சளைக்காமல் சாதித்த சாந்தி பெரேரா

0
296
மஹேஷ் குமார்

அது 2013. உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் 8ஆவது அனைத்துலகத் தடகளச் சம்மேளனத்தின் இளையர் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. ஓரளவுக்குக் கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. போட்டியில் இரண்டாவதாக ஓடிவந்து அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறார் அந்த 16 வயதுப் பெண்.“ஓடி முடித்தேன். இரண்டாவதாக வந்தேன் என்று தெரியும். பொதுவாக திரையில் உடனே நேரம் காண்பிக்கப்படும். ஆனால் அன்று ஏனோ இல்லை. கூடாரத்திற்குத் திரும்பியபோது ஒருவர் மாற்றி ஒருவர் வாழ்த்துக் கூறினர். அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். நம்பவே முடியவில்லை. 11.89 வினாடிகள் !!”

நூறு மீட்டர் பெண்கள் ஓட்டத்தில் தேசிய வீராங்கனை அமன்டா ச்சூவின் 12.01 வினாடிகள் சாதனையை அன்று முறியடித்த ஆனந்தக் கண்ணீர். இன்று 26 வயதாகும் வெரோனிகா சாந்தி பெரேராவால் அந்த மகிழ்ச்சிக் கணத்தை என்றென்றும் மறக்க முடியாது.

சாந்தியின் குடும்பத்தில் பலரும் ஓட்ட வீரர்கள். தந்தை க்ளாரென்ஸ் பெரேரா, தாய் ஜீத் பெரேரா இருவரும் தத்தமது பள்ளிகளுக்காக ஓடியவர்கள். சகோதரி வெலெரியும் தேசிய அளாவில் ஓடியவர்தான். சாந்தியும் தமக்கையைப் போலவே CHIJ கான்வெண்ட்டுக்குப் போகாமல் சிங்கப்பூர் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளிக்குச் (SSP) சென்றார்.

பள்ளிகளுக்கிடையேயான ஒரு போட்டியில், 2009வாக்கில், கடைசி நாளன்று ஒரு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சாந்திக்குத் தங்கப்பதக்கம் கிடைக்க, அன்று அவர் தலைப்புச் செய்தியானார். பாராட்டுகளுடன் பலரின், குறிப்பாக சக விளையாட்டு வீரர்களின், கேலி கிண்டல்களுக்கும் அப்போது அவர் ஆளானார். ஆனால் அதுவே அவரது ஊக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2015இல், அவரது 18ஆவது வயதில், 200 மீட்டர் ஓட்டத்தை 23.6 வினாடிகளில் முடித்து, தேசிய சாதனையை முறியடித்து, சிங்கை தேசிய விளையாட்டரங்கில் ஆர்ப்பரிக்கும் ஒரு பெருங்கூட்டத்திற்கிடையே பதக்கம் வென்றபோது அவர் கண்களில் மீண்டும் ஒரு மின்னல். க்ளோரி பர்னபாஸ் பெற்ற தங்கத்திற்குப் பின் 42 வருடங்கள் கழித்து சிங்கைக்கு மீண்டும் ஒரு தங்கப்பதக்கம்.

சிங்கையில் முதல் பெண் வீராங்கனையாக 69 வருடங்களுக்கு முன்பு 1952 ஹெல்சிங்க்கி பந்தயத்தில் டாங் புயி வா கலந்துகொண்டார். பிறகு சிங்கையைச் சேர்ந்த மற்ற இரு ஓட்ட வீராங்கனைகளான மேரி க்ளாஸ், ஜேனட் ஜேசுதாசன் ஆகியோர் 1956 மெல்பர்ன் போடிகளில் 100, 200 மீட்டர் பந்தயங்களில் பங்கெடுத்திருந்தனர். அதற்கு 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி 2021இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டபோது மீண்டும் ஒரு வரலாறு எழுதப்பட்டது.

கூடும் பொறுப்புகள்

“இன்று நான் இருக்கும் இடத்தில் இருந்து திரும்பிப் பார்க்கும்போது என்மீது இருந்த அழுத்தங்களின் சுமை தெரிகிறது. ஆனால் தேசிய சாதனை என்பது எளிதல்ல; அதைத் தக்கவைத்துக்கொள்ளவும் மேலும் முன்னேறவும் என்னை நான் தொடர்ந்து தயார் செய்துகொள்ளவேண்டி இருந்தது. பயிற்சிகளின்போது ஒவ்வொரு நாளும் முடிவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தன. இருநூறு மீட்டரில் 2015இல் தங்கம் பெற்றாலும் 100 மீட்டரில் வெண்கலம்தான் பெற்றேன்” என்றார் சாந்தி.

பின்னர் 2017இல் மலேசியா, 2019இல் பிலிப்பீன்ஸ் போட்டிகளிலும்கூட வெண்கலம்தான். அவை தங்கம் வெல்ல முடியவில்லை என்ற அழுத்தத்தை மேலும் கூட்டின. டோக்கியோ 2021இல் 200 மீட்டர் தகுதிச் சுற்றில் 23.96 வினாடிகளில் ஓடி சாந்தி ஆறாவதாக வந்தார். எனவே கால் இறுதிக்கு முன்னேறிச் செல்லமுடியாமல் போனது.

பெற்றோருடன்

“ஒவ்வொரு போட்டியும் தரும் அழுத்தம் என்மீது ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரியது. கால் இறுதிக்கு முன்னேற முடியாவிட்டாலும், 2019 முதல் நல்லபடியாக எந்த அனைத்துலகப் போட்டியிலும் ஓடாவிட்டாலும், 24 வினாடிகளுக்குள் ஓடி முடித்தது எனக்குப் பெரும் நிறைவை அளித்தது. ஓட்டப் பந்தயம் என்னவோ சுமார் 20 வினாடிகளே என்றாலும் அதற்காக நான் பல மணிநேரங்கள் முன்பிருந்தே தயாராக வேண்டியிருந்தது. பல முன்னணி வீரர்களுடன் போட்டி என்பதே சற்று நடுக்கத்தைக் கொடுத்தது. மெல்ல என்னை அமைதிப்படுத்திக்கொண்டு அந்தச் சிறப்பான அனுபவத்தை மனமாற அனுபவிக்கத் தயாரானேன்” என்றார்.

பிர்மிங்ஹாமில் 2022இல் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 100 மீட்டர் தகுதிச் சுற்றில் 11.48 வினாடிகளில் ஓடிமுடித்துத் தன்னுடைய தேசியச் சாதனையான 11.58 வினாடிகளை முறியடித்தார். ஆனாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் 11.57 வினாடிகள் எடுத்துக்கொண்டதால் பதக்கம் ஏதும் பெறமுடியவில்லை.

சாந்திக்கு 2023 மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளின் தகுதிச் சுற்றில் 100 மீட்டர் ஓட்டத்தை 11.46 வினாடிகளில் முடித்துத் தனது சொந்த தேசிய சாதனையைத் தகர்த்தார். இறுதிப் போட்டியில் 11.44 வினாடிகளில் முடித்தபோதும் கணிசமான தள்ளுகாற்று இருந்ததால் அது சாதனைக் கணக்கில் கொள்ளப்படவில்லை. போலவே பிரிஸ்பேன் போட்டிகளில் 200 மீட்டரில் 23.16 வினாடிகள், 10 மீட்டரில் 11.37 வினாடிகள் என்று பல சாதனைகள் சேர்ந்துள்ளன. ஏப்ரல் மாதம் 22.89 வினாடிகளில் 200 மீட்டரை முடித்து, 23 வினாடிகளுக்குள் முடித்த முதல் சிங்கை வீராங்கனை ஆனார்.

கம்போடியாவில் அண்மையில் நடந்து முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டரை 22.69 வினாடிகளில் முடித்துத் தங்கம் வென்றார். இது சிங்கப்பூரின் தேசிய சாதனை மட்டுமல்ல; தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் சாதனையாகும்.

உதவிகளும் ஊக்கமும்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சாந்தி, யிப் யின் உதவித்தொகை பெற்று 2021இல் கணக்கியல் துறையில் பட்டம் பெற்றவர். தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளர்கள் தன் பயிற்சிகளுக்கு உதவியாகவும், போட்டிகளுக்குச் செல்லும்போது எப்போதும் ஊக்கமளித்து வருவதாகவும் நன்றியுடன் குறிப்பிடுகிறார். சாந்தியின் மூத்த சகோதரிகளான வெலெரியும், ஷோபியும் Go Shanti! Go! என்ற ஒரு சிறுவர் நூலை, அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் முகமாக 2020இல் வெளியிட்டனர்.

எதிர்கால ஓட்டப்பந்தய வீரர்களைப் பற்றிப் பேசும்போது “கூட்டத்திலிருந்து தனித்து நிற்கவேண்டும் என்று நினைத்தால் சிறிதும் தயங்காமல் காரியத்தில் இறங்குங்கள். அது உங்களுக்கான தனிப்பட்ட பயணம். அது எப்படி இருக்கவேண்டும் என்று எவரேனும் தீர்மானிக்க முடியுமானால்… அது… நீங்களேதான்” என்று உற்சாகமாகக் கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சாந்தியின் சில தோல்விகள் குறித்துப் பல எதிர்மறைக் கருத்துகள் உலவிய போதிலும், பெற்றோர்கள், பயிற்சியாளர், பணிபுரியும் நிறுவனம், நண்பர்கள் என்று பலரின் ஆதரவாலும் தன்னம்பிக்கையாலும் அயராத பயிற்சியைத் தொடர்ந்தார். சிங்கையின் தங்க மங்கை என்ற பெயரைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். சாந்தி மேலும் பல சிகரங்களைத்தொட சிங்கை மக்களின் வாழ்த்துகள் என்றும் அவருடன் இருக்கும்!