எது சிங்கப்பூர்ப் புனைவு? விவாதம்

முகமது ரியாஸ், சத்யா, அழகுநிலா, ரமா சுரேஷ், சர்வான் பெருமாள், தர்ஷனா கார்திகேயன், சிவானந்தம் நீலகண்டன், லங்கேஷ்

யாஸ்: சிங்கப்பூர்க் கதைகள் என்று நாம் அடிக்கடிப் பேசினாலும் சிலநேரங்களில் எது ‘சிங்கப்பூர்ப் புனைவு’ என்ற குழப்பம் வருவது உண்மை. சிங்கப்பூரின் இடப்பெயர்கள், உணவுப் பெயர்கள், பேச்சு வழக்கிலுள்ள மலாய், சீனச்சொற்கள், ‘லா’ சேர்த்தல் இவற்றாலெல்லாம் ஒரு புனைவு சிங்கப்பூர்ப் புனைவு ஆகிவிடாது எனத் தொடர்ந்து ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் அவ்விமர்சனத்தை வைப்பவர்கள் எது ‘சிங்கப்பூர்ப் புனைவு’ என்பதை வரையறுக்கவோ எது உள்ளூர்த்தன்மை என விளக்கவோ முயன்றதாகத் தெரியவில்லை. எது ‘சிங்கப்பூர்ப் புனைவு’ என்ற கேள்வியைத் திறந்த மனதுடன் அணுகி நாம் விவாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

முகமது ரியாஸ்

சிவா: இறுக்கமான வரையறைகளை இலக்கியத்திற்கு வைப்பது சிக்கலானது. ஆயினும் எங்காவது ஒரு வரையறையில் தொடங்கினால்தான் தொடர்ந்து மேம்படும் வரையறைகளை அடுத்தடுத்து முன்வைக்க இயலும். அந்தவகையில் ‘சிங்கப்பூர்ப் புனைவை’ வரையறை செய்யக் கேட்கும் இந்த விவாதம் தேவையானது, காலப்பொருத்தமானதும்கூட.

வலிந்து உள்ளூர்ப்பெயர்கள் ஏன் உவமைகளைக்கூட உருவாக்கித் திணிக்கும் கதைகளை நான் வாசித்திருக்கிறேன். ஆகவே விமர்சனம் என்கிற அளவில் அக்கருத்தில் உண்மை நிச்சயம் இருக்கிறது. ஓர் இளம் நாட்டின் இலக்கியப் பதற்றங்களுள் ஒன்றாகவும் அந்த விமர்சனத்தைப் பார்க்கலாம். மேலும், கதை நன்றாக இருந்தால் அது செம்பவாங்கில் நடந்தாலும்சரி சான்ஃபிரான்சிஸ்கோவில் நடந்தாலும்சரி, யாரும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் ‘சிங்கப்பூர்த் தன்மைகளை’ சரிசெய்வதால் மட்டும் அவை நல்ல கதைகளாகிவிடமாட்டா என்ற எச்சரிக்கையுடன் இவ்விவாதத்திற்கு நாம் தலைப்படவேண்டும்.

‘சிங்கப்பூர்த் தன்மைகளை’ சரிசெய்வதால் மட்டும் அவை நல்ல கதைகளாகிவிடமாட்டா என்ற எச்சரிக்கையுடன் இவ்விவாதத்திற்கு நாம் தலைப்படவேண்டும்.
அழகுநிலா

லங்கேஷ்: சிங்கப்பூரின் இடங்கள், சொற்களைப் போட்டுவிட்டால் அவை சிங்கப்பூர்க் கதைகள் ஆகா என்ற விமர்சனத்தை வைத்தவருக்கு, அந்தக் கதையின் ஆன்மா அதன் களத்தோடு அல்லது கதையில் குறிப்பிடப்படும் இடங்களோடு பொருந்தவில்லை என்ற உணர்வு ஏற்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடே அந்த விமர்சனம். ஏன் பொருந்தவில்லை என்று அவருக்கு விளக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் பரவாயில்லை.

விமர்சனம் உண்மையாகத் தெரிந்தால் எழுத்தாளர் அதைக் கருத்திற்கொண்டு மேலதிகக் கூர்ந்த அவதானிப்போடு அடுத்த கதையை எழுதச் செல்லலாம். மேம்போக்காக எழுதப்பட்ட விமர்சனம் என்றால் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தகைய விமர்சனங்கள் எப்படியும் வந்துகொண்டுதான் இருக்கும். சராசரிக்கும் ஒருபடி மேலான கூர்நோக்கும் அவதானமும் எழுத்தாளர்களுக்கு அவசியம். அந்த இடத்தை எழுத்தாளர் தொட்டுவிட்டால் வாசகரின் மனதில் ஒரு இடம் நிச்சயம். ‘சிங்கப்பூர்ப் புனைவு’ போன்ற வகைப்படுத்தல்களை ஒரு வசதிக்காக வைத்துக்கொள்ளலாமே தவிர அவ்வாறு வகுத்துக்கொண்டு புனைவது சரியல்ல என்பது என் கருத்து.

ரமா: இந்த மண்ணையும் மனிதர்களையும் ஆழமாகத் தெரிந்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மேலும் நமக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் கதைகளாக மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. நான் உணர்ந்தவரையில் சிங்கப்பூர்ப் புனைவுக்கான களம் தனி மனிதன்தான். அதிலும் தனிமையாக விடப்படும் மனிதன். எங்கும் இல்லாத ஒரு தனிமை இங்கு எல்லா வயதினருக்கும் உண்டு. அந்தத் தனிமையைத் தொட்டுப்பேச, எழுத எழுத்தாளர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. அவற்றைப்பேச முன்வரும்போது சமகாலச் ‘சிங்கப்பூர்க் கதைகள்’ அதிகரிக்கும், அவற்றின் தனித்தன்மை துலக்கமாகவும் தெரியும் என நம்புகிறேன்.

‘சிங்கப்பூர்ப் புனைவு’ போன்ற வகைப்படுத்தல்களை ஒரு வசதிக்காக வைத்துக்கொள்ளலாமே தவிர அவ்வாறு வகுத்துக்கொண்டு புனைவது சரியல்ல

ரியாஸ்: இங்கு பல்வேறு உலகங்கள் உள்ளன. இதைப்பற்றி எழுதினால்தான் அது சிங்கப்பூர்ப் புனைவு என ஒன்றைச் சொல்லிவிட இயலாது. புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி எழுதும்போது அவர்களுக்குத் தெரிந்த அன்றாட வேலை, பணம் ஈட்டுவது, அதைச் சொந்த ஊருக்கு அனுப்புவது, அவர்கள் ‘வெஸ்டர்ன் யூனியன்’ போவது, ‘லக்கி பிளாசா’ போவது என்றுதான் விரியும். அவர்களுடைய சிங்கப்பூர் அதுதான். அந்த அளவில் அதுவும் சிங்கப்பூர்ப் புனைவுதானே? இங்கேயே பிறந்து வளர்ந்து நிலைபெற்றிருக்கும் ஒரு சமூகத்தைப் பற்றிய புனைவுகள் வேறுவிதம். முதல் வகையில் அதிகக் கதைகள் எழுதப்படுவதால் முன்பு குறிப்பிட்ட விமர்சனம் அடிக்கடி எழுகிறதோ?

ரமா சுரேஷ்

சிவா: ரியாஸ் சொல்வதில் உண்மை இருக்கிறது. அதேவேளையில் உமா கதிரின் கதைகள் உள்ளூர்க்காரர்களுக்கே அதிகம் தெரிந்திராத ஆனால் உள்ளூரில் பிறந்துவாழும் ஒரு பகுதியினரின் வாழ்க்கையைக் காட்டுவதையும் காணலாம்.

தர்ஷனா: ஆமாம். ‘பை சைக்கிள் தீவு’ என்று தி சிராங்கூன் டைம்ஸில் வந்த உமா கதிரின் ஒரு கதையை என்னால் மறக்கவே முடியாது.

சத்யா: தனித்துவமிக்க அல்லது பொதுப்போக்கிலிருந்து வேறுபட்ட மனிதர்களைக் காட்டுவது மட்டும் போதாது. ஓர் இலக்கியப் படைப்பென்பது அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும். வேறுபட்ட மனிதர்களை அவ்வாறு ஆக்கிய காரணிகளை – அது வரலாறோ பண்பாடோ சமுதாயமோ – ஆராயவேண்டும். தனித்துவமிக்க உணர்வுகளுக்கான விசைகளைத் தேடவேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல இலக்கியம் ஆழமாகப் பயணிக்கவேண்டும் அல்லது ஆழமாகப் பயணிப்பதற்கான கருவிகளையாவது வாசகருக்கு அளிக்கவேண்டும். அத்தகைய ‘சிங்கப்பூர்ப் புனைவுகளை’ நான் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறேன்.

சர்வான் பெருமாள்

சற்று வேறுவிதமாக அணுகிப்பார்க்கலாம். சிறந்த அமெரிக்கக் கதைகள் என நான் எவற்றைச் சொல்வேன்? ‘அமெரிக்கக் கனவு’ என அழைக்கப்படும் பொருளாதார வெற்றியை நோக்கிய ஓட்டத்தையும் அப்பாதையின் படுகுழிகளையும் பேசும் American Pastoral நாவல், எல்லாப் பண்பாடுகளும் ஒற்றைப் பண்பாடாகக் கரைந்துவிடும் அமெரிக்கத் தொட்டிக்குள் தன் அடையாளத்தைத் தேடும் Americanah நாவல், நாட்டின் தனிச்சிறப்புமிக்க அரசியல் அமைப்பையும் அதன் தலைவர்களையும் நெருங்கிப் பார்க்கும் All the King’s Men நாவல் எனப் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலை நாம் விவாதித்திருக்கிறோம். அதில் மங்கோலியப் பண்பாடு, மாற்றங்களை எதிர்கொண்டவிதம் அமைவுப் பகுப்பாய்வு (system analysis) அணுகுமுறையில் பார்க்கப்பட்டிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி எழுதும்போது அன்றாட வேலை, பணம் ஈட்டுவது, அதைச் சொந்த ஊருக்கு அனுப்புவது, என்றுதான் விரியும். அவர்களுடைய சிங்கப்பூர் அதுதான். அந்த அளவில் அதுவும் சிங்கப்பூர்ப் புனைவுதானே?

அமெரிக்காவோ மங்கோலியாவோ அவற்றின் தனித்துவங்களையும் சிக்கல்களையும் பேசும் புனைவுகளையே அந்நாடுகளின் புனைவுகள் என்கிறோம். ஆனால் அப்படிச் செய்வதற்கு ஓர் எழுத்தாளர் அந்தச் சமுதாயத்தின் வரலாற்றை நன்கு அறிந்திருப்பதும், பண்பாட்டைக் குறித்துச் சிந்தித்திருப்பதும், தனித்துவங்களைத் தேடும் பார்வைகளைக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது. மற்றபடி பின்புலம், மொழி, சொற்கள் போன்றவை களத்தைப் புனைவுக்குள் கட்டமைக்கும் துணைப்பொருட்களே. அவற்றைக்கொண்டு புனைவின் அடையாளத்தை வரையறுத்தல் பொருத்தமாக இராது.

பின்புலம், மொழி, சொற்கள் போன்றவை துணைப்பொருட்களே. அவற்றைக்கொண்டு புனைவின் அடையாளத்தை வரையறுத்தல் பொருத்தமாக இராது.
தர்ஷனா கார்திகேயன்

நம் சூழலில் நிறைய தகவல்கள், புதிய சொற்கள், நடை இவற்றைக்கொண்ட புனைவுகளே அதிகம் வெளிவருகின்றன. தனித்துவங்களையும் சிக்கல்களையும் ஆராயும், புதிய பார்வைகளை அளிக்கும் கதைகள் குறைவு. நவீன வாழ்க்கைமுறையும் பண்பாட்டுப் பன்மைத்துவமும் கொண்ட சிங்கப்பூர் ஒரு மதம்சார்ந்த, சடங்கு சம்பிரதாயத்தைக் கைக்கொண்டுள்ள சமூகமாகவும் இருக்கிறது. இது ஏன்? இந்த ஒரு கேள்வியை இனப்பார்வை, மதப்பார்வை, வரலாற்றுப்பார்வை, கவிப்பார்வை போன்ற எண்ணற்ற கோணங்களில் அணுகலாம். இன்னும் எத்தனையோ தனித்துவங்களும் சிக்கல்களும் சிங்கப்பூரில் உள்ளன. அவற்றை எழுதுவதே என்னைப் பொறுத்தவரை ‘சிங்கப்பூர்ப் புனைவுகள்’.

சர்வான்: சிங்கப்பூரின் தனித்துவமோ பண்பாட்டுப் பன்மைத்துவமோ கதையோட்டத்தோடு இயல்பாக அமையவேண்டும். வலிந்து திணிக்கப்படும் வர்ணனை, உவமை, இடங்கள் போன்றவை புனைவைக் கீழிறக்கிவிடும். மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர், இல்லப் பணிப்பெண் களங்கள் புதியவை அல்ல என்றாலும் விரிவாகப் பேசப்பட வேண்டியவையே. உமா கதிரின் கதைகள் அவ்வகையில் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்துகின்றன. ரியாஸ் கதைகளும்கூட. ஆனால் களம் வாசகருக்குப் புதியவை என்றால் விரிவான பின்புலம் அவசியத்தேவை. இங்குள்ள பல முகங்களின் கதைகள் இன்னும் வரவில்லை என்பது உண்மைதான்.

ரியாஸ்: சிங்கப்பூரை ‘ரோஜாக்’ என்பார்கள். பல்வகைப் பண்பாடுகளைக் கொண்டது. அவ்வகையில் படைப்பாளிகளுக்குத் தீனிபோட சிங்கப்பூர் எப்போதும் தயாராகவே உள்ளது. ஓர் ஆர்மீனியரை, யூரேசியரை, பெரனக்கனை சிங்கப்பூரிலிருந்தே பார்த்து எழுதலாம் என்பது ஓர் அரிய வாய்ப்புதான். அவ்வாறு எழுதப்படுவதும் ‘சிங்கப்பூர் புனைவு’தான். அதைப்போலவே புலம்பெயர் தொழிலாளர் வாழ்வும் சிங்கப்பூர் இலக்கியத்தின் ஓர் அங்கம் என்றாலும் அக்களத்தில் அமையும் புனைவுகள் அளவில் அதிகமாக வருவதால் சிங்கப்பூர் இலக்கிய அடையாளம் அதையொட்டி அமைந்துவிடுமோ என்கிற உந்துதலில் அந்த விமர்சனம் எழுந்திருக்கலாமோ என்னும் ஐயம் எனக்குண்டு.

சத்யா: இன்னொன்றையும் கவனப்படுத்த விரும்புகிறேன். உள்ளூர் எழுத்தாளர்கள் தமிழக எழுத்துகளை முன்மாதிரியாகக் கொண்டால் அது ‘சிங்கப்பூர்ப் புனைவு’ உருவாகாமல் தடுக்கும் ஒரு குறைபாடாக அமைந்துவிடும். கலாச்சார அதிர்ச்சி, பெண்கள் வேலைக்குச்செல்வது போன்ற சிக்கல்கள் சிங்கப்பூரில் இன்னும் எழுதப்படுவதில் எவ்விதப் பொருளுமில்லை. சிங்கப்பூரின் சிக்கல்கள் நூதனமானவை என எழுத்தாளர்களுக்கும் தெரியும். ஆனால் அவற்றை எழுத்தில் கையாள நூதனமான வழிகளும் மேம்பட்ட திறன்களும் அவசியம்.

லதா தனக்கெனத் தனிப்பாணி ஒன்றை உருவாக்கிக்கொண்டுள்ளார். கணேஷ் பாபு தனித்துவமிக்கக் கருப்பொருள்களைக் கையாண்டுள்ளார். ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவலும் பல பண்பாடுகள் சமூகங்களை இணைக்கும் ஒரு படைப்பு. இவற்றைத் தமிழகப் பார்வையில் மதிப்பிடுவதோ வகைப்படுத்துவதோ நல்லதல்ல.

சிவா: சிங்கப்பூரின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் எழுத்தைச் சிங்கப்பூர் எழுத்தாக அடையாளப்படுத்தலாம் என்கிற சத்யாவின் கருத்துடன் உடன்படுகிறேன், அதுவும் ஒருவகை டையாளம் என்கிற அளவில். புறச்சூழல் மாறுபாடுகளைப் பரந்த நோக்கில் கையாள ஒரே மொழி, ஒரே பண்பாடு புழங்கும் சூழல்களில் பிறந்த எழுத்துகள் சரியான முன்மாதிரியாக இராது என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய வாதமே. ஆனால், சிங்கப்பூரில் தன் அகவெளிப்பாட்டுக் கதைகளைச் சிறப்பாக எழுதத் தமிழக எழுத்தாளர்களையோ வேறுபகுதிகளின் எழுத்தாளர்களையோ முன்னோடிகளாகக் கொள்வதில் தவறில்லை என்பது என் பார்வை.

மேலும் சிங்கப்பூரில் பண்பாட்டுப் பன்மைத்துவம் அதிகமிருந்தாலும் பண்பாட்டு ஊடாட்டம் அதிகமில்லை (multicultural but not intercultural) என்பதால் அதில் புகுந்து புறப்பட எவ்வளவு சரக்கு எழுத்தாளரிடம் கைவசம் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான சவால். இந்த இடத்தில்தான் இளங்கண்ணன், நா.கோவிந்தசாமி போலப் பழைய ‘கம்போங்’ வாழ்க்கை வாழ்ந்த எழுத்தாளர்களிடம் இயல்பாகவே ‘சிங்கப்பூர்த் தன்மை’ வெளிப்படுவதையும் புதிய சூழலில் வளர்ந்தவர்கள், வந்தவர்கள் அவற்றைத் தருவிக்க மெனக்கெட வேண்டியிருப்பதையும் காணலாம்.

விளிம்புநிலை மனிதர்களுடன் புழங்க வாய்த்து அதன் தாக்கத்தில் உருவான எம்.கே.குமாரின் ‘நல்லிணக்கம்’, உமா கதிரின் ‘மார்க்கும் ரேச்சலும்’ போன்ற கதைகள் அந்த இடைவெளியை எளிதாகக் கடப்பதையும் பார்க்கமுடிகிறது. ஒரு சூழலைத் தகவலையும் கருத்தையும் கொண்டு புனைவில் படைக்கிறோமா அல்லது அனுபவத்தில் தொடங்கிச் சிந்தனை, கற்பனை என நகர்கிறோமா என்பதைப் பொறுத்து அவ்வேறுபாடு நிகழக்கூடும் என்று தோன்றுகிறது.

சக தமிழர்களுடன் மட்டும் புழங்கும் வாழ்க்கையை மட்டுமே எழுதினாலும் அதில்கூட வெளிமாற்றங்கள் சிறிது பிரதிபலித்துவிட வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும் வழியற்றபடி செய்கிறது ரமா சுட்டிக்காட்டிய தனிமை. மக்கள் நெருக்கம் கூடக்கூட தனிமை அதிகரிக்கும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளதாக அண்மையில் படித்தேன். ‘பெருநகர்த்தனிமை’ என்பது கற்பனை அல்ல, உண்மை. அதுவும் இப்பெருநகர நாட்டின் ஓர் அம்சமே. மேலும் சிங்கப்பூர் போன்ற பல நகரங்களுக்கும் அத்தனிமை பொதுவானதாக இருக்கலாம். ஆகவே தனித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக்கியமான, சமகாலப் பிரச்சனைகளைச் சிங்கப்பூர்ப் பின்புலத்துடன் கையிலெடுக்கும் புனைவுகளையும் ‘சிங்கப்பூர்ப் புனைவுகளாகவே’ கொள்ளலாம் என்பது என் பார்வை.

அழகுநிலா: எழுத்தாளர்களின் குடியுரிமையை, பின்புலங்களை வைத்து எழுத்தை மதிப்பிடும், வகைப்படுத்தும் போக்கு தொடர்கிறது. அவற்றில் பொருளில்லை என்பது என் கருத்து. தனித்துவம், பண்பாட்டுச் சிக்கல்கள் இவற்றைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் சீன, மலாய்க் கதைகள் என்னவாக இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றில் நாம் இருக்கிறோமா? அவர்கள் பல பண்பாடுகளைக் கணக்கிற்கொண்டு எழுதுகிறார்களா? ஆங்கிலத்தை ஒப்பிடுவதற்குமுன் சக தாய்மொழிகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது. எல்லாத் தாய்மொழிகளிலும் அதேநிலைதான் என்றால் காரணங்கள் ஆழமானவையாக இருக்கக்கூடும்.

சிவானந்தம் நீலகண்டன்

இருவிதமான புனைவு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று சிங்கப்பூருக்கே உரித்தான கருவை எடுத்துக்கொண்டு எழுதுவது. வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள். சிவா குறிப்பிட்ட எம்.கே.குமார், உமா கதிரின் கதைகள் இதில் வந்துவிடும். மற்றொன்று லதாவின் ‘இளவெயில்’, கணேஷின் ‘விடுதலை’ போல உலகாளவிய கருக்களை எடுத்துக்கொண்டு சிங்கப்பூர்க் களத்தில் பொருத்துவது. சிங்கப்பூரைக் கருவாக எடுத்தாலும் களமாக எடுத்தாலும் அது கலையாக மாறாதவரை புனைவு வெற்றி பெறுவதில்லை. ஆனால் ஒரு கதை எப்படி, எப்போது கலையாகிறது என்பது வேறொரு விவாதம்.

என்னைப் பொறுத்தவரை சிங்கப்பூரையும் இவ்வட்டாரத்தையும் எழுதும் கதைகளுக்கே நான் சிங்கப்பூர் இலக்கியத்தில் முதலிடம் கொடுப்பேன், ஒருவேளை அவை மொழியிலோ வடிவத்திலோ சற்று சறுக்கி இருந்தாலும்கூட. சிங்கப்பூரின் தனித்துவங்களைப் பிரதிநிதிக்கும் புனைவுகள் எனப்பார்த்தால் சத்யா சொல்வதுபோல் சிங்கைத் தமிழ்ச் சிறுகதைகள் பேசாத, தொடாத இடங்கள் மிக, மிக அதிகம் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.
சர்வான்: ‘புலம்பெயர் எழுத்து’ என்கிற நிலையில் இருந்துதான் ‘வாழிடம்

சிங்கப்பூரையும் இவ்வட்டாரத்தையும் எழுதும் கதைகளுக்கே நான் சிங்கப்பூர் இலக்கியத்தில் முதலிடம் கொடுப்பேன், ஒருவேளை அவை மொழியிலோ வடிவத்திலோ சற்று சறுக்கி இருந்தாலும்கூட.

சார் எழுத்து’க்கு மாறவேண்டியுள்ளது. அண்மையில் நான் வாசித்த புலம்பெயர் எழுத்துகளில் அமெரிக்கா (கத்திக்காரன் – தர் நாராயணன்) இங்கிலாந்து (CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை – உமையாழ்), ஆஸ்திரேலியா (அமீலா – தெய்வீகன்), ஐரோப்பா (மூமின் – ஷோபா சக்தி, கள்ளக்கணக்கு – ஆசி கந்தராசா) எனப் பல திசைகளின் புனைவுகள் வெறும் நினைவேக்கப் பதிவாகவோ, சுற்றுப்பயணக் கையேடாகவோ, பெருமிதப் போற்றல்களாகவோ அல்லாமல் அவ்வந்த நிலங்களின் பன்முகங்களை வழங்குவதாக உணர்ந்தேன்.

நிலத்தையும், முகங்களையும், பண்பாட்டு உரசல்களையும் கணக்கில்கொள்ளும் புனைவுகள் அளிக்கும் உணர்வுகள் அலாதியானவை. அவற்றையே  இவ்விவாதத்தில் முன்வைக்கிறேன்.
லங்கேஷ்

‘கத்திக்காரன்’ காட்டும் அமெரிக்காவின் சித்திரம், சத்யா அமெரிக்காவின் தனித்துவங்களாகப் பட்டியலிட்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை, புதிதானவை. சமகாலத்தில் அங்கே வாழும் ஒருவரால் எழுதப்படுபவை என்பதால் தனித்துவங்கள், சிக்கல்கள் குறித்த நம் எண்ணங்களையும் மாற்றும் வலுவுள்ளவை. மேலும், ஆழமான, விசாலமான பார்வைகளைக் கொண்ட எழுத்துகள் இயல்பாகவே வசீகரமானவையும்கூட. நிலத்தையும், முகங்களையும், பண்பாட்டு உரசல்களையும் கணக்கில்கொள்ளும் புனைவுகள் அளிக்கும் உணர்வுகள் அலாதியானவை. அவற்றையே இவ்விவாதத்தில் முன்வைக்கிறேன்.

அதாவது எவர் எழுதுவது என்பதல்ல, என்ன எழுதப்படுகிறது என்பதே முதன்மை. அதுவே இலக்கிய முகம். உள்ளூரில் சீன, மலாய் மொழிகளில் நிகழ்பவை குறித்த தொடர்ச்சியான அறிமுகமோ உரையாடலோ நம்மிடமில்லை. பரிசுபெறும் படைப்புகளைத்தாண்டிப் பிறவற்றை அறியும் வாய்ப்புகளும் குறைவே. ஆகவே நம் விவாதம் உலகின் பல்வேறு சூழல்களிலிருந்து எழும் தமிழ்க்கதைகளை ஒட்டி அமைவது இயல்பானதே.

சிங்கப்பூர் மனிதர்களோடு பேசாதவரை, பழகாதவரை ‘சிங்கப்பூர்ப் புனைவுகளை’ எழுதுவது சாத்தியமல்ல

சிவா: டோக்கியோ செந்தில் என்று அழைக்கப்படும் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ புலம்பெயர் தமிழ் எழுத்துகளில் அண்மையில் நான் வாசித்த அருமையான தொகுப்பு. அவர் பிறந்து வளர்ந்தது வேலைபார்த்தது எல்லாம் தமிழகத்தின் மன்னார்குடி, சென்னை என்றாலும் அத்தொகுப்பிலுள்ள தமிழகப் பின்புலக் கதைகள் சரியாக அமையவில்லை ஆனால் ஜப்பானைப் பின்புலமாகக்கொண்ட கதைகள் சிறப்பாக வந்துள்ளன. ‘தானிவத்தாரி’ என்ற கதை ஒரே நேரத்தில் ஜப்பானியப் பண்பாட்டு அம்சங்களைக் கதைப்போக்கிலேயே வெளிப்படுத்துவதுடன் மானுட உறவுச் சிக்கல்களையும் வளர்த்துக்கொண்டுபோய் ஒரு நிறைவை எட்டுகிறது.

நான் ஜப்பான் சென்றதில்லை, ஜப்பான் பண்பாட்டைப் பெரிதாக அறிந்ததில்லை என்றாலும் அவர் சொல்வதில் எனக்கு நம்பிக்கை பிறப்பதன் காரணம் அதில்வரும் ஆளுமைச் சித்திரிப்புகள், உறவுச் சிக்கல்கள், மொழி ஆகியவற்றின் தாக்கம்தான். அப்படியாக ஒன்றைக்கொண்டு ஒன்றை நிரப்பலாம். அப்போது பிழைகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பொருட்படுத்தப்படமாட்டா என்று நம்புகிறேன்.

எது ‘சிங்கப்பூர்ப் புனைவு’ என்பதற்குமுன் எது ‘புனைவு’ என்னும் விவாதத்தைத் தொடங்கவேண்டும்.

‘இசூமியின் நறுமண’த்தின் ஜப்பானியக் கதைகள் தமிழர் ஒருவரின் பார்வையில் அமைந்த ஜப்பானியப் புனைவுகளே. இப்படியான முன்னுதாரணங்களும் சிங்கப்பூர்ப் புனைவுகளை – குறிப்பாக, புலம்பெயர்ந்த முதல் தலைமுறை எழுத்தாளர்களிடமிருந்து எழும் புனைவுகளை – சரியான கண்ணோட்டத்தில் வகைப்படுத்தவும் விமர்சிக்கவும் உதவக்கூடும்.

ரமா: சிங்கப்பூர் மனிதர்களோடு பேசாதவரை, பழகாதவரை ‘சிங்கப்பூர்ப் புனைவுகளை’ எழுதுவது சாத்தியமல்ல என்பது என் பார்வை. நாம் தகவலாகப் படித்ததை யாரோ ஒருவர் நமக்கு வாழ்க்கை அனுபவமாகச் சொல்லாதவரை அதில் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் விமர்சிப்பவருக்கும் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கும், அதைக் குறைசொல்வதற்கில்லை. ஒன்று எழுத்தாளர் வாழ்ந்து அனுபவிக்கவேண்டும் அல்லது பிறர் வாழ்க்கையை உணர்ந்து காண்பதற்கான கண்களைக்கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்துப் படித்த தகவல்கள், அதன்வழியாக எழுந்த கருத்துகளைக் கதையாக எழுத முயன்றால் அது கலையாக மாறாது என்பது என் அனுபவம்.

எது ‘சிங்கப்பூர்ப் புனைவு’ என்பதற்குமுன் எது ‘புனைவு’ என்னும் விவாதத்தைத் தொடங்கவேண்டும் என முன்மொழிகிறேன்.