைச்சி விற்கப்படுவதாக இச்சந்தை பெயர் வாங்கியிருந்தது. உபின் தீவு உள்ளிட்ட சிங்கப்பூரின் சிறுதீவுகளிலிருந்தும் மலேசியா, இந்தோனேசியாவிலிருந்தும் இவ்விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்பட்டது. அவற்றின் இறைச்சிக்கு மருத்துவகுணம் உண்டு என்றும் நம்பப்பட்டது.

அதிகாலையில் லாரிகளில் வந்திறங்கும் கோழிகளின் கூட்டுக் கொக்கரிப்பு உறக்கத்தைக் கெடுப்பதாக அண்டையில் வசிப்போர் புகாரளிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
ஓர் ஈரச்சந்தையில் கூடைக்குள் காத்திருக்கும் கசாப்புக் கோழிகள் (1950கள்)

திரெங்கானு ஸ்திரீட், சாகோ ஸ்திரீட், பண்டா ஸ்திரீட் ஆகியவற்றில் நிறைந்தும் டெம்பிள் ஸ்திரீட், பகோடா ஸ்திரீட் பகுதிகளில் சிதறலாகவும் இருந்த கடைகளின் தொகுப்பே சைனாடவுன் சந்தை.

ஸ்மித் ஸ்திரீட்டும் திரெங்கானு ஸ்திரீட்டும் சந்திக்கும் இடத்திலிருந்த ஒரு கடையில் முயல், சீமைப்பெருச்சாளி (guinea pig), அலங்கு (anteater), மலைப்பாம்பு, முதலை, உடும்பு (monitor lizard) உள்ளிட்ட அனைத்தும் விற்கப்பட்டதாக 1974இல் ‘நியூ நேஷன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இவ்விலங்குகள் அங்கு தற்காலிகக் கூண்டுகளுக்குள் இருப்பதாகவும், விற்கப்பட்டதும் கசாப்புசெய்து தரப்படுவதாகவும், அவ்விலங்கிறைச்சிகளைப் பல்வேறு மூலிகைகளுடன் சமைத்து உண்டால் பல வியாதிகள் தீர்வதாகவும், உடலில் வலு மிகுவதாகவும் மூத்த தலைமுறைச் சீனர்கள் நம்புவதாகவும் அச்செய்தி கூறியது. மேலும், இரவில் அப்பகுதியில் அத்தகைய சிறப்பு வடிசாறுகள் கிண்ணி ஒரு வெள்ளிக்குக் கிடைக்கும் என்றும் அச்செய்தி தெரிவித்தது.

கடைக்காரர்கள் 1980களின் முற்பகுதியில் இன்று சைனாடவுன் வளாகம் என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டனர், அப்பகுதியே பேச்சுவழக்கில் சைனாடவுன் சந்தை என அழைக்கப்படுகிறது. கானுயிர் விற்பனையை அங்கு சிலர் தொடர்ந்தனர் என்றாலும் மெல்லமெல்ல அவ்வழக்கம் அற்றுப்போனது. குறிப்பாக, 1986இல், அருகிவரும் கானுயிர்களின் அனைத்துலக வர்த்தக ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் கையெழுத்திட்டதும் அம்மாற்றம் நடந்தது.

சைனாடவுன் சந்தை ஒரு விதிவிலக்கு. சிங்கப்பூரின் பிற சந்தைகளில் வழக்கமாகக் கசாப்பிடப்பட்டவை கோழிகளே. உயிர்க் கோழிகளை வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்ததும் அவற்றைக் கசாப்பிட்டுத் தரும் வழக்கம் 1980கள்வரை இருந்தது. அவ்வாறு சிங்கப்பூரில் சுமார் 69,000 கோழிகள் அன்றாடம் அரிந்துதள்ளப்பட்டன. விளைவாக, சுத்தமான ஈரச்சந்தை என்றாலும் கோழிக்கடைகளை அவற்றின் வீச்சத்தைக்கொண்டே அடையாளம் காணமுடிந்தது. அதிகாலையில் லாரிகளில் வந்திறங்கும் கோழிகளின் கூட்டுக் கொக்கரிப்பு உறக்கத்தைக் கெடுப்பதாக அண்டையில் வசிப்போர் புகாரளிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

கோழிவெட்டு ஒரு முடிவுக்கு வந்தபோதும் சில ஈரச்சந்தைகளில் மென்னோட்டுக் காட்டாமை (wild-caught soft-shelled turtle) வெட்டப்படுவது தொடர்ந்தது.

கப்பேஜ் ரோடு சந்தைதான் 1988இல் முதன்முதலில் சந்தையிலேயே கசாப்பிடுவதை அறவே நிறுத்தி, ஏற்கெனவே உரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்ட கோழி இறைச்சியை விற்பனைசெய்யத் தொடங்கியது. பொதுமக்கள் ஏற்பு எவ்வாறு உள்ளது என்பதைச் சோதிக்கும் முன்னோட்டமாக அது செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் கலவையாக எதிர்வினை ஆற்றினர். புதிய இறைச்சிதான் விற்கின்றனர் என எப்படித் தெரியும் என ஒரு பெண்மணி கேட்டிருந்தார். மீன் என்றால் நாறும், கோழியும் நாறத்தான் செய்யும், ஈரச்சந்தை என்றாலே அப்படித்தான் இருக்கும் என்றார் அவர். கசாப்பில்லாச் சந்தைக்குச் சென்றுவருவது கசப்பில்லா இனிய அனுபவமாக இருப்பதாகக்கூறி வேறுபலர் வரவேற்றனர்.

அவ்வறிக்கையில், ஈரச்சந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தின் பயன்பாடு வீணாகிறது, ஈரச்சந்தைகள் பொருளாதாரச் சிக்கனமற்றவை (non-economical) எனப்பல முடிவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
ரோச்சோர் சந்தை (1930களில்). இவ்விடத்தில் தற்போது ஒரு திறந்தவெளி கார்நிறுத்தப்பகுதி உள்ளது

ஈராண்டுகளுக்குப்பிறகு கோழியறுப்பை எல்லாச் சந்தைகளிலிருந்தும் கட்டங்கட்டமாக 1992இன் தொடக்கத்தில் அகற்றப்போவதாக அன்றைய சுற்றுப்புற அமைச்சு அறிவித்தது. மேலும் அனைத்துக் கோழிக் கசாப்புச் சேவைகளையும் மையப்படுத்தப்பட்ட ஓரிடத்தில் கொண்டுவருவது சுகாதார மேம்பாட்டுக்கு உதவுவதோடு ஈரச்சந்தைகளின் அல்லூறுகள் கழிவுகளால் அசுத்தப்படுவதும் அடைபடுவதும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, ‘முயிஸ்’ (Majlis Ugama Islam Singapura; MUIS) ஒப்புதலுடன் ஹலால் முறைகளில் அவ்விறைச்சி தயாரிக்கப்படுமென்றும் அமைச்சு உறுதியளித்தது.

ஆர்ச்சர்ட் ரோடு சந்தை (1911). வலதுபுறமுள்ள வார்ப்பிரும்பு செயற்கை நீரூற்று தற்போது ராஃபிள்ஸ் விடுதியின் முகப்பில் உள்ளது

இறைச்சிக்கூட வளாகத்தில் சோதனைகளை முடித்து முயிஸ் ஹலால் சான்றிதழ் வழங்கும். அப்படி வழங்கும்போது ஹலால் முத்திரை தரப்படும். சுத்தம் செய்யப்பட்ட கோழி இறைச்சியுடனோ அது பொதியாக்கம் செய்யப்படும் அட்டையுடனோ அந்த முத்திரை அச்சிட்டு இணைக்கப்படும். அவ்விணைப்பில் இறைச்சிக்கூடத்தின் பெயர், கோழி அறுக்கப்பட்ட தேதி இரண்டு தகவல்களும் இருக்கும். அதைத் தொடர்ந்து மார்ச் 1993இல் ஈரச்சந்தைகளில் கோழிக்கசாப்பு அதிகாரபூர்வமாக முடிவுக்குவந்தது.

கோழிவெட்டு ஒரு முடிவுக்கு வந்தபோதும் சில ஈரச்சந்தைகளில் மென்னோட்டுக் காட்டாமை (wild-caught soft-shelled turtle) வெட்டப்படுவது தொடர்ந்தது. ஈரச்சந்தைகளில் ஆமை, தவளை அறுப்பது டிசம்பர் 2020இல் தடைசெய்யப்பட்டது. ஆமை, தவளை அறுப்புகளால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு விளைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் சுற்றுச்சூழல் மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு மேம்பாடு ஆகியவற்றை முன்னிட்டு ஜூன் 2020இலிருந்தே ஆமை, தவளை விற்பனையும் அறுப்பும் படிப்படியாக நீக்கப்பட்டுவந்ததாக தேசியச் சுற்றுப்புற அமைப்பும் (NEA) சிங்கப்பூர் உணவு அமைப்பும் (SFA) தெரிவித்தன.

ஈரச்சந்தைகளின் எதிர்காலம்

வீடமைப்பு வளர்ச்சிக்கழகப் பேட்டைகளில் எவ்விதமான சந்தைகள் அமையவேண்டும் எனப் பரிந்துரைப்பதற்காக 1981இல் சுற்றுப்புற அமைச்சு ஒரு குழுவை அமைத்தது. சிங்கப்பூரின் சந்தைகளைப்பற்றி அமைச்சரவைக்கு அளிக்கப்பட்டிருந்த ஓர் அறிக்கையின் விளைவாகவே அக்குழு அமைக்கப்பட்டது.

இன்னும் 20 ஆண்டுகளில் ஈரச்சந்தைகள் இருக்காது, பேரங்காடிகள் மட்டுமே இருக்கும்” என்கிறார் ஓர் ஈரச்சந்தை மீன்வியாபாரி.
சைனா டவுனில் சாகோ ஸ்திரீட் ஈரச்சந்தை (1964)

அவ்வறிக்கையில், குறைவான நேரமே செயல்படுவதால் ஈரச்சந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தின் பயன்பாடு வீணாகிறது, ஈரச்சந்தைகளில் வேலைசெய்யும் 10,000 முதல் 20,000 பேர் உற்பத்தித்திறன்மிக்க வேறு வர்த்தகங்களுக்கு மாற்றப்படலாம், பெரும்பாலும் சிறுதொழில்களாகவே இருப்பதால் ஈரச்சந்தைகள் பொருளாதாரச் சிக்கனமற்றவை (non-economical) எனப்பல முடிவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

சுற்றுப்புற அமைச்சு நியமித்த குழு தன் ஆய்வை முடித்து, இனி ஈரச்சந்தைகள் கட்டப்படத் தேவையில்லை என்றும் பேரங்காடிகளும் குளிரூட்டப்பட்ட மளிகைக்கடைகளும் ஈரச்சந்தைகளுக்கு மாற்றாக அமையும் என்றும் பரிந்துரைத்தது. மேலும், 1982 முதல் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளைக் கடைக்காரர்கள் வைத்திருக்க அனுமதிக்கவும் கடைநேரத்தை நீட்டிக்கவும் ஆலோசனை சொன்னது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரர்களின் வாழ்முறை கணிசமாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட அக்குழு, ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்வதைச் சுட்டிக்காட்டியது. வார இறுதிகளிலும் ஓய்வு நேரங்களிலும் மட்டுமே வெளியே செல்ல அவகாசம் கிடைப்பதால், குறிப்பிட்ட வகைப் பொருட்களை மட்டுமே குறுகிய நேரத்தில் விற்கும் ஈரச்சந்தைகள் மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்க இயலமாட்டா என்று விளக்கியது.

உணவங்காடியுடன் இணைந்த பழையபாணி ஈரச்சந்தைகள் கடைசியாக 1984இல் கட்டப்பட்டது. அச்சந்தைகள் ஜூரோங் ஈஸ்ட், வெஸ்ட் பகுதிகளில் அமைந்தன. ஈரச்சந்தைகள் கட்டப்படாமல் போவதற்கு மக்களின் மாறுபட்ட வாழ்க்கைமுறை, தேர்வுகளில் மாற்றம், புதிய தேவைகள் ஆகிய காரணங்களை வீவக குறிப்பிட்டது. வசதியான நேரத்தில் பொருட்களை வாங்க மக்கள் நவீனப் பேரங்காடிகளுக்குச் செல்ல விரும்புகின்றனர் என்பதால் பழைய ஈரச்சந்தைகளுக்கு மவுசு குன்றிவிட்டது என்று ஒரு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியும் தெரிவிக்கிறது.

இன்று சிங்கப்பூரில் 83 ஈரச்சந்தைகள் உள்ளன. தேசிய சுற்றுப்புற அமைப்பு 2018இல் செய்த ஒரு கணக்கெடுப்பின்படி 39 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் அதற்கு முந்தைய ஓராண்டில் எந்த ஈரச்சந்தைக்கும் சென்றதில்லை. இந்த விகிதாச்சாரம் 2014, 2016 ஆண்டுகளில் முறையே 23%, 33% எனத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஈரச்சந்தைகளின் மீது ஈர்ப்பு குறைந்துவருவது ஒருபக்கம் என்றால் அடுத்த தலைமுறையில் கடைகளை எடுத்து நடத்த ஆர்வமில்லாமை இன்னொரு பிரச்சனை. இப்போது கடை நடத்திவருவோரின் உயர்கல்வி கற்ற பிள்ளைகள் இத்தொழிலில் ஈடுபடத் தயாராக இல்லை. “இன்னும் 20 ஆண்டுகளில் ஈரச்சந்தைகள் இருக்காது, பேரங்காடிகள் மட்டுமே இருக்கும்” என்கிறார் ஓர் ஈரச்சந்தை மீன்வியாபாரி.

எதிர்க்காலத்தில் ஈரச்சந்தைகளுக்கு என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பலரும் கணிப்பதைப்போல மெல்லமெல்ல மங்கி மறைந்துவிடுமா? அல்லது ஈரச்சந்தையின் தனித்தன்மைக்கென அங்கே செல்லும் ஒருகூட்டம் எப்போதும் இருந்துகொண்டிருக்குமா?

மூத்த சிங்கப்பூரர்கள் ஈரச்சந்தைகளை விரும்புகின்றனர் என்பதில் ஐயமில்லை. பெற்றோருடன் ஈரச்சந்தைக்குச் சென்ற இளவயது நினைவுகள், ஒலிகள், வாசனைகள் என சிங்கப்பூரின் தனித்துவமான அடையாளங்களை ஈரச்சந்தைகள் தம்வசம் வைத்திருக்கின்றன.