சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல

பாலபாஸ்கரன்

ஜனவரி 31, 1819 அன்று ராஃபிள்ஸ் தன் நண்பர் வில்லியம் மார்ஸ்டனுக்கு மேலும் ஒரு கடிதம் வரைந்தார்.

‘நான் முன்பு சொன்னதைச் செய்துவிட்டேன். தற்சமயம் சிங்கப்பூரில்தான் தங்கியிருக்கிறேன். ஒரு பழைய வரலாற்று பூமியில் காலடி வைத்திருக்கிறேன் என்பதில் என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. பண்டைய நகரின் கோட்டைச் சுவர்களையும் தற்காப்பு அரண்களையும் இனிமேல்தான் தேடிப் பார்க்கவேண்டும். சிங்கப்பூர்த் தீவில் டச்சுக்காரர் எப்போதுமே வர்த்தகத் தலம் வைத்திருந்ததில்லை. ரியோவுடன் அவர்கள் அண்மையில் செய்திருக்கும் ஒப்பந்தப்படி அவர்கள் நம்முடைய நிரந்தரத் துறைமுகத்தில் தலையிட முடியாது’.

ஒப்பந்தத்தின் விதிகளை ராஃபிள்ஸின் செயலாளர் ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் வாசித்தார். இஞ்ச்சே யஹாயா மலாய் மொழிபெயர்ப்பில் அவற்றை வரிசையாகப் படித்தார்.

பிப்ரவரி 1 திங்கட்கிழமை. சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார் இளவரசர் துங்க்கு உசேன். பிப்ரவரி 2 ராஃபிள்சும் தெமெங்கோங்கும் ஏற்கனவே செய்துகொண்ட உடன்பாட்டுக்குத் துங்க்கு உசேன் முழு ஆதரவும் சம்மதமும் தெரிவித்து அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி 3 ஃபார்க்குவார் தெற்குப் பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார்.

டச்சு அரசாங்கத்துடன் மீண்டும் செய்துகொண்ட உடன்பாட்டை முறித்துக்கொள்ள ரியோ இளவரசர் ராஜா ஜாஃபார் தயாராக இல்லை என்றும், புதிய உத்தேச பிரிட்டிஷ் துறைமுகத்தின் மேம்பாட்டுக்கு உதவிசெய்ய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாய் அறிவித்துவிட்டதாக ஃபார்க்குவார் தெரிவித்தார்.

பிப்ரவரி 6 சனிக்கிழமை. அதிகாரபூர்வ நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Treaty of Friendship and Cooperation) தயாரிக்கப்பட்டது. உண்மையில் பார்த்தால் மூத்தவன் துங்க்கு உசேன்தான் பாரம்பரிய ஜொகூர் சுல்தான். ஆகவே நீயே ஜொகூரின் சுல்தான், உமக்குக் கட்டுப்பட்ட பிரதேசம்தான் சிங்கப்பூர் என்று அறிவித்து, உசேனை சுல்தானாகப் பிரகடனம் செய்து வைத்தார் ராஃபிள்ஸ். அதற்குப்பிறகுதான் அவசரமாகப் பதவியேற்ற புதிய சிங்கப்பூர் சுல்தானுடன் அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

வர்த்தக நிலையம் அமைக்க ஒரு சிறு பகுதியைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் சட்டபூர்வ ஒப்பந்தம் அது. சிங்கப்பூர் – ஜொகூர் பிரதேசத்தில் வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிரிட்டிஷார் வர்த்தகத் துறைமுகம் நிறுவிக்கொள்வதற்கும் ஒப்பந்தம் வகைசெய்தது.

ஒப்பந்தத்தின் விதிகளை ராஃபிள்ஸின் செயலாளர் ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் வாசித்தார். கர்னல் ஃபார்க்குவாரின் எழுத்தர் இஞ்ச்சே யஹாயா மலாய் மொழிபெயர்ப்பில் அவற்றை வரிசையாகப் படித்தார். ஐரோப்பியர்களும் துருப்புகளுமாக சுமார் முப்பது பேர் கூடியிருந்தனர். சிப்பாய்கள் 120 பேர் குழுமினர்.

உடன்பாட்டின் மூன்று பிரதிகள் கையெழுத்தாகின. கையெழுத்துச் சடங்கு முறையாக நடைபெற்றது. ஆங்கிலத்திலும் ஜாவியிலும் எழுதப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி அரக்கு முத்திரை குத்தப்பட்டது. புதிய சுல்தான், தெமெங்கோங், ராஃபிள்ஸ் மூன்று பேரும் கையெழுத்திட்டனர். வீரர்கள் அணிவகுத்தார்கள். பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்டது. மரியாதைக் குண்டுகள் முழங்கின. பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

சுல்தான், தெமெங்கோங் பரிவாரங்களைச் சேர்ந்த மலாய்க்காரர்களும் ஓராங் லாவுட் கடல்வாசிகளும் கத்திரிக்கம்பு (gambier) தோட்டங்களில் வேலை செய்த சீனர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர்கூடி அன்றைய அரிய நிகழ்ச்சியை அதிசயத்துடன் பார்வையிட்டனர். அப்போது சிங்கப்பூரில் மொத்தம் ஐந்நூறு பேர் வரை இருந்தனர் என்பது ஒரு மதிப்பீடு.

வெறும் 38 வயதில் ராஃபிள்ஸ் நிகழ்த்திய அரிய சாதனை சிங்கப்பூர் ஒப்பந்தம். சாதனையா, சாதுரியமா, சூழ்ச்சியா? சாணக்கியன், மாக்கியவெல்லி மொழியில் இது ஓர் அரிய அரசதந்திரம்.

அன்றைய அதிசயத்தைப் பார்வையிட்ட வா ஹாக்கீம் (Wa Hakim) என்ற 15 வயது சிறுவன், ஆற்று முகத்துவாரத்தை ஒட்டி சுமார் முந்நூறு சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன என்றும், சற்று மேலே ஆற்றின் அகலமான பகுதியில் சுமார் முப்பது கடல்வாசிக் குடும்பங்கள் படகுகளில் குடியிருந்தன என்றும் பின்னாளில் கூறியிருக்கிறான்.

ராஃபிள்ஸ் ஓவியம், ஜார்ஸ் ஃபிரான்சிஸ் ஜோசஃப் வரைந்தது (1816)

கத்திரிக்கம்பு என்பது பத்தடி உயரத்துக்கும் அதிகமாகச் செழிப்புடன் வளரும் ஒரு செடியின் பெயர். அதன் இலைகளைச் சுண்ட வேகவைத்து வடிகட்டிச் சாற்றைக் கட்டியாகத் திரட்டி சீனாவுக்கு அனுப்புவதுண்டு. இதன் சாறு தோல் பதனிடுவதற்கும், வெற்றிலை பாக்குடன் சேர்த்து மெல்வதற்கும், உணவுக்குச் சுவை ஊட்டுவதற்கும், துணிக்குப் பழுப்புச் சாயம் ஏற்றுவதற்கும், தோல் சுருக்கத்தைப் போக்க உடம்பில் பூசிக் கொள்வதற்கும் பயன்படும். ஆரம்ப சிங்கப்பூரில் கத்திரிக்கம்பு உற்பத்தி அபரிமிதமாகப் பெருகி அதனை ஏற்றுமதி செய்து சீனர் பலர் பெருஞ்செல்வந்தர் ஆனார்கள்.

புதிய சுல்தான் உசேனின் மாமனார்தான் தெமெங்கோங் அப்துல் ரஹ்மான். தெமெங்கோங் என்பவர் மலாய் அரசவையில் சுல்தான், முதலமைச்சர் (பெண்டஹாரா) ஆகியோரை அடுத்து மூன்றாம் நிலையில் உள்ள முக்கியப் பிரமுகர். எட்டாண்டுக்கு முன்புதான் அவர் தம் ஆதரவாளர்களுடன் ஜொகூரிலிருந்து சிங்கப்பூரில் குடியேறினார். சுல்தானுக்கு ஆண்டுக்கு ஐயாயிரம் வெள்ளியும் தெமெங்கோங்கிற்கு ஆண்டுக்கு மூவாயிரம் வெள்ளியும் சாகும்வரை உதவித்தொகை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

அவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும்வரை பிரிட்டிஷ் பாதுகாப்பு கிடைக்கும். அவர்களின் வாரிசுகளுக்கு எந்த உதவியும் கிடைக்காது. துறைமுக வருமானம் முழுதும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கே சொந்தம். நாட்டுக்கப்பல்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதியைத் தெமெங்கோங் வசூல் செய்துகொள்ளலாம்.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ராஃபிள்சின் அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூரின் புதிய சுல்தான் உசேன் உடனடியாக ஊருக்குத் திரும்பிவிட்டார். மீன்பிடிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு டச்சுக்காரருக்குத் தெரியாமல் சிங்கப்பூருக்கு ரகசியமாக வந்ததால் இந்த அவசரம். வெறும் 38 வயதில் ராஃபிள்ஸ் நிகழ்த்திய அரிய சாதனை சிங்கப்பூர் ஒப்பந்தம். சாதனையா, சாதுரியமா, சூழ்ச்சியா? சாணக்கியன், மாக்கியவெல்லி மொழியில் இது ஓர் அரிய அரசதந்திரம்.

புதிய சுல்தான், தெமெங்கோங், ராஃபிள்ஸ் மூன்று பேரும்
கையெழுத்திட்ட ஒப்பந்தம் (1819)

உடன் வந்த அனுபவசாலியான தன்னைவிட எட்டு வயது மூத்த மேஜர் வில்லியம் ஃபார்க்குவாரை நிர்வாகத் தலைவராகவும் (Resident), ராணுவத் தலைவராகவும் (Commandant) நியமித்தார் ராபிள்ஸ். புதிய குடியேற்றப்பகுதி கிடைக்கும் பட்சத்தில் ஃபார்க்குவாரையே தலைமைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கல்கத்தாவின் உத்தரவுக்கு இணங்கியே ராபிள்ஸ் நடந்துகொண்டார்.

அன்றிரவு கப்பலில் தூங்காமல், வாராது வந்த மாமணி போன்ற சிங்கப்பூரை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை எல்லாம் அடுக்கடுக்காகச் சிந்தித்துப் பல பக்கங்களில் விரிவாக எழுதி 23 உத்தரவுகள் போட்டுவிட்டுப் பொழுது புலர்ந்ததும் பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமை பினாங்கு புறப்பட்டார் ராபிள்ஸ்.

தற்போதைக்கு வரிவிதிப்பு ஏதும் கிடையாது என்பது முக்கிய விதி. சிங்கப்பூரை முழுக்க முழுக்க பென்கூலின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்ட பிரதேசமாகத் தம் அதிகாரத்தின்கீழ் வைத்துக்கொண்டார் ராபிள்ஸ். பினாங்கு கவர்னர் பேனர்மனுக்கு இது மிகவும் கடுப்பூட்டியது. சிங்கப்பூரைப் பினாங்கின் நிர்வாகத்தில் வைத்துக்கொள்ள அவர் விரும்பினார்.

ஆறுநாள் பயண தூரத்தில், அருகில் இருக்கும் பினாங்கைவிட ஆறு வாரப் பயண தூரத்தில் தொலைவில் இருக்கும் பென்கூலினுக்குக் கட்டுப்பட்டு சிங்கப்பூரை வைத்திருந்தது சரியல்லதான். ராபிள்ஸின் மகாபிடிவாதமான காரியம் அது. சிங்கப்பூர் ஒப்பந்தப் பத்திரத்துடன் பினாங்கு திரும்பிய ராபிள்ஸ், கவர்னர் பேனர்மனைச் சந்தித்து, டச்சு அபாயத்தைச் சமாளிக்க சிங்கப்பூருக்கு சிப்பாய்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

கர்னல் பேனர்மன் காடு மேடாகக் கிடைக்கு சிங்கப்பூரைக்கட்டி கட்டி நிர்வாகம் செய்ய ஏராளமாகச் செலவு பிடிக்கும் என்றும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காதென்றும் நேராக லண்டனுக்கு எழுதி வைத்தார்

கர்னல் பேனர்மன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அவருக்கும் ராபிள்சுக்கும் இணக்கமான உறவு கிடையாது. பினாங்கின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் பாதகமாக அமையும் என்று கர்னல் பேனர்மன் நினைத்ததும் அதற்கு ஒரு காரணம். பிறகு ராபிள்ஸ் பென்கூலின் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய வங்காள ராணுவ வீரர்கள் 485 பேரைத் திசைமாற்றி சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தார்.

அதிருப்தியும் ஏமாற்றமும் சூழ ஏப்ரல் முதல் தேதி அவர்கள் வந்து சேர்ந்தார்கள். ஒத்துழைப்பு வழங்கத் தவறிய பினாங்கு கவர்னரின் செயலைக் கல்கத்தா தலைமையகம் பின்னர்க் கடிந்து கொண்டது. அதன்பிறகு கர்னல் பேனர்மன் வேண்டா வெறுப்பாக 200 வீரர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியதோடு, காடு மேடாகக் கிடக்கும் சிங்கப்பூரைக் கட்டி நிர்வாகம் செய்ய ஏராளமாகச் செலவு பிடிக்கும் என்றும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காதென்றும் நேராக லண்டனுக்கு எழுதி வைத்தார்.


(தொடரும்)