பக்கத்து வீட்டின் வாசல் கதவின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு “நே நே”, என்று கூப்பிட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தான் ஆதித்யா. ஹீ யிங் பாட்டி அசையவில்லை. தாத்தா எங்காவது உள்ளே இருப்பாரோ என்று நினைத்து “யே யே” என்று கூப்பிட்டான். யாரும் வரவில்லை.
“ஆதி அங்கே என்ன செய்யற? நாம இப்ப வெளிய கிளம்பணும். பேபி ரெடியாயிட்டா! நீ கிளம்பலையா?” அம்மாவின் குரல் கேட்டது.
பாட்டி எழுந்திருக்கவில்லை என்பதைச் சொல்லலாமா என்று நினைத்தான். ஏற்கெனவே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த பாட்டி தாத்தாவால் எதோ சண்டை. இப்போது சொன்னால் அம்மா இன்னும் கோபப்படுவாள். ஒரு கணம் பாட்டியைப் பார்த்துவிட்டுத் தன் வீட்டுக்குள் ஓடிப் போனான்.
“அம்மா! அம்மா! இங்க பாரேன் பாட்டியக் கூப்பிட்டா வர மாட்டேங்கறாங்க!”, என்று சொன்னதும் “அவங்கக்கிட்டப்போய் இனிமே ட்ரபிள் குடுக்காதன்னு சொன்னேன்ல. போய் அந்த டீ ஷர்ட்ட மாத்திக்கிட்டு கெளம்பு. அப்பா தேக்காவுக்கு வந்துடுவாரு”, என்று சொல்லியவாறு மினி தன் கைப்பையையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்தாள். அனுவை இடுப்பில் தூக்கிக் கொண்டு வீட்டைப் பூட்டினாள்.
“ஆதி! சிக்ஸ் நைன் எய்ட் காடி வருதான்னு பாரு”, என்றாள். தேக்காவுக்குப் போய் அஞ்சப்பரில் பிரியாணி ரைத்தா பக்கோடா எல்லாம் சாப்பிட்டுவிட்டு காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அனுவும் ஆதித்யாவும் தூங்கிக் கொண்டே வந்தனர். வீட்டில் வந்து படுத்தது கூடத் தெரியாமல் அப்படியே தூங்கினான் ஆதித்யா.
உதவிகேட்டு மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கிறார். பாட்டி இறந்து ஐந்தாறு மணி நேரம் ஆயிருக்கும் என்று தெரிந்தது.
மறுநாள் காலை பக்கத்து வீட்டில் நிறைய பேர் கூடியிருந்தனர். பாட்டி செத்துப் போய்விட்டாள். தாத்தா இரவு வெளியில் போய்விட்டு வந்து கதவைத் தட்டிப் பார்த்துத் திறக்காமல் படுத்திருந்த பாட்டியைப் பார்த்து உதவிகேட்டு மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கிறார். பாட்டி இறந்து ஐந்தாறு மணி நேரம் ஆயிருக்கும் என்று தெரிந்தது.
வீட்டின் வாசலில் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் மிகவும் பிடித்த தோட்டத்தின் அருகில் பாட்டியைக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருந்தனர். பாட்டிக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. நன்றாகப் பழகிய அக்கம் பக்கத்தினர் மட்டும்தான். கொஞ்ச நேரத்தில் எடுத்துக்கொண்டு போய் விட்டனர். தாத்தாவும் அந்த வண்டியிலேயே போய்விட்டுத் தனியாகத் திரும்பிவந்தார். பக்கத்து வீட்டு மரியா ஆண்டி தாத்தாவுக்குப் பெரிய தட்டில் சோறும் குழம்பும் கொண்டுபோய்க் கொடுத்தாள்.
வீவக அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்குத் தோட்டம் போடுவது ஆடம்பரம் என்று ஹீ இங் பாட்டி நினைத்திருந்தாள். கீழ்த்தளத்தில் தனது மூன்றறை வீட்டு வாசலில் இருந்த கைக்குட்டையளவு இடத்தில் தோட்டம் அமைத்துக்கொள்ள அனுமதி கிடைத்ததும் எந்த அதிர்ஷ்டமும் இல்லாத தன் வாழ்க்கையில் இது நடந்தது ஒரு ஆச்சரியம்தான் என்று நினைத்தாள்.
சின்ன கிராமத்தில் கவலை இல்லாமல் காடு கரை தோட்டம் ஆடு மாடு என்று திரிந்ததுபோல் இப்பெரு நகரிலும் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது
நாடாளுமன்ற உறுப்பினர் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தில் விதைகள் தூவும் காட்சி சமூக மன்றத்தின் வாசலில் நீண்ட நாட்களுக்குப் பெரிய விளம்பரப் பலகையில் இருந்தது. சமூக மன்றத்தில் நிறைய உதவி செய்தனர். அச்சதுர நிலத்தைச் சுற்றி வேலிபோட்டுக் கொடுத்தனர். விதைகளும் உரம் போட்ட மண்ணும் கொடுத்தனர்.
தினமும் காலையில் கஞ்சியும் கடுங்காப்பியும் குடித்துவிட்டு அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஷின் மின்னை ஒருவரி விடாமல் படிக்க முயற்சி செய்வார் லாய் வீ தாத்தா. அதற்குள் பாட்டி தலையில் கூம்புவட்டத் தொப்பியை அணிந்துகொண்டு தோட்ட வேலையைத் தொடங்குவாள்.
கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, கீரை இவற்றுடன் பூச்செடிகள், அதுவும் தேன் இருக்கும் பூக்கள் கொண்ட செடிகள். அவை வளர ஆரம்பித்ததும் எப்படித்தான் வண்ணத்துப் பூச்சிகளுக்குத் தெரியுமோ! வண்ணத்துப் பூச்சிகள் வர ஆரம்பித்தன. கொத்துக் கொத்தாகத் தொங்கிய உண்ணிச் செடிகளின் பல நிற மலர்களின் தேனை எடுக்க சிறகுகளை வேகமாக அசைத்தபடி மலர்களின் மேல் ஆடும் வண்ணத்துப்பூச்சிகள்.
பூக்கள் இருக்கும் எல்லாச் செடிகளிலும் தேன் குடிக்காது. தனக்குப் பிடித்தமான செடியைத் தேர்வு செய்து தேன் குடிக்கும். ஊதா கூம்பு மலர்கள், மஞ்சள் கூம்பு மலர்கள், சூரியகாந்தி, அகிலம், சால்வியா, சில வகை அல்லிப்பூ, அஸ்டர் பூ, டெய்சி பூ, ஐரிஸ், பெடுனியா, செம்பருத்தி இவற்றில் விரும்பி வந்து அமரும். அடர்சிவப்பு நிறப் பூக்களென்றால் தவறாமல் அமரும்.
வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் வரவரப் பாட்டியின் முகத்தில் புன்னகை அதிகம் தவழ ஆரம்பித்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் பாட்டியின் வண்ணத்துப் பூச்சித் தோட்டத்தின் வேலியைப் பிடித்தபடி ஆரஞ்சு, மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து கொண்டிருப்பர். ஆதித்யாவுக்கும் அனன்யாவுக்கும் பக்கத்து வீட்டுப் பாட்டி என்பதால் கொஞ்சம் சலுகைகள் கிடைக்கும்.
பாட்டியுடன் தோட்டத்துக்குள் போகலாம். செடிகளுக்குத் தண்ணீர் விடலாம். பாட்டி கீழே விழுந்து கிடக்கும் இலைதழைகளைச் சுத்தம் செய்வாள். அப்போது இவர்களும் குப்பையை அள்ளிப் போடுவார்கள். வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மேலே படுவதுபோல பறந்து கொண்டிருக்கும். பாட்டி அவற்றைத் தொடக்கூடாது என்று சொல்வது புரிந்து தொடாமல் இருவரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரு குழந்தைகளும் மேலுமிரண்டு பட்டாம்பூச்சிகளாகவே அத்தோட்டத்தில் சுற்றித்திரிந்தார்கள்.
ராகவனுக்குத் தன் குழந்தைகள் பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் தோட்டத்தில் திரிவது தன் மன்னார்குடி வாழ்க்கையை நினைவுபடுத்தியது. சின்ன கிராமத்தில் தான் கவலை இல்லாமல் காடு கரை தோட்டம் ஆடு மாடு என்று திரிந்ததுபோல் இப்பெரு நகரிலும் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது என்று நினைத்துக்கொண்டான்.
ஆனால் மினி மும்பை பெண். அவள் வாழ்க்கையில் இடித்துப்பிடித்துக்கொண்டு சிறுபெட்டிகளாய் வீடுகள், மூட்டைகளாய் மனிதர்கள் அடைந்து செல்லும் மின்சார ரயில், பாலிவுட் சினிமாக்கள், தமிழ் கொஞ்சம் கொஞ்சம் வரும் என்று சொல்லிக் கொள்வது, இட்டலியைப் பார்த்தால் “வாவ்” என்று கண்கள் விரிய “ஹவ் டு டூ?” என்று ஆச்சரியப்படுவது.
பக்கத்து வீட்டு முதிய தம்பதியிடம் குழந்தைகள் நட்போடு இருப்பதை ராகவன் இயல்பாக எடுத்துக் கொண்டது சௌதாமினிக்கு உடன்பாடில்லாத விஷயமாகி விட்டது. “எப்பவும் மண்ல விளையாடறாங்க. ரெண்டு வாட்டி குளிக்க வைக்கறேன். பாப்பா கையில எப்பவும் மண்ணு இருக்கு” என்று தடுக்க முயற்சித்தாள்.
“பசங்க கையில மண்ணு பட்டா ஒண்ணும் ஆகாது. அப்படி நேச்சரோட ஒட்டி வாழாமத்தான் நமக்கு வேண்டாத வியாதியெல்லாம் வருது. எங்க கிராமத்தில நாங்க எங்க வீட்ல இருந்ததைவிட அத்தை வீட்லயும் பக்கத்து வீட்லயும்தான் அதிகம் இருந்தோம்.
குழந்தைங்க இங்க எந்த உறவும் இல்லாம இருக்காங்க. இப்படி அக்கம் பக்கத்தில இருக்கறவங்கக் கிட்ட ஒட்டுறவா இருக்கட்டும்” என்று ராகவன் சொன்னதும் மினியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு வீட்டிலிருந்து வேலை என்பதால் குழந்தைகள் கொஞ்சநேரம் பக்கத்து வீட்டுக்குப் போய்வருவது இளைப்பாறலாகவும் இருந்தது.
பாட்டிக்குச் சீன மொழி மட்டுமே தெரியும். சீன மொழியில் அவள் பேசுவதும் அதற்கு அனு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பதில் சொல்வதும், ஆதித்யா தாத்தா கையைப் பிடித்துக்கொண்டு சாப்பாட்டுக் கடைக்குப் போய் சாப்பாடு வாங்கி வருவதும் அன்றாடக் காட்சிகள். தாத்தாவுக்குக் கொஞ்சம் ஆங்கிலம் பேசத் தெரியும்.
விளையாடினாலும் அங்கே பிள்ளைகள் எதுவும் சாப்பிடக்கூடாது என்பதில் சௌதாமினி ரொம்ப கண்டிப்பாக இருந்தாள். முதலில் அவர்கள் இருவரும் மிகக் குறைந்த வருமானத்தில் வாழும் முதியவர்கள். இரண்டாவது அவர்கள் உணவு குழந்தைகளுக்குப் பரிச்சயமில்லாதது. மூன்றாவது அவர்களின் சுகாதாரப் பழக்க வழக்கம் நமக்குத் தெரியாது என்று காரணங்களை அடுக்கிக் கட்டளை போட்டுவிட்டாள். அப்படியும் அடைக்குந்தாழ்களை விலக்கி அன்பு வெளியேறிவிடும். பாட்டி கொடுக்கும் மென்மையான ரொட்டி, பன் என்று எதையாவது சாப்பிட்டு விட்டு வருவார்கள்.
கடந்த காலத்தின் எச்சங்களாகப் பாட்டி வீடு முழுவதும் பழைய ரொட்டி டின்கள் இருக்கும். அதில் கொஞ்சமாக அரிசி, நூடுல்ஸ் பாக்கெட்டுகள், மீன் மசாலா, உப்பு, சர்க்கரை, காப்பித்தூள். அரிசியை வேகவைக்கப் பெரிய அலுமினியப் பானைகள், கண்ணாடிக் குவளைகள், பீங்கான் தட்டுகள் என்று வீட்டின் மொத்த பொருள்களையும் ஒரு பெட்டிக்குள் வைத்து விடலாம் போல இருக்கும்.
ஆரஞ்சும் கறுப்புமாக இருந்த வண்ணத்துப் பூச்சி ஆதித்யாவின் தோளில் வந்து உட்கார்ந்தது. அதைக் கையில் பிடித்து எடுத்தான்.
தோட்டம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து பாட்டி எங்கிருந்தோ தோட்டத்துக்குத் தேவையான வாளிகள், பூவாளி, ரப்பர்க் குழாய்கள், மண்வெட்டி, கத்திரிக்கோல், கத்தி, கடப்பாரை என்று அத்தனைக் கருவிகளையும் சேகரித்துக் கொண்டுவிட்டாள். குழந்தைகள் தண்ணீர் ஊற்றக் குட்டிப் பூவாளி, மண்ணைக் கொத்த களைக்கொட்டு கொடுத்துவிட்டாள். ஆதித்யா அன்று முழுக்கத் தோட்டத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். பூவாளியில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் அனு.
ஆரஞ்சும் கறுப்புமாக இருந்த வண்ணத்துப் பூச்சி ஆதித்யாவின் தோளில் வந்து உட்கார்ந்தது. அதைக் கையில் பிடித்து எடுத்தான். அதிசயமாக அவன் கையில் பிடிபட்டது. இறக்கையிலிருந்து மாவு போல் அவன் கையில் எதோ உதிர்ந்தது. வண்ணத்துப் பூச்சியின் இறக்கை ஒன்று பிய்ந்து போயிருந்தது. பாட்டி சீனமொழியில் எதோ புலம்பி, வண்ணத்துப் பூச்சியின் வண்ணம் அவன் கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அவன் கையைத் தண்ணீர் விட்டுக் கழுவினாள்.
வண்ணத்துப் பூச்சிகளால் நிறைந்திருந்த தோட்டத்தில் இப்போது சின்னதும் பெரியதுமாய் கம்பளிப்புழுக்கள். கத்திரிக்காய்ச் செடிகளின் இலைகளைத் தின்று கொண்டிருந்தன. தோட்டத்துக்கு வெளியே இருந்த இரண்டு வாழை மரங்களில் வண்ணத்துப்பூச்சிகளின் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. கூட்டுக்குள் உடல் மடங்கி இறக்கைகள் சுருங்கிக் கிடந்த சின்ன வண்ணத்துப்பூச்சிகள் கூட்டை உடைத்து வெளியே வந்து இறக்கைகளை விரித்து பறப்பதைப் பார்க்க அந்த இரண்டு குழந்தைகளுடன் இரண்டு முதிய குழந்தைகளும் சேர்ந்து கொள்வார்கள்.
முதலில் அனுவுக்குத் தோலெல்லாம் தடித்துச் சிவந்து அரிக்கத் தொடங்கியதும் மினி எதோ பூச்சிக் கடித்திருக்கும் என்று கைவசமிருந்த மருந்து ஒன்றைத் தடவி விட்டாள். ஆதித்யாவுக்கும் அதே அரிப்பு தோலில் தடிப்பு வந்ததும் பயந்துபோய் மருத்துவரிடம் காட்டினார்கள். “இது கம்பளிப்பூச்சி உடலில் பட்டதால் ஏற்படும் தடிப்பு மாதிரி இருக்கிறதே” என்று மருத்துவர் கேட்டதும் மினிக்கு எல்லாம் புரிந்தது போல் இருந்தது. வீட்டுக்கு வந்து கோபத்தில் குதித்தாள்.
“தோட்டத்துக்குப் போக வேண்டாம்ன்னா கேட்டீங்களா? இப்ப பாருங்க குழந்தைங்க ரெண்டு பேருக்கும் பூச்சிக்கடி! நான் ஹெச்டிபிக்கு கம்ப்ளெயின் செய்யப்போறேன். தோட்டம் போடறேன்னு குழந்தைங்களுக்கு பூச்சிக்கடிய அதிகமாக்கறாங்க” என்று இரைந்தாள்.
பாட்டி வீட்டுக்கு இரண்டு அதிகாரிகள் வந்தார்கள். பாட்டியின் தோட்டத்தைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார்கள். நீண்ட நேரம் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். தாத்தாவும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு அதிகாரிகள் இருவரும் சௌதாமினியிடமும் ராகவனிடமும் வந்து பேசினார்கள்.
“அந்தப் பாட்டி காய்கறித்தோட்டம் போடத்தான் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அது எப்படி வண்ணத்துப்பூச்சித் தோட்டமாக ஆயிற்று என்பது புரியவில்லை. அவர்களிடம் அந்தப் பூச்செடிகளை எடுக்கச் சொல்லியிருக்கிறோம். வண்ணத்துப்பூச்சிகளின் முட்டைகளிலிலிருந்து வரும் கம்பளிப்புழுக்கள் கூட்டுப் புழுவாக மாற வாழைமரம் தேவை. எனவே அதையும் வெட்ட ஏற்பாடு செய்து விட்டோம். இனி கம்பளிப்பூச்சிகளால் உங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் வராமல் நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள். தோட்டத்தில் போய் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று பாட்டியிடம் சொல்லியிருக்கிறோம்”, என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
தாத்தா அழவில்லை ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் படபடப்புடன் இருந்தார்.
வாழைமரம் குலை தள்ளியிருந்தது. அதை வெட்ட வேண்டாம் என்று ராகவன் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. உன் கிராமத்து நம்பிக்கைகளை கிராமத்தோடு வைத்துக்கொள் என்று சௌதாமினி திட்டுவாள்.
தோட்டத்திலிருந்த பூச்செடிகளை வெட்டி எறிந்தார்கள். பல வண்ணங்களில் மலர்ந்த மலர்கள் வெட்டப்பட்டச் செடிகளிலிருந்து வாடி வதங்கிக் கிடந்தன, பாட்டியின் முகம் போல. அவர்களுக்குக் கொடுத்திருக்கும் உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.
குழந்தைகள் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மினியும் அவர்களைப் போக விடவில்லை. தோட்டம் யாருமின்றிக் கிடந்தது. வண்ணத்துப் பூச்சிகள் கொஞ்சம் குழப்பத்துடன் பறந்து கொண்டிருந்தன. சில நாட்களில் அவை எங்கே போயிற்றோ தெரியவில்லை.
ஆதித்யா பாலர் பள்ளிக்குப் போகும்போது பாட்டியைப் பார்த்துக் கை ஆட்டிவிட்டுப் போனான். நே நே என்று கூப்பிட்டான். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே பாட்டியும் கை ஆட்டினாள். ஆனால் முகத்தில் ஒரு சலிப்புத் தெரிந்தது. தாத்தா வாங்கி வைத்திருந்த கஞ்சியும் காப்பியும் குடிக்கப்படாமல் அப்படியே இருந்தது. பாட்டியின் வீட்டு வாசலில் சிதைந்த வண்ணத்துப் பூச்சியின் கூடு ஒன்று நசநசத்துக் கிடந்தது.
பாட்டியை வைத்திருந்த சவப்பெட்டிக்கருகில் சென்று ஆதி பாட்டியைப் பார்த்தான். கைகளைக் கோத்தவண்ணம் பாட்டி அமைதியாய்ப் படுத்திருந்தாள். தாத்தா அழவில்லை ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் படபடப்புடன் இருந்தார்.
மினி சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். ராகவன் சவப்பெட்டியை எடுத்துச் செல்லும் வண்டியின் பக்கத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார். அம்மா அனுவைப் பாட்டி பக்கத்தில் வரவிடாமல் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஆதித்யா பாட்டியைப் பார்க்க கிட்டத்தில் சென்றது தெரிந்தால் இழுத்துக் கொண்டு போய்விடுவாள்.
ஆதி பாட்டியின் கோத்த கைகளை மீண்டும் பார்த்தான். அவற்றில் வண்ணத்துப்பூச்சியின் அத்தனை வண்ணங்களும் ஒன்றுசேர்ந்து மினுமினுத்தன.