சட்டப்படி பார்த்தால்

விற்பனை உத்திகளும் நுகர்வோர் உரிமைகளும்

சாம்பவி ராஜாங்கம்

கடைவீதிகளில் நடந்து செல்லும்பொழுது கடைக்குள்வந்து, விற்பனைப் பொருட்களையும் சேவைகளையும் பற்றி மேலும் அறியுமாறு விற்பனையாளர்கள் நம்மை அழைப்பதை அனுபவித்திருக்கிறோம். பலவேளைகளில் தவிர்த்திருப்போம். ஆனால் சிலவேளைகளில் விற்பனையாளர்கள் வலுக்கட்டாயமாக அழைக்கும்போதோ, அல்லது பொருட்களின்/சேவைகளின் விலை மிகக் குறைவுதான் என்றுகூறி நம்மை அழைக்கும்போதோ, நம்மில் பலர் கடையினுள் சென்றிருப்போம். நம்மையும்மீறி எதிர்பாராவிதமாக பொருட்களையும் சேவைகளையும் வாங்கியிருக்கிறோம்.

இப்படிப்பட்ட வலுக்கட்டாயமான விற்பனை உத்திகளைக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் தருவதாக சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்திற்கு (Consumer Association of Singapore (CASE)) வந்த புகார்களில், அழகு பராமரிப்புத்துறை பல ஆண்டுகளாக முதல் மூன்று இடங்களில் திகழ்ந்துகொண்டு வருகிறதாம். இதைப்போலவே செய்தித்தாட்களில் பலரை – குறிப்பாக முதியோரை – வலுக்கட்டாயமாக வாங்கக்கூறி, ஆயிரக்கணக்கில் செலவுசெய்ய வைத்ததைப் பற்றிப் படித்திருக்கிறோம்.

வலுக்கட்டாய விற்பனை உத்திகள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டவையா?

பொய்கூறி விற்க முயல்வதும், தன்நலனைக் தற்காக்க இயலாதோர், அல்லது விற்கப்படும் பொருளைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளோர் ஆகியோரிடம் விற்பனை செய்வதும், தவறான எண்ணத்தோடு விற்பனை செய்வதும், ‘நியாயமற்ற வர்த்தக முறை’ என்பதில் அடங்கும்.

வலுக்கட்டாய விற்பனை முறைகளும் உத்திகளும் சட்டத்திற்கு மாறானவை அல்ல. ஆனால், பயனீட்டாளர்களின் உரிமைகளைக் காக்க, பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக முறை) சட்டம் (Consumer Protection (Fair Trading) Act 2003) என்னும் ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தின்கீழ், வலுக்கட்டாய, அல்லது அழுத்தமான விற்பனை உத்திகளும் முறைகளும், ‘நியாயமற்ற வர்த்தக முறை’ (Unfair Practice) எனக் கருதப்படலாம்.

வாடிக்கையாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக முறை) சட்டத்தின் நான்காம் பிரிவு, ‘நியாயமற்ற வர்த்தக முறை’ என்பதற்கு விரிவான பொருள் அளிக்கிறது. அதன்படி, வாடிக்கையாளர் ஏமாறும்படியோ அல்லது ஏமாறுவதற்கு ஏற்ற முறையில் பேசுவது, நடந்துகொள்வது, அல்லது செய்ய/கூறவேண்டிய ஒன்றை செய்யாமல்/கூறாமல் இருப்பதோ ‘நியாயமற்ற வர்த்தக முறை’ எனக் கருதப்படும். அதுமட்டுமில்லாமல், பொய்கூறி விற்க முயல்வதும், தன்நலனைக் தற்காக்க இயலாதோர், அல்லது விற்கப்படும் பொருளைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளோர் ஆகியோரிடம் விற்பனை செய்வதும், தவறான எண்ணத்தோடு விற்பனை செய்வதும், ‘நியாயமற்ற வர்த்தக முறை’ என்பதில் அடங்கும்.

எச்சூழலிலும் ஒரு சேவையையோ பொருளையோ மிகைப்படுத்தப்பட்ட விலையையோ மறுக்கும் உரிமையும் சக்தியும் நமக்கு உண்டு என்னும் விழிப்புணர்வோடு வருமுன் காத்துக்கொள்வதே உகந்தது.
சட்டப்படி பார்த்தால்

இவைமட்டுமின்றி, உத்தேச மதிப்பீட்டைக் காட்டிலும் கணிசமாக விலையை உயர்த்தி விற்க முயல்வதும் (selling at substantially higher prices than an estimate provided), வலுக்கட்டாயமாகப் பேசியோ, அழுத்தம்தரும் வண்ணம் நடந்துகொண்டோ (exerting undue pressure or undue influence), வாடிக்கையாளரை சேவை அல்லது பொருள் ஒன்றை வாங்க வைப்பதும் ‘நியாயமற்ற வர்த்தக முறை’ எனக்கருதப்படும் என்று வாடிக்கையாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக முறை) சட்டத்தின் இரண்டாம் அட்டவணை (Second Schedule) விவரிக்கிறது.

இரண்டாம் அட்டவணையில் இவற்றைத்தாண்டி ‘நியாயமான வர்த்தக முறை’ எனக் கருதப்படும் பல்வேறு சூழ்நிலைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. எப்படிப்பட்ட சூழ்நிலையாயினும் நுகர்வோர் உரிமைகளைக் காப்பது மிகமுக்கியம் எனக் கருதியே இவ்வளவு விரிவான, ஆழமான அட்டவணை சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற வர்த்தக முறைக்கு ஆளாகிய நுகர்வோருக்குத் தீர்வு என்ன?

நியாயமற்ற வர்த்தக முறைகளுக்கு ஆளாக்கப்பட்ட நுகர்வோர், அம்முறையை ஆட்கொண்ட வர்த்தகக்கத்தின்மீது வழக்குத் தொடுக்கலாம். இது, பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக முறை) சட்டத்தின் ஆறாம் பிரிவில் ஓர் உரிமையாகத் தரப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட வழக்குகளில், நுகர்வோர் செலவு செய்த தொகைக்கு ஈடான நஷ்டஈடு கேட்கலாம்; அவர்களுக்குத் தேவைப்படும் வேறு துயர்நீக்கத் தீர்வினையும் (other reliefs or remedy) கோரலாம். ஆனால், அவர்கள் நீதிமன்றத்திடம் கேட்கும் தொகையும், துயர் நீக்கத்தீர்வின் மதிப்பும், 30,000 வெள்ளிக்குள் இருக்கவேண்டும்.

சாதாரண வழக்குகளைத் தொடுக்க, இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை எழுந்த நாளிலிருந்து, ஆறு ஆண்டுகள் அவகாசம் தரப்படும். ஆனால், ‘நியாயமற்ற வர்த்தக முறை’ என்ற அடிப்படையில் தொடுக்கப்படும் வழக்குகள், அச்சம்பவம் ஏற்பட்ட இரண்டே ஆண்டுகளுக்குள் துவங்கப்படவேண்டும் என்று பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக முறை) சட்டத்தின் பன்னிரண்டாம் பிரிவு கூறுகிறது.

நியாயமற்ற வர்த்தக முறையில் தாம் ஏமாற்றப்பட்டோம் என நுகர்வோர் காலதமதாக உணர்ந்தாலும் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாளிலிருந்துதான் இரண்டு ஆண்டுகள் கணக்கிடப்படும். இது, தன்நலனைத் தற்காக்க இயலாது ஏமாற்றப்பட்ட நபர்களையும், வாங்கும்போது விற்பனையாளர் கூறியது பொய் என்று பின்னாளில் உணரும் நபர்களையும் மனதில்கொண்டு அவர்களது உரிமைகளையும் காக்கும் வண்ணம் எழுதப்பட்டச் சட்டமே.

சிலவேளைகளில், சேவைகளை வழங்கும் முன்பு வர்த்தகங்களில் நுகர்வோர், ஓர் உரிமை விட்டுக்கொடுப்பு ஆவணத்தில் (waiver or release) கையொப்போம் இடக் கேட்கப்படுவர். அப்படிப்பட்ட ஆவணத்தில், நுகர்வோர் எவ்வித நியாயமற்ற வர்த்தக முறைக்கும் ஆளாக்கப்படவில்லை என்றும், ஆகையால் வர்த்தகத்தின்மீது வழக்குத் தொடுக்கும் உரிமையை அவர் இழக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தாலும், நுகர்வோர் கையொப்பம் இடப்பட்டிருந்தாலும், அவ்வுரிமை விட்டுக்கொடுப்பு சட்டத்தின்கீழ் செல்லாது என்று பிரிவு முப்பத்தைந்து குறிப்பிடுகிறது.

ஆக, ‘நியாயமற்ற வர்த்தக முறை’ ஒன்றில் சிக்கி ஒருவர் ஏமாற்றப்பட்டால், அவருக்கான தீர்வுகள் இவையே:
முதற்படியாக, அவர் அவ்வர்த்தக நிறுவனத்தை அணுகி, அவர்கள் பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக முறை) சட்டத்திற்குப் புறம்பாக நடந்துக்கொண்டுள்ளனர் என்று செலுத்திய கட்டிய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கலாம்.

அடுத்ததாக, சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்திடம், நியாயமற்ற வர்த்தகமுறையில் நடத்தப்பட்டதைக் குறித்துப் புகார் செய்யலாம். அவ்வர்த்தக நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்தின் “CaseTrust” திட்டத்தில் பங்காளியாக இருந்தால், அத்திட்டன்படி நுகர்வோர் ஐந்து நாட்களுக்குள் அவர் வாங்கிய பொருட்களைத் தந்துவிட்டால், அல்லது சேவை வேண்டாம் எனக் கூறினால், அவர் கட்டிய பணத்தை மீட்டுத்தரவேண்டும். ஒருவேளை “CaseTrust” திட்டத்தில் பங்குபெறவில்லை என்றால், நுகர்வோரும் வர்த்தக நிறுவனமும் பேசி சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள ஒரு மத்தியஸ்தத்தை சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்யும்.

இவை யாவும் நுகர்வோருக்குச் சரியான தீர்வைத் தரவில்லை என்றால், அவர் ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று, வர்த்தக நிறுவனத்தின் மீது வழக்கொன்றைத் தொடுக்கலாம். நுகர்வோர் உரிமைகளைக் காக்கும் வண்ணம் சட்டங்களும், சங்கங்களும், தீர்வு முறைகளும் இருப்பினும், எச்சூழலிலும் ஒரு சேவையையோ பொருளையோ மிகைப்படுத்தப்பட்ட விலையையோ மறுக்கும் உரிமையும் சக்தியும் நமக்கு உண்டு என்னும் விழிப்புணர்வோடு வருமுன் காத்துக்கொள்வதே உகந்தது.