ஒன்று கூடுவோம்! படித்து மகிழ்வோம்!

அச்சிதழ் வடிவில் ஆசிரியர்களைக் கவர்ந்த
தி சிராங்கூன் டைம்ஸ்

இரத்தினமாலா பரிமளம்

பணியில் அனைவருக்கும் அடையவேண்டிய இலக்குகள், அன்றன்று முடிக்கவேண்டிய வேலைகள், தீர்க்கவேண்டிய சிக்கல்கள் என எந்நேரமும் பரபரப்பும் ஓட்டமுமாக ஒவ்வொரு நாளும் கண்ணிமைக்கும் நேரத்தில் கழிந்துவிடுகிறது. அந்த ஓட்டத்தைச் சற்று நிறுத்தி, காலத்தின் வேகத்தைச் சற்றுக் குறைத்து, நம் சூழலில் வெளிவந்த நூல்கள், வெளிவரும் சஞ்சிகைகளைப் புரட்டுவதற்கு ஒரு வாய்ப்பை ‘‘ஒன்று கூடுவோம்! படித்து மகிழ்வோம்!’’ என்னும் புதிய நடவடிக்கை ஆசிரியர்களுக்கு அளித்தது.

சிங்கப்பூர் கல்வி அமைச்சு, தமிழ்மொழிப் பகுதிப் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் நூலகக்குழு ஆண்டுதோறும் தங்கள் பாடத்திட்ட அதிகாரிகளுக்குப் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அவற்றுள் புதிய புத்தகங்களின் அறிமுகம், பொங்கல் தினச் சிறப்புக் கண்காட்சி, புத்தக வாசிப்பு நேரம், புத்தகத் திறனாய்வு, புத்தகக் கலந்துரையாடல், புத்தகப் போட்டிகள் முதலியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். இவ்வரிசையில் இவ்வாண்டு புதிதாகச் சேர்ந்ததுதான் ‘‘ஒன்று கூடுவோம்! படித்து மகிழ்வோம்!’’.

நடவடிக்கையின் தொடக்கமாக, தமிழ்மொழிப் பகுதியில் ஓரிடத்தில் பற்பல புத்தகங்களும் சஞ்சிகைகளும் காட்சிக்கு வைக்கப்படும். மதிய உணவு இடைவேளையின் போது அதிகாரிகள் அவ்விடத்தில் கூடிக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் பார்வையிடுவர்.